Monday, September 17, 2012

இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..- திண்ணை இதழில்..

ந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..' செப்டம்பர் 2005_ல் யதார்த்தா கி. பென்னேஸ்வரன் அவர்கள் தொடங்கிய இலக்கிய சமூக மாத இதழ் “வடக்குவாசல்”. முதல் இதழை வெளியிட்டவர் கவிஞர் வைரமுத்து அவர்கள். வணிக நோக்கிற்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியத்தை, சமூக அக்கறையுடனான கட்டுரைகளை, பலதுறைகளைச் சேர்ந்த ஆளுமைகளுடனான நேர்காணல்களைத் தொடர்ந்து வழங்கி ஏழாண்டுகளாக வாசகர் மனதில் நீங்கா இடம் பெற்று வந்திருக்கிறது. சென்ற சில ஆண்டுகளாக வாசித்து வருகிற வகையில் இதழ் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்திட விருப்பம்.

ஒவ்வொரு இதழிலும் நான்கு பக்கங்களுக்குக் கவிதைகளையும் இரண்டுக்கு குறையாத சிறுகதைகளையும் தந்து வந்திருப்பினும் இலக்கியம் தாண்டி தன் தலையங்கங்கள், கட்டுரைகள் மூலமாகச் சமுதாய மேம்பாட்டுக்காகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. சிறுகதைகள் அத்தனையையுமே முத்திரைக் கதைகள் எனலாம். ஆண்டு தோறும் சிறந்த பனிரெண்டு கதைகளின் தொகுப்பாக வெளிவரும் ‘இலக்கிய சிந்தனை’யில் வடக்குவாசல் கதைகள் இடம்பெற்று வந்திருக்கின்றன. எழுத்துக்கான மரியாதையாகத் தம் பங்கை ஆற்றிடும் படைப்புகளுக்காகப் பிரத்தியேகமாக வரைந்து வாங்கப்படும் அற்புதமான ஓவியங்கள். அட்டைப்படங்களின் தேர்வு ரசனை மிகுந்தவையாக, கவனத்தை ஈர்ப்பவையாகவே அமைந்து வந்திருக்கின்றன. அனைத்துக்காகவும் ‘குங்குமம்’ வார இதழ் வடக்குவாசலை சென்றவருடம் வியந்து பாராட்டியிருந்தது.

தொடர்களாக நான் வாசித்தவற்றில் குழந்தைகள் மனநலம் மற்றும் ஆரோக்கியம், பள்ளிக் கல்வி சீரமைப்பு குறித்து சி.டி.சனத்குமார் அவர்கள் எழுதிய கட்டுரைகள்; ராகவன் தம்பி என்ற பெயரில் ஆசிரியர் அவர்கள் சுயசரிதத்தையொத்த வகையில் தனது மேடை அனுபவங்கள், நாடக மேதைகளுடனான பழக்கங்கள், நிகழ்வுகள் என வாழ்க்கை அனுபவங்களை சுய எள்ளலோடும் நகைச்சுவையோடும் விவரித்துச் சென்ற ‘சனிமூலை’ கட்டுரைகள்; சுற்றுச் சூழல், வேளாண்மை, சமூகம் போன்ற பலவற்றைப் பற்றி ய.சு. ராஜன் அவர்களின் சிந்தனைப் பகிர்வுகள் ஆகியன குறிப்பிடத் தக்கவை. வாசகரிடத்தில் வரவேற்பைப் பெற்ற இவை அனைத்துமே தற்போது வடக்குவாசல் பதிப்பக் வெளியீடாக, நூல்களாக வெளிவந்துள்ளன. சென்ற ஆண்டு ஜூலை மாதம் இசை விமர்சகர் அமரர் சுப்புடு அவர்களின் நினைவில் வடக்குவாசல் நடத்திய மாபெரும் இசைவிழாவுக்குத் தலைமை தாங்கிப் பதிப்பக நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள். 2008-ல் வடக்கு வாசல் இணைய தளத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரே: http://www.vadakkuvaasal.com/. இங்கே அனைத்து இதழ்களும் வருடவாரியாக PDF கோப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. வெளிவந்த நூல்களின் விவரங்களும் உள்ளன: http://www.vadakkuvaasal.com/books-sale.html

பெரிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் புதியவர்களுக்கும் தொடர்ந்து ஊக்கம் தந்தபடி, எண்பத்து நான்கு மாதங்களாக அவ்வப்போது எழுந்த பொருளாதாரச் சிக்கல்களை சமாளித்தபடி, எந்த சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல் தன் தரத்திலும் செயலிலும் உறுதியாகப் பயணித்து வந்த வடக்குவாசலின் சமீபத்திய இதழ்கள் வழக்கத்தை விடவும் அதிக வீச்சுடன் அமைந்திருந்தன. “அணையப் போகும் ஜோதியல்லவா?” என்பதாகச் சொல்லியிருந்தார் ஆசிரியர். இத்தகு சீரிய பயணங்கள் என்றைக்கும் சுடர்விட்டுச் சுற்றிலும் ஒளியைப் பரப்பியபடி தம் இலக்கை நோக்கிச் சென்று கொண்டேதான் இருக்கும். சிற்றிதழ் எனும் வடிவிலிருந்து இணைய இதழ் எனும் வடிவுக்குக் கைமாற இருக்கிற இந்தத் தீபம் என்றேனும் ஓர்நாள் மீண்டும் அச்சு வடிவுக்குத் திரும்பும் எனும் வாசகர்களின் நம்பிக்கை நிறைவேறும் வரையில், வடக்குவாசலை அதன் இணைய தளத்தில் தொடருவோம். புதுப்பொலிவுடன் விரைவில் மலர இருக்கும் இணைய இதழுக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்போம்.

***

16 செப்டம்பர் 2012 திண்ணை இதழில், நன்றி திண்ணை!

21 comments:

 1. சிற்றிதழ்களை ஒரு குறிப்பிட கட்டத்திற்கு மேல் யாராலும் நடத்த முடிவதில்லை

  ReplyDelete
 2. வருத்தமாகத்தான் இருக்கிறது.

  ReplyDelete
 3. புதுப்பொலிவுடன் விரைவில் மலர இருக்கும் இணைய இதழுக்கான அறிவிப்புக்காகக் காத்திருப்போம்.//

  மறுபடியும் புது பொலிவுடன் வடக்கு வாசல் இணைய இதழவர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் அன்புக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள்.

  யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

  ReplyDelete
 5. இலக்கியச்சிந்தனை அமைப்பு என்பது ப சிதம்பரம் சகோதரர்கள் நடத்துவதுதானே?
  நீங்கள் கொடுத்துள்ள சுட்டிகள் கிளிக்கி கிளிக்கிப் பார்த்தும் (!),திறக்காமல் என் கணினி சண்டி செய்கிறது! பின்னர் வந்து பார்க்க வேண்டும்!

  ReplyDelete
 6. வடக்கு வாசல் - புதுப்பொலிவுடன் விரைவில் தொடங்கி, சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. வடக்கு வாசல் முன் போல் பொலிவுடன் வரணும். குறைஞ்ச பட்சம் இணைய இதழாகவாவது வரணும் என்பதே எனது ஆசை.

  ReplyDelete
 8. @எல் கே,

  உண்மைதான் எல் கே. காரணம் அவை சமரசங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. நன்றி.

  ReplyDelete
 9. @மோகன் குமார்,

  வாசகர் அனைவருக்கும். நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 10. @ராகவன் தம்பி,

  அனைத்து வாசகர்களின் எண்ணங்களையுமே இங்கு பகிர்ந்திருக்கிறேன். மீண்டும் வாசிக்கக் காத்திருக்கிறோம் வடக்கு வாசலை. நன்றி சார்.

  ReplyDelete
 11. @ஸ்ரீராம்.,

  நீங்கள் சொன்னதுமே கவனித்தேன். இணைப்புகளை சரி செய்து விட்டேன். சரி பார்த்திடுங்கள். இலக்கிய சிந்தனை அமைப்பு 1970ஆம் ஆண்டிலிருந்து வானதிப் பதிப்பகம் மூலமாக அந்தந்த வருடத்தின் சிறந்த கதைகளாகப் பனிரெண்டை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வருகிறார்கள். நடத்துகிறவர்கள் பற்றி தெரியவில்லை.

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 12. @அமைதிச்சாரல்,

  அதுவே நம் அனைவரின் ஆசையும். நன்றி சாந்தி.

  ReplyDelete
 13. இப்போது அந்தப் பக்கங்கள் திறக்கின்றன. Thank you. நாளை அல்லது அப்புறம் காலை வேளைகளில் வந்து பி டி எப் கோப்புகளை இறக்க வேண்டும்!! இலவச வேளை!!

  ReplyDelete
 14. வடக்கு வாசலை தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன்....

  நல்லதொரு மாத இதழ் நின்றுவிட்டதில் வருத்தம். ஒருமுறை அவரது அலுவலகத்தில் தில்லி பதிவர் சந்திப்பு கூட நடத்தியிருக்கிறோம்.

  தொடர்ந்து இதழ் நடத்துவதில் இருந்த பிரச்சனைகள் புரிகிறது. விரைவில் இணைய இதழாக வெளிவரும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்..

  ReplyDelete
 15. இணையத்தில் வெளிவரவிருக்கும் வடக்கு வாசலுக்கு வாழ்த்துகள்..
  பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி..

  ReplyDelete
 16. @ஸ்ரீராம்.,

  நல்லது ஸ்ரீராம். 2008-ல் இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டதும் முந்தைய இதழ்களையும் சேர்த்து மிக நேர்த்தியாகத் தொகுத்து வைத்துள்ளார்கள்.

  ReplyDelete
 17. @வெங்கட் நாகராஜ்,

  மாத இதழா, மாதமிருமுறையா என விரைவில் தீர்மானிக்கப்பட உள்ளது. அதுவரைக்கும் எப்போதும் போலவே வடக்குவாசலை இணைய தளத்தில் தொடர்ந்து கொண்டிருக்கலாம் நாம். நன்றி வெங்கட்.

  ReplyDelete
 18. @பாச மலர் / Paasa Malar,

  கட்டுரையில் சொல்லியிருப்பது போல, இணைய ‘தளம்’ ஏற்கனவே 2008-ல் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களால் தொடங்கப்பட்டு இயங்கிவருகிறது. இணைய ‘இதழ்’ வடிவில் எத்தனை நாளுக்கொரு முறை புதுப்பிக்கப்படும் என்கிற அறிவிப்புக்காகவே இப்போது வாசகர்கள் காத்திருக்கிறார்கள். நன்றி மலர்.

  ReplyDelete
 19. எனக்கு நன்றி சொல்ல நினைத்து நன்றி வல்லிம்மா என்று வந்து விட்டதோ!  ReplyDelete
 20. @கோமதி அரசு,

  ஒரு அம்மாவை நினைத்தபடி இன்னொரு அம்மாவுக்கு சொல்லி விட்டிருக்கிறேன்:). இப்போது திருத்திக் கொள்கிறேன். நன்றி கோமதிம்மா!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin