வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பண்பாட்டுத் தலைநகரம் - கொல்கத்தா (2)

நெடுங்காலமாக கொல்கத்தா அதன் இலக்கியம், கலை மற்றும் புரட்சிகரப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. கொல்கத்தாவில் "சாத்ரா" எனும் ஒருவகையான பாணியில் அமைந்த நாடகப் பாரம்பரியம் வழக்கில் உள்ளது. இந்தித் திரைப்படங்களோடு வங்காள மொழித் திரைப்படங்களையும், மக்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். டாலிகஞ்ச் எனும் இடமே வங்காளத் திரைப்படத் தயாரிப்பின் மையமாகத் திகழ்கிறது. இதனால் வங்காளத் திரைப்படத்துறை "டாலிவூட்" எனவும் அழைக்கப்படுகிறது. டாலீவூட் சத்யஜித் ரே, மிருணாள் சென், தப்பன் சின்ஹா, ரித்விக் காட்டக் மற்றும் அபர்ணா சென் போன்ற பல புகழ் பெற்ற இயக்குனர்களைத் திரைப்பட உலகுக்கு அளித்துள்ளது.  இப்படிப் பல வித காரணங்களுக்காக இந்தியாவின் ‘பண்பாட்டுத் தலைநகரம்’ எனவும் கொல்கத்தா கொண்டாடப் படுகிறது.

ஆயினும் முந்தைய பதிவில் சொன்னது போல மக்கள் மற்றும் நகரம் சார்ந்த பல பிரச்சனைகள் தீர்வு காணப்படாது மற்ற பெருநகரங்களோடு ஒப்பிடுகையில் பின் தங்கிய நிலையில் உள்ளது, கொல்கத்தா. அவற்றில் ஒன்று கை ரிக்ஷா..

#1
மனிதரை மனிதர் இழுக்கும் அவலம்

மிழகத்தில் கலைஞரின் முயற்சியாலும், இந்தியாவின் மற்ற பெரும்பாலான இடங்களிலும் வழக்கொழிந்து விட்ட கை ரிக்ஷா இங்கே பயன்பாட்டில் இருப்பதும், துருப்பிடித்தத் தகர டப்பாவுக்கு மஞ்சள் பெயிண்ட் அடித்த தோற்றத்தில் ஓடும் மிகப் பழைய மஞ்சள் அம்பாஸிடர் டாக்ஸிகளும் 21ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா எனும் சந்தேகத்தை வரவழைக்கின்றன. சாலைகளின் நடுவே ஓடுகின்ற ட்ராம், மற்றும் சைக்கிள் ரிக்ஷா, ஜட்கா ஆகிய வாகனங்கள் கொல்கத்தாவை வேறுபடுத்திக் காட்டுகின்றன.

#2
“அந்தக் காலம்... அது அது அது...”

பழைய காலத்தை நினைவூட்ட, சைக்கிள் ரிக்ஷாவில் தங்கள் பொருட்களை வாங்கிக் கொண்டு திரும்புகிற ஒரு குடும்பத்தை, சேபியா வண்ணத்தில் காட்டும் சமீபத்தைய வசந்த & கோ விளம்பரம் நினைவுக்கு வருகிறதா?

காளிகட் சாலையில் கண்ட மற்றொரு காட்சி:

#3
சவாரியை எதிர்பார்த்து..
கவலை தோய்ந்த சவரம் செய்யாத  முகத்தோடு..

கவிதையாய் சிக்கியது கீழ் வரும் காட்சி:

#4
நாளெல்லாம் யார் யாரையோ சுமந்தோடிய கால்கள்
நள்ளிரவில் சந்தோஷமாய் நகருகின்றது
இல்லாளையும் தன் இளவரசனையும் இழுத்தபடி.
குதூகலமான குடும்பப் பாரம்
நாங்கள் உபேர் வாகனத்துக்குப் பதிவு செய்து விட்டுக் காத்திருந்த போது, பாதையோரத்தில் இக்குடும்பத்தினர் சிரித்துப் பேசியபடி இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அங்கேயே உறங்கி விடுவார்கள் போலுமென நான் நினைத்திருக்கையில் திடீரென உற்சாகமாகக் கிளம்பி விட்டார்கள் வீடு நோக்கி. அவசரமாய் நான் கேமராவைப் பையிலிருந்து வெளியே எடுப்பதைப் பார்த்து அம்மாவும் மகனும் அழகாய்ப் புன்னகைத்து பின் கையசைத்துச் சென்றார்கள்:)!

ட்ராம்

ந்தியாவில் தற்போது கொல்கத்தாவில் மட்டுமே ட்ராம் போக்குவரத்துக்குப் பயன்பாட்டில் உள்ளது. Calcutta Tramways Company (CTC) மின்சார ட்ராம் வண்டிகளை 1902_ஆம் ஆண்டிலிருந்து இயக்கி வருகிறது. முதன் முதலில் 1873_ஆம் ஆண்டு ஒரு குறிப்பிட்ட வழித்தடத்திற்கு மட்டும் இரண்டரை மைலுக்கு குதிரைகளால் இழுக்கப்படும் ட்ராம் அறிமுகமாகி ஒன்பது மாதங்கள் பயன்பாட்டில் இருந்து நின்று போனது. 1880_ஆம் ஆண்டு CTC உருவாகி லண்டனில் பதிவும் செய்து கொண்டது. அதன் பின் 1882_ஆம் ஆண்டு நீராவி ட்ராம்கள் வந்தன. நூற்றாண்டின் முடிவில் 166 ட்ராம் வண்டிகள், 1000 குதிரைகளைச் சொந்தமாகக் கொண்டிருந்த CTC,  19 மைல்கள் வரை செல்லக் கூடிய ஏழு நீராவி வண்டிகளையும் இயக்கிக் கொண்டிருந்தது .

1902_ஆம் ஆண்டிலிருந்து மின்சார ட்ராம் வண்டிகள் இயங்கத் தொடங்கின. இரு ஆண்டுகளுக்கு முன் 2016_ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, CTC 257 ட்ராம்களை சொந்தமாகக் கொண்டுள்ளது. அதில் 125 ட்ராம்கள், 25 வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. 60 இருக்கைகளுடன் 200 பேர்கள் பயணிக்கும்படியானவை.

கீழ் வரும் மூன்று படங்களும் வாகனத்துள் இருந்து எடுத்தவை. ட்ராமின் முன் பின் பக்கங்கள் மற்றும் சாலை நடுவே ஓடும் காட்சி...

#5

அலுவலகம் செல்லும் வழியில் போடுகிறார்  குட்டித் தூக்கம்

#6

அதிகாலை அவசரமாய் அலுவலகம் செல்லும் தம்பதியர்
#7
சிக்னலுக்குக் காத்திருக்கையில் காட்சிப் படுத்தியது..

 ஜட்கா

லங்கார ஜட்கா வண்டிகள் உல்லாச சவாரிக்கு மட்டுமே பயன்படுத்தப் படுவது போலத் தெரிகிறது. அவசர கதியில் விரையும் வாகனங்களுக்கு மத்தியில் இவற்றுக்கென தனிப் பாதை அமைப்பது சிரமமே. விக்டோரியா நினைவிடத்தின் முன் அதிகமாகக் காணப்படுகின்றன. மற்றபடி நகரின் பிற பகுதிகளில் பார்க்கவில்லை.

#8


#9

#10

#11

டாக்ஸியில் செல்லும் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் செல்ல வேண்டும்.

#12
இரயில் நிலையத்தில்..
ரயில்வே நிலையத்தை விட்டு வெளி வந்ததும் க்யூவில் கிடைத்த மஞ்சள் அம்பாசிடர் டாக்ஸியில் ஏறியது தப்போ என முதலில் நினைத்து அவற்றைத் தவிர்த்து உபேர், ஓலாவை உபயோகித்தால் அதன் ஓட்டுநர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். எவருமே சாலை விதிகளை மதிப்பதில்லை. கண்மூடித் தனமான வேகத்தில் புகுந்து புறப்படுகிறார்கள்.

கொல்கத்தா முனிஸபல் அலுவலகத்தின் முன்.. ஒன்று! பெரும்பாலான அம்பாஸிடர் டாக்ஸிகள் இந்த நிலையில்தான் காணப்பட்டன.

#13

ல ஆண்டுகளுக்கு முன் இங்கு வசித்த தோழி சுனந்தாவின் ஆலோசனையின் பேரில் கரியாஹட் (gariahat market) சந்தைக்குச் சென்றிருந்தோம். இங்கிருந்த நடைபாதைக் கடைகளும் கிடைக்கின்ற பொருட்களும் பெங்களூரின் சிக்பெட் பகுதியை நினைவு படுத்தின.

#14
கொல்கத்தாவின் வாகனங்கள் வரிசையில்.. இறுதியாக அரசாங்கப் பேருந்து ஒன்றும்..



இங்கிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு பகுதியில் தெருவுக்கு ஒரு கோவில், வீடுகளுக்கு மத்தியில் ஒரே பெரிய அறையாக 10x10  அல்லது 15x10 அடி அளவுகளில் இருந்தன. சிவன் அல்லது காளி மாதா அழகாக அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தனர். அக்கோவில்களில் கூட்டமும் இல்லை. பார்த்த 10,12 கோவில்களில் ஒன்றில் மட்டும் ஓரிருவர் இருந்தனர்.

கீழ் வரும் படம் கரியாஹட் சந்தைக்கு உள்ளேயே இருந்த சிறு கோவில் ஒன்றில் எடுத்தது.. காளிகட் கோவிலில் அனுமதி இல்லாததால் காளிமாதாவைப் படம் எடுக்க முடியவில்லை. அந்தக் குறையைத் தீர்த்தருளிய பராசக்தி..

#15

(தொடரும்..)
**

தொடர்புடைய முந்தைய பதிவு:
ரவீந்திர சேது - கொல்கத்தா (1)

***

17 கருத்துகள்:

  1. கல்கத்தா காட்சிகளை ரசித்தேன். நள்ளிரவில் குடும்பம் இழுக்கும் கவிதையையும் ரசித்தேன்.அந்த அம்மாவின் முகத்தில் தமிழ் தெரிகிறதோ! டிராம் வண்டியை இன்னும் வைத்திருக்கிறார்களே.. பெரும்பாலும் வாகனங்களே இடம் பெற்றிருந்த பதிவில் காளிமாதா தரிசனமும் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஸ்ரீராம். தமிழ் முகமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் வேறு மொழியில்தான் (பெங்காலி?) பேசிக் கொண்டிருந்தார்கள்.

      ஆம், 125 வண்டிகள் ஓடுகின்றன. அது குறித்து மேலும் சில தகவல்கள் பதிவில் சேர்த்துள்ளேன். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. குதுகலமான குடும்ப பாரம்//
    சுகமான சுமை என்பதை நினைவூட்டடியது.
    அழகான சிரிப்பு. வறுமையிலும் இவ்வளவு அழகான சிரிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

    அழகான படங்கள்..
    ஜட்காவில் நாங்களும் பயணித்து மகிழ்ந்தோம்.
    நினைவுகளை மீட்ட பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகமான சுமை, அழகான தலைப்பு. பயன்படுத்திக் கொள்கிறேன்.

      நினைவுகள் மீண்டெழுந்தது அறிந்து மகிழ்ச்சி. நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  3. முதன்முறை கொல்கத்தா சென்றபோது புரதானமானததொரு நகரில் பயணிப்பது போன்ற உணர்வுதான்.

    போக்குவரத்து மிகக் கடினமானது.
    இடிபட்டு நசுங்காத வாகனத்தைப் பார்ப்பது அரிதினும் அரிது.

    எனினும் வங்காளிகளின் விருந்தோம்பல் மெச்சத்தக்கது. எனது வங்காள நண்பர் ஒவ்வொரு இடமாக என்னை அழைத்துச் சென்றது இன்னும் நினைவில்.

    அவர்கள் உணவு மற்றும் இனிப்பு வகைகள் மிகவும் ருசிகரமானது.

    மிக மிக அரிதாகவே நீங்கள் குறைகளை எழுதுவீர்கள். அநேகமாக குறைந்த கால அவகாசம், தொடர்ந்து பயணங்கள் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயம் நல்ல மனிதர்கள் நிரம்பிய நகரமாகவே இருக்கக் கூடும். குறுகிய அவகாசமெனினும் பயன்படுத்திய ஏழெட்டு முறைகளிலும் டாக்ஸி ஓட்டுநர்கள் சொல்லி வைத்தாற் போல ஒரே மாதிரியாக நடந்து கொண்டார்கள். அதைக் குறிப்பிடத் தோன்றியது.

      ஆம், பெங்கால் இனிப்புகள் பிரபலமாயிற்றே.

      கருத்துப் பகிர்வுக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  4. ஜட்காக்கள் - விக்டோரியா மஹல் பகுதியில் சுற்றிவர மட்டுமே பயன்படுகிறது. கைரிக்‌ஷாக்கள் இன்னமும் இயங்குகின்றன என்பது வேதனை. பலருக்கு இது தான் பிழைப்பு...

    இன்னமும் மாறாமல் இருக்கும் நகரம் தான். நாங்கள் சென்றபோது கிடைத்த அனுபவங்களை அசைபோட உதவியது உங்கள் பகிர்வு.

    படங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், பிற இடங்களில் நானும் ஜட்கா வண்டிகளைப் பார்க்கவில்லை. கைரிக்‌ஷாக்களை முற்றிலுமாகத் தடை செய்து, அதை ஓட்டுகிறவர்களின் பிழைப்புக்கு அரசாங்கம் மாற்று வழி ஏற்பாடு செய்யும் காலம் எப்போது வருமோ? மற்ற மாநிலங்களில் முடியும் போது அரசாங்கம் கவனம் எடுத்து செய்யலாமே எனும் ஆதங்கம் எழுகிறது.

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. கல்கத்தா...நான் பார்க்கஆசைப்படும் நகருக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. டிராம் பற்றி :
    இதில் ரிவெர்ஸ் கிடையாது - முன்னால் மட்டுமே போகும் .
    இதற்காக D C சப்ளை வேற தனியே உண்டு .

    காந்தி திரைப்படம் எடுத்த போது காந்தி ட்ராமில் போகிற மாதிரி காட்சி .
    அதற்காக பழைய டிராம் கிடைக்குமா என்று விசாரித்தனர் .
    அதற்கு கிடைத்த பதில் :
    " அந்த ட்ராம்தான் இன்றைக்கும் ஓடுகிறது "

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //காந்தி திரைப்படம் எடுத்த போது காந்தி ட்ராமில் போகிற மாதிரி காட்சி .
      அதற்காக பழைய டிராம் கிடைக்குமா என்று விசாரித்தனர் .
      அதற்கு கிடைத்த பதில் :
      " அந்த ட்ராம்தான் இன்றைக்கும் ஓடுகிறது "//

      ஹா.. ஹா... ஹா...

      நீக்கு
    2. தகவலுக்கு நன்றி.

      இருக்கலாம்:). அதரப் பழசான வண்டிகளே ஓடுகின்றன. உங்களது கருத்தைப் பார்த்த பின் ட்ராம்களின் வரலாறு குறித்து மேலும் அறியும் ஆர்வம் எழுந்தது. வாசித்து சில தகவல்களை இப்போது புதிதாக பதிவில் இணைத்துள்ளேன்.

      முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. சென்னை மெட்ராஸாக இருந்தபோதுட்ராமில் பயணித்துஇருக்கிறேன் பாம்பேயிலும் பயணித்து இருக்கிறென் கை ரிக்‌ஷாக்களைப்பார்த்திருந்தாலும் பயணிக்க விரும்பியதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது சென்னை மற்றும் மும்பையில் ட்ராம்கள் வழக்கொழிந்து விட்டன. கொல்கத்தாவில் மட்டுமே உள்ளன, ட்ராம்களோடு கைரிக்ஷாகளும்:(.

      நீக்கு
  8. சென்னை மெட்ராசாக இருந்தபோது ட்ராமில் பயணம்செய்திருக்கிறேன் கொல்கத்தா சென்றதில்லை

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin