வெள்ளி, 9 அக்டோபர், 2015

கரையாத கணபதி பப்பா - பெங்களூரு, சாங்கி ஏரி


ரு வாரங்களுக்கு முன், ஒரு ஞாயிறு மாலை பெங்களூர் மல்லேஸ்வரத்தில் இருக்கும் சாங்கி ஏரிக்கு சென்றிருந்தேன். அதற்கு முந்தைய வாரத்தில் அந்த ஏரியைக் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை செய்தித்தாளில் படிக்க நேர்ந்ததும் செல்லும் ஆவல் எழுந்ததற்கு ஒரு காரணம்.

#2

பசுமை சுருங்கிக் கொண்டே வருகிற இந்தத் தோட்ட நகரில் பல வித உயிர்களுக்கும் மரங்களுக்கும் புகலிடமாக இருந்து வருகிறது
ஏரியும் 37 ஏக்கரில் விரிந்து கிடக்கும் அதைச் சுற்றியிருக்கும் வனப் பகுதியும். 40 வகைளில் சுமார் 720 மரங்கள் இருப்பதும், நூறு வகை பறவைகள் வந்து செல்வதும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

#3

1882-ல் Richad Hieram Sankey என்பவரால் அமைக்கப்பட்ட  இந்த ஏரி அவரது பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது. அந்நாளில் ஏரியையும் அதன் வனத்தையும் சுற்றிப் பெருமளவில் வெற்று நிலமே இருந்திருக்க இப்போதோ நகரத்தின் நெருக்கடி மிகுந்த இடங்களில் ஒன்றாக மாறி விட்டுள்ளது மல்லேஸ்வரம். சுத்தமான காற்றுக்காகவும் நடைப் பயிற்சிக்காகவும் இங்கே தினம் வருபவர் நூற்றுக் கணக்கானோர்.
#4

ஆய்வு செய்த அந்தத் தனியார் நிறுவனம், ஏரியின் சிறப்பான பராமரிப்புக்கு சுற்றியிருக்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பும் முக்கிய காரணமெனப் பாராட்டியிருக்கும் அதே வேளையில் ஆங்காங்கே கலக்கின்ற சாக்கடைகளால் ஏரி மாசு அடைந்த விடாமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கவலையும் தெரிவித்திருந்தது.

நான் சாங்கி ஏரி சென்றிருந்த அதே சமயத்தில்தான், ‘ஐடி நகரின் அவல நிலை’ என பரபரப்பாக (முதலில் BBC, தொடர்ந்து மற்ற சேனல்கள்) உலகெங்கும் ஓடிக் கொண்டிருந்தது.... பெங்களூர் பெலந்தூர் ஏரி நுரைத்துப் பொங்கி, காற்றில் பறந்து தெருவில் போகும் வண்டிகள், மனிதர்களைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த செய்தி. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவருக்கு விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. பல சமயங்களில் இந்த நுரைகள் தீப்பிடித்துப் பீதியைக் கிளப்பியிருக்கின்றன. பார்க்க ஏதோ பனிப்படலம் போல காட்சியளிக்கும் பெலந்தூர் ஏரி உலகத்தினர் மத்தியில் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும்  ஒருசேரக் கொண்டு வந்திருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகளும், சாக்கடைக் கலப்புகளுமே இந்தப் பரிதாபமான விபரீத நிலைக்குக் காரணம். வாய்ப்பு இருப்பின் அங்கு சென்று படங்கள் எடுத்துப் பகிருகிறேன். இணையத்தில் பார்த்திடுங்கள் இப்போது

விழிப்புணர்வுக்காகவும், Bird watching வழக்கத்தை ஊக்கப்படுத்தவும் அக்டோபர் ஒன்றாம் தேதி ‘பெங்களூர் பறவைகள் தினம்’ ஆக அனுசரிக்கப்படுகிறது, ஏரிகளின் அருமையையும், அவற்றைப் பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்த இந்நாள் உதவுமென நம்புகிறார்கள். அதையொட்டி வெளியான ஒரு செய்திக் குறிப்பு பெலந்தூர் ஏரியில் மட்டும் 20 ஆண்டுகளுக்கு முன் 53000 வாத்துகள் வசித்து வந்ததாகச் சொல்கிறது.
#5

இன்று ஒரு சிறுஉயிர் கூட அதில் வாழ வழியற்றுப் போயிருப்பதோடு, மாசுப் படுத்திய மனிதர்களின் உயிருக்கும் தீங்காக வந்து முடிந்திருக்கிறது.

சாங்கி ஏரிக்கு வருவோம். சுகாதாரமான காற்றுக்காகவும், அழகான சூழலுக்காகவும்  பெயர் வாங்கியிருக்கும் ஏரியில் அன்றைக்கு விநாயகரைக் கரைப்பதற்கென பலரும் வரிசையாக வந்தபடி இருந்தனர்.
#6

சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் மல்லேஸ்வரத்தில் இரு வருடங்கள் வசித்த காலத்தில் நான் முதன் முறை இந்த ஏரிக்கு வந்ததும் விநாயகரைக் கரைக்கதான். ‘அல்லி நோடு கணேசா, இல்லி நோடு கணேசா’ என்றபடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடிப்பாடியபடி கரைப்பதற்கு ஏரியில் இறங்கியதை அதிசயமாய் வேடிக்கை பார்த்தபடியே நாங்கள் கொண்டு சென்றிருந்த களிமண்ணால் ஆன கணேசரையும் கரைத்து வந்தோம். அந்த காலக் கட்டங்களில் சூழல் மாசு பற்றிய விழிப்புணர்வு இப்போதைப் போல வந்திருக்கவில்லை. அப்படி அறிய வந்த நாளிலிருந்து ஏரிகுளங்களில் கரைப்பதை விட்டாயிற்று. அந்நாளில் சதுர்த்திக்கு மறுநாள் விநாயகர் வீட்டுக் கிணற்றில் இறங்கி விடுவார். நகரங்களில் வீட்டுக்கு வீடு கிணற்றுக்கு எங்கே போவது? சுத்தமான பாத்திரம் அல்லது பக்கெட்டில் வீட்டிலேயே கரைத்து செடிகளுக்கு ஊற்றி விடுவது இங்கே பலரும் பின்பற்றி வருவது. அதுவே எனக்கும் வழக்கமாகி விட்டது பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக. இதிலும் அசெளகரியங்கள் இருக்குமானால் மஞ்சளில் பிடித்து வைத்து விட்டாலும் போதும், மனப்பூர்வமாக ஆசிர்வதிப்பார் கணபதி பப்பா.

டந்த இரண்டு, மூன்று வருடங்களில் அரசின் முயற்சியால் வண்ணம் தீட்டிய விநாயகர் சிலைகளின் தயாரிப்பு ஓரளவுக்கு முடக்கப்பட்டு களிமண் பிள்ளையார்கள் பெருமளவில் விலைக்கு வந்து விட்டதைப் பற்றி முன்னொரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன்.
#7
இதனால் தேடியலைந்து வாங்கும் நிலை மாறி களிமண் சிலைகள் பரவலாக எல்லாக் கடைகளிலும் கிடைக்க ஆரம்பித்தன. வருடங்கள் ஆக ஆக இன்னும் முன்னேற்றம் வரலாம் என எதிர்பார்க்க வழியற்று வர்ணப் பிள்ளையார் விற்பனைகள் தொடர்ந்தபடியேதான் இருக்கின்றன.
#8

உதாரணத்துக்கு சாங்கி ஏரியின் நிலையை மட்டுமே எடுத்துக் கொள்வோம். ஏரியின் எந்தப் பகுதியிலும் கரைக்கலாம் என்ற நிலையெல்லாம் மாறி பலவருடங்கள் ஆகின்றன. விநாயகரைக் கரைப்பதற்கென்றே ஏரியின் ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார்கள். அது நாலாபுறமும் படிகளுடன் ஒரு பெரிய தொட்டி போன்ற அமைப்பிலானது.

#9

#10 தொட்டியின் மறுபுறம்:

கரைப்பதற்கென அரசே ஆட்களை நியமித்திருக்கிறது. மக்கள் இறங்க அனுமதியில்லை. படிகளில் வைத்து பூஜை முடித்து கரைக்கும் நபரிடம் கொடுத்து விட வேண்டும். அவர் மூன்று முறை முக்கியெடுத்து உள்ளே விட்டு விடுகிறார்.
#11


எந்த மக்களின் ஒத்துழைப்பால் ஏரி சுத்தமாக இருப்பதாக அறியப்பட்டதோ அதே மக்கள் , பக்தி, கடவுளுக்கு ஆற்ற வேண்டிய கடமை, சடங்கு எனும் தீவிர நம்பிக்கைகளுடன் ஏரி மாசடைவதைப் பற்றிய சிந்தனையின்றி காரீயம்(lead) மற்றும் வர்ணங்கள் பூசிய, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட பிள்ளையார்களை வாங்கிக் கரைக்க விடுகிறார்கள். கரையாமல் தலையின்றி, காலின்றி கரை மேல் எடுத்துப் போடப்பட்ட சிலைகளின் நிலை ‘இதுவா நாம் கடவுளுக்கு செலுத்தும் பிரார்த்தனை?’ எனும் கேள்வியை எழுப்புகின்றன.

பதினொருநாட்கள் சிலை கரைப்புக்குப் பின் தொட்டியை சுத்தம் செய்யும், முதல் நாள் பணியில் மட்டும் சாங்கி ஏரியின் இந்தத் தொட்டியில் இருந்து 47000 சிலைகள் இப்படிக் கரையாத நிலையில் வெளியே எடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் இங்கு மட்டும் 1,28,000 சிலைகள் கரைக்கப்பட்டிருப்பதாய் தெரிகிறது. இதில் 50 சதவிகிதம் விஷம் கலந்த கெமிக்கல்களால் வர்ணம் பூசப்பட்ட சிலைகள். இவை உள்ளேயே கிடந்து ஏரி நீரை மாசுப் படுத்தி விடக் கூடாதென 11ஆம் நாள் முடிந்த உடனேயே அகற்றப்படுவதாக தெரிவித்திருந்தார் அதிகாரி. வர்ணப் பிள்ளையார்களைக் கரைக்க வந்த ஒவ்வொருவரிடம் அடுத்த வருடம் களிமண் பிள்ளையாரை வாங்க வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும், சிலர் வாக்குறுதி தந்து சென்றதாகவும் சொல்கிறார்.

பெங்களூரின் மற்ற ஏரிகளிலும் இலட்சக் கணக்கில் சிலைகள் கரைக்கப் பட்டிருக்கின்றன. ஏரிகள் பாழாகி விடாமலிருக்க சில இடங்களில் மாநகராட்சி செயற்கை ஏரிகளை அமைத்திருந்தன இந்த இரு வாரங்களுக்காக. சாங்கி ஏரியில் மட்டுமிருந்தே சுமார் ஒன்றே முக்கால் டன் பூக்கழிவுகளும், 3 டன் வாழையிலைகளும் ஐந்தாறு டன் ப்ளாஸ்டிக் கழிவுகளும் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. “இந்த நிலை தொடர்ந்தால் வருங்காலக் குழந்தைகள் ஏரிகளைக் கதைகள் மூலமாக மட்டுமே அறிவார்கள். அதை நேரில் கண்டு வளரும் வாய்ப்பை இழப்பார்கள்” என்கிறார் அதிகாரி.
#12

இதோ இங்கே கூடி நிற்கும் வாத்துகள் சுவைத்துக் கொண்டிருக்கும் பொரியை வாரி வாரி இறைத்தவை அனைத்தும் பிஞ்சுக் கைகளே.
#13

பெற்றோருடன் வந்திருந்த அக்குழந்தைகளுக்கு, வாத்துகளுக்கு உணவளிப்பதும் அவற்றைக் கவனிப்பதும் பிரியத்துக்குரியதாக இருக்கிறது. நாளை அவர்களின் குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்புக் கிடைக்க வேண்டாமா?

#14


#15
யற்கை இறைவன் கொடுத்த வரம். அதை நன்றியுடன் பராமரிப்பதும் அவருக்கு செலுத்துகிற பிரார்த்தனையே.
**


[தகவல்கள்: இணையம் மற்றும் TOI_ல் பல்வேறு சமயங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில்..]
***


தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

பெங்களூர் ஏரிகள்
மைசூர், குமரகம் ஏரிகள்

சுற்றுச் சூழல்
1. மாதிரி நகரம் ஆகிறதா பெங்களூரு?
2. புவியின் பொக்கிஷங்கள்.. மரங்கள்!

18 கருத்துகள்:

  1. உண்மைதான் ராமலக்ஷ்மி. எப்போது இந்த வர்ணம் பூசிய பிள்ளையார்களை அறிமுகப் படுத்தினார்களோ தெரியவில்லை.
    மனதுக்கு ஒவ்வாத வடிவங்களில் கணபதியை அமைத்து வைடுகிறார்கள் . அவர் அதை பொருட்படுத்துவதில்லை என்றே நினைக்கிறேன்.
    பெங்களூரு நகர ஆட்சியாளர்கள் இவ்வளவு முயற்சி எடுத்து இருப்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  2. பிள்ளையாரைக் கரைப்பதோ, இல்லை உடைச்சுப்போட்டுவிடுவதோ எல்லாம் பார்த்தாலே மனசுக்குக் கஷ்டமாப் போயிருது. நம்ம சண்டிகர் முருகன் கோவிலில் பெரிய பிள்ளையார் சிலையை வச்சு பத்து நாட்கள் கும்பிட்டு அனந்தசதுர்த்தசியன்று ஊர்வலமாக ஆற்றங்கரைக்கு எடுத்துப்போனாலும், அவரைக் கரைப்பதில்லை. அந்தப்பெரிய சிலைக்கு முன் வச்சுருக்கும் குட்டியூண்டு களிமண் பிள்ளையாரை ஆற்றில் இறக்கிவிட்டுட்டுப் பெரியவர் கோவிலுக்கே திரும்பிடுவார். இப்படி எல்லோரும் செய்யலாமே!

    என்னால் பிள்ளையாரைத் தூக்கிப்போட முடியாது. வீட்டில்தான் வச்சுக்குவேன். அதே பிள்ளையாரை அடுத்தவருச சதுர்த்திக்குப் பூஜை செய்தால் ஆகாதா என்ன?

    உங்க மஞ்சள் பொடி பிள்ளையார் ஐடியா சூப்பர். ஒரு டீஸ்பூன் பொடியில் பிடிச்சு வச்சாலும் போதுமே. சுற்றுச்சூழலுக்க எந்த மாசும் வருவதைப் பிள்ளையாரே விரும்பமாட்டார். காலப்போக்கில் பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டம் விபரீதமான அளவில் பெருகிப்போனது பெரிய துயரங்களில் ஒன்னு. பத்து நாட்கள் கொண்டாடி மகிழ்ந்த சிலையை எப்படிக் கடாச மனசு வருதுன்னு இன்னும் புரியலை எனக்கு :-(

    சாங்கி ஏரியை அந்தப் பகுதி மக்கள் சுத்தமா வச்சுக்கறாங்க என்பது ரொம்ப நல்ல விஷயம். அப்போ.... மக்கள் மனசு வச்சால் சுத்தம் வருது. ஏன் இந்திய மக்களில் பலருக்கு இந்த சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னும் வரலை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மஞ்சள் பொடியில் பிள்ளையார், என் அம்மா கடந்த சிலவருடங்களாகப் பின் பற்றி வருவது.

      /அதே பிள்ளையாரை/... தாராளமாய் வைத்துக் கொள்ளலாம்.

      முழுமையான விழிப்புணர்வு வந்தால்தான் சரியான மாற்றங்கள் நிகழும் :( .

      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
  3. எல்லோரும் உணர வேண்டிய தருணம். படிக்க வேண்டிய பதிவு. விழிப்புணர்வு பெருக வேண்டும். நல்ல பகிர்வு. பழங்கால வழக்கங்களின் உண்மையான காரணத்தை மறந்து, காரியத்தை மட்டும் மெருகேற்றி காரீயத்தைக் கலக்கிறோம். நாம் வாழும் பூமி வாழ்வதும், வீழ்வதும் நம் கைகளில்தான்.

    பதிலளிநீக்கு
  4. அழகான படங்கள்.... சமயத்தின் பேரில் இப்படி மாசு உண்டாக்குவது மனதுக்கு கஷ்டம் தரும் விஷயம். மஞ்சள் பிள்ளையார் - நல்லது.

    ஏற்கனவே பாழாகி இருக்கும் எங்கள் ஊர் கூவத்தில் - தில்லியில் யமுனா அப்படித்தான் இருக்கிறது - இப்படி விழாக்காலங்களில் கொண்டு கரைக்கப்படும் விநாயகர் சிலைகள் - யமுனைக்குக் கண்ணிருந்தால் கதறி கண்ணீர் விடுவாள் பாவம்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா ஊர்களிலும் இதே நிலைதான். ஏரி, குளங்கள், நதி மற்றும் கடல்கள்...

      கருத்துக்கு நன்றி வெங்கட்.

      நீக்கு
  5. மிகவும் அற்புதமாக, மிக நெடிய பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி. நம்மால் முடிந்தது எதுவோ அதைச் செய்துக் கொண்டிருப்போம். ஒருநாள் மொத்த மக்களும் விழிப்புணர்வு அடைவார்கள் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  6. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை நாம் பெறும்வரை இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும். பக்தியையும் தாண்டி பண்பட்ட மனநிலையைப் பெற காலம்தான் உதவவேண்டும். நல்லதொரு பதிவு ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பதிவும், படங்களும் அழகு.
    நாங்கள் வழக்கம் போல் சின்ன களிமண் பிள்ளையார் வாங்கி பூஜை செய்து வீட்டில் வாளியில் கரைத்து தோட்டத்தில் சேர்த்தாகி விட்டது கரைந்த பிள்ளையாரை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin