Sunday, June 15, 2008

ஜூன் PIT போட்டி- A Day at Work

தித்திக்கும்
தேனினை நாம் சுவைத்திட
வானினை முட்டிடும் கட்டிட உச்சியிலே-
தத்தித் தத்தி
தவழுது பார் ஓருயிர்-
சுற்றிப் பறக்கும் தேனீக்கள்
கொட்டிடுமோ எனும் அச்சமின்றி!


[அடுக்கு மாடிக் குடியிருப்பின் ஒன்பதாவது தளத்தில்
காணக் கிடைத்த இக் காட்சியை
அடுத்த கட்டிடத்தின் ஆறாவது தளத்திலிருந்து
எப்போதோ என் காமிராவில் அடைத்தேன்.
இப்போது போட்டிப் படமாகத் தந்தேன்.

அந்த நூறடி உயரமே ஒரு ரிஸ்க்- ரீங்காரமிடும்
அந்த நூற்றுக் கணக்கான தேனீக்கள்...
தன்னைக் காத்துக் கொள்ள எக்கவசமுமின்றி...
படத்தைக் 'க்ளிக்' கிட்டுப் பார்த்தால் தெரியும்.
பால்கனியில் நின்று இன்னும் க்ளோஸாக எடுத்திருக்க
முடியுமானாலும், அவர் கவனம் சிதறி விடக் கூடாதென்று
பதறி அறை ஜன்னலுக்குள் இருந்து எடுத்தேன்.]
***


புதுமனை துலங்கிட புரோகிதம்.
***


சுத்தம் சோறு போடும்


சுத்தம்(தான்) இவர்களுக்குச் சோறு போடுகிறது.
***


குழந்தைக்குச்
சோறும் பாலும் ஊட்டி
பசி போக்கும்
தாயைக் காட்டலாமெனில்
ஈறும் பேனும் நீக்கி
தலை பேணும்
தமக்கை தாயையும்
காட்டலாம்தானே!

***


49 comments:

 1. எல்லா படங்களும் அருமையாயிருக்கு,
  ராமலஷ்மி!!
  பார்த்தேன்..திகைத்தேன்..ரசித்தேன்..இனி வெற்றியெனும் தேனைப் பிழிந்திட
  வாழ்த்துக்களும் தந்தேன்!!!

  ReplyDelete
 2. தங்கள் பாராட்டு (தேன்) மழையில் நனைந்தேன். நெகிழ்ந்தேன். நன்றி நானானி.

  ReplyDelete
 3. அட! படத்திற் கேற்றாற்போல் கவிதை அருமையாகப் புனைந்துள்ளீர்கள்.

  ///தித்திக்கும்
  தேனினை நாம் சுவைத்திட
  வானினை முட்டிடும் கட்டிட உச்சியிலே-
  தத்தித் தத்தி
  தவழுது பார் ஓருயிர்-
  சுற்றிப் பறக்கும் தேனீக்கள்
  கொட்டிடுமோ எனும் அச்சமின்றி!///

  இக்கவிதை அப்படத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது

  ReplyDelete
 4. இன்னும் எந்த வித பாதுகாப்பு கவசமுமின்றி....என்றும் சேர்த்திருக்கலாம், ராமலஷ்மி!!
  இந்த தேனீக்களே வெற்றியை கொண்டுவந்து 'கொட்டும்'

  ReplyDelete
 5. படத்தோடு கவிதையையும் ரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி அகரம்.அமுதா.

  ReplyDelete
 6. நானானி said...// இன்னும் எந்த வித பாதுகாப்பு கவசமுமின்றி...
  என்றும் சேர்த்திருக்கலாம், ராமலஷ்மி!!//

  அக்கறையுடன் தாங்கள் சுட்டிக் காட்டிய அறிவுரையை ஏற்று, சேர்த்து விட்டேன் அவ்வரியை "தன்னைக் காத்துக் கொள்ள எக்கவசமுமின்றி..." என. மிக்க நன்றி நானானி.

  //இந்த தேனீக்களே வெற்றியை கொண்டு வந்து 'கொட்டும்'//

  தேனீக்கள் வெற்றியைக் கொட்டினால் அது கிட்டியதன் காரணம் தங்கள் வாழ்த்துக்களாகவே இருக்கும்.

  ReplyDelete
 7. ஆஹா! ராமலக்ஷ்மி, போட்டிப் படம் அருமை.முதலில் தேனீக்கள் மட்டும் தான் பார்த்தேன்,பிறகு தான் அந்த மனிதரையும் பார்த்தேன்.

  அருமையான படம்.

  படம் பார்த்து கீழே வந்தால், தங்களின் அருமையான கவிதை, அதை விட டாப்.

  (இந்த) வண்டுக்கும் (இரட்டிப்புத்)தேன் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துகள் பல...:-))))))

  ReplyDelete
 8. ஆஹா, ராமலக்ஷ்மி... கதை, கவிதை, கட்டுரை, இதெல்லாம் மட்டுமில்லாம போட்டோ பிடிக்கிறதுலயும் நீங்க கெட்டி போல! :) அதிலும் முதல் படமும் கவிதையும் தேனாய் இனிக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. அட இது வேற தெரியுமா உங்களுக் சொல்லவேயில்லை!
  நீங்கள்லாம் பெரும் பதிவர்கள் லிஸ்ட்டுக்குள்ள வருகிற ஆக்களுங்கோ!:)

  ReplyDelete
 10. ஆமா அவரு எப்படி அந்த மாதிரி நிக்கிறாரு (தொங்கராறு)?

  படம் நல்லா இருக்குங்க..போட்டி கடுமையாக இருக்கும் போல இருக்கே :-((((

  ReplyDelete
 11. "தேன் உண்ணும் வண்டு ராமலஷ்மியைக் கண்டு வெற்றிக் கோப்பையையைத் தந்திடுமே ரீங்காரம் கொண்டு..."
  மீதி பாட்டை நீங்களே மனதுக்குள் பாடிக் கொள்ளவும்...hi hi

  ReplyDelete
 12. வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவமும் படமாக்கி ஸ்லைடு ஷோ போல் போட்டிருக்கிறீர்கள்.
  சூப்ப்பர்பி.
  உங்கள் ஆல்பம்
  பார்த்த பிறகு
  நானெல்லாம்
  ஜுஜுபி

  ReplyDelete
 13. நவரத்தினக்களையும் கோர்த்து மாலையாக்கி வைத்துக் கொண்டு வெறும் முத்துச்சரம் என்று காட்டுகிறீர்களே...பொய் சொல்றதுக்கும் ஒரு அளவு வேண்டாம்....

  ReplyDelete
 14. 1,5 தும் நல்லாருக்கு
  5 வது படம் இயல்பா இருக்கு

  ReplyDelete
 15. போட்டிப் படம் அருமை.முதலில் தேனீக்கள் மட்டும் தான் பார்த்தேன்,பிறகு தான் அந்த மனிதரையும் பார்த்தேன்.


  Advance congrats :)

  ReplyDelete
 16. எவ்வளவு தைரியமா தேனீக்களையெல்லாம் எடுத்திருக்கீங்க?
  அதுக்கே உங்களுக்குப் பரிசு தரலாம்.
  எனக்கெல்லாம் இப்படிக் கூட்டமாப் பார்த்தாலே உடல் நடுங்கும். :(
  அப்புறம் ஒரு தேனீயை மட்டும் சூம் பண்ணி எடுத்திருந்தாலும் சூப்பரா இருக்கும் :)

  ReplyDelete
 17. newbee said...//முதலில் தேனீக்கள் மட்டும் தான் பார்த்தேன்,பிறகு தான் அந்த மனிதரையும் பார்த்தேன்.//

  தேன் கூட்டைக் கலைத்தவரின் கவனம் குலைந்து விடக் கூடாது என்ற கவலையில், அவர் கவனத்துக்குள் வராமல் சுமார் 40 அடி தொலைவிலிருந்து பிடித்த படம் அது.

  newbee: //படம் பார்த்து கீழே வந்தால், தங்களின் அருமையான கவிதை, அதை விட டாப்.

  (இந்த) வண்டுக்கும் (இரட்டிப்புத்)தேன் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துகள் பல...:-))))))//

  புது வண்டுக்கு இல்லாத தேனா? படத்தினை கண்டு ரசித்தமைக்கும் கவித்தேனை உண்டு களித்தமைக்கும் நன்றி!

  ReplyDelete
 18. ராமலக்ஷ்மி அசத்திட்டீங்க.

  என்ன ஒரு தெளிவான சிந்தனை.

  அவர் தேனெடுக்கிறாரா, உயிர்த்தேன் என்று சொல்கிறாரா.
  பெரிசாகச் செய்து பார்த்தால்தான் அவர் இருப்பதே தெரிந்தது.

  @ரிஷான், அவங்க அடுத்த பில்டிங்கிலிருந்து எடுத்ததாகச் சொல்லி இருக்காங்க இல்ல:)
  சுத்தம் செய்து சோறு உண்பவர் படம் சூப்பர்.

  உங்களை நான் போட்டொ பிடித்திருக்கணும்:)

  ReplyDelete
 19. மறந்துட்டேன். கவிதையும் சூப்பர். ம்ம்ம்ம்ம்ம். வண்டு பாடுது பா.

  ReplyDelete
 20. கவிநயா said...
  //அதிலும் முதல் படமும் கவிதையும் தேனாய் இனிக்கிறது.//

  பெயரிலேயே கவியைக் கொண்டு கவிதையையே சுவாசித்து வாழும் கவிநயாவுக்கு கவித்தேன் பிடித்ததில் ஆச்சரியம் என்ன? என் மே பிட் பதிவின் போட்டிப் படத்துக்கான கவிதையையும் நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என்பது என் அவா.

  http://tamilamudam.blogspot.com/2008/05/pit_8670.html

  ReplyDelete
 21. கிரி said...
  //ஆமா அவரு எப்படி அந்த மாதிரி நிக்கிறாரு (தொங்கராறு)?//

  "இங்கேயும் தொங்குறான் அங்கேயும் தொங்குறான் ஆஆ.. தொங்கு ராசா"- என காம்ப்ளான் விளம்பரத்தில் வருவது போலெல்லாம் இவர் போஸைப் பார்த்தால் பாடத் தோணாது, கிரி.

  பென்ட் ஹவுசின் உச்சியிலிருந்து 2 பேர் கயிறு கட்டி இவரை இறக்க, தொங்கிய படி ஒரு தளம் கீழ் இறங்கியவர் டைவ் அடித்து அந்தச் சுவரில் தாவி ஏறித் தொங்குகிறார். படத்தை கிளிக்கிட்டால் இடுப்புக் கயிறு தெரியும்.

  பாராட்டுக்கு நன்றி கிரி.//

  ReplyDelete
 22. goma said...
  //"தேன் உண்ணும் வண்டு ராமலஷ்மியைக் கண்டு வெற்றிக் கோப்பையையைத் தந்திடுமே ரீங்காரம் கொண்டு..."//

  பாராட்ட பாட்டுடன் வந்து விட்டார்கள் கோமா.

  கோமா://உங்கள் ஆல்பம்
  பார்த்த பிறகு
  நானெல்லாம்
  ஜுஜுபி//

  ஏப்ரல் தனிமை 'பிட்' போட்டியில் பரிசு பெற்ற தாங்களே இப்படிச் சொல்லலாமா?


  கோமா://நவரத்தினக்களையும் கோர்த்து மாலையாக்கி வைத்துக் கொண்டு //

  பாராட்டுக்கு நன்றிப் பரிசாக இதோ ஒரு நவரத்தின மாலை.

  ReplyDelete
 23. கார்த்திக் said...
  //1,5 தும் நல்லாருக்கு
  5 வது படம் இயல்பா இருக்கு//

  அப்பாட, நீங்கள் ஒருவராவது 5-வது படத்தைக் குறிப்பிட்டீர்களே. நன்றி கார்த்திக். எனக்கும் அடுத்து பிடித்தது அதுதான். அதனால்தான் அதற்கும் ரசித்து கவி வடித்தேன்.

  ReplyDelete
 24. ambi said...
  //போட்டிப் படம் அருமை.முதலில் தேனீக்கள் மட்டும் தான் பார்த்தேன்,பிறகு தான் அந்த மனிதரையும் பார்த்தேன்.//

  newbee-க்கு சொன்னதையே I repeat.
  "தேன் கூட்டைக் கலைத்தவரின் கவனம் குலைந்து விடக் கூடாது என்ற கவலையில், அவர் கவனத்துக்குள் வராமல் சுமார் 40 அடி தொலைவிலிருந்து பிடித்த படம்."
  Brightness, contrast ஒரளவுக்கு மேல் அதிகரிக்க முடியவில்லை. வானத்தின் வண்ணம் வெளுத்து விடும் அபாயம்.

  இப்படியும் வைத்துக் கொள்ளலாமே அம்பி. முதலில் தென்படும் தேனீக்கள் யாவும் worker bees. கூடு கலைக்கப் படுவது கண்டு அதைக் காப்பாற்ற அலை பாய்கின்றன. அதுவும் அவ்வுயிரினத்தின் அன்றாட வேலையில் ஒன்றாகாதா?

  ambi://Advance congrats :)//

  Special thanks :)!

  ReplyDelete
 25. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //எவ்வளவு தைரியமா தேனீக்களையெல்லாம் எடுத்திருக்கீங்க?
  அதுக்கே உங்களுக்குப் பரிசு தரலாம்.
  எனக்கெல்லாம் இப்படிக் கூட்டமாப் பார்த்தாலே உடல் நடுங்கும். :(//

  தேனீக்களை விட அந்த மனிதரின் போஸைப் பார்த்துத்தான் உடல் நடுங்கியது.


  ரிஷான்://அப்புறம் ஒரு தேனீயை மட்டும் சூம் பண்ணி எடுத்திருந்தாலும் சூப்பரா இருக்கும் :)//

  ஆமாமாம். zoom பண்ணும் போது பின் பக்கமா வந்து ஒண்ணு 'பொட்'னு கொட்டிட்டுப் போனால் அத விடத்தான் சூப்பரா இருக்கும்:))![வ.வா.சங்கத்திலிருந்து
  ஒருவாறாக வர வழி தெரிந்ததா ரிஷான்:))!]

  ReplyDelete
 26. தமிழன் said...//அட இது வேற தெரியுமா உங்களுக் சொல்லவேயில்லை!//

  டெக்னிகலாய் பெரிசா ஏதும் தெரியாதாதென்றாலும் ஏதோ கொஞ்சம் கற்று வைத்திருக்கிறேன் தமிழன். நேரமிருந்தால் போன மாதப் போட்டிக்குப் போட்டிருந்த 2 பதிவுகளையும் பாருங்கள்.

  ReplyDelete
 27. //தேனீக்களை விட அந்த மனிதரின் போஸைப் பார்த்துத்தான் உடல் நடுங்கியது.//

  நீங்க சொன்னதுக்கப்புறம் தான் வந்து பார்க்குறேன்.மனிதனோட கால் தெரியுது.யார் அவர்?அங்கே என்ன செய்றார்?

  ReplyDelete
 28. கடைசி போட்டோவும் நல்லா இருக்கு.
  ஆனா கடைசி போட்டோல ஒரு சிறுமியைப் போட்டு ரெண்டு பேர் இப்படித் தலையில கொட்டுறாங்களே..நீங்க போட்டோ எடுத்துட்டு ஓடிப் போய்க் காப்பாத்தியிருக்கலாம் :(

  ReplyDelete
 29. வல்லிசிம்ஹன் said...
  //அவர் தேனெடுக்கிறாரா, உயிர்த்தேன் என்று சொல்கிறாரா.//

  ரசித்தேன். வாங்க வல்லிம்மா, வாழ்த்த இன்னும் வரவில்லையே எனக் காத்திருந்தேன். படத்தோடு கவிதையையும் ரசித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 30. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //யார் அவர்?அங்கே என்ன செய்றார்?//

  அவர் தேன் எடுப்பவர். தேன் எடுக்கிறார். அவர் கையிலிருப்பது போன்ற ஒரு வாளியில் சில இலைதளைகளைப் போட்டு நெருப்பு மூட்டி, பின் அதை அணைத்து புகைந்து கொண்டிருக்கும் போதே (புகை மூட்டம் என்பர்) மேல் தளத்திலிருந்து கயிற்றின் மூலம் தேனடை பக்கத்தில் அதை இறக்கவும் தேனீக்கள் கூட்டிலிருந்து வெளியெறி பறக்க ஆரம்பித்தன. பின் இம் மனிதரை இறக்கினார்கள். (கிரிக்கு அளித்த பதிலைப் பார்க்கவும்). அவர் எந்த கவசமுமின்றி இப்படித் தொங்கிய படி தேன் அடைகளைப் பிழிந்து வாளியில் தேன் எடுத்துக் கொண்டிருப்பதைத்தான் பார்க்கிறீர்கள் ரிஷான்.

  ReplyDelete
 31. எம்.ரிஷான் ஷெரீப் said...
  //ஆனா கடைசி போட்டோல ஒரு சிறுமியைப் போட்டு ரெண்டு பேர் இப்படித் தலையில கொட்டுறாங்களே..//

  படத்துக்கடியில் இருக்கும் கமென்டை நல்லாப் பாருங்க ரிஷான். அவர்கள் கொட்டவில்லை. அமுக்கிப் பிடித்து பேன் எடுக்கிறார்கள்.

  ரிஷான்:
  //நீங்க போட்டோ எடுத்துட்டு ஓடிப் போய்க் காப்பாத்தியிருக்கலாம்:(//

  காப்பாற்ற வேண்டிய அளவுக்கு ஒண்ணும் பெரிசா நடந்திடலைன்னாலும் ஓடிப் போய் காப்பாற்றியிருக்க முடியாது. பறந்துதான் போயிருக்க வேண்டும். ஏனெனில் இப்படமும் சுமார் 70 அடி தொலைவிலிருந்து zoom செய்யப் பட்டது. எம் அடுக்குமாடி குடியிருப்பை அடுத்த சாலையையும் தாண்டி ஒரு வீட்டின் மொட்டை மாடியில் காணக் கிடைத்தக் காட்சி இது.

  ReplyDelete
 32. இப்பதாங்க, முதல் படத்துல ஒரு ஆள் அபாயகரமானா போஸ்-ல இருக்குறதப் பார்த்தேன். நல்ல படம். வாழ்த்துகள்.

  ReplyDelete
 33. படங்கள் இயல்பா அழகா இருக்கு. உங்கள் கவிதையும் படங்களுக்கு நல்ல வர்ணனையாக உள்ளது.

  ReplyDelete
 34. வந்துட்டேன்............

  தேனீ பயமெல்லாம் இல்லீங்க.

  நாய் பூனை யானை இந்தமாதிரிப்பட்டவங்களுக்கு எதாவது கஷ்டமுன்னா கண்ணாலே பார்க்கக்கூட முடியாது.

  இன்னிக்குப் பாருங்க எங்க ஊர்லே ஒரு போலீஸ் நாய் ட்யூட்டியில் இருந்தப்ப, அந்தப் பாதகன் கத்தியாலே குத்திட்டான். அது இறந்துபோச்சுன்னு நேஷனல் நியூஸ்லே சொல்லிட்டாங்க. பாவம்.....

  (அது ட்யூமராலே இறந்துபோச்சு)

  சம்பவம் நடந்து பொழைச்சுக்கிச்சு. அது ஆச்சு ஒருவருசம். அப்புறம் ரிட்டயர் ஆகி இருந்துச்சு.

  மனசு தாங்கறதில்லைங்க.....


  சொல்ல மறந்துட்டேன் பாருங்க. படங்கள் சூப்பரா இருக்கு.

  ReplyDelete
 35. amal said...
  //நல்ல படம். வாழ்த்துகள்.//

  பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அமல். உங்கள் போட்டிப் படத்தைப் பெரிதும் ரசித்தேன்.

  ReplyDelete
 36. மணிமொழியன் said...
  //படங்கள் இயல்பா அழகா இருக்கு. உங்கள் கவிதையும் படங்களுக்கு நல்ல வர்ணனையாக உள்ளது.//

  இயல்பான படங்களில் காட்சியே கவிதை படைத்து விடும் மணிமொழியன். நம்ம கவிதைகள் ஒரு டச் அப் மாதிரி. ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 37. துளசி கோபால் said...//தேனீ பயமெல்லாம் இல்லீங்க.

  நாய் பூனை யானை இந்தமாதிரிப்பட்டவங்களுக்கு எதாவது கஷ்டமுன்னா கண்ணாலே பார்க்கக்கூட முடியாது.//

  உங்கள் ப்ளூ க்ராஸ் மனது புரிகிறது மேடம். ரிஷானுக்கு விளக்கியிருக்கிற மாதிரி, தேனீக்களைக் கூட கெமிக்கல் புகையால் விரட்டாமல் மூலிகை இலைகளைக் கொண்டுதான் மூட்டமிடுகிறார்கள். தேனெடுத்த முடித்த பின்னர் தேனீக்கள் மறுபடி அங்கே செட்டிலாகி விடுகின்றன.

  ReplyDelete
 38. எனது படம் குறித்த தங்களது பாராட்டுதல்களுக்கு நன்றி! Bee Movie என்று ஒரு கார்ட்டூன் படம் வெளி வந்துள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்!

  ReplyDelete
 39. தங்கள் வலைப்பூவுக்கும் வந்து பாராட்டவிருந்தேன். க்ளோஸ் அப் ஷாட்டில் மட்டுமின்றி இதிலும் முந்திக் கொண்டீர்கள். Bee Movie கண்டிப்பாகப் பார்க்கின்றேன்.

  ReplyDelete
 40. ரொம்ப கஷ்டமான ஒரு வேலையை படம் பிடித்திருக்கறீர்கள். அருமை.
  எனக்கு ”சுத்தம்(தான்) இவர்களுக்குச் சோறு போடுகிறது” படம் ரொம்ப பிடித்திருக்கிறது. அந்த நாய் செல்லும் திசை இந்தப் படத்திற்கு 2D effect கொடுத்திருப்பது சிறப்பு. நல்ல composition-னும் கூட.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 41. சூர்யா said...
  //ரொம்ப கஷ்டமான ஒரு வேலையை படம் பிடித்திருக்கறீர்கள். அருமை.//

  நன்றி சூர்யா!

  //”சுத்தம்(தான்) இவர்களுக்குச் சோறு போடுகிறது” படம் ரொம்ப பிடித்திருக்கிறது. அந்த நாய் செல்லும் திசை இந்தப் படத்திற்கு 2D effect கொடுத்திருப்பது சிறப்பு. நல்ல composition-னும் கூட.//

  தெருவைக் கூட்டி தெருமுனையிலிருந்த குப்பைத் தொட்டியை அந்தப் பெண்மணி காலி செய்ய எடுத்துக் கொண்ட நேரம் நிமிடங்கள் பதினைந்து . அவளை வெவ்வேறு போஸ்களில் நானெடுத்த படங்கள் பனிரெண்டு. நாயும் குப்பையிலிருந்து ஏதாவது உணவு கிடைக்காதா என அவளைச் சுற்றி சுற்றி வந்தது. அவளோ அதைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியில் வேலையை முடித்துக் கிளம்பியும் விட்டாள். அப்படியும் நாய் விடாமல் ஏக்கத்தோடு அவளைத் தொடருது. நாய்க்காகவே அந்தக் கடைசிப் படத்தைப் பதிவுக்கு செலக்ட் செய்தேன்.
  "சுத்தம்(தான்) இவர்களுக்குச் சோறு போடுகிறது".. ஆனா அந்த நாய்க்கு சோறு போடுவது யாரு... கூறுங்கள் பாவம் இதிலே யாரு.?

  ReplyDelete
 42. தேனீக்களின் படம் பார்த்தேன்
  பின்னூட்டங்களின் தேன் மழையில் நனைந்தேன்
  மற்ற படங்களையும் பார்த்தேன்
  அதற்கிட்ட தலைப்புகளையும் வாசித்தேன்
  ரசித்தேன், மகிழ்ந்தேன்.

  ஆஹா, டாங்க்ஸ் கவியரசரே :)

  ReplyDelete
 43. முதல் ஐம்பதுக்குள் வந்து விட்டீர்கள்.
  பரிசு கிடைக்க வாழ்த்துக்கள்.
  சகாதேவன்

  ReplyDelete
 44. //தேனீக்களின் படம் பார்த்தேன்
  பின்னூட்டங்களின் தேன் மழையில் நனைந்தேன்
  மற்ற படங்களையும் பார்த்தேன்
  அதற்கிட்ட தலைப்புகளையும் வாசித்தேன்
  ரசித்தேன், மகிழ்ந்தேன்.//

  தேன் தேன் எனக் கவியரசர் பாணியில் ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றி சதங்கா!

  வெற்றி தேன் கிட்டாவிடினும் இத்தனை பேரின் பின்னூட்டப் பாராட்டுக்கள் ஊக்கத்தைக் கொடுத்ததெனில் அது மிகையாகாது.

  வெற்றி பெற்று முதல் சுற்றில் வந்த பத்து பேரையும் நாம் எல்லோரும் வாழ்த்துவோம்!

  ReplyDelete
 45. வாருங்கள் சகாதேவன். முதல் ஐம்பது முடிந்து அருமையான தேர்வாக முதல் பத்தும் அறிவிப்பாகி விட்டது. புகைப் பட வல்லுநராகிய உங்கள் கணிப்பில் முதல் மூன்று எதுவாயிருக்கும் என அறிய ஆவல். PIT-ல் உங்கள் பின்னூட்டத்தைக் காணக் காத்திருக்கிறேன்.

  தங்கள் வாழ்த்துக்கும் நன்றி. இத்தனை பேர் ரசித்துப் பாராட்டியதையே பெரிய பரிசாக உணர்கிறேன்.

  ReplyDelete
 46. படங்கள் அனைத்தும் அருமை மேடம்!

  சரி.. வந்த விஷயத்தை சொல்லிடறேன்.. நீங்கள்லாம் திட்டினதால என் எதிர்பாராத திருப்பம் கதையோட முடிவுல மறுபடி ஒரு எதிர்பாராத திருப்பம் குடுத்துட்டேன். பாத்து பிடிச்சுருக்கான்னு சொல்லுங்க!)

  ReplyDelete
 47. பரிசல்காரன் said...
  //படங்கள் அனைத்தும் அருமை மேடம்!//

  நன்றி பரிசல்காரரே!

  //நீங்கள்லாம் திட்டினதால என் எதிர்பாராத திருப்பம் கதையோட முடிவுல மறுபடி ஒரு எதிர்பாராத திருப்பம் குடுத்துட்டேன். பாத்து பிடிச்சுருக்கான்னு சொல்லுங்க!)//

  எதிர்ப்பு வந்ததும் திருத்தம் செய்தது நல்ல திருப்பமே. வந்து பாத்து கருத்தும் சொல்லிட்டேன்ல.

  ReplyDelete
 48. ராமலக்ஷ்மி

  உழைப்பின் உயர்வினைக் காட்டும் அனைத்துப் படங்களுமே அருமை. புரோகிதம் நன்றாக வந்திருக்கிறது.
  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 49. cheena (சீனா) said...
  //உழைப்பின் உயர்வினைக் காட்டும் அனைத்துப் படங்களுமே அருமை.
  புரோகிதம் நன்றாக வந்திருக்கிறது.//

  நன்றி சார். புகைப்பட நேர்த்தியில் அதுவே முதல் என்றாலும் உழைக்கும் வர்க்கத்துக்கான மரியாதையாக தேன் எடுப்பவர் என் மனதில் முதல் இடம் பெற்று விட்டார்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin