செவ்வாய், 9 அக்டோபர், 2018

ஹூக்ளி கரையோரம்.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 2) - கொல்கத்தா (4)

#1

தாஜ்மஹாலைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ‘மக்ரனா’ எனும் உயர் வகை சலவைக் கற்களைக் கொண்டே விக்டோரியா நினைவிடமும் உருவாக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மேல் மாடங்களும், இன்னும் பிற கட்டமைப்புகளுக் கூட தாஜ் மஹாலைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

#2

தற்போது அருங்காட்சியகமாகவும், சுற்றுலாத் தளமாகவும் அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிற   விக்டோரியா நினைவிடத்தில் மகாராணியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பிரிட்டிஷ் கால ஓவியங்கள் மற்றும் காட்சிப் பொருட்களாக ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், நிலவரைபடங்கள், காசுகள், அஞ்சல் தலைகள், கைவினைபொருட்கள், உடைகள் போன்றவை உள்ளன.

விக்டோரியா மகாராணி மற்றும் ஆல்பர்ட் இளவரசர் ஆகியோரின் நேர்த்தியான சில உருவப்பட ஓவியங்கள் பலவும் உள்ளன. அதில் மிகவும் குறிப்படத்தக்க ஓவியமாக போற்றப் படுகிறது,
ரஷ்ய ஓவியர் வாசிலி வெரஸ்சாகின் உருவாக்கிய, 1876 ஆம் ஆண்டு ஜெய்ப்பூரில் வேல்ஸ் இளவரசர் மாநிலத்துக்கு நுழைந்த காட்சி.

இவற்றுள் என்னை மிக மிகக் கவர்ந்தவை தாமஸ் டேனியல்(1749–1840) மற்றும் அவரது மருமகன் வில்லியம் டேனியல்(1769–1837) ஆகியோர் உருவாக்கிய ஓவியங்கள். இவர்களது படைப்புகள் அதிகமாக ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது இங்குதான். இவர்களைப் பற்றி ஆர்வத்துடன் இணையத்தில் தேடியபோது கிடைத்த சில தகவல்கள்:

இயற்கை காட்சி ஓவியரான தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் 1785ஆம் ஆண்டு இங்கிலாந்திருந்து கிளம்பி கடல்வழியாகப் பல மாதங்கள் பயணித்து கொல்கத்தாவை அடைந்திருக்கிறார்கள். கொல்கத்தா க்ரோனிகிள் செய்தித் தாளில் கொல்கத்தா நகரத்தைத் தங்கள் பார்வையில் பதிவு செய்யும் விருப்பத்தை அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து அங்கிருந்து உள்ளூர் ஓவியர்களின் உதவியுடன் 12 ஓவியங்களை 1788ஆம் ஆண்டு வாக்கில் முடித்திருக்கிறார்கள்.பின் கங்கை நதி வழியாகப் படகில் ஸ்ரீநகர் வரைப் பயணித்து பின் பகல்பூர் உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்றுவிட்டு 1792 ஆம் ஆண்டு  கொல்கத்தா திரும்பியிருக்கிறார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் சிறு சிறு பயணங்களாக சென்னை, மேற்கு இந்தியா உள்ளிட்டப் பல இடங்களுக்குச் சென்று கொல்கத்தா திரும்பி, பிறகு மும்பை வரை சென்று நாடு திரும்பியிருக்கிறார்கள்.

இங்கே காட்சிப் படுத்தப்பட்டிருப்பவை யாவும் இந்தியாவின் பல இடங்களை, குறிப்பாகக் கோயில்கள், மனிதர்களோடு கோயில் வாசல்கள், இயற்கையோடு கட்டிடங்கள் என இந்தியக் காட்சிகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன.

சுமார் ஐந்தாறு அடி உயரம், 3 முதல் 4 அடி வரையிலான அகலத்தில் ஓவியங்கள் ஒவ்வொன்றும் வாவ்.. வாவ்.. என என்னை வாய் பிளக்க வைத்தன. அதிலும் ஒரு கோயில் வாசல் காட்சியில், ஜடாமுடியுடன் நின்றிருந்த சிவனடியார்... அற்புதம்.. பிரமிக்க வைக்கிறார் ஓவியர். பாதுகாப்பு கருதி எங்கும் படமெடுக்க அனுமதி இல்லை. அங்கு பார்த்த அசலான அந்த ஓவியங்களின் பிரதிகள், ஒளிப்படங்கள் இணையத்தில் தேடிப் பார்த்துக் கிடைக்காத நிலையில், இவர் வரைந்த வேறு சில ஓவியங்களை இங்கே பகிருகிறேன் அவரது திறமைக்கான எடுத்துக்காட்டாக:

a-e இணையத்திலிருந்து..
#a

#b


சித்திரச் சந்தை உள்ளிட்ட பல இடங்களில் இரசித்த ஓவியங்களை ‘யான் பெற்ற இன்பம்.. பெறுக இவ்வையகம்.. ’ எனப் படமாக்கி  “சித்திரம் பேசுதடி” எனும் பகிப்பின் கீழ் இதுவரை 27 பதிவுகள் பதிந்திருக்கிறேன். அனுமதி கிடைக்கவில்லையே என வருத்தப்பட வைத்த இடங்களில் முதலாவது மைசூர் ஜெகன்மோகன் அரண்மனையில் இருந்த ரவிவர்மாவின் அசல் ஓவியங்கள், அடுத்து தாமஸ் டேனியல், வில்லியம் டேனியல் ஆகியோரின் ஓவியங்கள். ரவிவர்மாவின் ஓவியங்கள் அனைவரும் பரவலாக அறிந்தவையே. ஆனால் இவர்களின் ஓவியங்களையும் அறிமுகப்படுத்த வேண்டுமென்கிற ஆவலில் இணையப் படங்களைச் சேர்த்திருக்கிறேன்.
#c

#d

#e


ரண்மனையின் உள் விதானத்தை அண்ணாந்து பார்த்தால் அற்புதமான ஓவியங்கள் தீட்டப்பட்டிருப்பதைக் காணலாம். படமெடுக்க அனுமதியில்லாத வருத்தம் அவ்வப்போது தலைகாட்டியபடியே இருந்தது. மாளிகையின் பல இடங்களில் உள்ள சுவர்களில் வரலாற்றுச் சம்பவங்களை நினைவுகூறும் வகையிலான ஓவியங்களும் ஆயிரக்கணக்கில் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பிரிட்டிஷ் குடும்பங்கள் பற்றிய செய்திகளும் அடங்கும். 

மேலும், அரிய சேமிப்புகளாக வில்லியம் ஷேக்ஸ்பியரின் படவிளக்க நூல்கள், அரேபிய இரவுகள்,ஒமர் கயாமின் ‘ருபையாத்’,வாஹித் அலி ஷாவின் தும்ரி இசை குறித்த நூல்கள், கதக் நடனம் குறித்த நூல்கள் ஆகியவை பாதுகாக்கப் பட்டு வருகின்றன. நாடு சுதந்திரம் அடைந்த பின் நினைவிடத்தில் பல மாற்றங்கள் வந்தன. முக்கியமாக தேசத் தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உருவப் படங்களும் நினைவுச் சின்னங்களும் ஏற்படுத்தப் பட்டன.



சுற்றுலாப் பயணிகளைத் தவிர்த்து ஏராளமான உள்ளூர் வாசிகளும் பொழுது போக்கிற்காக அங்கு கூடுவதைப் பார்க்க முடிந்தது எனக் குறிப்பிட்டிருந்தேன். சில candid காட்சிகள்.. (ஒரு சில படங்கள் முன்னர் பகிர்ந்தவை..)

#3
அமைதியான சூழல் நாடி..


#4
அருகருகே.. தனித்தனி உலகில்..

#5
பாச மலர்கள்

#6
திரும்பிய பக்கமெல்லாம் 
செல்ஃபி..


#7
செல்ஃபி..

#8
தலைமுறை இடைவெளி..


#9
தந்தையின் பிடியில்..
 கிளையில் உல்லாச ஊஞ்சல்..

#10
அன்னையின் மடியில்.. 
ஆற்றங்கரையில்..

#11
ஆனந்தக் கவிதை..!


**
(தொடரும்)


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:
அழகிய கட்டிடக் கலை.. விக்டோரியா நினைவிடம்.. (பாகம் 1) - கொல்கத்தா (3)



8 கருத்துகள்:

  1. "சித்திரம் பேசுதடி" தொகுப்பு இப்போதுதான் கவனித்தேன்.

    வார இறுதியில் பொறுமையாக மறுபடியும் வாசிக்க(பார்க்கவும்) வேண்டும்.

    கலைஞனது உணர்வுகளைச் சித்திரமாக தீட்டிய வலி மிகுந்த கவிதை "இருப்பு".

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மீண்டும் உங்கள் நினைவாற்றல் ஆச்சரியம் அளிக்கிறது. ஆம், அது ஓவியக் கண்காட்சிக்கு சென்று வந்த அனுபவத்தில் எழுதியது. சித்திரம் பேசுதடி பகுப்பில் சுமார் 27 பதிவுகள் உள்ளன. பொறுமையாகதான் பார்க்க முடியும். மிக்க நன்றி:).

      நீக்கு
  2. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  3. தாஜ்மகாலை அடியொற்றி விக்டோரியா நினைவிடம். ஒப்புமை அருமை. புகைப்படங்கள் ரசனையாக உள்ளன.

    பதிலளிநீக்கு
  4. செய்திகளும் படங்களும் மிக அருமை.
    நாங்கள் பார்த்து பலவ்ருடம் ஆச்சு.உங்கள் படங்கள் மூலம் நினைவுகளை மீட்டிப் பார்த்தேன்.
    பாசமலர்கள்., ஆனந்த கவிதை படங்கள் எல்லாம் மனதை கவர்ந்தன.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin