வியாழன், 20 செப்டம்பர், 2012

கணபதியே காப்பாய்..


#1. கைவினைத் திறனில் உருவான வினை தீர்க்கும் விநாயகர்

வேழ முகத்தோனின் ஆசிகள் வேண்டி சதுர்த்தி தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி விட்டோம்.

 #2. கணபதியே அருள்வாய்

பண்டிகைக்கு முன்னாலிருந்தே பெங்களூர் மாநகராட்சியும்(BBMP) மாநில மாசுக்கட்டுப்பாட்டுத் துறையும் (KSPCB) வண்ணம் தீட்டிய விநாயகர் உருவச் சிலைகளை வாங்குவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டதுடன் சிலை செய்பவர்களையும் அதிக அளவில் களிமண் சிலைகளை விற்பனைக்குக் கொண்டுவர ஆணையிட்டிருந்தது. ஆனால் விற்ற பத்து சிலைகளில் எட்டு வண்ணப் பிள்ளையார்களே. வண்ணப் பிள்ளையாரை செய்ய உபயோகிக்கும் மண்ணை விட களிமண் சிலைகள் உயர்தர மண்ணில் செய்ய வேண்டியிருப்பதால் இவற்றின் விலை அதிகமென்றும், சம அளவில் இரண்டும் கிடைக்குமாறு செய்திருந்தும் மக்கள் அதை வாங்கவில்லையென்றும் விற்காத களிமண் பிள்ளையார்களைக் காட்டி வருத்தம் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள். மக்களைக் கவர கிரீடம், நகைகளுக்கு மட்டும் பொன் வண்ணம் தீட்டியிருந்தும் பயன் இருக்கவில்லை.
#3.
பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்வரையிலும் களிமண் பிள்ளையார்கள் குறிப்பிட்ட சில இடங்களிலேயே கிடைத்து வந்தது. தேடிச் சென்று வாங்கிவருவோம், ஊர் வழக்கம் அதுவென்பதால். இப்போது எல்லா இடங்களிலும் கிடைத்தும் கூட, வண்ணச் சிலைகளே மக்களின் தேர்வாக இருக்கிறது.., ஏரிகளில் அவற்றைக் கரைப்பதால் நீர் வாழ் உயிரனங்கள், உபயோகிக்கும் மனிதர்கள், தாவரங்களுக்கு இரசாயனங்களால் கேடு என்பது தெரிந்தும். ஆசையுடன் குழந்தைகள் அவற்றைத் தொட்டுக் குதூகலிக்கிறார்கள். அதே கையுடன் அவர்கள் எதையேனும் சாப்பிட நேர்ந்தால் வண்ண இரசாயனம் உடல்நலனுக்கு உடனே தீங்காகும் எனவும் அறியப்படுகிறது.

தத்தமது வியாபார ஸ்தலங்கள் முன்னால் பொது இடத்தில் வைத்துப் பூசை செய்வதில் யாருடைய சிலை பெரியது என்பதில் போட்டியும் நிலவுவதால் பெரிய வண்ணச் சிலைகளின் விற்பனை அதிகமாகவே இருந்திருக்கிறது. தங்கள் கோரிக்கைகள் எடுபடாததால் வரும் வருடத்தில் வண்ணப் பிள்ளையார் சிலைகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருக்கிறது மாசுக்கட்டுப்பாட்டுத் துறை. ஆனால் ஆளும் மாநில அரசு  அதை அமல்படுத்துமா அரசியல் காரணங்களுக்காக மீண்டும் கோரிக்கை வைப்பதுடன் நிறுத்திடுமா என்பதைத் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தற்போது ஏரிகளில் கரைப்பதை முடிந்தவரை தடுத்திட கர்நாடக அரசே பெங்களூரின் பல பாகங்களிலிருந்து பிள்ளையார்களைப் பெற்று முறைப்படி அவற்றைக் கரைக்க ஆவன செய்துள்ளது. எந்தெந்த இடங்களில் எத்தனை மணிக்கு பிள்ளையார்களை எடுத்துச் செல்வார்கள் என்கிற அறிவிப்பையும் செய்தித்தாள்களில் அறியத் தந்திருக்கிறது.

கரைப்பதற்கு கிணறு இல்லாத நிலையில் ஆரம்ப காலத்தில் ஏரிகளில் கரைத்திருக்கிறோம் நாங்களும். வீட்டிலேயே வாளிநீரில் கரைத்து நன்கு கலக்கிச் செடிகளுக்கு ஊற்றிவிடலாம் எனத் தோழி மூலமாக அறியவந்தபின் அதையே வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம் கடந்த பல ஆண்டுகளாக.

#4 ஞான முதல்வன்
எளிய கடவுள் பிள்ளையார்.  அருளை வாரி வழங்குவதில் முதன்மையானவர். நட்பானவர். Friendly God எனக் கொண்டாடப்படுபவர். அன்போடும் மனசுத்தியோடும் எளிமையாக வழிபட்டாலே போதும். இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம்.

#5. பண்டிகைக்குப் பிறகு ஓய்வாக:
(ஓய்வெடுத்த பின் கவனிக்க ஓரமாக வைப்போம் விண்ணப்பம்.)
கணபதியே காப்பாய்..
வையகத்தின் பசுமையை.. இயற்கையின் கொடையை..
***

47 கருத்துகள்:

  1. ஒரு வருடம் பிள்ளையார் வாங்காதிருந்தால் அருள் காணாமல் போய்விடுமா? விற்காதே என்று சொல்லி என்ன பயன்? இதை நம்பிப் பிழைக்கும் ஒரு சிலரின் ஒரு மாத வயிற்றுப் பசி தீருவதை தடுப்பதில் பயனில்லை. வாங்காதே என்று சொல்லி என்ன பயன்? அடுத்தவன் கலருக்கு அருள் அதிகம் என்று கண்மூடும் ஒரு சிலரின் நம்பிக்கைகளைக் குலைப்பதிலும் பயனில்லை. இது ஒரு கொடிய வட்டம் என்பதை நன்கு ஆராயந்து செயல்புரியும் திறனுடையவரும் இப்படித்தான் இருக்கிறார்கள். ஹ்ம்.

    brilliant photo.

    பதிலளிநீக்கு
  2. சதுர்த்தி தின சைறப்புப் பதிவும் படங்களும் அருமை
    குறிப்பாக அந்த ஓய்வெடுக்கும் பிள்ளையார்
    (ஒரு வேளை சதுர்த்திக்கு மறு நாள் அலுப்பில்
    கொடுத்த போஸாயிருக்குமோ )
    வாளியில் கரைத்து செடிகளுக்கு ஊற்றுதல் கூட
    நல்ல ஐடியாவாகத்தான் உள்ளது
    அனைவரும் பின்பற்றலாம்
    மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. வையகத்தின் பசுமையை.. இயற்கையின் கொடையை..//

    கணபதியே காப்பாய்.

    பதிவும் படங்களும் அருமை.

    கணபதி தான் காக்க வேண்டும் வையகத்தை.

    சட்டம் போட்டுதான் சில விஷயங்களை தடை செய்ய வேண்டி உள்ளது.
    நவராத்திரி சமயம் துர்க்காவை இப்படித்தான் மும்பையில் செய்கிறார்கள். களிமண்ணால் செய்ய பட்ட துர்க்கா இப்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸாலும் செய்கிறார்கள்.இதைத் தடை செய்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  4. அழகிய படங்களுடன் விழிப்புணர்வையும் தரும் பகிர்வு.

    "இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம்" அருமை.

    ஒவ்வொருவரும் நினைவில்கொண்டு கடைப்பிடித்தால் காப்பாற்றப்படும் இயற்கை.

    பதிலளிநீக்கு
  5. விதவிதமான பிள்ளையார் தரிசனம் மனதுக்கு நிறைவாக இருந்தது.

    புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  6. ஓய்வெடுக்கும் இந்தப்பிள்ளையாரைப் பார்த்துவிட்டு நான்
    இந்தப்பாட்டை எழுதி இதை நான் அந்தக் காலத்திலே popular cine song
    அமுதைப்பொழியும் நிலவே ! நீ அருகில் வராதது ஏனோ !
    என்ற மெட்டில் பாடுகிறேன் பார். என்றேன். பாடியும் காண்பித்தேன்.


    உலகைக் காத்திடும் கணபதியே -- நீ
    ஓரமாய் ஒதுங்கியது ஏனோ !!

    பகலும் இரவும் பக்தர்கள் காணவே
    பந்தலில் பிரகாசமானாய்.
    அதிரும் அர்ச்சனை ஒலியில் நீயும்
    அசராமலே அமர்ந்தாய்.

    கலிகள் எங்கள் துடைத்திடவே நீ
    களிமண்ணிலிருந்து வந்தாய்.
    கழியும் எங்கள் துயரெனச் சொல்லிட‌
    களிமண்ணாகிக் கரைவாய்.
    ....

    பாட்டு என்னவோ கருத்து நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும்
    பிள்ளையாரே ஓஞ்சு போய், எப்பாடா கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்
    என்று வழி ஓரமா உட்கார்ந்து இருக்கார், அவரைப்போய்
    டிஸ்டர்ப் செய்வது நியாயமா ? என்கிறாள் எங்க வீட்டுக்கிழவி.

    நீங்களே சொல்லுங்கள்.

    சுப்பு ரத்தினம்.
    எனக்கும் எங்க வீட்டுக்கிழவிக்கும் இன்று பகல் சூபர் லஞ்ச்.
    துளசி கோபால் அறுபது கல்யாணத்திலே.
    அத சாப்பிட்டுவிட்டு, எப்பங்க உங்க எண்பது கல்யாணம். எங்கெ எனக் கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  7. ஓய்வெடுக்கும் பிள்ளையார் அட்டகாசமா இருக்காரே..

    களிமண் பிள்ளையார் இங்கே கொஞ்சம் தான் கிடைக்கும்.. லேட்டாப்போனால் கிடைக்காது.
    களிமண் கிடைத்தால் சரி இல்லைன்னா..மஞ்சள் பிள்ளையார் தான் பண்டிகைக்கும்..

    பதிலளிநீக்கு
  8. சிறப்பான பகிர்வு...

    படங்கள் அசர வைக்கிறது... சூப்பர்...

    பதிலளிநீக்கு
  9. கற்பகக் கணபதியின் அற்புதப் படங்களுடன் மனம் நிறைத்த பதிவு. தனி மனிதர்கள் திருத்திக் கொண்டாலொழிய இதற்கு ஏதும் செய்ய இயலாது என்கிற பட்டியல் நீண்டு கொண்டே போகிறது... விழிப்புணர்வைத் தரும் பதிவிற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. நல்லதொரு பதிவு! களிமண் பிள்ளையார்கள் விற்காமல் போவது வருத்தமே! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம் என்பது நல்ல வேண்டுதல்.


    பதிலளிநீக்கு
  12. ஆரம்ப களத்தில் எல்லாம் ஒழுங்காகத்தான் இருந்திருக்கிறது. காலப்போக்கில்தான் போட்டி, நிறம், பெரிய பிள்ளையார், சிறிய பிள்ளையார் எல்லாம்! கடலில் கரைக்கும் காட்சி கூட காணக் கண் பொறுக்காது! அப்பாதுரை கருத்து வழிமொழியத்தக்கது. கடைசிப் படம், ஓய்வெடுக்கும் பிள்ளையார் படம் அருமை. இந்த கலாட்டாவெல்லாம் தாங்காமல் 'அட, போங்கப்பா...' என்று உட்கார்ந்து விட்டாரோ!

    பதிலளிநீக்கு
  13. ஹாய்யா ஓய்வெடுக்கும் பிள்ளையார் அட்டகாசமா இருக்கார்.

    எங்கூர்லயும் இப்ப இயற்கை வண்ணங்கள், களிமண் அல்லது காகிதக்கூழில் செஞ்சவை கொஞ்சம் கொஞ்சமா மார்க்கெட்டில் வருது. ஆனாலும், எந்தப்பகுதிப் பிள்ளையார் பெரிசா அழகாருக்கார்ங்கற போட்டி காரணமா பி.ஆ.பாரிசில் செஞ்சவையும் மார்க்கெட்டில் உலா வருது.

    பதிலளிநீக்கு
  14. >>>>வீட்டிலேயே வாளிநீரில் கரைத்து நன்கு கலக்கிச் செடிகளுக்கு ஊற்றிவிடலாம் எனத் தோழி மூலமாக அறியவந்தபின் அதையே வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம் கடந்த பல ஆண்டுகளாக<<<

    அருமையான idea..எல்லோரும் பின்பற்றலாம்! சுற்றுப்புறசூழல் கெடுவது குறைக்கப்படும்!

    பதிலளிநீக்கு
  15. @அப்பாதுரை,

    புகைப்படம் குறித்த பாராட்டுக்கு நன்றி.

    /இது ஒரு கொடிய வட்டம்/

    உண்மைதான். இந்த இடத்தில் நம்பிக்கை சார்ந்தது என்பதால் சொல்லாமலே இருக்கவும் முடியாது. ஒருசாராரின் வயிற்றுப்பசி என்பதற்காக ஆதரிக்கவும் முடியாது. அதே தொழிலை வண்ணமின்றி இனி செய்வார்கள். சாயம் செய்பவருக்கு இந்த மாதத்தில் நட்டமாகலாம். பிளாஸ்டிக் கவர் செய்பவர்களின் தொழில் நட்டம் நினைத்து அதை ஆதரிக்க முடியாது. அதற்கு தடை வந்துபோது கூட ‘அப்படி செயல்படுத்த முடியுமா?’ என்ற கேள்வி மனதில் இருந்தது நிஜம். தடை என்ற பெயரில் கடைகளில் கவர்கள் விற்கப்படுவதில் முடிந்தது. சென்ற மாதம் நெல்லை சென்றிருந்தபோது கவனித்தது. பிளாஸ்டிக் பைகளை கடைகளில் விற்பதற்கும் தடை. மெல்லிய துணிப்பைகள் புழக்கத்தில் வந்து விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். பெங்களூரில் இது சாத்தியமா என நினைத்தேன். இப்போது இங்கும் கடைகளுக்கு ஆணை வந்து விட்டது கவர்கள் விற்கக் கூடாதென்று. சர்ஜாப்பூர் குடியிருப்பு ஒன்றில் குப்பைகளைப் பிரித்து வெளியேற்றும் முறை குறித்து தூறல் பகிர்வொன்றில் சொல்லியிருந்தேன். இப்போது பெங்களூர் முழுக்க பெரும்பாலான குடியிருப்புகளில்(நான் வசிக்குமிடமும் சேர்த்து) அமலுக்கு வந்து விட்டது. சமையல் கழிவுகளும் காய்ந்த காகிதக் குப்பைகளும் தனித்தனியே வெளியேற்றப்படுகின்றன. அடிக்க அடிக்க அம்மியும்... என்பார்களே.

    என்ன ஒரு வருத்தமெனில் இந்த வருடமே தீர்மானித்து வண்ணச் சிலைகளுக்குத் தடை போட்டிருக்கலாம். வியாபாரிகளுக்கு செய்த சிலைகள் பெருமளவில் விற்காது போன சூழல் ஏற்பட்டிருக்காது.

    பதிலளிநீக்கு
  16. @கோமதி அரசு,

    பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்கிற தகவலை சாந்தியும் பகிர்ந்திருக்கிறார். மக்கள் யோசிக்க வேண்டும். நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  17. @முத்துலெட்சுமி/muthuletchumi,

    இங்கேயும் களிமண் பிள்ளையாரை தேடி சென்று வாங்கும் நிலைதான் இருந்தது. சில வருடங்களாக பத்தில் ஒருபாகம் கிடைக்குமாறு எல்லாக் கடைகளிலும் வைத்திருந்தார்கள். இந்தவருடம்தான் அரசு கேட்டுக் கொண்டதால் அதிக அளவில் சந்தைக்குக் கொண்டு வந்திருந்தார்கள்.

    ஓய்வெடுக்கும் பிள்ளையாருக்குதான் அதிக ரசிகர்கள், ஃபேஸ்புக், ஃப்ளிக்கர் தளங்களிலும்:)! நன்றி முத்துலெட்சுமி.

    பதிலளிநீக்கு
  18. எங்களூரில் களிமண் பிள்ளையார்தான் இப்பவும் .கிணறு இருப்பதால் கவலை இல்லை.
    பெரியவர்கள் சொன்ன வழக்க்த்தைப் பின்பற்றுகிறோம்.

    அதற்கு வர்ணம் பூடிக் கொடுமைப் படுத்தாமல் இருந்தால் தேவலை.
    படங்கள் எல்லாமே அழகு. குழந்தைக் கடவுளின் கடைசிப் படத்தில் ,பார்த்துவிட்டு படுத்துக்கங்களேன் என்று சொன்னேன்:)

    பதிலளிநீக்கு
  19. அழகா அருமையா சொல்லி இருக்கீங்க. வண்ணம் கண்ணைக் கவருதுன்னாலும் கருப்புக் களிமண்ணில் இருக்கும் சில பிள்ளையார் பார்த்தேன். அவரும் கொள்ளை அழகுதான். ECO FRIENDLY ஆகப் பிள்ளையார்கள் மாற வேண்டும்.. அதுதான் ஒரே தீர்வு. ஹாஹாஹா.:)

    பதிலளிநீக்கு
  20. @ஸ்ரீராம்.,

    ஆம், அப்பாதுரை சொல்லியிருப்பது போல் வாங்கி வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவர் அருளும் கருணையும் ஒரேமாதிரியாகவே எப்போதும் எல்லோருக்கும் இருக்கும். நன்றி ஸ்ரீராம். கடைசிப் படம் குறித்த உங்கள் கருத்து அருமை:)! வல்லிம்மா சொல்லியிருப்பதும் கவனியுங்கள்!

    பதிலளிநீக்கு
  21. @அமைதிச்சாரல்,

    இங்கே விட மும்பையில் எப்போதுமே சிலைகள் பெரிதாக இருக்குமே. நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  22. @வல்லிசிம்ஹன்,

    ஆம், நம் ஊர் வழக்கமே களிமண் பிள்ளையாரை வணங்கி மறுநாள் காலை கிணற்றில் சேர்ப்பதுதான்.

    /படுத்துக்கங்களேன்/

    தாயுள்ளம் உங்களுக்கு:)!

    பதிலளிநீக்கு
  23. @Thenammai Lakshmanan,

    கருப்புக் களிமண்ணில் இங்கு பார்த்ததில்லை. மக்கள் மனதில் நாளடைவில் மாற்றங்கள் வரும். நன்றி தேனம்மை:)!

    பதிலளிநீக்கு
  24. வண்ணப் பிள்ளையார்களைப் பயன்படுத்துதல் எனக்கும் அறவே பிடிக்காத ஒன்று. உங்கள் பகிர்வில் படங்கள் அனைத்தும் (வழமை போல்) அருமை. அதிலும் ஓய்வெடுக்கும விநாயகர்... சூப்பர்ப்.

    பதிலளிநீக்கு
  25. பிள்ளையாரைப்பற்று சுவாரஸ்யமான கதைகள் பல இடங்களிலும் படிக்கிறேன்.நம்பிக்கைகள் தொடர்ந்தபடிதான்.முதலாவதாக இருக்கும் கைவினைப் பிள்ளையார் அழகு !

    பதிலளிநீக்கு
  26. //எளிய கடவுள் பிள்ளையார். அருளை வாரி வழங்குவதில் முதன்மையானவர். நட்பானவர். Friendly God எனக் கொண்டாடப்படுபவர். அன்போடும் மனசுத்தியோடும் எளிமையாக வழிபட்டாலே போதும். இறைவனின் பெயரால் இயற்கையை மாசுப்படுத்தாது இருப்போம்.//

    அருமையா சொன்னிங்க அக்கா :))

    //வீட்டிலேயே வாளிநீரில் கரைத்து நன்கு கலக்கிச் செடிகளுக்கு ஊற்றிவிடலாம் எனத் தோழி மூலமாக அறியவந்தபின் அதையே வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம் கடந்த பல ஆண்டுகளாக.//

    மிக நல்ல யோசனை.. எந்த கெடுதலும் யாருக்கும் வராது.. நம்ம மக்கள் கேட்டிட்டாலும் :((

    பதிலளிநீக்கு
  27. நல்ல இடுகை ராமலஷ்மி///பிள்ளையாரப்பன் கடசி போட்டோல அழகா ரெஸ்ட் எடுப்பது சூப்பர்!

    பதிலளிநீக்கு
  28. socially and environmentally conscious என்று பெங்களூரு வாசிகளைச் சொல்லலாம் - பிற நகரங்களைப் பார்க்கையில் (கல்கத்தா, சென்னை தவிர பிற பெரிய நகரங்கள் ஓரளவுக்கு இந்த வகையில் சேர்த்தி என்று நினைக்கிறேன். சென்னையில் வசிப்பது பாவத்தின் சம்பளம் :).

    conscious vs responsible - இது புரிய இன்னும் நாளாகும். நீங்கள் சொல்லியிருப்பது போல தொடங்கினால் தான் முடியும்.

    பதிலளிநீக்கு
  29. பதிவின் முதல் படம், ஓவியமா, சிலையா? ஜொலிபப்து எப்படி?

    கடைசி படம் - ரசிக்க வைக்கிறது. கொஞ்சம் டெல்லி ஆஷியாட்-டின் அப்புவும் நினைவுக்கு வருகிறது. :-)))

    மாசுக்க்கட்டுப்பாட்டுத் துறையின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அடுத்த வருடம் இன்னும் சிறப்பான பலன்தருபவையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    (லேட்டாக என்றாலும்) பண்டிகைதின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  30. @ஹேமா,

    / கைவினைப் பிள்ளையார் அழகு !/

    நுணுக்கமான வேலைப்பாட்டை வியந்து எடுத்த படம். நன்றி ஹேமா.

    பதிலளிநீக்கு
  31. @சுசி,

    நன்றி சுசி. மக்கள் மாறுவார்கள் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  32. @ஷைலஜா,

    நன்றி ஷைலஜா!

    //பிள்ளையாரப்பன் கடசி போட்டோல //

    பெங்களூரில்தான் இருக்கிறார்:)!

    பதிலளிநீக்கு
  33. @அப்பாதுரை,

    /socially and environmentally conscious /

    இது உண்மை. சுற்றுப்புற சூழல் பேண தன்னார்வத் தொண்டர்கள் பல குழுக்களாக இயங்கி வருகிறார்கள். ஓய்வு நேரங்களை இதற்காகவே செலவிடுகிறார்கள். பலனும் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  34. @ஹுஸைனம்மா,

    முதல் படம் சிங்கப்பூர் Gems and Jade factory, Art gallery_யில் எடுத்தது. அதனால்தான் ஜொலிப்பு. ஒன்றரை அடி அளவிலான wall hanging.

    வாழ்த்துகளுக்கு நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  35. வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு அருமை.பண்டிகைக்குப் பின் ஓய்வாக என்னை மிகவும் கவர்ந்தது..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin