வெள்ளி, 19 அக்டோபர், 2018

காளிகாட் காளி கோயில் - கொல்கத்தா (6)

விஜயதசமி வாழ்த்துகளுடன், இந்த நாளுக்குப் பொருத்தமாக, கொல்கத்தா தொடரின் இறுதிப் பதிவாக, காளிகாட் கோயில் குறித்த பதிவு 10 படங்களுடன்:

#1
கோவில் கோபுரம்

51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் காளிகாட் காளி கோயில் கொல்கத்தாவின் டாலிகஞ்ச் எனும் பகுதியில் பாகீரதி (ஹூக்ளி) நதிக்கரையில் அமைந்துள்ளது. கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகிறார்கள்.

#2
தோரணவாயில்
காட் என்பது தீர்த்தக் கட்டம் எனப்படும் நதியின் படித்துறையாகும்.
காளிகாட் என்பது கோவில் அமைந்துள்ள ஆதி கங்கை ஆற்றங்கரையின் படித்துறையைக் குறிப்பதாகும். அந்நாளில் பாகீரதி நதியையொட்டி இருந்த கோவில் காலப்போக்கில் நதியின் போக்கு விலகிச் செல்ல, இப்போது சிறு கால்வாய் போன்று ஓடும் ஆதிகங்கையின் கரையோரத்தில் உள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம் என்பதாலேயே “ஆதி” எனும் அடைமொழி சேர்ந்தது.


#3


க்கோவிலில் இருக்கும் காளி மாதாவை அனைத்து மதத்தினரும் வழிபடுகின்றனர். நுழைவாயிலில் காணப்பட்ட சில பூக்கடைகளும் பழக்கடைகளும்:

#4

#5

#6
முதன் முறையாக சிகப்புச் செம்பருத்தி மாலைகளை இக்கோவில் வாசலில்தான் பார்த்தேன். காளிக்கு உகந்தது  வண்ணம் அல்லவா?

#7

#8

இப்போதைய கோவிலின் அமைப்பு 200 ஆண்டு காலப் பழமையானதாக அறியப்பட்டாலும்,  15 மற்றும் 17ஆம் நூற்றாண்டுகளின் இலக்கியப் பதிவுகளிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைத்துள்ளன. இங்கு முதலாம் குமாரகுப்தா காலத்திய நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டதும் அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

சிறு குடிசையாக இருந்த இத்தலத்தை 16ஆம் நூற்றாண்டில் சிறு கோயிலாக மாற்றியவர் அரசர் மானசிங். பின் 1806 ஆம் ஆண்டில் சபர்ணா ராய் செளத்ரி குடும்பத்தினர் முன்னின்றி தற்போதைய கோவில் அமைப்பைக் கட்டியுள்ளனர். சக்தி பீடத்தில் காளி அருள்பாலிக்க, க்ஷேத்ரபாலகரை நகுலேஷ்வரர் என வழிபடுகின்றனர்.

கொல்கத்தாவில் பல காளி கோவில்கள் இருப்பினும் இந்த ஆலயமே கொல்கத்தா காளி கோவிலாக அறியப்படுகிறது. இக்கோவிலுக்கு இருவேறு விதமான தலவரலாறுகள் உள்ளன.

ஒன்று: 
ந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட சதி தேவி (தாட்சாயிணி) நெருப்பில் விழுந்து உயிர் துறக்க, இறந்த மனைவியின் உடலைச் சுமந்துகொண்டு கடுங்கோபத்துடன் ஊழித் தாண்டவம் ஆடினார் சிவபெருமான். இதனால் எங்கும் இருள் சூழ்ந்து உலகமே அழியும் நிலை உருவாக, தேவர்களும் முனிவர்களும் மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். விஷ்ணு பகவான் தன் சக்கராயுதத்தால் சதிதேவியின் உடலை 51 துண்டுகளாக அறுத்து பூமியில் வீழ்த்தினார். அந்த உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் சக்தி பீடங்கள் என்று அழைக்கப்பட்டு, அவை புனிதமாகப் போற்றி வணங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் காளிகாட் காளி கோவில் சதிதேவியின் வலது காலின் விரல்கள் (கட்டை விரல் தவிர்த்து) விழுந்த இடமாகப் போற்றப்பட்டு தந்திர சூடாமணி ( Tantra Chudamani - சமஸ்கிரதத்தில் எழுதப்பட்ட மந்திர தந்திரங்கள் பற்றிய நூலாகும்) கூறும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.

கங்கை, வங்கக் கடலுடன் கலக்கும் இடத்தை கங்கா சாகர் என்பர். பழங்காலத்தில் அந்த முகத்துவாரத்தில் கபில முனிவர் வசித்து வந்தார். அங்கு இன்றும் அவர் பெயரில் ஒரு சிறு கோயில் உள்ளது. ஒரு முறை சில காபாலிக சன்னியாசிகள் கங்கா சாகரில் புனித நீராடி கபில முனிவரை தரிசிக்க அடர்ந்த காட்டு வழியே சென்றனர். பாதையில் அவர்களுக்கு விரல்கள் வடிவில் ஓர் அதிசயப் பாறை தென்பட்டது. அது காளியின் சாயலில் அவர்களுக்குத் தோற்றமளித்தது. அந்த காபாலிகர்கள், நரபலியை மனதில் கொண்டு அந்தப் பாறையை அங்கேயே ஸ்தாபித்து தங்களது முறைப்படி வழிபட்டனர். தந்திர சாஸ்திரப்படி நரபலி கொடுப்பது அக்கால வழக்கம். அந்தச் சிலையே, இன்றைய காளிகாட் காளி அம்மன் என்கிறார்கள்.

காளிகா புராணம் கூறும் நான்கு ஆதி சக்தி பீடங்களிலும் இக்கோவில் வருகிறது. ஆனால் காளிகா புராணத்தில் தேவியின் முகம் விழுந்த சக்தி பீடம் என்று கூறப்படுகிறது.

மற்றொரு தல வரலாறு:
காளிகாட் காளி கோயிலைச் சுற்றி முன்பு காடு மண்டி வளர்ந்திருந்ததாம். அந்தக் காலத்தில் இந்த தேவியை ஆத்மராம் என்கிற பக்தன் ஆழ்ந்த பக்தியோடு ஆராதித்து வந்தான். மாலை நேரத்தில் பாகீரதிக் கரையில் அவன் ஜெபம் செய்யும்போது கண்களைப் பறிக்கும் ஒளிக்கதிர் ஒன்று திடீரென்று தோன்றியது. அதைக் கண்டு வியந்தான் ஆத்மராம். ஒளி வந்த இடத்தை மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, தெளிவான தண்ணீருக்கு அடியில் மனிதக் கால் விரல்கள் போல் வடிக்கப்பட்ட சிறு கல் ஒன்றைக் கண்டான். அத்துடன் அவன் அன்றிரவு ஒரு கனவும் கண்டான். அந்தக் கல்லில் தென்பட்ட விரல்கள் தாட்சாயிணியின் வலக்கால் விரல்கள் என்று உணர்ந்து, அதை எடுத்து வந்து தேவியின் பாதங்களை ஒட்டி வைத்து அதற்கும் பூஜை செய்யத் தொடங்கினான். அந்தப் புனித இடமே காளி தேவியின் மகா சக்தி பீடமாயிற்று.

கல் கிடந்த இடத்தின் அருகிலேயே ஆத்மராமுக்கு ஒரு சிவலிங்கமும் கிடைத்தது. சிவலிங்கத்துக்கு நகுலேஷ்வர பைரவர் என்று நாமம் சூட்டி காளி சிலையின் அருகிலேயே அமைத்து வழிபட்டான். விரல்கள் போல் காணப்பட்ட அந்தக் கல், பின்னர் ஒரு வெள்ளிப் பேழைக்குள் வைக்கப்பட்டு இப்போதைய காளி சிலையின் அடியில் வடகிழக்கு மூலையில் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

கோவிலுக்குச் செல்ல சிறந்த நேரம் கூட்டம் அதிகமில்லாத அதிகாலை அல்லது பிற்பகல் நேரம் என்கிறார்கள். நாங்களும் காலை வேளையிலேயே சென்று விட்டோம். இந்த நுழைவுத் தோரண வாயிலில் இருந்து சுமார் அரை அல்லது முக்கால் கிலோ மீட்டர், கீழிருக்கும் சாலை வழியாகச் சென்ற பின் ஓரிடத்தில் இடப்பக்கமாகத் திரும்பிச் சிறு சந்து வழியாகச் சென்று கோவிலை அடைய வேண்டும்

#9

கோவில் வாசல் கடைகளில் இருப்பவர்களே நம் செருப்புகளைப் பாதுகாக்க முன் வருகிறார்கள். இங்கும் கோவிலுக்குள் படங்கள் எடுக்க அனுமதியில்லை. கோவிலில் தரிசன வரிசைக்குச் செல்லும் இடம் அருகே ஒரு தலவிருட்சத்தின் கீழும் மலர்கள், மஞ்சள், குங்கும காணிக்கையுடன் காளிக்கு வழிபாடு நடக்கிறது.

#10

கோவிலுக்குச் செல்லும் முந்தைய தினமே இணையத்தில் தகவல்கள் தேடியதில், தரிசனத்திற்கு நிற்கும் போது கோவில் பணியாளர்களில் சிலர் எப்படி வந்து ‘நபருக்கு இவ்வளவு’ எனப் பேரம் பேசி வேறு வழியில் அழைத்துச் சென்று விரைவில் தரிசனம் கிடைக்க ஏற்பாடு செய்வதாகச் சொல்வார்கள் என்றும், அப்படிச் செல்லுகையில் சந்நிதானத்துக்குள் செல்லும் வாய்ப்பு இருக்காது, அம்மனுக்கு நேர் எதிரே அமைந்த மண்பத்தின் வழியாகக் கூட்டி வந்து வெளியிலிருந்து தரிசனம் செய்ய வைப்பார்கள் என்றும் ஒரு ஆங்கில வலைப்பதிவில் எச்சரிக்கை காணப்பட்டது. அதே போலவே ஒரு பணியாளர் அனைவரையும் அணுகினார். ஒருவருக்கு ரூ.300 கொடுக்கும்படியும், எப்படியும் இந்த வரிசை நகர்ந்து தரிசனம் கிடைக்க இரண்டு, மூன்று மணி நேரம் கூடப் பிடிக்கலாம் என்றும் திரும்பத் திரும்பக் கூறியபடி இருந்தார். யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. வரிசை சற்று நிதானமாகவே முன்னேறியதென்றாலும் 40 நிமிடங்களில் சந்நிதானத்துள் நுழைந்து விட்டோம்.

#
இந்தப் படம் மட்டும் இணையத்திலிருந்து...


இங்குள்ள காளி தேவியின் சிலை மிகப் பெரியது. சுமார் இருபது அடி அகலம் இருக்கலாமெனத் தோன்றியது. கருவறையின் பக்கவாட்டிலிருந்து நுழைந்து அம்மனுக்குப் பின் புறமாக வரிசை நகர்ந்து பின்னர் அம்மனுக்கு வலப்பக்கமாக மக்கள் முன்னே செல்லவும் தரிசனம் கிடைக்கிறது. திருப்பதி போலவே இங்கும் ஓரிரு கணங்களே நிற்க அனுமதிக்கிறார்கள்.

கொல்கத்தாவில் பார்க்க வேண்டிய இடங்களாகப் பல இருந்தாலும் தக்ஷிணேஷ்வர் காளி கோயில், பேலூர் மடம் இரண்டும் போக விரும்பியும் நேரமின்மையால் விட்டுப் போனவை.

இத்துடன் கொல்கத்தா தொடர் நிறைவுறுகிறது.

அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகள்!
***

தலவரலாற்றுத் தகவல்கள்: விக்கிப்பீடியா.

10 கருத்துகள்:

  1. கல்கத்தாவின் முக்கியமான இடமான காளிகாட் கோயிலுக்குச் செல்லவேண்டும் என்ற ஆசையை பூர்த்தி செய்தது இப்பதிவு. உங்களது தொடர் பதிவுகள் மூலமாக கல்கத்தா செல்லும் எண்ணம் மேம்பட்டு உள்ளது. கல்கத்தா செல்லும் நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் அதற்கான வாய்ப்புகள் கூடி வரட்டுமாக.

      மகிழ்ச்சியும் நன்றியும்.

      நீக்கு
  2. சிறப்பான தல வரலாறுகளுடன் மிக வித்தியாசமான, அதே சமயம் சுவாரஸ்யமான பதிவு ராமலக்ஷ்மி!

    பதிலளிநீக்கு
  3. அருமையாக பதிவு செய்து விட்டீர்கள்.
    காளி கோவில் போகும் அன்பர்களுக்கு உதவும் தகவல்கள்.
    வரலாற்று செய்திகல் அருமை.
    நாங்கள் போன போது இவ்வளவு கெடுபிடி இல்லை. கோவில் போகும் வழிஎல்லாம் சுத்தமாய் இருக்காது.

    அடுத்த தடவை போய் வாருங்கள் மீதியைப் பார்க்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவில் போகும் வழி இப்போதும் சுமாராகவே உள்ளது. பார்க்கலாம், இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் போது:). நன்றி கோமதிம்மா.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin