Wednesday, January 22, 2014

கலைத் திருவிழா - 2014 பெங்களூர் சித்திரச் சந்தை - பதினோராம் பதிப்பு

ழக்கமாக ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிறு நடைபெற்ற பெங்களூர் சித்திரச்சந்தையின் பதினோராம் பதிப்பு இந்த வருடம் முதல் ஞாயிறில் ஜனவரி ஐந்தாம் தேதி நடந்து முடிந்தது, 3 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்று, ஒரு கோடி ரூபாய் விற்பனையைத் தொட்டு.

#1

திருவிழா காணும் கலைக்கோவில் சித்திரக்கலா பரிக்ஷ்த் கலைஞர்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் பாலமாக அமைந்து ஓவியக் கலையை வளர்க்கும் போற்றத் தகு சேவையைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது. 

[படங்கள் திறக்க நேரம் எடுத்தால், ஏதேனும் ஒரு படத்தின் மேல் க்ளிக் செய்தால், லைட் பாக்ஸில் வரிசையாக இரசிக்கலாம்.]
# 2

எள் விழ இடமில்லை என்பார்களே, அப்படியானக் கூட்டம்.  என் ஐந்தடி உயரத்துக்கு சிக்கிய மேலிருக்கும் படம் திருப்தி தராததால் கேமராவை மேலே தூக்கிப் பிடித்து எடுத்தபடம் கீழே:).  எம்பிப் பார்த்தால் இதே போன்ற மனித வெள்ளம்தான் சுமார் ஒன்றைரை இரண்டு கிலோமீட்டர் நீளமான குமரக்ருபா சாலை முழுவதும். இந்த பிரதான சாலையில் மட்டுமின்றி அதன் குறுக்குத் தெருக்களிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓவியர்களுக்காக இடம் ஒதுக்கியிருந்தார்கள்.
#3
பதிவு செய்து இடம் பெற்றவர்கள் 1200 பேர்கள் என்றால் ஆர்வத்தின் பேரில் படங்களுடன் இடம்பிடித்து விட்ட ஓவியர்கள் நூறு பேராவது இருப்பார்கள் என்கிறது செய்தி. மொத்த ஓவியர்களில் 30 சதவிகிதம் பேர் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 20 மாற்றுத் திறனாளிகள் தங்கள் கலைத் திறனைக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

விலை என்று வருகையில் நூறு ரூபாயில் ஆரம்பித்து இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்பிடப்பட்ட ஓவியங்கள் வரை இடம்பெற்றிருந்தன. காலை நேரத்தில் மேலும் கீழுமாக நடந்து படங்களை இரசித்தும் விலையைத் தெரிந்தும் கொள்கிற இரசிகர்கள் மாலைக்காகக் காத்திருந்து பேரம் பேசுவதும் ஓவியர்கள் நிர்ணயித்த விலையிலிருந்து இறங்கி வருவதும் இங்கே சாதாரணமாக நிகழும் ஒன்று.

கண்காட்சியைக் காலையில் திறந்து வைத்த முதலமைச்சர், ‘கலை ஆர்வலர்களுக்கும் ஓவியர்களுக்கும் நடுவே இடைத் தரகர்கள் எவரும் இன்றி நேரடியாக வாங்க முடிகிற இந்தக் கண்காட்சியைத் தொடர்ந்து அரசு ஆதரிக்கும்’ எனத் தெரிவித்தார். அதே போல பலசாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இத்திருவிழாவுக்கு அரசு ஒதுக்கியிருந்ததுடன் பொதுமக்கள் நலன் கருதி அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பும் வழங்கியிருந்தது.

தினொரு மணியளவில் போகலாமென நினைத்திருந்த எனது திட்டம் வேறொரு முக்கிய வேலையினால்  தள்ளிப் போய்க் கொண்டேயிருக்க ஓவியர் மாரியப்பன் அழைத்து விட்டார் அலைபேசியில் ‘என்ன காணவில்லை உங்களை?’யென.

#4
இந்த வருடம் இவருக்குக் கல்லூரி வளாகத்துக்கு உள்ளே, அதுவும் நுழைந்த உடனேயே வலதுபக்கத்தில் பெரிய இடமாக ஒதுக்கியிருந்தார்கள். சென்ற வருடங்கள் போலவே இவரது ஓவியங்களைத் தனிப் பதிவாக விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.  சித்திரச் சந்தைக்கென்றே இவர் ஒவ்வொரு வருடமும் புதிதாகத் தீட்டிக் காட்சிப் படுத்தும் ஆயில் பெயிண்டிங் ஓவியங்களுக்கென்று ஒரு எதிர்பார்ப்பே உருவாகி விட்டது. இந்த வருடமும் அசத்தியிருந்தார்.
 #5
மேலும் வாட்டர் கலரிங்கில் கீழே இவர் வரிசைப்படுத்தியிருந்த தினசரி, சராசரி வாழ்க்கைக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்வதாக இருந்தன. அவை கண்ணாடிச் சட்டமிடப்பட்டிருந்ததால் தனித்தனியாக ஒளிப்படமாக்கும்போது பிரதிபலிப்பைத் தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் பார்த்து இரசிக்க வேண்டிய அரிய ஓவியங்கள் ஆகையால் அவற்றையும் பகிர்ந்திடுவேன்:).

ந்த ‘மிரட்டல்’ புலி போவோர் வருவோரையெல்லாம் நின்று சிலநொடிகள் இரசிக்க வைத்தது. பலரது கேமராக்களால் சிறைபிடிக்கப்பட்டது.
#6
தீட்டிய ஓவியர் சந்திரன், தான் எடுத்து வந்த இருபது ஓவியங்களில் ஒன்றைத் தவிர மற்றவை விற்று விட்டதாகத் தெரிவித்தார் அவரிடம் கேட்டுப் பெற்ற விசிட்டிங் கார்டின் மூலமாக அலைபேசியில் தொடர்பு கொண்ட போது.

இந்தப் புலி இருபதாயிரம் பெற்றுத் தந்திருக்கிறது. அதைவிட அதிகப் பாய்ச்சல் காட்டியிருக்கிறது குதிரை:)!

#7 பந்தயக் குதிரை
இருபத்தைந்தாயிரத்துக்கு என் கண்முன்னே பணம் கைமாறி pack செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. கேட்டுக் கொண்டதன் பேரில் மீண்டும் பிரித்து படமெடுத்துக் கொள்ள உதவினார் வாங்கியவர்:)!

#7
 உலக புலிகள் தினமான  ஜூலை 29ஆம் தேதி அழிந்து வரும் இனத்தைப் பாதுக்காக்க விழிப்புணர்வைக் கோரும் விதமாக விதம்விதமான புலி ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்த இருப்பதாகவும், அரசு சார்பில் நடத்துகிற விதமாக இருக்க விரும்பி அனுமதி கேட்டிருப்பதாகவும் கூறினார். திட்டம் கூடி வந்தால் எங்கே கண்காட்சி என்பதைத் தெரியப்படுத்துவதாகச் சொன்ன ஓவியர் சந்திரன், பல வருடங்களாகப் பெங்களூரில் வசித்து வந்தாலும் தனது பூர்விகம் கேரளம் என்பதைத் தெரிவித்தார்.

வியர் பரணிதரன். தமிழ்ப்பறவை என அவரது வலைப்பூவின் பெயராலும் பரவலாக அறியப்படுபவர். பெங்களூர் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் சீனியர் டிசைன் எஞ்சினீயராகப் பணியாற்றும் இளைஞர்.
#9

எப்படி ஓவியக் கலை மீது ஈர்ப்பு ஏற்பட்டது.. எந்த வகையான ஓவியங்களில் ஆர்வம் அதிகம்.. எப்படித் தனது திறனை வளர்த்துக் கொண்டார் என்பது குறித்த இவரது சுவாரஸ்யமான நேர்காணலையும் இன்னொரு தனிப்பதிவாக எதிர்பார்த்திருங்கள். அதற்கு முன் ஓரிரு ஓவியங்கள் பார்வைக்கு இங்கே.

#10

சித்திரச் சந்தை ஐந்தாம் தேதியில் என அறிவிப்பானதுமே ஃபேஸ்புக் இன்பாக்ஸில் நீங்கள் நிச்சயம் வருவீர்கள்தானே? என் ஸ்டாலுக்கு வர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டதோடு மொபைல் நம்பரும் அங்கே கொடுத்திருந்தார். ஆனால் கவனக் குறைவாக ஒரு டிஜிட் விட்டுப் போயிருந்திருக்கிறது. நானும் கவனிக்கவில்லை. நம்பர்தான் இருக்கிறதே என சென்று விட்டேன். நல்லவேளையாக காலையில் ஸ்டால் நம்பரையும், ஓவியங்களோடு அமர்ந்திருக்கும் படமொன்றையும் ஃபேஸ்புக்கில் போட்டிருந்ததைப் பார்த்திருந்தேன். அந்த ஸ்டால் எண்ணை விட நினைவில் வைத்திருந்த பின்பக்க சுவரே இடத்தைக் கண்டு பிடிக்க உதவியது:)!

#11

‘ஒவ்வொரு கண்காட்சியிலும் இசைஞானி இளையராஜாவின் ஓவியத்தை வரைந்து வைப்பது தனது சிறிய செண்டிமெண்ட், உடனேயே அவை விற்றும் போகும்.’ என்று சொன்னவர் காலையில் வந்திருந்தால் அதையும் படமாக்கியிருக்கலாமே என ஆதங்கப்பட்டார். அதனாலென்ன அடுத்த கண்காட்சியில் படமாக்கிடலாமென நினைத்துக் கொண்டேன்.

#12 கொள்ளை அழகு.. கள்ளமிலாச் சிரிப்பு..

மேலும் அன்றைய கண்காட்சியில் விற்ற ஓவியங்களுடன் பரணி. கலைஞனுக்கு இதைவிட மகிழ்ச்சியான அங்கீகாரம் வேறெதுவாக இருக்க முடியும். கலையில் சாதனைகள் படைக்க வாழ்த்துவோம் ஓவியரை.

#13

வியங்கள் தவிர்த்து இந்த முறை நிறைய சிற்பங்கள், கலைப்பொருட்கள், காகித lamp shades ஆகியனவும் விற்பனையில் போட்டி போட்டது.
#13

#14

#15

வியர் முன் சிலையாக அமர்ந்து தங்களை காகிதத்தில் வடித்து வாங்கிட ஆர்வம் காட்டிக் கொண்டிருந்தார்கள் இளைஞர்களும் யுவதிகளும் சிறுவர்களும். முப்பதுக்கும் மேலான ஓவியர்கள் இதில் ஈடுபட்டிருந்தார்கள். ரூ ஐம்பதிலிருந்து இருநூறுவரை கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

#16 தூரிகைப் பார்வை
 #17 பொறுமையின் திலகம்

#18 விரல் வழி விடை பெறுகிறதோ பொறுமை:)?


#19 சுடச் சுட..

ஓவியங்களுக்கு ஈடாக விற்பனையில் களை கட்டியிருந்தன வறுத்த கடலை, பொரி, ஐஸ்க்ரீம், வெட்டிய பழங்கள், மாங்காய் .... போன்றவை. தன்னிடம் யாரும் வாங்க வராததில் சோகமாகி விட்டார் பஞ்சு மிட்டாய்க் காரர்.

#20


அந்தநேரம் பார்த்து டிங்டிங் என மணியடித்தபடியே விற்பனையைத் தொடர்ந்த ஐஸ்க்ரீம்காரரைப் பார்த்து வேகம் பிறந்து விட்டது இவருக்கும். பின்னே, கூவிக் கூவி விற்பவருக்குத்தானே காலம் துணை நிற்கிறது:)?

‘பஞ்சு மிட்டாய்.. அஞ்சு ரூவாய்..’

 #21

ஓவியங்களை இரசிக்கும் மூன்றாம் கண் Canon. [Nikon_ல் எடுத்த படம்:)!]
#22

#23 மூன்று தலைமுறை
பல குழந்தைகள் நடக்க முடியாமல் சோர்வடைந்ததைப் பார்க்க முடிந்தது. தேற்றிய அப்பாக்களையும் இப்படித் தூக்கிச் சுமந்த அப்பாக்களையும் பார்க்க முடிந்தது:)!

#24

நேரம் இருக்கையில் அடுத்தடுத்த பாகங்களாகத் தொடரும் 2014 சித்திரச்சந்தை பகிர்வு. சென்ற வருடம் எடுத்தவற்றிலேயே இன்னொரு பாகம் பகிர வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாகப் பதிகிறேன்:)!
---


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
2013
*
 *
 *
*
 *


2012
*
சிந்தை கவர்ந்த ‘பெங்களூர் சித்திரச் சந்தை’ 2012
*
எல்லாம் மகள் மயம் - 'கல்கி' ஆர்ட் கேலரியில் ஓவியர் மாரியப்பன்

27 comments:

 1. புலி படம் மிக அருமை....கட்ட வண்டிகள் மனதை கவர்கிறது ....அணைத்து படங்களும் மிக அருமை ...பகிர்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி :)

  ReplyDelete
 2. நேரடியாகப் பார்க்க முடியாத வருத்தத்தை
  தங்கள் பதிவு நிறைவு செய்கிறது
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. எனக்கு பல படங்கள் திறக்க நேரமாகின்றன. மக்களுக்கு ஓவியத்தில் இவ்வளவு ஆர்வமா என்று வியக்க வைக்கிறது. சென்னையில் இப்படி கூட்டம் கூடுமா என்றும் சந்தேகமாக இருக்கிறது. அப்புறம் மறுபடி வந்து எல்லா படங்களையும் ரசிக்க வேண்டும்.

  ReplyDelete
 4. ரசிக்க வைக்கும் படங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  இரண்டு கிலோ மீட்டர் மக்கள் கூட்டம் வியப்பு...

  நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. மின் நூல் பற்றி தகவல் - உங்களுக்கு உதவக் கூடும்...

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

  ReplyDelete
 6. அக்கா, படங்களுடன் பகிர்வு மகிழ்ச்சியைப் பெருக்குகிறது. நேரில் பார்த்த திருப்தி ஏற்படுகிறது. ஓவியங்களுக்கு மதிப்பு இருப்பதையும், ஓவியர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதையும் சிறப்பாகச் செய்திருக்கிறது 'சித்திரச் சந்தை' !!!

  ReplyDelete
 7. படங்கள் அருமை...
  வாழ்த்துக்கள் அக்கா..

  ReplyDelete
 8. @Lux Photography,

  மிக்க நன்றி லக்ஷ்மி:)!

  ReplyDelete
 9. @ஸ்ரீராம்.,

  நன்றி ஸ்ரீராம்.

  முன்னொரு பதிவிலும் படம் திறக்காதது பற்றி சொல்லியிருந்தீர்கள். மூன்று தவிர்த்து மற்றவற்றை சிறிய அளவுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது சுலபமாகத் திறக்கின்றனவா பார்த்து சொல்லுங்கள்.

  ReplyDelete
 10. @திண்டுக்கல் தனபாலன்,

  நன்றி தனபாலன் மின் நூல் பற்றிய தகவலுக்கும்.

  ReplyDelete
 11. @Shan,

  ஓவியரான உங்களுக்கு நிச்சயம் இந்நிகழ்வு மகிழ்ச்சியையே கொடுத்திருக்குமென அறிவேன். ஒருவருடமேனும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளத் திட்டமிட்டு இந்தியா வாருங்கள். பல ஓவியர்களின் படைப்புகளை ஒரே நாளில் கண்டு இரசிக்க முடிவதோடு பலரின் பரிச்சயமும் கிடைக்கும். நன்றி சதங்கா.

  ReplyDelete
 12. புது வழி (எனக்குத்தான் புது வழி!) கண்டுபிடித்து விட்டேன். ப்ளாக்கில் ஓபன் ஆகவில்லை. படத்தைத் தனியாகக் க்ளிக் செய்து கொஞ்ச நேரத்தில் படம் ஓபன் ஆகி விடுகிறது. எனவே எல்லாப் படங்களையும் இந்த வகையில் திறந்து பார்த்து விட்டேன்! :))

  ReplyDelete
 13. @ஸ்ரீராம்.,

  நல்லது. அளவைக் குறைத்த கையோடு,‘படத்தைப் பெரிய அளவில் காண விரும்புகிறவர்கள் க்ளிக் செய்து பார்க்கலாம்’ என்றும் ஒரு குறிப்பு சேர்த்திருந்தேன் 2ஆம் படத்திற்கு மேல். கவனித்தீர்களா தெரியவில்லை. இனிவரும் பதிவுகளில் ‘திறக்க நேரமானால்...’ எனக் கொடுத்து விடுகிறேன்:).

  நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 14. படங்கள் எல்லாம் மிக அருமை.
  தனி தனியாக வரும் ஓவிய படப்பதிவுகளை பார்க்க ஆவல்.
  அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.
  பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 15. அருமையான படங்கள்.....

  வரும் பதிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 16. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

  ReplyDelete
 17. @கோமதி அரசு,

  விரைவில் பகிர்ந்திடப் பார்க்கிறேன். மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 18. @திண்டுக்கல் தனபாலன்,

  தகவலுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி தனபாலன்.

  ReplyDelete
 19. ஆக, சித்திரச் சந்தை படைப்பாளிகள் உங்கள் வரவை மிகவும் எதிர்பார்க்கும் அளவு முக்கியஸ்தராகி விட்டீர்கள்!! :-))

  தனிப்பேட்டிகளை எதிர்பார்த்திருக்கிறேன் அக்கா.

  ReplyDelete
 20. @ஹுஸைனம்மா,

  நன்றி:)! கூடிய விரைவில் பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 21. முதலில் இருக்கிற ஓவியர் மாரியப்பனின் ஓவியமும், புலியும் மிகவும் அழகு.பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.

  பகிர்ந்தமைக்கு நன்றிகள் அக்கா.

  ReplyDelete
 22. அழகான புகைப்படங்கள். ஓவியங்கள் அருமை

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin