ஞாயிறு, 23 ஜூன், 2013

கண்டேன் நிலவை.. - SUPER MOON 2013

இந்த வருடத்தின்  அனைத்து முழுநிலாக்களிலும் 14% பெரிதாகவும் 30% அதிக பிரகாசத்துடனும் தோன்றி இதோ இப்போது வானிலே ஜொலித்துக் கொண்டிருக்கும் அழகு நிலா. மேகங்களுக்குள் ஒளிந்தபடி கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருக்கும் நிலா:)!

நாள் முழுவதுமே இன்று மேகமூட்டம்தான். அதிலும் மாலையில் இராட்சதக் கருமேகங்கள் பெரிது பெரிதாகத் திரண்டு கொண்டிருந்தன.
அரைமணிக்கு ஒருதரம், பின் கால் மணிக்கு, பத்து நிமிடத்துக்கு.. ஒரு முறை என சன்னலுக்கும் உள்ளுக்குமாய் நடைபயின்று கொண்டிருந்தேன், எல்லா உபகரணங்களுடனும் தயாராகி. இருட்டத் தொடங்கியதும்  மொட்டைமாடிக்குச் சென்று காத்திருக்கலானேன். முக்காலியில் கேமராவைப் பொருத்தி மேகங்களுக்குப் பின்னாலிருந்த ஒளிப்பந்தை உத்தேசமாய் ஃபோகஸ் செய்து தவமாய் தவமிருந்தேன்.  ஒருவாறாகக் ‘கண்டேன் நிலவை..’ 7 மணி 46 நிமிடம் 30 நொடியில்.. ஆனால் அடுத்த மூன்றே நிமிடங்களுக்கு. அவசரமாய் வெவ்வேறு செட்டிங்கில் சிலவற்றை எடுத்து முடிக்கவும் குறுக்கே பாய்ந்தது இப்படி ஒரு மேகக் கரடி.


மேலும் பல நிமிடங்கள் பொறுத்திருந்திருந்தும் பலனில்லை. அடுத்த அரை மணிக்கு வெளியில் விடமாட்டோம் என்பது போல மலை மலையாய்  சூழ்ந்தன மேகங்கள்.  மேகம் விலகும் நேரத்தில் நிலவு இன்னும் மேலே சென்று சின்னதாகிப் போகும் என்பதாலும், எட்டாவது தளத்தில் ஆட்டிய குளிர் காற்றாலும் கிடைத்ததில் திருப்திபட்டுக் கொண்டு வந்து விட்டேன்.

இவ்வருடத்தைய பவுர்ணமிகளில் மட்டுமின்றி அனைத்து தினங்களிலுமே இன்றுதான் பூமிக்கு மிக நெருங்கி வந்திருக்கிறதாம் நிலவு. ஆக இது 2013-ன் அபூர்வ நிலா மட்டுமல்ல, பூமிக்கு மிக மிக அருகே வந்திருக்கும் ஒளி நிலாவும். பொதுவாகக் கணித சாஸ்திரப்படி, இத்தகு முழுநிலவை Perigee full moon  என்றுதான் அழைத்து வந்தார்கள். Perigee என்பது ஒரு மாதத்தில் பூமிக்கு மிக அண்மையில் நிலா வரும் குறிப்பிட்ட புள்ளியைக் குறிப்பதாகும்.  பலரும் அறிந்திருப்பீர்கள் ஆயினும், இணையத்திலிருந்து சில படங்கள்:
இரண்டு வருடங்களுக்கு முன் 19 மார்ச் 2011 அன்று, 1955,1974, 1992, 2005 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அருகாமையில் பெரிதானதாக நிலா தோன்றிய போதுதான் முதன் முறையாக “சூப்பர் மூன்” என்கிற பதம் பரவலாக உபயோகிக்கப் பட்டது. அப்போது நான் படமாக்கிய நிலவும், அந்த அனுபவம் மற்றும் விவரங்களும் இங்கே.


பின் சென்ற வருடம் மே 6ஆம் தேதி. அதையும் படமாக்கியிருந்தேன். அன்றும் இதே போன்ற மழைக்காலம் என்பதால் இப்படியான போராட்டம்தான் மேகத்துடன். போன மாதத்தைய (மே 2013) நிலவும் கூட சூப்பர் மூன் ஆகக் கொண்டாடப்பட்டது. இன்றைய நிலா அதை விட சூப்பராம், சொல்லிக் கொள்கிறார்கள்:)! அதாவது நிலவு முழுமையடையும் நேரம், பூமிக்கு அருகே வரும் (Perigee) நேரம் இரண்டும் ஒரு மணிநேரத்துள் நிகழ்கிறது என்கிறார்கள். ஆனால் குறிப்பாக எந்த மணித்துளியில் எனும் விவரம் எனக்குக் கிட்டவில்லை.

இதுபோன்ற அபூர்வ நிலாக்கள் அடுத்து தோன்ற இருப்பது:
10 ஆகஸ்ட், 2014
28 செப்டம்பர் 2015
14 நவம்பர் 2016
25 நவம்பர் 2034

‘கணிக்கப்பட்ட இந்தப் பட்டியல் நமக்கு உணர்த்துவது இவை வானியலில் நிகழும் வழக்கமானதொரு சுழற்சி என்பதையே. அதற்கேன் இத்தனை பரபரப்பு’ என்பவரும் உள்ளனர். அட, அன்றாட வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களை, மனம் கவர்ந்த விஷயங்களை இரண்டுவரி நிலைத்தகவல் போட்டுக் கொண்டாடும் நாம், இயற்கையின் அபூர்வ நிகழ்வைக் கண்டு மகிழ்வதில், பதிந்து வைப்பதில் என்ன தவறு, சொல்லுங்கள்:)!
***

தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

41 கருத்துகள்:

 1. மெல்லிய அல்ல வல்லிய மேகத்திரைக்குள் அவ்வப்போது மறையும் வெண்ணிலாவின் மேனியழகு மிகைபடக் காண்கிறதா என்று நானும் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன், இருக்கிறேன்! நாளை வல்லிம்மா என்ன படங்கள் போடுகிறார் என்றும் பார்ப்போம்! :))

  பதிலளிநீக்கு
 2. அழகு நிலாவை அசத்தலாகப் படம் பிடித்துப்போட்டுள்ளீர்கள்.

  தகவல்களும் அருமை.

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 3. தகவல்கள் புதிது, நிலா நிலா நிலா அழகோ அழகு...!

  பதிலளிநீக்கு
 4. அழகு நிலா அருமை...

  தகவல்கள், விளக்கங்கள், ரசனை அனைத்தும் அருமை... நன்றி... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 5. அழகிய நிலா.....

  முதல் படம் மிகவும் ரசித்தேன்....

  பதிலளிநீக்கு
 6. தகவல்களுக்கு மிக்க நன்றி அக்கா!!

  எப்ப்டியோ முழுநிலவை அழகா படம் எடுத்துட்டீங்க..சூப்பர்ர்ர்!! நான் சித்ரா பௌர்ணமிக்கு நிலாவை பார்த்ததோடு சரி,இதுவரை மேகமூட்டமாவே இருக்கு.

  பதிலளிநீக்கு
 7. அழகு நிலா..

  மும்பையை மேகப்போர்வை மூடியிருக்கிறது :-(

  பதிலளிநீக்கு
 8. அழகோ அழகு!!!

  நேற்று மாலைஒரு விழாவுக்காகக் கிளம்பிப்போனபோது அழகான பெரிய நிலா வானில். பௌர்ணமின்னு நினைச்சதோட சரி.

  சூப்பர் மூனென்று உங்கபதிவின் மூலம் அறிந்தேன்.மகிழ்ச்சி. அட்லீஸ்ட் கண்ணால் பார்க்கவாவது முடிஞ்சதே!

  பதிலளிநீக்கு
 9. வெள்ளி நிலாவே!! வா !!

  உன்னை எவ்வளவு அழகாய் படம் பிடித்திருக்கிறார்
  உன் அருமை சினேகிதி இராமலக்ஷ்மி.

  உன் அமுத வாய் திறந்து இரு சொல் சொல்.
  வந்து ஒரு பின்னூட்டம் மட்டும் போட்டு போய் விடாதே !!

  பாடு நிலாவே !
  !https://www.youtube.com/watch?v=nrTKUhNQaWg

  நீ பாடாவிடின் இராமலக்ஷ்மி அவர்கள் என்ன பாடுவார் ?
  https://www.youtube.com/watch?v=t5DDmjV_hwQ  சுப்பு தாத்தா.New Jersey
  www.subbuthatha.blogspot.in
  www.subbuthatha72.blogspot.com

  பதிலளிநீக்கு
 10. எட்டிப் பார்க்கும் வட்ட நிலவைக் கச்சிதமாகப் பிடித்து விட்டீர்கள்! அழகான படங்களுக்கும், தகவல் பகிர்தலுக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
 11. நிலவு என்றும் அழகு, ரசனை! அத்துடன் பல தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்வு! மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 12. இத்தனைதூரம் மெனக்கெட்டதற்காக சில நிமிடங்களாவது தரிசனம் காட்ட மனம் வைத்ததே அந்த அரிய நிலா. அழகான நிலவைக் காமிராவுக்குள் சிறைப்பிடித்த அழகுக்குப் பாராட்டுகள் ராமலக்ஷ்மி.சூப்பர் மூன் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வழக்கம்போல சூப்பர்மூன் படம் சூப்பர்!! :-)

  நிலவின் பார்டர், ஒரு அலசலான வளையம் போல் இருக்கிறதே, ஏன்?

  பதிலளிநீக்கு

 14. இந்த நிலவு பற்றி செய்தி படித்தவுடன் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். எனக்குத்தெரியும் உங்கள் புகைப்பட ஆர்வம். தொலைபேசி எண் இருக்கவில்லை. இருந்தாலென்ன. அதுதான் அழகாய் நிலவைப் பிடித்து விட்டீர்களே. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. ஒரே ஊரில் இருந்தும் எங்களுக்கு கண்ணிலேயே படவில்லை இந்த சூப்பர் மூன்! அடிக்கடி மூன்றாவது மாடிக்குப் போய் போய் பார்த்துவிட்டு வந்தோம்.
  பரவாயில்லை, நீங்கள் பிடித்துப் போட்டுவிட்டீர்கள்.
  அழகோ அழகு!

  பதிலளிநீக்கு
 16. @ஸ்ரீராம்.,

  முந்தைய தினம் மேகக்கூட்டத்துடன் நிலவை எடுத்து நீங்கள் FB-யில் பகிர்ந்த படங்கள் அருமை! வல்லிம்மாவுக்குப் பதிவிட நேரம் இருந்திருக்காது என எண்ணுகிறேன். நன்றி ஸ்ரீராம்:)!

  பதிலளிநீக்கு
 17. @S.Menaga,

  பல இடங்களில் வானம் மூடியே இருந்திருக்கிறது மேனகா. நன்றி.

  பதிலளிநீக்கு
 18. @அமைதிச்சாரல்,

  ஆம். முந்தைய தினமே மும்பையில் தெரிவது சிரமமென செய்தித்தாளிலும் குறிப்பிட்டிருந்தார்கள். நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 19. @துளசி கோபால்,

  மிக்க நன்றி. உங்கள் இரட்டை நிலவுப் படம் குறித்து அறியக் காத்திருக்கிறேன்:)!

  பதிலளிநீக்கு
 20. @sury Siva,

  இரண்டுமே அருமையான பொருத்தமான பாடல்கள்:)! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 21. @ஹுஸைனம்மா,

  மாசற்றது நிலவு:). பிராசஸிங்கில் தவிர்க்க முடியாமல் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் துல்லியமாய் எடுக்க மேகங்கள் மனசு வைக்கவில்லை. நன்றி ஹுஸைனம்மா:)!

  பதிலளிநீக்கு
 22. @Ranjani Narayanan,

  நன்றி ரஞ்சனிம்மா. பத்து மணிக்குப் பிறகு மேகங்கள் விலகி விட்டன. மேலே வந்து விட்டதால் சிறிதாகத் தெரிந்தாலும் மிகப் பிரகாசமாய் ஒளிர்ந்தது.

  பதிலளிநீக்கு
 23. //முந்தைய தினம் மேகக்கூட்டத்துடன் நிலவை எடுத்து நீங்கள் FB-யில் பகிர்ந்த//

  நன்றி! ஆனால் அதில் எழுத்துகள் மட்டுமே என் சொந்தம். படங்கள் யாருக்கோ சொந்தம்! கூகிளாண்டவர் உபயம்! :)))))))

  பதிலளிநீக்கு
 24. @ஸ்ரீராம்.,
  அப்படியா சங்கதி:)? கேமராவுடன் களத்தில் இறங்கி விட்டீர்கள் என சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன்!

  பதிலளிநீக்கு
 25. கடைசி வரி அருமை..படமும் விளக்கமும் கூட அருமை.. Tripod உபயோகித்தீர்களா?

  பதிலளிநீக்கு
 26. வானில் அன்று நான் காணத் தவறிய முழுநிலா, முழுவதுமாக இங்கு! நன்றி.

  பதிலளிநீக்கு
 27. @தியானா,

  ஆம் தியானா. Tripod உபயோகித்தேன். நன்றி, கடைசி வரியுடன் ஒத்துப் போனதற்கும்:)!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin