Thursday, October 1, 2015

அலங்கார பலூன்களும் விபரீத விளைவுகளும்..


லுவலக விழாக்கள், குடும்ப நிகழ்வுகள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இவற்றை A to Z கவனித்து  நடத்தித் தருகிறோம்’ என வாக்குத் தருகிற, இவெண்ட் ஆர்கனைசர் எனப்படுகிற விழா ஏற்பாட்டளர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் மக்கள். தவறில்லை. ஆனால் ஒப்படைக்கும் பொறுப்பை நேர்மையாகச் செயல்படுத்துவார்களா என்பதைத் தீர விசாரிப்பது மிக மிக அவசியம்.

பொதுவாகவே சிறு குழந்தைகள் கூடுகிற பிறந்தநாள் விழாக்களில் உணவிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் “பாதுகாப்பு” என்பதும் மிக முக்கியமாகப் பார்க்கப் பட வேண்டியது.* இத்தனை குழந்தைகளுக்கு ஒரு பெரியவர் என அவர்களை எப்போதும் கண்காணிக்கும் பொறுப்பை விழா நடத்துபவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

* கலந்து கொள்ளும் குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களெனில் அவசியம் பெற்றோரும் உடனிருக்குப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

* விழா அரங்கிற்கு அருகாமையில் ஃபவுண்டன், ஸ்விம்மிங் பூல், சம்ப் போன்ற நீர்நிலைகள் இருக்குமானால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

* விழா முடிந்து அழைத்துக் கொள்வதாக குழந்தைகளைப் பெற்றோர் விட்டுச் சென்றிருக்கும் பட்சத்தில் உடனடியாக தொடர்பு கொள்ளும் வகையில் அவர்களது அலைபேசி எண்களின் பட்டியலை ஒருவருக்கு இருவராகக் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

* விளையாட்டு போட்டிகள், வேடிக்கைகள் நடத்தினால் அந்த நேரத்தில் உணவு கொடுப்பதைத் தவிர்க்கவும். குழந்தைகள் ஜூஸ் போன்றவற்றை சிந்தி விடுகிற வாய்ப்புகளால் விபத்துகள் நேரலாம்.

இவற்றையும் தாண்டி கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களும் இருக்கின்றன.

இரு வாரங்களுக்கு முன் பெங்களூரின் பெரிய குடியிருப்பு ஒன்றின் க்ளப் ஹவுஸில் நடைபெற்ற ஒரு பிறந்தநாள் விழாவில் ஏற்பட்ட விபரீதமான விபத்துக்கு காரணமாக இருந்தவை அலங்கார பலூன்கள். பதினாறு ரூபாய்க்கு ஒரு பலூன்  என்ற கணக்கில் கொத்துக் கொத்தாக வாங்கி அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. குறைந்த உயரத்தில் கூரையைக் கொண்ட அந்த அரங்கில் ஒரு கொத்து சூடான பல்பை உராய்ந்தில் வெடித்து தீப்பிழம்பாக ஒரு குழந்தையின் தலையில் விழுந்ததில் முடி கருகி தீக்காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இன்னொரு குழந்தைக்கு முகத்திலும் கையிலும் காயங்கள். ஆடிப்பாடி மகிழ்ந்திருக்க வந்த அக்குழந்தைகள் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள்.


விசாரித்ததில் வெளி வந்த உண்மை: பலூன்களில் ஹீலியத்திற்கு பதிலாக அதை விட ஆறேழு பங்கு விலை குறைவான ஹைட்ரஜனை நிரப்பிக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஹைட்ரஜன் மிக எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடிய ஒன்று. விசாரணைக்கு சிக்காமல் விழா ஏற்பாட்டாளர் தலைமறைவானதும், பிறந்தநாள் குழந்தையின் பெற்றோர் போலிஸில் புகார் பதிந்ததும் ஒரு புறமிருக்க இது மிகவும் சகஜமாக நடைமுறையில் இருந்து வருகிற வழக்கம் என்பதும் தெரிய வந்திருக்கிறது. கடந்த இரு வருடங்களில் இது பெங்களூரில் நடந்த மூன்றாவது பலூன் விபத்து. 7 க்யூபிக் மீட்டர் ஹீலியம் ரூ 14000 என்றால் அதே அளவு ஹைட்ரஜன் ரூ 1250-ல் கிடைக்கிறது. விழா நடத்துபவகளிடம் ஹீலியத்திற்கான பணத்தை வசூலித்து விட்டு ஹைட்ரஜனை நிரப்பிக் கொடுத்து விடுகிறார்கள், ‘பெரிதாக அப்படி என்ன நடந்து விடப் போகிறது’ என்கிற அலட்சியத்துடன். அலட்சியங்களே பெரும் விபத்துகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் காரணமாகின்றன.
**


1 செப்டம்பர் 2015, அதீதமாய்க் கொஞ்சம் (3)
***

24 comments:

 1. மிக வருத்தமாக இருக்கிறது. குழந்தைகள் உயிருடன் விளையாடும் இந்தப் பழக்கம் இல்லாமலே போகட்டும்.

  விவரங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 2. படிக்கும் பொழுதே மனம் பதறுகின்றது. மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பலூன் கட்டாமலே பிறந்தநாள் கொண்டாடினால் நல்லது என்பதாகவே தோன்றுகிறது.
  அதே போல் நீர்நிலை தொட்டிகளுக்கு (வாசலில் இருக்கும்) பூட்டு போடும் வகையிலான மூடி போட்டு பூட்டி வைத்தல் அவசியமான ஒன்று. சில பெற்றோர்கள் மூன்று சக்கர சைக்கிளிலேயே சின்ன குழந்தைகளை வீட்டிற்கு வெளியே அனுப்பி விடுகின்றனர். அதெல்லாம் பார்க்கும் பொழுதே பயமாகத்தான் இருக்கும்.
  விழிப்புணர்வூட்டும் பதிவுங்க ராமல்க்ஷ்மி.

  ReplyDelete
  Replies
  1. ஆம், கவனக் குறைவால் நீர்நிலைத் தொட்டிகளில் நேரும் விபத்துகளும் அதிகமாக உள்ளன.

   கருத்துக்கு நன்றி.

   Delete
 3. அலங்கார பலூன்களின் விபரீதம் அறிந்து அதிர்ச்சியாக உள்ளது. குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்துமே கவனிக்கப்படவேண்டியவை.. நல்லதொரு எச்சரிக்கைப் பதிவு. நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி கீதா.

   Delete
 4. நல்ல எச்சரிக்கைகள். ஆபத்தான விஷயங்களை முற்றிலும் தவிர்த்து விட்டே இது போன்ற விழாக்களை நடத்தலாம்.

  ReplyDelete
  Replies
  1. தவிர்ப்பதே சிறந்தது. கருத்துக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. நானும் செய்தியில் படித்தேன் ஆனால் அதை ஒரு விழிப்புணர்வுப் பதிவாக எழுதிய உங்களுக்கு பாராட்டுகள்

  ReplyDelete
 6. எப்படியும் அந்த அந்த சீஸனில்
  உயிரைக் காவு வாங்க்கி விடுகிறது
  இந்த மாஞ்சா கயிறு
  விழிப்புணவு கூட்டிப் போகும் பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. அடக் கடவுளே.. அந்தப் பிள்ளைகள் பாவம். ஹ்ம்ம்.

  நல்ல விழிப்புணர்வுப் பதிவு ., அவசியமானதும் கூட ராமலெக்ஷ்மி..

  ReplyDelete
 8. பலூன்களுக்குள் நிரப்புகிற காற்றில் கூட மோசடியா
  அதிர்ச்சியாக இருக்கிறது சகோதரியாரே
  நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 9. அட, இப்படியெல்லாமா ஏமாத்துவாங்க? அதுவும் குழந்தைங்க உயிரோட விளையாடலாமா?
  பெற்றோர்களுக்கு சரியான அறிவுரை சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete
 10. எச்சரிக்கை மணியோசை. ஒலித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 11. அருமையான தகவல்

  ReplyDelete
 12. ஏன் இந்த விபரீத ஆசையோ! பணம் சேர்க்க வேண்டியது தான்,, இப்படியா! ஆனால் உயிர்களின் மேல் அலட்சியம் கண்டிக்கதக்கது. இந்த மாதிரி விழா எடுக்கும் பெற்றோர்கள் கவனமாய் இருப்பது நல்லது.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin