Thursday, August 2, 2018

ஓடு மீன் ஓட.. குள நாரை.. - பறவை பார்ப்போம் (பாகம் 27)

#1
ஆங்கிலப் பெயர்: Indian pond heron

அளவில் சிறியதொரு கொக்கு இனம். கழுத்து குறுகிக் காணப்படும். குட்டையான வலிமையான அலகுகளைக் கொண்டிருக்கும்.

#2
உயிரியல் பெயர்: Ardeola grayii
வேறு பெயர்கள்:  குளத்துக் கொக்கு, குருட்டுக் கொக்கு, மடையான், 

இது பரவலாகக் காணப்படும் பறவைகளுள் ஒன்றாக இருப்பினும் இவற்றின் நிறத்தின் காரணமாக எளிதாகக் கண்ணுக்குப் புலப்படாது. இதனால் இது இருப்பது தெரியாமலே பிறர் அதன் மிக அருகில் செல்ல நேரும் சமயத்தில் சட்டென வெண் சிறகுகளை விரித்துப் பறந்து விடும். அருகே செல்லும் வரை அசையாதிருப்பதால் இதற்குக் கிட்டப் பார்வை பிரச்சனை என சிலர் கருதுகின்றனர். அதனாலேயே குருட்டுக் கொக்கு என்றும் அழைக்கப்படுகிறது.

#3
ஓடு மீன் ஓட..

தென் ஈரானில் இருந்து கிழக்கில் இந்தியா, பர்மா, வங்கதேசம், இலங்கை வரை வாழ்கிறது. இந்தியாவில் சர்வ சாதாரணமாகத் தென்படக் கூடியவை. பெரும்பாலும் தனியாகவே இரை தேடி உண்பவை. சில நேரங்களில், குறிப்பாக வறட்சிக் காலங்களில் ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையில் இவை இரை தேடித் திரிவதைக் காண முடியும். குளங்கள் வற்றிய காலங்களில் குப்பை மேடுகள், நீர்ப் பாய்ச்சப்பட்ட புல்வெளிகள் மற்றும் காய்ந்த புல் வெளிகளிலும் இரை தேடி உண்ணும்.

#4
உறுமீன் வருமளவுக் காத்திருந்து...

சதுப்பு நிலங்களில் இரை தேடி உண்ணக் கூடியவை. குளக் கரைகளில் மட்டுமின்றி மிதக்கும் தாவரங்கள், பதுமராகச் செடிகள் மேல் அமர்ந்து குளத்தின் உட்பகுதிகளுக்குச் சென்று மீன்களைப் பிடித்து உண்ணும்.

#5
“லபக்!”

எப்போதாவது நீந்திச் சென்றும் இரை தேடும். நீரிலிருந்து துள்ளிக் குதிக்கும் மீன்களையும் பறந்து சென்று கவ்விக் கொள்வதைக் காண முடியும். சில நேரம் நீருக்கு சற்று மேலாகத் தாழப் பறந்து தவளைகளையும், மீன்களையும் கரையை நோக்கிக் கொண்டு சென்று பின்னர் கரையோரம் அமர்ந்து வேட்டையாடும். குப்பை மேடு போன்ற இடங்களில் கிடைக்கிற ரொட்டித் துண்டு போன்ற தீனிகளை நீருக்கு மேலாகத் தூவி சமயோசிதமாக மீன்களை வெளிவரச் செய்வதையும் கண்டுள்ளனர்.

இவற்றின் பிரதான உணவு நண்டு, ஓடுகளைக் கொண்ட நத்தை வகைகள், நீர்ப் பூச்சிகள், மீன்கள், தவளைக் குஞ்சுகள் போன்றவை. சில நேரங்களில் அட்டைகளையும் பிடித்து உண்ணும். சதுப்பு நிலங்களைத் தாண்டி, நிலத்தில் இவற்றுக்கு உணவு தும்பிகளும் சில்வண்டுகளும், தேனிக்களும் மற்றும் சிறு நிலநீர் வாழ் உயிரினங்களும்.

பொதுவாக அமைதியாகக் காணப்படுமென்றாலும் ஆபத்தை உணரும் போது பெரிதாக அலறும். நிறத்தால் நிலத்தில் தம்மை மறைத்துக் கொள்ள முடிந்தாலும், பறக்கும் போது இவற்றின் வெண்ணிறச் சிறகுகள் பளீர் எனக் கவனத்தை ஈர்ப்பவையாக இருக்கும்.

#6
வெண் சிறகுகள்..
இனப்பெருக்கக் காலத்தில் இவற்றின் கால்கள் சிகப்பு நிறத்தில் இருக்குமெனத் தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இவ்வாறாகக் கால்களின் நிறம் மாறுவது சாதாரணமாக நடைபெறக் கூடிய ஒன்றென சிலரும், இல்லை, சிகப்புக் கால்களுடன் காண்படுபவை வேறு வகையைச் சேர்ந்த குளக் கொக்குகள் என ஒரு சிலரும் கூறுகின்றனர்.

இலங்கையில் சிங்களத்தில் ‘kana koka’, பாதிக் குருடு எனும் அர்த்தத்தில் அறியப்படுகிறது. மராத்தியில் ‘bagla bhagat’, ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் எனும் அர்த்தத்தில் அழைக்கப்படுகிறது. ஆடாமல் அசையாமல் தியானத்தில் இருக்கும் துறவி போல் நின்று, நேரம் வரும் போது இரைகளைப் பாய்ந்து பிடிப்பதைக் கிண்டல் செய்யும் விதமாக இப்படி அழைக்கப்படுகிறது. நமது பஞ்சதந்திரக் கதைகளை ஒத்த, நாராயண பண்டிட் சமஸ்கிருதத்தில் எழுதிய Hitopadesha சிறுகதையொன்றில் இந்தக் குளக் கொக்கு  தான் காயமுற்று மன்னனைக் காப்பாற்றும் ஒரு கதாபாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது.
*
தகவல்கள்: விக்கிப்பீடியா ஆங்கிலத் தளத்திலிருந்து தமிழாக்கம் செய்தவை.

படங்கள்: இலங்கை விகரமகாதேவிப் பூங்காவில் படமாக்கியவை.

**


16 comments:

 1. நம்மை யாரும் அவ்வளவு எளிதாகக் என்று நம்பிக்கையுடன் அவர்கள் அருகில் வரும்வரை பார்த்திருக்கிறதோ என்னவோ அந்த குள நாரை!!

  ReplyDelete
 2. //ரொட்டித்துண்டுகளை நீருக்கு மேலாகத் தூவி//

  பயங்கர விவரம்தான்!

  ReplyDelete
 3. பொறுமையாகக் காத்திருந்து படம் பிடித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. படங்கள் அருமை. விவரங்கள் ரொம்ப சுவாரஸ்யம்.

  ReplyDelete
 4. குள நாரை தகவல்கள் வியக்கவும் வைக்கிறது...

  ReplyDelete
 5. ஒரு ஆர்னிதாலஜிஸ்ட் ........!

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் ஒரு ஆர்வம்தான். நன்றி GMB sir.

   Delete
 6. இங்கு அய்யனார் கோயில் புளியமரத்தில் இருக்கிறது.
  கீழே சிலசமயம் இறங்கி நிற்கும் .

  அழகர் கோவில் போகும் வழியில் அப்பன்திருப்பதி கோயில் வாசலில் உள்ள புளியமரத்தில் கூட்டுக்குள் இருக்கும் இந்த பறவையை படம் எடுத்து போட்டு இருக்கிறேன்.

  நிறைய தகவல் குள நாரைப்பற்றி நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இதன் கூடுகளைக் காணும் வாய்ப்பு கிட்டவில்லை. நீங்கள் எடுத்துப் பகிரும் பறவைப் படங்களைத் தொடர்ந்து இரசித்து வருகிறேன். நன்றி கோமதிம்மா.

   Delete
 7. வாவ்.... அழகான படங்கள். தகவல்களும் சிறப்பு.

  ReplyDelete
 8. நல்ல தகவல்களும் படங்களும்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin