வியாழன், 17 செப்டம்பர், 2026

விருப்புடன் வீழ்ந்தேனுன் உள் - ஈற்றடிக்கோர் கவிதை - பண்புடன் மின்னிதழில்..

 விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்

தி தன் தொலைதூரக் கரையை 
மறந்து விட்டிருந்தது 
மூடுபனி மெதுமெதுவாகப் படர்ந்து
பரிச்சயமான ஒவ்வொன்றையும் 
அழித்துக் கொண்டே வந்தது
மரங்களை, தூரத்து மலைகளை
கடந்து வந்த பாதையைக்கூட

நிச்சயமற்ற இந்தக் காலைக்குள்
என் படகு அவசரமின்றி நகர்ந்தது
மரப்பலகைகளில் தண்ணீர் உரசும்
மெல்லிய ஓசையைச் சுமந்தபடி

சூழ்ந்திருந்த மௌனத்திற்கு
எந்த வரைபடமும் இல்லை
நதி எங்கே திரும்பும் என்றறிய
எவ்வித அடையாளமும் இல்லை
இருப்பினும் துடுப்பு மூழ்குகிறது
மேலெழுகிறது, மீண்டும் மூழ்குகிறது

சில பயணங்கள் நம்மை எங்கே 
அழைத்துச் செல்கின்றன என்பதை
வெளிப்படுத்த விழையாதிருக்கலாம்
விழிகளால் காண முடியாததை
என் இதயம் உணர்ந்திருக்கலாம்—
மெல்லத் துடுப்பை வலித்தபடி
உனைத் தொடர்கிறேன் எனதன்பு நதியே
விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்
*
ஒளிப்படம்: ராமலக்ஷ்மி

*
பண்புடன் மின்னிதழில் சென்ற வாரம் அறிவிப்பான ஈற்றடிக்கு நான் எழுதி வெளியீட்டுக்குத் தேர்வான கவிதை. தேர்வான மற்ற வெண்பாக்கள், கவிதைகளையும் இந்த இணைப்பில் வாசிக்கலாம்:
நன்றி பண்புடன்!
***

2 கருத்துகள்:

  1. கவிதையும் படமும் அருமை.

    நதியை போல வாழ்வது நல்லது என்பார்கள்.
    நதியை போல ஓடி கொண்டே இருக்க வேண்டும்
    தேங்கி நிற்க கூடாது என்பார்கள்.

    அதன் பயணம் வழியில் எத்தனை இடையூரூகள் இருந்தாலும், வளைந்து, நெளிந்து , வழியை அடைத்து கொண்டு இருந்தல் அதை தகர்த்து அதன் குறிகோள் கடலில் போய் கலப்பது.

    நாமும் வாழ்க்கை படகை எதை பற்றியும் பயணத்தில் எங்கு அழைத்து செல்கிறது என்று கவலை படாமல் அதன் போக்கில் போவோம். பயணித்து கொண்டு இருப்போம் துடுப்பை வலித்தபடி.
    அருமையான வாழ்க்கை கவிதை.


    பதிலளிநீக்கு
  2. பாதை தெரியாவிட்டாலும் பயணத்தில் உறுதி. 

    காட்சியாய் கற்பனை செய்தால் சற்றே பீதிதான்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin