Wednesday, April 22, 2009

விடியலுக்கு ஏங்கும் வெற்றுப் பிம்பங்கள்

இது கவிதையா என்கிற ஆராய்ச்சியை ஒதுக்கி விட்டு, ஒவ்வொரு வேளை வயிற்றுப்பாட்டையும் ஒவ்வொரு நாள் வாழ்க்கைப் பாட்டையும் பெரும் சிரமங்களுடன் கழிக்கின்ற ஏழைப் பொது ஜனங்களின் இதயக் கூவலாக, மன்னிக்க.. கேவலாகப் பாருங்கள்.

1987-ல் முதுகலை (ஆங்கிலம்) இறுதியாண்டில் இருக்கையில் அனைத்துக் கல்லூரி கவியரங்கில் வாசிக்கப்பட்டு பரிசும் பாராட்டும் பெற்றது. அடுத்த ஆண்டு நெல்லை சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் ‘முன்னாள் மாணவி’ என்ற குறிப்புடன், கேட்டு வாங்கி வெளியிட்டிருந்தார்கள்.
சை அலைகள்
ஆர்ப்பரிக்கும்
அரசியல் அரங்கிலுன்
அடிப்படை
நியாய உணர்வுகள்
நசிந்து விடாதென்றே
நம்பி இருந்தோம்!

இன்று
புல்லுருவிகள்
புசிக்கத் தொடங்கி விட்டன.
அவைஉன் பழைய
புண்ணியங்களைப்
புதைத்து விட்டுப்
பணத்துக்காகப்
பாவம் பண்ணச் சொல்லி
பசியாறத் தொடங்கி விட்டன!

அந்த
நய வஞ்சகர்களின்
கயமை மகுடிக்கு
நர்த்தனம் ஆடும்
நச்சுப் பாம்பாக
நீமாறி விட்டதை
முதலில்
எம்கண்கள் நம்ப மறுத்தாலும்
பின்னர் உன்னால்
எம்நெஞ்சில் உருவாக்கப்பட்ட
புண்கள்-
அவை
நிஜமே என்று
நிச்சயப்படுத்தி விட்டன!

அன்று
உன் உதடுகள்
உச்சரித்த
உறுதி மொழிகளை
உண்மையென்றே நம்பி
உற்சாகம் அடைந்திருந்தோம்.

அவை அச்சான
தினசரிகளைக் கூட
ஆதாரமாய்க் கையிலேந்தி-
அன்றைய கஞ்சியைத் துறந்து
ஆளுயர மாலையாக்கி-

ஆவலுடன் உன்
ஆடம்பர மாளிகையின்
வாசல்தேடி வந்திருந்தோம்.

கற்றைநோட்டுக்களைத்
தந்து செல்லும்
கனவான்களின்
கார்களுக்கு மட்டும்
விரியவே திறந்த
வெளிக் கதவுகள்-
கனவுகளைக் கண்களில்
தேக்கிநின்ற எங்களைக்
கடைசி வரை
கண்டு கொள்ளவேயில்லை!

அட
போலிக்காகக் கூடப்
பொது மக்களைப்
பொறுத்துப் போகாத
புதுமையை
இங்குதான் பார்க்கிறோம்!
குற்றம்யாவும் அந்தக்
கூர்க்கன்மேல்தான் என்றெண்ணி
அப்படியும் அயராமல்
அடுத்தமுறை வந்திருந்தோம்.

உன்
தரிசனம் வேண்டி
எமை மதியாத-அத்
தலைவாசல் விட்டுச்
சற்று தள்ளியே
கவனமுடன் இம்முறை
தவமிருந்தோம்.

வெளி வந்ததுன்
படகு வண்டி.
தென் பட்டது
உன் திருமுகம்.
முன் வந்து
முகம் மலர்ந்தோம்.
கை கூப்பிக்
கலங்கி நின்றோம்.

நீயோ
கண்டு கொள்ளாமல்
வண்டியை விடச்
சொன்னாய்.
ஆனாலும்
கணநேரத்தில் சுதாகரித்து
காரினை மறித்துக்
கரகோஷம் இட்டோம்.

நீயோ
காவலரை நோக்கிக்
கண்ஜாடை காட்டியே-
எம்மைக்
கலைக்கச் செய்தாய்.

உன் வாகனம்
எம் நம்பிக்கைகள்மீது
புழுதியை இரைத்துவிட்டுப்
புறப்பட்டுச் சென்றது.

அப்போதுதான்
இந்த
அப்பாவி
ஜனங்களின் மனங்கள்
யார் பாவி என்று
தப்பின்றி உணர்ந்தது
காலங்கடந்தே யாயினும்
தப்பின்றி உணர்ந்தது.

போலிக்காகக் கூடப்
பொது மக்களைப்
பொறுத்துப் போகாத
புதுமையைப்
பழகவும்
தெரிந்து கொண்டோம்.

ட்டு வீட்டில்
வாழ்ந்த உன்னை
ஓட்டுப் போட்டு
மாடி வீட்டில்
ஏற்றி வைத்தோமே?
பதவிக்குநீ வந்தால்
எம்பிள்ளைகள் படிப்பார்-
பானைச்சோறு உண்பார்-
படுத்துறங்க கூரைபெறுவார்-

என்றெதேதோ எண்ணித்தானே
ஊரோடு ஒட்டுமொத்தமாய்
உனக்கோர்
வெற்றிக்கொடி அளித்தோம்!

தேடித்தேடி வந்தன்று
தேனொழுகப் பேசியநீ
உதவிகேட்டு இன்று
கதறிவரும்
எங்களைக் கண்டு-
பதறியடித்து
ஓடிவரா விட்டாலும்
பாராமுகமாய் இருப்பதைக்
கூடவா தவிர்த்திட
இயலவில்லை?

பட்டத்து அரசன்நீ
கொத்தவரும் பருந்தானாய்.
சிதறிப் போன
நம்பிக்கைகளைச்
சேகரிக்கும் முயற்சியில்
சிறகொடிந்து போன
சிட்டுக் குருவிகளாய்
சீரழிந்து கொண்டிருக்கும்
எங்களுக்கு-உன்
சிந்தனையில் இடமுண்டா
என்றறியோம்!

உனக்கிருக்கும் இன்றைய
தகுதியைத் தந்ததே உன்
தொகுதி மக்கள்தாம்
என்பது
உனக்கு மறந்தேவிட்டது.

உன்
மனசாட்சியும் மரத்துவிட்டது.
சுயநலம் எனும்
சுகந்தமான கிரீடத்தைச்
சூடிக் கொண்டு
மனபலம் இழந்து
மருண்டு போய்
மருகும் எங்களுக்கோர் நல்ல
மாற்றம் தர
மறுக்கும் உன்
மனசாட்சி மரத்தேதான்விட்டது!

எமது
உயிர்கள் இங்கே
ஊசலாடிக் கொண்டிருக்க
நீயோ
உற்சாகமாய் ஊழலில் அங்கே
ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றாய்!

உலை வைக்கவும்
வகையின்றி எம்
உள்ளங்கள் உழலுவதை
உணராமல் எம்
உணர்வுகளுக்கு
உலைவைத்து விட்டுநீ
உல்லாசமாய் உலகைச்சுற்றி
உலாவந்து கொண்டிருக்கின்றாய்!
நீங்கள்
வெற்றி பெறுவதே
வெளி நாடுகளைச்
சுற்றிப் பார்க்கத்தானே?

ஆசை அலைகள்
ஆர்ப்பரிக்கும் அரசியல்
அரங்கிலுன் அடிப்படை
நியாய உணர்வுகள்
நசிந்து விடாதென்ற
எங்கள்
நம்பிக்கைகள்தாம்
நசிந்து விட்டன!
அடிப்படை
வாழ்வாதார வசதிகள்
என்பவை எமக்கு
கானல்
நீராகி விட்டன!

வறண்ட வாழ்வெனும்
வகுத்தலுக்கு விடைதேடும்
வெற்றுப் பிம்பங்களாகி
நிற்கின்றோம்!

***

வ்வொரு தேர்தலும்
நம்பிக்கையை விதைப்பதும்
ஓரிரு திங்களில்அவை
தேய்ந்து மறைவதுமாய்
இடிதாங்கி இடிதாங்கி எம்
இதயங்கள் வலுப்பெறுகின்றதா
ஆடி ஆடி ஒருநாள்
அடங்கியே விடப்போகின்றதா?


இக்கேள்விகளுக்கு விடையைத்
தேடிடத் தெம்பில்லாமல்
எம்மைச் சுற்றிப்படர்ந்திருக்கும்
சூனியம் சுட்டெரிக்கப்பட்டு
வெளிச்சமானதோர் விடியல்
வந்தேதீரும் என-
நசிந்துபோன நம்பிக்கைகளை
வழக்கம் போலப்
புதுப்பித்துக் கொண்டு-
இதோ கிளம்பி விட்டோம்
இப்போதும் வாக்களிக்க!

*** *** ***
கடைசி இரண்டு பத்திகள் மட்டும் இன்றைய தேவை கருதி சேர்த்தததாகும். அன்றும் சரி இன்றும் சரி. எந்தத் தனிப்பட்ட கட்சியையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதப் பட்டதில்லை இது. ஆனாலும் ஏங்குகின்ற ஏழைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் இன்றளவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

வறுமைக் கோட்டின் கீழே அல்லல் உற்றாலும் தங்கள் வாக்கினை என்றைக்கும் பதியத் தவறாத இவர்களை, இவர்தம் அடிப்படித் தேவைகளை, வெற்றி பெறுபவர்கள் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டி...

இந்தத் தேர்தலில் நாளை என் வாக்கினைப் பதியும் முன்...

வைக்கின்றேன் ஒரு கோரிக்கையாய் இப்பதிவையே!

***

[படம்: இணையத்திலிருந்து]
இங்கு வலையேற்றிய பின் 23,24,25 ஏப்ரல் 2009 யூத்ஃபுல் விகடன்.காமில் இக்கவிதை:
24,25 ஏப்ரல் 2009 விகடன்.காம் முகப்பிலும்:


1 மே 2009 வார்ப்பு கவிதை வாராந்திரியிலும்.

63 comments:

 1. //போலிக்காகக் கூடப்
  பொது மக்களைப்
  பொறுத்துப் போகாத
  புதுமையைப்
  பழகவும்
  தெரிந்து கொண்டோம்.//


  ஆதங்கம் மிக்க வரிகள் ...
  இன்னும் எத்தனை யுகங்களுக்கு இப்படி?
  காலம் மாறினாலும் அரசியல் மாறாது போல ? சின்ன மாற்றத்துக்காக சரத்பாபு போன்ற முயன்று படித்து வெற்றி தம் வாழ்கைப் பாதையை தேர்வு செய்தவர்களுக்கு வாக்களித்து பார்க்கலாம்,இதுவும் சோதனை முயற்சியே?! நடக்குமா? அரசியல் சூறாவழியில் காணாமல் போவாரா? மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆவாரா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ,அதை தவிர செய்வதற்கு வேறில்லை.

  ReplyDelete
 2. இவர்களை பற்றி பேசி பேசி சலித்து விட்டது...

  தற்போதெல்லாம் அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டாலே ஆத்திரமாக வருகிறது. இன்று கூட ஒரு அறிவிப்பை கேட்டு மனம் புழுங்குவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

  ReplyDelete
 3. //உனக்கிருக்கும் இன்றைய
  தகுதியைத் தந்ததே உன்
  தொகுதி மக்கள்தாம்
  என்பது
  உனக்கு மறந்தேவிட்டது.

  //

  தகுதி பாராமல் உம் தரத்தினை உயர்த்தினோம்!

  உயர்ந்தது உனக்கு தரமும் பொருளாதாரமும் தான்!

  தயவு செய்து மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வந்து காலில் வீழ்ந்து எங்கள் கரங்களை பிடித்து தொழுதுவிட்டு செல்

  எப்பொழுதுமே ஏமாற காத்திருக்கிறோம் - கருணையுடன்....!

  ReplyDelete
 4. ஒவ்வொரு அப்பாவி வாக்களாரின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் ஆதங்கம் கவிதை வரிகளாக மாறினால் இப்படித்தான் இருக்கும் அக்கா!

  அனைத்து வரிகளுமே அருமை !

  ReplyDelete
 5. நல்லாருக்கு. படிக்க வேண்டியவங்க படிச்சா இன்னும் நல்லாருக்கும். :)

  ReplyDelete
 6. //வறண்ட வாழ்வெனும்
  வகுத்தலுக்கு விடைதேடும்
  வெற்றுப் பிம்பங்களாகி
  நிற்கின்றோம்!//

  ஆதங்கம் ஏற்படுத்தும் வரிகள்..

  //1987-ல் முதுகலை (ஆங்கிலம்) இறுதியாண்டில் இருக்கையில் அனைத்துக் கல்லூரி கவியரங்கில் வாசிக்கப்பட்டு பரிசும் பாராட்டும் பெற்றது. அடுத்த ஆண்டு நெல்லை சாராள் தக்கர் கல்லூரி ஆண்டு மலரில் ‘முன்னாள் மாணவி’ என்ற குறிப்புடன் கேட்டு வாங்கி வெளியிட்டிருந்தார்கள்.//

  :-)) வாழ்த்துக்கள்!!!! (ரொம்ப லேட்டா சொல்றேனோ)

  ReplyDelete
 7. ஓட்டு வீட்டில்
  வாழ்ந்த உன்னை
  ஓட்டுப் போட்டு
  மாடி வீட்டில்
  ஏற்றி வைத்தோமே?
  பதவிக்குநீ வந்தால்
  எம்பிள்ளைகள் படிப்பார்-
  பானைச்சோறு உண்பார்-
  படுத்துறங்க கூரைபெறுவார்-
  என்றெதேதோ எண்ணித்தானே
  ஊரோடு ஒட்டுமொத்தமாய்
  உனக்கோர்
  வெற்றிக்கொடி அளித்தோம்!
  //

  என்னக்கா செய்ய நம்ப மக்கள் இப்படி தான் கேட்பார்கள். அப்புறம் திரும்பவும் அது போன்ற அரசியல்வாதிகளை தான் தேர்ந்தெடுக்கிறhர்கள். இது நம்ப நாட்டு மக்களுக்கு சாபகேடு.

  7 அரை சனி என்று சொல்வார்களோ...அது போல நம் நாட்டு மக்களுக்கு 5 ஆண்டு சனி இது.

  ReplyDelete
 8. எமது
  உயிர்கள் இங்கே
  ஊசலாடிக் கொண்டிருக்க
  நீயோ
  உற்சாகமாய் ஊழலில் அங்கே
  ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றாய்!
  //

  சரியாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. /*ஆனாலும் ஏங்குகின்ற ஏழைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் இன்றளவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை*/
  ஆமாம். நாம் தான் ஏழைகள் இருக்கும் நாடு என்று ஸ்லம்டாக் மில்லியனரில் காட்டிவிட்டு ஐபிஎல் போட்டிகளை வெளியூரில் வைத்து குதூகலிப்போம். எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் என்ற குறிக்கோளுடன் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் வசதிகளை பெருக்கிக் கொள்ள தான் அரசியலுக்கு வருகிறார்கள். :-((

  ReplyDelete
 10. இதோ கிளம்பி விட்டோம்
  இப்போதும் வாக்களிக்க!
  //
  வேறு என்ன செய்ய முடியும். 49 ஏ வந்தால் யோசிக்கலாம்.

  ReplyDelete
 11. மிஸஸ்.தேவ் said...

  \\ //போலிக்காகக் கூடப்
  பொது மக்களைப்
  பொறுத்துப் போகாத
  புதுமையைப்
  பழகவும்
  தெரிந்து கொண்டோம்.//

  ஆதங்கம் மிக்க வரிகள் ...
  இன்னும் எத்தனை யுகங்களுக்கு இப்படி?
  காலம் மாறினாலும் அரசியல் மாறாது போல ? \\

  ஆமாம் மிஸஸ். தேவ். எத்தனை ஆட்சிகளைப் பார்த்து விட்டோம். ஆனாலும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் எப்போதும் அந்தரத்து ஊஞ்சல் போலத்தான். அந்தக் காட்சிகள் மாறவேயில்லை.

  //சின்ன மாற்றத்துக்காக சரத்பாபு போன்ற முயன்று படித்து வெற்றி தம் வாழ்கைப் பாதையை தேர்வு செய்தவர்களுக்கு வாக்களித்து பார்க்கலாம்,இதுவும் சோதனை முயற்சியே?! நடக்குமா? அரசியல் சூறாவழியில் காணாமல் போவாரா? மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் ஆவாரா ? பொறுத்திருந்து பார்க்கலாம் ,அதை தவிர செய்வதற்கு வேறில்லை.//

  பார்க்கலாம்தான். நம்பிக்கைதானே வாழ்க்கை. கருத்துக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 12. கிரி said...

  //இவர்களை பற்றி பேசி பேசி சலித்து விட்டது... //

  அதற்காக அப்படி விடவும் முடியவில்லையே:(!

  //தற்போதெல்லாம் அரசியல்வாதிகள் பேசுவதை கேட்டாலே ஆத்திரமாக வருகிறது. இன்று கூட ஒரு அறிவிப்பை கேட்டு மனம் புழுங்குவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.//

  உண்மைதான், கையாலாகத நிலைமைதான். எவர் ஆட்சிக்கு வந்தாலும் ஏழை சொல் மட்டும் அம்பலம் ஏறுவதில்லை. வரி செலுத்தும் மேல் தட்டினர் தட்டிக் கேட்பார்கள், நடுத்தர மக்கள் போராட்டத்தில் இறங்குவார்கள் பத்திரிகைகள் வரிக்குவரி எழுதிக் கிழித்திடக் கூடும் என்றெல்லாம் சிறிதேனும் அச்சப் படுபவர்கள் அடித்தட்டு மக்கள் இவர்களால் என்ன செய்து விட முடியும் எனக் கண்டு கொள்வதேயில்லையோ:( ?

  ReplyDelete
 13. ஆயில்யன் said...
  ***//உனக்கிருக்கும் இன்றைய

  தகுதியைத் தந்ததே உன்
  தொகுதி மக்கள்தாம்
  என்பது
  உனக்கு மறந்தேவிட்டது.//

  தகுதி பாராமல் உம் தரத்தினை உயர்த்தினோம்!

  உயர்ந்தது உனக்கு தரமும் பொருளாதாரமும் தான்!\\ ***

  மிகச் சரி. தங்கள் தரம் பொருளாதாரம் இவற்றோடு புகழும் சேர்த்திடுவார். ஏன், நாட்டு வளர்ச்சிக்கென நல்ல திட்டங்கள் கூடத் தீட்டி, செயலும் படுத்தி ஊரும் உலகமும் தன்னைப் புகழச் செய்திடுவார். ஆனால் எந்த உறுத்தலுமின்றி தனக்கு வாக்களித்த எளிய மக்களின் தேவைகளை மறந்திடுவார்:( !

  //தயவு செய்து மீண்டும் ஒருமுறை மக்கள் மன்றத்தில் வந்து காலில் வீழ்ந்து எங்கள் கரங்களை பிடித்து தொழுதுவிட்டு செல்

  எப்பொழுதுமே ஏமாற காத்திருக்கிறோம் - கருணையுடன்....!//

  இப்படி.. இப்படித்தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது!

  ReplyDelete
 14. ஆயில்யன் said...

  //ஒவ்வொரு அப்பாவி வாக்களாரின் உள்ளத்தில் இருந்து வெளிப்படும் ஆதங்கம் கவிதை வரிகளாக மாறினால் இப்படித்தான் இருக்கும் அக்கா!

  அனைத்து வரிகளுமே அருமை !//

  தங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ஆயில்யன்.

  ReplyDelete
 15. SurveySan said...

  //நல்லாருக்கு. படிக்க வேண்டியவங்க படிச்சா இன்னும் நல்லாருக்கும். :)//

  நன்றி சர்வேசன். படிப்பாங்களா தெரியல. ஏதோ நம்மால் இயன்றது:)!

  ReplyDelete
 16. சென்ஷி said...

  **** //வறண்ட வாழ்வெனும்
  வகுத்தலுக்கு விடைதேடும்
  வெற்றுப் பிம்பங்களாகி
  நிற்கின்றோம்!//

  ஆதங்கம் ஏற்படுத்தும் வரிகள்..****

  ’ஆதங்கப் படுவதைத் தவிர வேறென்ன செய்ய இயலும்’ என்கிற ஆதங்கமும் தீர மாட்டேன்கிறதே..

  **//:-)) வாழ்த்துக்கள்!!!! (ரொம்ப லேட்டா சொல்றேனோ)//**

  வாழ்த்துக்களை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம் பெறலாம்:)! நானே ரொம்ப லேட்டாதானே பதிந்துள்ளேன்...ஆனா லேட்டஸ்டா கரெக்டா தேர்தல் சமயத்தில்...!

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சென்ஷி.

  ReplyDelete
 17. கடையம் ஆனந்த் said...

  ****//ஓட்டு வீட்டில்
  வாழ்ந்த உன்னை
  ஓட்டுப் போட்டு
  மாடி வீட்டில்
  ஏற்றி வைத்தோமே?
  பதவிக்குநீ வந்தால்
  எம்பிள்ளைகள் படிப்பார்-
  பானைச்சோறு உண்பார்-
  படுத்துறங்க கூரைபெறுவார்-
  என்றெதேதோ எண்ணித்தானே
  ஊரோடு ஒட்டுமொத்தமாய்
  உனக்கோர்
  வெற்றிக்கொடி அளித்தோம்!//

  என்னக்கா செய்ய நம்ப மக்கள் இப்படி தான் கேட்பார்கள். அப்புறம் திரும்பவும் அது போன்ற அரசியல்வாதிகளை தான் தேர்ந்தெடுக்கிறhர்கள்.****

  மாற்றி மாற்றி வாக்களித்துப் பார்த்தாலும் அத்தனை பேரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். ஆமாம் என்ன செய்வது?

  ReplyDelete
 18. கடையம் ஆனந்த் said...

  **** //எமது
  உயிர்கள் இங்கே
  ஊசலாடிக் கொண்டிருக்க
  நீயோ
  உற்சாகமாய் ஊழலில் அங்கே
  ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றாய்!//

  சரியாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள். ****

  படம் மட்டும்தான் பிடித்துக் காட்ட முடிகிறது. பாடம் சொல்ல யாராலும்தான் முடியவில்லையே :( ?

  ReplyDelete
 19. அமுதா said...

  \\ /*ஆனாலும் ஏங்குகின்ற ஏழைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் மாற்றங்கள் இன்றளவும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை*/


  ஆமாம். நாம் தான் ஏழைகள் இருக்கும் நாடு என்று ஸ்லம்டாக் மில்லியனரில் காட்டிவிட்டு ஐபிஎல் போட்டிகளை வெளியூரில் வைத்து குதூகலிப்போம். எல்லோருக்கும் அடிப்படை வசதிகள் என்ற குறிக்கோளுடன் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் வசதிகளை பெருக்கிக் கொள்ள தான் அரசியலுக்கு வருகிறார்கள். :-(( \\

  சரியாகச் சொன்னீர்கள் அமுதா. கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 20. கடையம் ஆனந்த் said...

  ****//இதோ கிளம்பி விட்டோம்
  இப்போதும் வாக்களிக்க!//


  வேறு என்ன செய்ய முடியும். 49 ஒ வந்தால் யோசிக்கலாம்.****

  அதுதான் 'பாடம்' என்கிறீர்களா? அது நிற்பவரில் மோசமானவருக்குச் சாதகமாயும் கூட முடியலாம். ஆக, இருப்பவரில் நல்லவர் எவரென சிந்தித்து ஓட்டளிப்பதுதான் சரி.

  கருத்துகளுக்கு மிக்க நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 21. நல்ல வரிகள் சகோதரி. அன்றும் இன்றும் நிலைமை மாறவில்லை என்பதே நிதர்சனம் :(

  ReplyDelete
 22. எப்போதுமே நிலமை இதுவேதானா??? ம்ம்ம் :((
  அன்புடன் அருணா

  ReplyDelete
 23. நியாயமான ஏக்கங்கள்.விடியல் வருமா என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது.வரும், வரும் என்று நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றுகிறது.

  ReplyDelete
 24. //உன் வாகனம்
  எம் நம்பிக்கைகள்மீது
  புழுதியை இரைத்துவிட்டுப்
  புறப்பட்டுச் சென்றது.//

  நச் வரிகள்.

  //கடைசி இரண்டு பத்திகள் மட்டும் இன்றைய தேவை கருதி சேர்த்தததாகும்.//

  அதிலும் கடைசி இரண்டு வரிகள், சொல்லுகிறது ஜனநாயகத்தை :)))

  ReplyDelete
 25. எம்.ரிஷான் ஷெரீப் said...

  // நல்ல வரிகள் சகோதரி. அன்றும் இன்றும் நிலைமை மாறவில்லை என்பதே நிதர்சனம் :( //

  நன்றி ரிஷான். ஒரு நாட்டின் சுபிட்சம் வளர்ச்சி இதெல்லாம் ஏழை மக்களின் தேவைகளும் நிறைவேறும் போதுதான். அதை ஆட்சிக்கு வருபவர்கள் உணர வேண்டும்.

  ReplyDelete
 26. அன்புடன் அருணா said...

  //எப்போதுமே நிலமை இதுவேதானா??? ம்ம்ம் :(( //

  எப்போதாவது மாறாதா என்று எதிர்பார்ப்புடன் எல்லோரும்..

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா.

  ReplyDelete
 27. மணிநரேன் said...

  //நியாயமான ஏக்கங்கள்.விடியல் வருமா என்பதே கேள்விக்குறியாகவே உள்ளது.வரும், வரும் என்று நம்பி மக்கள் ஏமாந்து கொண்டிருக்கிறோமோ என்றும் தோன்றுகிறது.//

  அப்படித்தான் தோன்றுகிறது.

  நன்றி நரேன், கருத்துக்கும் முதல் வருகைக்கும்.

  ReplyDelete
 28. சதங்கா (Sathanga) said...

  \\ //உன் வாகனம்
  எம் நம்பிக்கைகள்மீது
  புழுதியை இரைத்துவிட்டுப்
  புறப்பட்டுச் சென்றது.//

  நச் வரிகள்.\\

  நன்றி சதங்கா. இன்று வரை 'லேட்டஸ்ட் மாடலில்' என வாகனங்கள்தான் மாறியபடி உள்ளனவே தவிர காட்சியில் மாற்றமில்லை.

  //அதிலும் கடைசி இரண்டு வரிகள், சொல்லுகிறது ஜனநாயகத்தை :)))//

  அதே ஜனநாயகத்தைக் காப்பாற்றத்தான் உங்கள் இந்த பின்னூட்டத்தை வெளியிட்ட கையோடு...

  ***இதோ கிளம்பி விட்டோம்
  இப்போதும் வாக்களிக்க!*** என நானும் கிளம்பிச் சென்று அளித்துத் திரும்பினேன் எனது வாக்கினை. இன்று பெங்களூரில் வாக்குப் பதிவு:)!

  ReplyDelete
 29. //ஆசை.... முதல்
  வாக்களிக்க!// வரை உள்ள அத்தனை வார்த்தைகளும் தெளசன் வாலா மாதிரி சும்மா வெடிச்சு சிதறுது.
  பொது மக்களின் வேதனைகளை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.

  (நீங்க சாரா தக்கரா... மகிழ்ச்சி)

  ReplyDelete
 30. எல்லா முன்னேறமும் மக்களாலதான் நடக்குது. அரசுகளால இல்லை. இதை எப்ப புரிஞ்சுபோமோ அப்பதான் இந்த அரசியலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்காம இருப்போம்.
  we progress not because of the governments but in spite of governments!

  ReplyDelete
 31. " உழவன் " " Uzhavan " said...

  \\ //ஆசை.... முதல்
  வாக்களிக்க!// வரை உள்ள அத்தனை வார்த்தைகளும் தெளசன் வாலா மாதிரி சும்மா வெடிச்சு சிதறுது.
  பொது மக்களின் வேதனைகளை தெளிவாகச் சொல்லியுள்ளீர்கள்.//\\

  கருத்துக்கும் வருகைக்கும் நன்றி உழவன்.

  //(நீங்க சாரா தக்கரா... மகிழ்ச்சி)//

  சாராள் தக்கர்தான்:)! அக்கல்லூரியை அறிந்தவரா நீங்கள்?

  ReplyDelete
 32. திவா said...

  //எல்லா முன்னேறமும் மக்களாலதான் நடக்குது. அரசுகளால இல்லை.//

  வாருங்கள் திவா, உங்களது இந்த கருத்துப் பகிர்வுக்கு முதலில் என் நன்றிகள்.

  //இதை எப்ப புரிஞ்சுபோமோ அப்பதான் இந்த அரசியலுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்காம இருப்போம்.//

  இது புரிந்ததனால்தான் படித்த பலரும் தேர்தலுக்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் வாக்களிப்பது கூட இல்லை.

  //we progress not because of the governments but in spite of governments!//

  True. But the progress that happens in spite of the governments and politicians is often restricted to the relatively well to do sections of the society. For the progress and prosperity to 'trickle down' to the poorest sections, it may take decades, even generations. But the government has the ability, and 'also' the RESPONSIBILITY to alleviate the living conditions of the poor directly, in a much faster time frame.

  ReplyDelete
 33. \\அப்போதுதான்
  இந்த
  அப்பாவி
  ஜனங்களின் மனங்கள்
  யார் பாவி என்று
  தப்பின்றி உணர்ந்தது
  காலங்கடந்தே யாயினும்
  தப்பின்றி உணர்ந்தது.//
  அருமை.. ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 34. உங்க கவிதையில் உள்ள பொருள் ஒரு "க்ளாசிக்" னு சொல்லலாம்.

  நம்ம அரசியல்வாதிகள்தான் இதை காலத்தால் அழியாமல் காப்பாற்றுவது!

  எல்லா அரசியல்வாதிக்கும் இதை சமர்ப்பிக்கலாம்! :-)

  ***நீயோ
  காவலரை நோக்கிக்
  கண்ஜாடை காட்டியே-
  எம்மைக்
  கலைக்கச் செய்தாய்.

  உன் வாகனம்
  எம் நம்பிக்கைகள்மீது
  புழுதியை இரைத்துவிட்டுப்
  புறப்பட்டுச் சென்றது.***

  இந்த வரிகள் ரொம்ப எதார்த்தமான் உண்மையை சொல்வதுபோல் இருக்குங்க! வாழ்த்துக்கள் :-)

  ReplyDelete
 35. // //(நீங்க சாரா தக்கரா... மகிழ்ச்சி)//

  சாராள் தக்கர்தான்:)! அக்கல்லூரியை அறிந்தவரா நீங்கள்? //

  இல்லை.. திரிஷா (சாமி படத்தில) படிச்ச கல்லூரியாச்சே. அதான் கேட்டேன் :-))
  just joking.. நான் தூத்துக்குடி மாவட்டக்காரன். சென்னையிலுள்ள என் நண்பர்கள் நிறைய பேருக்கு நெல்லையும் அதனைச் சுற்றியும்தான். அதுமட்டுமல்லாது, என் மாமா பொண்ணு இப்போ சாராள் தக்கரில் தான் படித்துக்கொண்டிருக்கிறாள். அவ்வளவே :-)

  ReplyDelete
 36. முத்துலெட்சுமி-கயல்விழி said...

  // \\அப்போதுதான்
  இந்த
  அப்பாவி
  ஜனங்களின் மனங்கள்
  யார் பாவி என்று
  தப்பின்றி உணர்ந்தது
  காலங்கடந்தே யாயினும்
  தப்பின்றி உணர்ந்தது.//

  அருமை.. ராமலக்ஷ்மி..//

  கருத்துக்கு நன்றி முத்துலெட்சுமி. காலங்கடந்து உணர்ந்தாலும் ஏதும் செய்ய இயலாத நிலையில்தான் மக்கள்...:(!

  ReplyDelete
 37. வருண் said...

  //உங்க கவிதையில் உள்ள பொருள் ஒரு "க்ளாசிக்" னு சொல்லலாம்.

  நம்ம அரசியல்வாதிகள்தான் இதை காலத்தால் அழியாமல் காப்பாற்றுவது!//

  வாருங்கள் வருண். நல்ல விஷயங்களைக் காலத்துக்கும் காப்பாற்றினால் சந்தோஷப் படலாம். நாம் வடிக்கின்ற ஆதங்கங்கள் என்றைக்கும் மாறாதபடியல்லவா பார்த்துக் கொள்கிறார்கள் :(!

  //எல்லா அரசியல்வாதிக்கும் இதை சமர்ப்பிக்கலாம்! :-)//

  அப்படி நினைத்துதான் விகடன்.காம் மூலம் சமர்ப்பித்து விட்டிருக்கிறேன்:)!

  //***நீயோ
  காவலரை நோக்கிக்
  கண்ஜாடை காட்டியே-
  எம்மைக்
  கலைக்கச் செய்தாய்.

  உன் வாகனம்
  எம் நம்பிக்கைகள்மீது
  புழுதியை இரைத்துவிட்டுப்
  புறப்பட்டுச் சென்றது.***

  இந்த வரிகள் ரொம்ப எதார்த்தமான் உண்மையை சொல்வதுபோல் இருக்குங்க! வாழ்த்துக்கள் :-)//

  நன்றி வருண். எளியவர்களுக்கு அரசியல் மாளிகைகளின் வாயில் அபூர்வமாகத்தான் திறக்கின்றன.
  சதங்காவும் இதே வரிகளை மேற்கோளிட்டிருப்பது உண்மைக்கு வெகு அருகில் அவை இருப்பதை உணர்த்துவதாகவே எடுத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 38. " உழவன் " " Uzhavan " said...
  \\***சாராள் தக்கர்தான்:)! அக்கல்லூரியை அறிந்தவரா நீங்கள்? //

  இல்லை.. திரிஷா (சாமி படத்தில) படிச்ச கல்லூரியாச்சே. அதான் கேட்டேன் :-))***\\

  அப்படித்தான் பிரபலமா எங்கள் கல்லூரி:)? சரிதான்:)!!

  ReplyDelete
 39. //அப்போதுதான்
  இந்த
  அப்பாவி
  ஜனங்களின் மனங்கள்
  யார் பாவி என்று
  தப்பின்றி உணர்ந்தது
  காலங்கடந்தே யாயினும்
  தப்பின்றி உணர்ந்தது.//

  ஆம்! இத்தனை காலம் உள்ளே கனன்று கொண்டிருந்தது நெருப்பாய்!!
  இனி அவை உன் மேல் வீசப்படும் செருப்பாய்!!!

  எத்தனை கிராமங்கள் செருப்போடு காத்துக்கொண்டிருக்கின்றன. இதே விழிப்பு நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் பரவும் நாள் அதிக தூரத்திலில்லை.

  ReplyDelete
 40. ஆதங்கங்களுடன் எழுதப்பட்ட அருமையான வரிகள்! நிலைமை என்று மாறுமோ?

  ReplyDelete
 41. இருபத்தியிரண்டு ஆண்டுகளில் உங்கள் எழுத்தில் சிந்தனையில் கூடியிருக்கும் மெருகும் அழகும் தெளிவாகப் புலப்படுகிறது.
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 42. ஒன்றுமே சொல்வதற்கு இல்லை ராமலக்ஷ்மி.
  குமுறல் அத்தனையையும் கொட்டிவிட்டீர்கள்.
  எங்களின் மனம் நீங்களானதற்கு நன்றி.
  வாய்ச் சொல் வீரர்களை நம்பாமல் வாக்கை அளிப்போம் இன்று.

  ReplyDelete
 43. //உன் வாகனம்
  எம் நம்பிக்கைகள்மீது
  புழுதியை இரைத்துவிட்டுப்
  புறப்பட்டுச் சென்றது.//

  இந்த நம்பிக்கைத் துரோகிகளை நம்பித்தானிருக்கிறது நம் வாழ்க்கை.

  இது எக்காலத்துக்கும் பொருந்தும் கவிதை. நன்று.

  ReplyDelete
 44. நானானி said...
  //இதே விழிப்பு நகரங்களுக்கும் பெருநகரங்களுக்கும் பரவும் நாள் அதிக தூரத்திலில்லை.//

  சந்தர்ப்பவாதிகள் விழித்துக் கொண்டுத் தம்மைத் திருத்திக் கொண்டால் தேவலை. திருந்தா விட்டால் நீங்கள் சொன்ன மாதிரி மக்கள்தான் திருத்த வேண்டும். கருத்துக்கு நன்றி நானானி.

  ReplyDelete
 45. தமிழ் பிரியன் said...

  //ஆதங்கங்களுடன் எழுதப்பட்ட அருமையான வரிகள்! நிலைமை என்று மாறுமோ?//

  கருத்துக்கு நன்றி தமிழ் பிரியன். உங்கள் கேள்விக்கான விடையைத்தான் எல்லோரும் தேடிக் கொண்டிருக்கிறோம் காலம் காலமாய்.

  ReplyDelete
 46. goma said...

  //இருபத்தியிரண்டு ஆண்டுகளில் உங்கள் எழுத்தில் சிந்தனையில் கூடியிருக்கும் மெருகும் அழகும் தெளிவாகப் புலப்படுகிறது.
  வாழ்த்துக்கள்//

  அன்றிலிருந்து இன்றுவரை அதைக் கவனித்து வரும் உங்கள் வாழ்த்து என்றும் ஸ்பெஷலே. நன்றி கோமா!

  ReplyDelete
 47. வல்லிசிம்ஹன் said...
  //எங்களின் மனம் நீங்களானதற்கு நன்றி.//

  "எல்லோரும் வாழ வேண்டும் நாட்டில்
  எல்லோரும் வாழ வேண்டும்"

  இது உங்கள் வலைப்பூவில் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் நான் காணும் வாசகம். உங்களின் மனம் நானறிவேனே. அதுவேதான் எனது மற்றும் எல்லோரது ஆசையும்.

  //வாய்ச் சொல் வீரர்களை நம்பாமல் வாக்கை அளிப்போம் இன்று.//

  சிந்தித்து அளிப்போம் வாக்கினை. நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 48. வடகரை வேலன் said...

  \\ //உன் வாகனம்
  எம் நம்பிக்கைகள்மீது
  புழுதியை இரைத்துவிட்டுப்
  புறப்பட்டுச் சென்றது.//

  இந்த நம்பிக்கைத் துரோகிகளை நம்பித்தானிருக்கிறது நம் வாழ்க்கை.\\

  தவிர்க்க முடியாததாய்..:(!

  //இது எக்காலத்துக்கும் பொருந்தும் கவிதை. நன்று.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வடகரை வேலன்.

  ReplyDelete
 49. நெம்ப கரக்ட்டா சொன்னீங்கோ அம்முனிங்கோவ் ....!!


  இவுனுங்கள நம்பி ....நம்பி .... லயின்ல்ல நிக்கறதுக்கு ... பேசாம நாமுளுமும் மெயின்ன்லையே நின்னுபோடலாமுங்கோ....!!!!!

  மேடை போட்டு பேசி பேசியே மனுஷன் கழுத்த அறுத்துபோடுரானுனகோ... !!! இவுனுங்கள சொல்லி குத்தமில்லைங்கோ அம்முனி....!! தொண்டன் ங்குற பேருல கூதடிக்குரானுங்கோ பாருங்கோ .... அவிகல சொல்லோனும் மொதல்ல........!!!

  ReplyDelete
 50. அருமை

  நாடும், மக்களும்
  நலமுடன் இருக்க‌
  நம்பிக்கையுடன்
  நல்லவர்களைத் தேர்ந்து எடுப்போம்.

  ReplyDelete
 51. லவ்டேல் மேடி said...

  //இவுனுங்கள நம்பி ....நம்பி .... லயின்ல்ல நிக்கறதுக்கு ... பேசாம நாமுளுமும் மெயின்ன்லையே நின்னுபோடலாமுங்கோ....!!!!!//

  ரொம்ப நல்ல ஐடியாவாக இருக்கிறதே மேடி:)!!!!

  ReplyDelete
 52. திகழ்மிளிர் said...

  //அருமை//

  நன்றி திகழ்மிளிர்.

  //நாடும், மக்களும்
  நலமுடன் இருக்க‌
  நம்பிக்கையுடன்
  நல்லவர்களைத் தேர்ந்து எடுப்போம்.//

  ஆமாம் சிந்தித்து நல்லவருக்கே நம் ஓட்டினை வழங்குவோம்.

  ReplyDelete
 53. கலக்கல் அக்கா.. போட்டுத் தாக்கி இருக்கிங்க. சும்மா காதல் கவிதையே எழுதிகிட்டு கவிஞர்கள்னு பீத்திக்கிறவங்களுக்கு மத்தியில சமுதாய சிந்தனைகளோட எழுதற உங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் வரனும். இன்னும் ஏராளமான எதிர்பார்ப்புடன்.. அன்புத் தம்பி.

  ReplyDelete
 54. Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ said...

  //கலக்கல் அக்கா.. போட்டுத் தாக்கி இருக்கிங்க.//

  எப்பவோ தாக்கியது சஞ்சய், இப்போதைக்கும் பொருந்தி நிற்கிறது.

  //சமுதாய சிந்தனைகளோட எழுதற உங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் வரனும். இன்னும் ஏராளமான எதிர்பார்ப்புடன்.. அன்புத் தம்பி.//

  உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கண்டிப்பாக முயற்சிப்பேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 55. மிக அருமை தோழி
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 56. natpu valai said...

  //மிக அருமை தோழி
  வாழ்த்துக்கள்//

  தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 57. கடையம் ஆனந்த்

  //7 அரை சனி என்று சொல்வார்களோ...அது போல நம் நாட்டு மக்களுக்கு 5 ஆண்டு சனி இது.//

  இதுவாவது 7 1/2 ஆண்டுகளுக்கு பிறகு விட்டுவிடுமே.... இந்த 5 ஆண்டு சனி, தொடர்ந்து வேறு வேறு உருவம் எடுத்து துரத்தி கொண்டல்லவா இருக்கிறது......

  நம் நிலை எப்போது மாறும், எப்போவாவது, எங்கிருந்தாவது ஒரு நல்ல வழிகாட்டி தலைவன் வருவானா என்று வானம் பார்த்த பூமியை இருக்கிறோம்...... வானத்தில் வெய்யில் கூடி கொண்டே போய் கொண்டு இருக்கிறதே தவிர, இந்த உள்ளங்களை குளிர வைக்க ஒரு துளி மழை கூட வரவில்லையே???!!!

  சிறிது காலம் போயினும், இந்த அருமையான கவிதையை எடுத்து எங்களுக்கு அளித்த உங்களுக்கு எங்கள் நன்றிகள் பல கோடி............ராமலக்ஷ்மி அவர்களே........

  ReplyDelete
 58. எப்பவோ எழுதினாலும் இப்பவும் (எப்பவும்னு சொல்ல மனசு வரல) பொருந்துகிற கவிதை. ரொம்ப நாளா வந்திருக்கு சகோ. எப்பவும்(!) போல நான் படு லேட் :)

  யூத்ஃபுல் விகடன் - குத்தகைக்காரர் ஆனதற்கும் வாழ்த்துகள் :)

  அனுஜன்யா

  ReplyDelete
 59. R.Gopi said...
  //தொடர்ந்து வேறு வேறு உருவம் எடுத்து துரத்தி கொண்டல்லவா இருக்கிறது......//

  ரொம்ப சரி. ஆட்சிகள் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் காட்சிகள்...? அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் எப்போதும் கேள்விக் குறிகளாகவே..!!

  உங்கள் முதல் வருகைக்கும் பகிர்ந்து கொண்ட கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோபி.

  ReplyDelete
 60. அனுஜன்யா said...

  //எப்பவோ எழுதினாலும் இப்பவும் (எப்பவும்னு சொல்ல மனசு வரல) பொருந்துகிற கவிதை.//

  ஆமாங்க ‘எப்பவும்’ என நம்ம வாயாலே வேண்டாவே வேண்டாம்.

  //எப்பவும்(!) போல நான் படு லேட் :)//

  தாமதமாய் வந்தாலும் தருகிறீர்கள் கனமான கருத்துக்களை:)!

  // யூத்ஃபுல் விகடன் - குத்தகைக்காரர் ஆனதற்கும் வாழ்த்துகள் :)//

  ஹி, கனமான கருத்து என இதைச் சொல்லலை:))!

  ReplyDelete
 61. தற்செயலாத்தான் இந்த க(வி)தை படித்தேன். ஒவ்வொரு வரியும் ஒரு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரும் மறு கண்ணில் ஒரு சொட்டு குருதியையும் உதிர்த்தது. படிக்காதவர்கள் என்று சொல்லப்பட்ட அக்காலத்து அரசியல்வாதிகளும் இக்காலத்து படித்த இன்னும் வெறி பிடித்த அரசியல்வாதிகளும் ஒரே குறிக்கோள்தான் மனதில் கொண்டுள்ளனர்- பணம்,பதவி. அது எங்கிருந்து எப்படி வந்தாலும் சரி. சரியான வேட்பாளர்கள் நிறுத்தப்படாத பட்சத்தில் ஒட்டுமொத்த மாக யாரும் ஓட்டுப்போட செல்லக்கூடாது. பொதுப்பணம் செலவாகும் தான் அதைவிட அதிகமாக அரசியல்வாதிகளின் பணம் செலவாகும். மறுபடியும் அந்த வேட்பாளரை அதே இடத்தில் அக்கட்சி நிறுத்துமா என்பது சந்தேகம்தான். வேறு வழி எனக்குப்புரியவில்லை.

  வாசி

  ReplyDelete
 62. @ வாசி,

  உங்கள் ஆதங்கம் புரிகிறது.

  //பணம்,பதவி. அது எங்கிருந்து எப்படி வந்தாலும் சரி.//

  சரியாகச் சொன்னீர்கள், இதுதான் இன்றைய நிலை. என்றைய நிலையும்தானோ என்பது பெரும் கலக்கமே:(!

  நீங்கள் சொல்லியிருக்கும் வழி நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாதென்று இதற்காகவேதானே அப்பொதுமக்களில் பலபேரினைத் தத்தமது கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்களாக்கி வைத்திருக்கிறார்கள்:(!

  கருத்துப் பகிர்வுக்கு நன்றி வாசி!

  ReplyDelete
 63. சமூக அவலங்களுக்கு பொருப்பற்ற
  அரசியல்வாதிகள் தான் என்று
  தெளிவுபடுத்தியுள்ளிர்கள்.
  தாங்களின் வேதனையில் நானும்
  பங்கிட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin