Thursday, June 13, 2013

அச்சங்கள் - நவீன விருட்சத்தில்..தோளில் வலையுடன் காடு மேடுகளில்
தேடித் திரிகிறான் கவிதையை,
ஒரு வேடனைப் போல.

காற்றைக் கிழித்தபடி
கிளியொன்று தன் குஞ்சுகளுக்காகக்
கவ்விப் பறந்த சோளக் கதிரிலிருந்து
நிலத்தில் உதிர்ந்த சிலமணிகளை,
ஆசையுடன் கொத்தப் போன
சாம்பல்நிறப் புறா மேல்
சாதுரியமாய் வலையை வீசுகிறான்.

தப்பிக்கும் போராட்டத்தில்
தோற்றுச் சரிந்த
பறவையின் கால்களை
இடக்கையால் வசமாய்ப் பற்றி
எடுத்துச் செல்கிறான்.

சில அடிகளே கடந்திருக்க,
அது சுவைக்கப் படுகையில்
ஏற்படவிருக்கும் சத்தத்தை
எண்ணிப் பயப்படுகிறான்.

இருண்ட, அறியாத பாகங்களைக் கொண்ட
அதன் உடற்கூறு குறித்து
அச்சமுறுகிறான்.

தூக்கிப் பிடித்து
அப்படியும் இப்படியுமாகத்
திருப்பித் திருப்பிப் பார்க்கிறான்.

திடுமெனத் திறந்து கொண்ட அதன்
சிகப்புநிறச் சிறுகண்
தன்னை இகழ்ச்சியாய்ப் பார்ப்பதைத்
தாங்க மாட்டாமல்
விரல்களைப் பிரிக்கிறான்.

கண் எதிரே படபடத்து
கைநழுவி உயர உயரப்
பறக்கிற புறாவை..
பார்த்துக் கொண்டே நிற்கிறான்.

***

9 ஜூன் 2013, நவீன விருட்சத்தில்.., நன்றி நவீன விருட்சம். 

38 comments:


 1. அருமை... கவிதைப் புறா எங்கள் மனதிலும் 'படபட'த்தது...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமையிலும் அருமை

  ReplyDelete
 3. 'கவிதைப் புறா' எதற்கு புறா பறந்தது என்றால் போதுமே ... மற்றபடி கவிதை பிடித்தது

  ReplyDelete
 4. கவிதையும் படமும் மிக அழகு..

  ReplyDelete
 5. @NKR R,

  மாற்றி விட்டேன்:)! நன்றி நந்தா.

  ReplyDelete
 6. கையிலிருந்து தப்பிய புறாவால் கவிதையிலிருந்து தப்ப முடியவில்லை! அருமை.

  ReplyDelete
 7. அருமையான கருத்துள்ள கவிதை..படங்கள் வழக்கம் போல் பளிச் அழகு.

  ReplyDelete
 8. ”அச்சங்கள்” அழகான படைப்பு. நவீன விருட்சத்தில் வெளிவந்தமைக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 9. நல்லா வந்திருக்கு

  ReplyDelete
 10. கவிதை மிக நன்று .தொடருங்கள் .

  ReplyDelete
 11. புறா போல கவியும் அழகு.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. கவிதையின் ஒவ்வொரு அசைவிலும் இனிமையான கவிதானுபவம்.

  ReplyDelete
 13. அருமையான புறா கவிதை,பாராட்டுக்கள் அக்கா!!

  ReplyDelete
 14. அருமையான கவிதை மேடம்.. வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 15. கவிவேட்டுவன் விடுவித்த கவிதைப்புறா ரசனையின் உச்சம். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

  நவீன விருட்சத்தில் நான் எழுதிய இக்கவிதைக்கான கமெண்டைக் காணோமே...

  ReplyDelete
 16. அருமையான கவிதை! மிக ரசித்தேன்!

  ReplyDelete
 17. கீதமஞ்சரி... ஒரு நிமிஷம் என்னை திருதிருன்னு முழிக்க வெச்சுட்டீங்க. ‘நான் எழுதிய இக்கவிதைக்கான’ங்கற வரியைப் படிச்சதும். ராமலக்ஷ்மி மேடம்ல எழுதினதா போட்ருக்காங்கன்னு குழம்பிட்டேன். அப்புறம்தான் புரிஞ்சது நீங்க சொல்ல வந்தது ‘இக்கவிதைக்கான நான் எழுதின கமெண்ட்டைக் காணோமே’ங்கற வார்த்தையத் தான்னு! நல்ல டமாஸு போங்கோ...!

  ReplyDelete
 18. @கீத மஞ்சரி,

  ஆசிரியர் அடுத்து பக்கம் புதுப்பிக்கும்போது வெளியிடுவார். மிக்க நன்றி மஞ்சரி.

  ReplyDelete
 19. @ பால கணேஷ்
  தவறைச் சுட்டியமைக்கு மிகவும் நன்றி கணேஷ். நான் எழுதும் ஒவ்வொரு வாக்கியத்தையும் பலமுறை சரிபார்த்து, எழுத்துப்பிழை கூட இல்லாமல் எழுத நினைப்பேன். இவ்வளவு பெரிய கருத்துப்பிழையை எப்படி கவனிக்காமல் போனேன் என்று வருத்தமாக உள்ளது. நல்லவேளையாக நீங்கள் தவறைக் குறிப்பிட்டதோடு சரியான வாக்கியத்தையும் தந்து என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள். மிக மிக நன்றி கணேஷ்.

  ReplyDelete
 20. @கீத மஞ்சரி,

  உங்கள் பின்னூட்டங்கள் இரசனையானவை. அவசரத்தில் நிகழ்ந்தது என்பது புரிதலுக்குரியதே கீதா. வருத்தம் தேவையில்லை. கணேஷ் நகைச்சுவையாகதான் குறிப்பிட்டிருக்கிறார். மீள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 21. ஆமாம் கீதா... என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஃப்ரெண்ட், கோபப்பட மாட்டீங்கன்ற உரிமைல நகைச்சுவையாதான் சொன்னேன். இங்க ஒரு போஸ்டர்ல மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அவர்களேன்னு இருந்ததைப் பார்த்து சிரிச்சதுண்டு நான். மின்சாரத் துறையா மாண்புமிகு..? மின்சாரத் துறை அமைச்சர் மாண்புமிகு --- அவர்களேன்னு தானே நியாயமா வந்திருக்கணும்? ஹா.. ஹா...!

  ReplyDelete
 22. மிக அருமையான கவிதை.

  பிடிக்கும் ஒவ்வொருவரும் இப்படி பறக்க விட்டிருந்தால்.... நினைக்கிறது மனம்.

  ReplyDelete
 23. கவிதை அருமை.கையிலிருந்து தப்பியதால் கவிதை கிடைத்தது.
  புறா படம் அருமை.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin