ஞாயிறு, 2 டிசம்பர், 2012

அடைக்கோழி - தினமணி கதிர் சிறுகதை


த்தமில்லாமல் அறைக்குள் நுழைந்த கருப்பி மூலையில் போய் அமர்ந்து கொண்டு சன்னமாகக் குரல் எழுப்பினாள்.

தெரிந்து விட்டது சரசுக்கு. தலைமுடியை உதறிக் கொண்டையாக முடிந்தபடியே எழுந்தவள் வீதிக்கு வந்தாள். “சீனு ராசா ஓடியாப்பா” உரத்தக் குரலில் அழைத்தாள். “கருப்பி வந்துட்டாளா பாட்டி? டேய் வாங்கடா” சீனு நண்பர்களையும் அழைக்க, கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் “ஹோ” எனப் பெருங்கூச்சலுடன் மட்டையும் கையுமாக ஓடி வந்தார்கள்.

சரசு சிரித்துக் கொண்டே திண்ணையில் மடித்துக் கிடந்த சாக்கினை எடுத்து வீட்டுக் கூடத்தின் கிழக்கு மூலையில் விரித்தாள். சின்ன வாளியில் தயாராக வைத்திருந்த மணலை எடுத்து வந்தான் சீனு. சாக்கின் மேலே மணலைக் கொட்டிப் பரப்பினாள் சரசு. மேலே வைக்கோலை பிரித்துப்போட்டு மெத்தையாக்கினாள். குடுகுடுவெனப் புழக்கடைப்பக்கம் சென்று திரும்பியவள் கையில் இருந்த சின்னப் அட்டைப் பெட்டியில் பழுப்பு நிற முட்டைகள்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த பேத்தியை ‘வா மல்லி. வெளக்கு வக்கிற நேரம். மொத முட்டைய வந்து வை தாயீ’ என்றாள். சற்று முன்னரே எந்த சேனல் பார்ப்பது என்பதில் பாட்டியோடு சண்டை பிடித்திருந்தவள் “ஒஞ் செல்லப்பேரனையே வைக்கச் சொல்லு” என முகத்தை வெட்டிக் கொண்டாள். ‘அப்படியே அம்மையக் கொண்டிருக்கு’ முணுமுணுத்த சரசு, சீனு கையில் முட்டையைக் கொடுத்தாள். சந்தோஷமாய் கவனமாய் வைத்தான்.

“பாட்டி நானு நானு” அடுத்து ஒவ்வொருவராய் கை நீட்ட ‘சாக்கிரத சாக்கிரத’ எனச் சொல்லிச் சொல்லிக் கொடுத்தாள் சரசு. சீனுவின் முதல் முட்டையைச் சுற்றிச் சிரத்தையுடன் மற்றதை நண்பர் பட்டாளம் அடுக்கக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் சரசு. கருப்பி ஏறி அமரவும் கூடையைப் போட்டு மூடினாள். மீண்டும் அதே கூச்சலுடன் வாண்டுகள் விளையாடப் பறந்தார்கள்.

“அச்சோ. இங்கப் பாரும்மா” காதுகளைப் பொத்திக் கொண்டு அலறினாள் மல்லி. சமையலறையில் இருந்த மருமகள் ‘சக்’ என நெற்றியில் அடித்துக் கொள்ளும் சத்தமும் கேட்கவே செய்தது. அதையெல்லாம் பொருட்படுத்தும் ஆளா சரசு?

யது எழுபதை நெருங்கிக் கொண்டிருந்தது. நாற்பது வருடங்களுக்கு முன் ஊரின் புறநகர் பகுதியை வீடு இல்லாதவருக்குப் பட்டா போட்டுக் கொடுக்க அரசு தீர்மானித்தபோது பொட்டல் வெளியைக் காட்டி அவரவருக்குப் பிடித்த இடத்தில் முதலில் குடிசை போட்டு உட்காரச் சொன்னார்கள். அடித்துப் பிடித்து ஓடிவந்து சரசு இடம்பிடித்த போது மகன் காசி கைக்குழந்தை.

நிலம் தங்களுக்கானதும் சின்ன கூடம், சமையற்கட்டு, ஒரு படுக்கையறை எனப் பார்த்து பார்த்துக் கட்டிய வீடு. திண்ணையும் முற்றமும் பின்னால் தோட்டமுமாக அவளைப் பொறுத்தவரை அது அரண்மனை. நாற்பது வருடங்களாக நன்றிக்கடன் என்ற பெயரில் வேட்பாளர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் பார்க்காமல் வீடு கொடுத்த கட்சிக்கே ஓட்டுப் போட்டு வந்தாள். “யார் கையிலும் என்னய அல்லாட விடலேல்லா” என மறைந்த கணவனை மட்டுமில்லாமல் கருணை காட்டிய கட்சியையும் அடிக்கடி புகழுவாள் சரசு.

வீட்டுப் பத்திரம் அவள் பெயரில் இருந்ததே தள்ளாத வயதில் தளராமல் அவளை நடமாட வைத்துக் கொண்டிருந்தது. மருமகளுக்கோ வீட்டை அடமானம் வைத்து மேலே மாடி கட்ட ஆசை. எப்படிப் பேசிப் பார்த்தும் சரசுவிடம் பாச்சா பலிக்காத கோபத்தில் அடிக்கடி முறுக்கிக் கொள்வாள். முறுக்கிக் கொண்டு எங்கே போகமுடியுமென நினைக்க நினைக்கச் சிரிப்புச் சிரிப்பாய் வரும் சரசுவுக்கு. இப்போது அந்த இடம் புறநகர் இல்லை. வீட்டின் மதிப்பும் சில இலட்சங்கள்.

கட்டிட வேலைக்குப் போய்க் கொண்டிருந்தான் மகன் காசி. அத்தனை சூட்டிப்பு கிடையாது. வாரத்தில் பாதிநாள் வேலைக்குப் போனால் பாதிநாள் காண்ட்ராக்டர் கூப்பிடவில்லை எனக் குப்புறப்படுத்துத் தூங்குவான். நல்லவேளையாக மருமகள் கெட்டிக்காரியாய் இருந்தாள். நாலு வீட்டில் சமையல் செய்து சம்பாதித்தாள். இவள் கைச்செலவுக்கென ஐநூறு ரூபாயை ‘டாண்’ என ஒன்றாம் தேதி கொடுப்பதற்கு மேல் ஒற்றைப் பைசாவைக் கண்ணிலே காட்ட மாட்டாள். மற்றபடி ஆக்கிப் போடுவதில் வஞ்சனை வைக்காத நல்ல மனசிலேயே நெஞ்சு குளிர்ந்து விடும் சரசுவுக்கு. ‘மேலே நமக்கென்ன வேணும்’ என்றிருப்பாள்.

சீவல் போடும் பழக்கம் உண்டு. அவ்வப்போது சோடா வாங்குவது, தலைவலி காய்ச்சலுக்கு மருந்துக்கடைக்காரர் பார்த்துக் கொடுக்கிற மாத்திரை. இத்துடன் முடிந்து விடும் தேவைகள். இரத்த அழுத்தக் குறைவினால் அவ்வப்போது அசத்தித் தள்ளுகிறது சமீபமாக. அப்போது நேராக பக்கத்து ஆஸ்பத்திரியில் போய்ப் படுத்து “ரெண்டு பாட்டில் க்ளுகோஸ் ஏத்துங்க” என டாக்டரைக் கேட்டுக் கொள்வாள். டாக்டரும் மனோரீதியாக அதுதான் அவளுக்கான மருத்துவம் என்பதைப் புரிந்து வைத்திருந்தார்.

இந்த மாதிரியான மேற்படிச் செலவுகளை மகன் எப்படியும் புரட்டி விடுவான். பொங்கல் தீபாவளிக்குப் புதுத்துணி கண்டிப்பாக வேண்டும். குறை சொல்ல விடாமல் மகனும் மருமகளும் தனக்குச் செய்வதே அந்த வீடு கையில் இருப்பதாலும், தபால் நிலையத்தில் தான் சேர்த்து வரும் தொகைக்காகவும்தான் என்பதில் உறுதியான நம்பிக்கை சரசுக்கு. சும்மாவே இருந்தால் கையும் காலும் சோர்ந்து கிடப்பில் தள்ளிவிடும் என்பதற்காக மட்டுமா கோழி வளர்க்கிறாள்? தன் காலில் தான் நிற்கும் வரை அதற்கான மதிப்பே தனி என்பதற்காகவும்தான். செழிப்பாகவே இலாபம் பார்த்தாள் அதிலே.

ருப்பிக்கு வயது நான்காகிறது. ‘வளக்குற குஞ்சுல எதையாச்சும் வாரிசாக்கிட்டு கருப்பிய வெலைக்கிக் கொடேன்’ எனத் திரும்பத் திரும்பக் கேட்ட கருத்தம்மா ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து இரண்டாயிரத்தில் வந்த நின்ற நாளில் கோபமாகி அந்தப் பக்கமே தலை காட்டக் கூடாதென விரட்டி விட்டிருக்கிறாள்.

முட்டை போடும் ஒவ்வொரு பருவத்திலும் இப்படிதான் செல்லமாக முனகியபடி வாசலில் வந்து நிற்பாள் கருப்பி. பரிசோதித்து ‘இரு இரு. இன்னும் ஒரு மணியாகும்டி’ தேர்ந்த மருத்துவச்சியாகவும் வாஞ்சையான தாயாகவும் தலையைத் தடவிச் சாக்கை விரித்துக் கூடையைப் போட்டு இவள் மூடுகையில் ‘உக்கும். என்னமோ பிரசவத்துக்கு பெத்தமவ வந்தாப்ல அடுத்த இருவது நாளுக்கு ஒரே கொஞ்சலு கொலாவலுதான்’ மருமகள் நொடித்துக் கொள்வாள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முட்டையாக இடயிட இருபதையும் எடுத்து எங்கேதான் அவள் ஒளித்து வைப்பாள் என்பது இதுவரை வீட்டிலிருப்பவருக்குக் கண்டுபிடிக்க முடிந்ததில்லை.

கோழிகள் முதன்முறை போடும் முட்டைகள் குஞ்சு தரிக்க உதவாது. விலைக்கும் கொடுப்பாள். பேரனுக்கும் பேத்திக்கும் பிடித்த முட்டைத் தோசையும், முட்டைக் குழம்புமாக வீடும் அமர்க்களப்படும். ஆனால் ஒருநாளும் வீட்டுக் குஞ்சையோ கோழியையோ சமையலுக்கு எடுத்ததே இல்லை. “நம்ம எடத்துல ஜனிச்சதுகளை நம்ம கையாலயே சாவடிக்கறதா” என்பாள். கோழிக் குழம்பு என்றால் மகன் டவுண் பக்கமிருந்துதான் வாங்கி வருவான். அக்கம்பக்கத்தில் வளர்ப்பவர்கள் போட்டிக்காரர்களாகி விட்டதால் போய் நிற்பதில்லை. “எல்லாப் பயபுள்ளகளுக்கும் வயித்தெரிச்சல். அதுங்கக்கிட்டக் கோழி வாங்கித் தின்னா செரிக்குமா நமக்கு” என்பாள்.

பொறாமை இருந்ததோ இல்லையோ, சரசுவின் பராமரிப்புக்கும் ராசிக்கும் வாங்கிச் செல்லுகிற குஞ்சுகளும் கோழிகளும் போகிற இடத்தில் சிறப்பாய் வம்சம் வளர்க்கிறதென ஊரே பேசிக் கொண்டது நிஜம். வெளியூரிலிருந்தெல்லாம் வாங்க வந்தார்கள். வளர்ந்த குஞ்சுகளை எழுபத்தைந்து ரூபாயும் முழுக் கோழிகளை நூற்றைம்பதும் கொடுத்துப் பேரம் பேசாமல் வாங்கிச் செல்வார்கள். ஆடி வெள்ளிகளில் ஜம்மென இவள் வளர்த்து வைக்கும் சேவல்களை ஆயிரம் வரை கொடுத்து வாங்கிச் செல்பவர் உண்டு.

என்னதான் காசு விஷயத்தில் கறாராய் இருந்தாலும் அக்கம்பக்கத்தில் தெரிந்தவர் வீட்டுச் சிறுமிகள் வயதுக்கு வந்து விட்டால் ஆசிர்வதித்து முதல் பத்து நாளுக்கு இலவசமாக முட்டைகளைக் கொடுப்பாள் அந்தப் புண்ணியம் பேத்தியைக் காக்குமென்று.

கோழித் தீனிக்கு ஆகிற செலவெல்லாம் சரசுவே பார்த்துக் கொள்வாள். கடலைப் புண்ணாக்கு, எள்ளுப் புண்ணாக்கு, அரிசி கோதுமைக் குருணை எல்லாம் எந்த விகிதத்தில் கலக்க வேண்டுமென இவளிடம் ஆலோசனை கேட்க வருபவர் யாராய் இருந்தாலும் அக்கறையாய் வகுப்பெடுப்பாள்.  எங்கேனும் மேய்ந்து வயிற்றைக் கெடுத்துக் கொண்ட விட்ட கோழிகளுக்குப் பச்சைப்பூண்டை உரித்துப் பக்குவமாய் வாயில் ஊட்டிவிட்டேக் குணப்படுத்தி விடுவாள். இந்த வழக்கங்களையும் அவளது வகுப்புகளையும் ஆவலாகக் கவனிப்பதோடு பாட்டிக்கு முடிந்தவரை உதவியாக இருப்பான் சீனு.

ந்த முறை இருபதில் பதினெட்டு நல்ல படியாக வெளிவந்ததில் உற்சாகமாக இருந்தாள். குஞ்சு பொரிந்ததும் அடைகோழி உடம்பிலிருந்து வெளியாகும் பூச்சிகள் மருமகளின் எரிச்சலை அதிகமாகும். ஆரம்பித்து விட்டாள் அன்றும், “இதுக்குதேன் நாங்க பாட்டுக்கு மாடியக் கட்டி ஒங்க வம்புக்கே வராம இருந்துக்கிடுறோம்ங்கிறேன்” என்று.

பதிலேதும் பேசாமல் தான் சீராகக் கொண்டு வந்த பெரிய பித்தளை அண்டாவில் நீர் நிரப்பி அதில் வசம்புப் பொடியைக் கரைத்தாள் சரசு. நான்கைந்து முறை கருப்பியை அதில் அமிழ்த்தி அமிழ்த்தி எடுத்து விட அது கொக்கரித்துக் கொண்டே தோட்டத்துக்கு ஓடியது தன்னை உலர்த்திக் கொள்ள. பின் சோடா கலந்த நீரால் வீடெல்லாம் துடைத்தும் விட்டாள். மருமகள் புலம்பலில் நியாயம் இருக்கையில் அமைதியாகி விடுவாள். குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் அக்கறை உண்டென்பதைச் செய்கையால் காட்டுவாள்.

பார்த்துப் பார்த்து சுத்தம் செய்து விட்டுத் திண்ணைப்பக்கம் வந்தவளுக்குத் திடுமெனத் தலை சுற்றியது. சுதாகரித்து திண்ணையில் அமர்ந்தவள் அப்படியே சரிந்தாள்.

ண் விழித்தபோது மருத்துவமனையில் இருப்பது புரிந்தது. காசி பக்கத்தில் வந்து பார்த்தான். ‘போன வாரம் லேசா ஒருக்க தல சுத்தினப்பவே வந்து குளுகோஸ் ஏத்தியிருந்தம்னா இப்படி நெனப்புத் தப்பி விழுந்திருக்க மாட்டேன்லா’ என்றாள். அவள் பேசியது அவளுக்கே கேட்கவில்லை. அத்தனை பலகீனமாக இருந்தது குரல்.

‘உனக்கு டெங்கு காச்சலாம். இத வழக்கமான தல சுத்து இல்ல’ என்பதை அப்போது சொல்ல வேண்டாமென முடிவெடுத்தான் காசி. நான்காம் நாள் அவளிடம் விஷயத்தைச் சொன்னபோதே புலம்ப ஆரம்பித்து விட்டாள் ”ஒங்க ஒருத்தருக்கும் அக்கற கெடயாது. சீனுட்ட சொல்லுடா கோழிகளுக்கு தண்ணி கேப்ப வைக்கச் சொல்லி. கரீக்டா செஞ்சுருவான்” என.

“சும்மா அத இத நெனச்சு அலட்டிக்காதம்மா. அதெல்லாம் ஒழுங்கா நடக்குது” என்றான் காசி. காலை மாலை தவறாமல் வந்தான். ‘மத்த யாரும் ஒரு எட்டு வந்து பாக்கலியே’ எனும் நினைப்பு ஓட அதைக் காட்டிக் கொள்ளக் கெளரவம் தடுத்தது. ‘சீனுவையாவது ஒரு தடவக் கண்ணுல காட்டலாமில்ல’ என்றாள். “அவனுக்குப் பரிச்ச நடக்கு” என்றான் காசி எங்கோ பார்த்தபடி.

பக்கத்து படுக்கை மூதாட்டியைப் பார்க்க நண்டும் சிண்டுமாய் பிள்ளைகளும், இரண்டு மருமகள்களும் மாறிமாறி வந்து போய் இருக்க நெஞ்சுக்குள் ஏதோ உருண்டது. ‘எம் முந்தானயப் புடிச்சுக்கிட்டு அலஞ்ச மல்லியுமில்லா இப்படி மாறிப்போனா? மாடா ஒழச்சு ஓடாத் தேய்ஞ்சு அடைக்கோழியா சேத்து வக்கறது அவ பெத்துப் போட்ட பொட்டைப் புள்ளய கரையேத்ததாங்கறது அம்மக்காரிக்கேப் புரியல. சின்னப் புள்ளைய தப்பா நெனச்சு என்னத்துக்கு’ கண்களில் பெருகிய நீர் பக்கவாட்டில் வழிந்து தலையணையை நனைக்க துடைக்கத் தோன்றாமல் கிடந்தாள்.

‘கோட்டிக்காரிக்கு எப்பவும் வீட்ட அடமானம் வக்குற நெனப்புதான். மச்சு வீடு கட்ட புருசன் வக்கணையா சம்பாதிச்சா பரவாயில்ல. உள்ள வச்சுட்டு மீக்க முடியாமப் போனா தெருவுலல்லா நிக்கணும்?’ சிந்தனைகள் ஓட விட்டத்தையே வெறித்துக் கொண்டிருந்தவள் எப்போது தூங்கினாளோ தெரியாது.

காலையில் “டிஸ்சார்ஜ் ஆயிரலாம்னு டாக்டர் சொல்லிட்டாரு” என்றான் காசி. அவளுக்கும் இரண்டு நாட்களாகவே வீட்டுக்குப் போய் விட்டால் தேவலாமென்றே இருந்தது. தனிமையை விட தன்னால் எத்தனை செலவு என்பதே அதிகம் வாட்டியது. இரண்டு பாட்டில் செலன் ஏற்றிக் கொள்ள வந்து படுக்கும் போதெல்லாம் ‘செய்யட்டுமே’ என நினைப்பவளால் இந்த முறை அப்படி எண்ண முடியவில்லை.

‘அப்படி இப்படின்னு பத்து நாளாயிடுச்சே. அந்த டெஸ்டு இந்த டெஸ்டு மருந்து மாத்திரைன்னு என்னா செலவு. கொஞ்சம் தெம்பாகட்டும் ஒடம்பு. போஸ்ட் ஆபிசு போய் அஞ்சாயிரமாவது எடுத்துக் குடுத்துரணும், பாவம் எப்பிடிப் பொரட்டுனானோ? இல்ல மருமவதான் மனசு வந்து இருக்குற பொட்டுப் பொடிசு எதையாச்சும் சேட்டுக் கடயில வச்சிட்டாளோ?’ வெளிப்படையாகக் கேட்கவும் விருப்பமில்லை.

ஆட்டோவில் போகையில் ‘உம்’ என உட்கார்ந்திருந்த மகனிடம் ஏதாவது பேச்சுக் கொடுக்க எண்ணி “ஸ்கூலுக்குப் போயாச்சா பசங்க?” என்றாள். “ம். ஆக்கி வச்சுட்டுதான் போனா ஒம் மருமவளும்” கேட்காத கேள்விக்கு சேர்த்தே பதில் சொன்னவன் “சும்மா வாம்மா. ஆட்டோ வேற தூக்கித் தூக்கிப் போடுது. ஏன் செரமப் படுதே? பொறவு பேசிக்கலாம்” என்று அடக்கவும் அமைதியாகிப் போனாள்.

தெருமுனையில் வேகம் குறைந்து ஆட்டோ திரும்புகையில் எதிர்பட்ட கருத்தம்மா இவளைப் பார்த்து மிரட்சியுடன் புன்னகைத்தது விநோதமாய்ப் பட்டது.

கைபிடித்து இறக்கி விட்ட காசி, மீட்டருக்கு மேல் கொஞ்சம் போட்டுக் கொடுக்கச் சொன்ன டிரைவரிடம் தன் இயல்புக்கு மாறாகக் குரலை உயர்த்தி வாதாடத் தொடங்கினான். உள்ளே போகும்படியும் சாமான்களைத் தான் எடுத்து வருவதாயும் இவளிடம் சாடையில் சொன்னான்.

மெல்ல நடந்து வீட்டுப் படலைத் திறந்ததுமே வித்தியாசத்தை உணர்ந்து விட்டாள் சரசு. முற்றம் அப்படியொருத் துப்புரவாக இருந்தது.
***


2 டிசம்பர் 2012, இன்றைய இதழின்
பக்கங்கள் 12,13,14,15-ல் 
நன்றி தினமணி கதிர்!
*** 

54 கருத்துகள்:

  1. படிக்க ஆரம்பித்த முதல் 4, 5 வரிகளில் என்னவென்று யோசிக்க வைத்து அப்புறம் கதைக்குள் நுழைந்து ஒன்றிப் படிக்க முடிந்தது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி ஸ்ரீராம். கவனக் குறைவால் பதில் அளிக்காமல் விட்டதற்கு வருந்துகிறேன்.

      நீக்கு
  2. வாழ்த்துக்கள், கதை மனதை தொட்டது.அருமை.

    பதிலளிநீக்கு
  3. அருமையான எழுத்துநடை மிகவும் ரசித்துப்படித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான கதை! அழகான முடிவு! கனக்கவைத்த கதை!

    பதிலளிநீக்கு
  5. காலையில் தினமணியிலேயே படித்து விட்டேன். கருப்பி மனதில் நிறைந்து நிற்கிறாள்.... நெகிழ வைத்த கதை.

    த.ம. 4

    பதிலளிநீக்கு
  6. கோழி வளர்ப்பதில் இத்தனை நெளிவு சுழிவுகளா!! கோழி வளர்க்க இதைப் படித்தால் போதும்!!

    டெங்கு பயம் படுத்தும் பாடு, மருமகளையும் குற்றம் சொல்ல வழியில்ல்லை. ஆனால், ஒருமுறைகூட மருத்துவமனை போய் பார்க்காதது தப்புதான்.

    சரசுவிடம் சொல்லுங்க, கருப்பி போனால் என்ன, இன்னொரு சிகப்பி கிடைப்பாள். கொஞ்சம் உடம்பு தேறியதும் ஆரம்பித்துவிடலாம்!!

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு கதை. கடைசியில் மனதை கனக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  8. சரசுவுடன் கருப்பியை வளர்த்த மாதிரியே இருந்தது படித்து முடித்து, கண்ணைத் துடைக்கும் வரை!

    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் அக்கா.நீரோட்டம்போல ஆர்வத்தோடு வாசித்து முடித்தேன்.கருப்பி அழகு !

    பதிலளிநீக்கு
  10. இப்படியெல்லாம் கோழியைக் கவனிப்பார்கள் என்றே தெரியாது. பாவம் பாட்டி.
    கருப்பி யார் வீட்டுக்குப் போனாளோ.
    எத்தனை விவரம் ராமலக்ஷ்மி!!

    ஒரு அன்பு வடிவம் சரசு.பழமைக்கும் புதுமைக்கும் நடக்கும் கலிகாலம்.
    மனசைத் திருடிவிட்டாள் கருப்பி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருப்பி யார் வீட்டுக்குப் போனாளோ என்ற கேள்விக்குக் கதையிலேயே பதில் இருக்கிறது.

      "தெருமுனையில் வேகம் குறைந்து ஆட்டோ திரும்புகையில் எதிர்பட்ட கருத்தம்மா இவளைப் பார்த்து மிரட்சியுடன் புன்னகைத்தது வினோதமாய்ப் பட்டது."

      நீக்கு
    2. சரியாக இழையைப் பிடித்துக் கணித்து விட்டீர்கள் :). அதுசரி, இத்தனை நாட்களுக்குப் பின் இந்தக் கதை எப்படி வாசிக்கக் கிடைத்தது. வேறேதும் தளத்திலில் இணைப்பு கிடைத்து வந்தீர்களா?

      நீக்கு
    3. இப்பொழுதுதான் உங்கள் பதிலையும் கேள்வியையும் பார்த்தேன். காலதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். என் மொழிபெயர்ப்பு பணியின் நிமித்தம் "கருப்பு" என்ற வார்த்தையை இணையத்தில் தேட நேரிட்டபோது, இந்த அருமையான கதை கண்ணில் பட்டது. நன்றி!

      நீக்கு
    4. இத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் உங்கள் தளத்துக்கு வர நேர்ந்தது. இப்போதுதான் உங்கள் ஊர் திருநெல்வேலி, நீங்கள் படித்தது இக்னேஷியஸ் கான்வென்ட் பள்ளி, சாரா டக்கர் கல்லூரி என்பதைப் பார்த்தேன். என் இரண்டு சகோதரிகள் நீங்கள் படித்த பள்ளியில் படித்தார்கள், என் அம்மா நீங்கள் படித்த கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்கள், என் அக்கா இப்போது அந்தக் கல்லூரியில் பணியாற்றிவருகிறார்கள்.

      வாழ்த்துக்கள்!

      நீக்கு
    5. மிக்க மகிழ்ச்சி. தங்கள் அம்மாவின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?

      நீக்கு
    6. ஓரளவு கணித்திருந்தேன்:). உறுதிப் படுத்தியதற்கு நன்றி. உங்களது இரு சகோதரிகள் எனது இரு சகோதரிகளுக்கு வகுப்புத் தோழிகள்.

      மாணவியருக்குத் தாயுமானவராய் இருந்த தங்கள் தாயைப் பற்றி 2010_ல் நான் எழுதிய பதிவு ஒன்று (கடைசி 3 பத்திகள்) தங்கள் கவனத்திற்கு இங்கே:
      https://tamilamudam.blogspot.com/2010/09/blog-post.html

      நீக்கு
    7. உங்கள் பள்ளியையும் என் தாயையும் பற்றி நீங்கள் எழுதிய பதிவை வாசித்தேன். தமிழில் நன்றி என்ற வார்த்தை அருமையானது, ஆனால் வாழ்க்கையில் ஒருசில சந்தர்ப்பங்களில் நம் உணர்வை வெளிப்படுத்த இந்த அருமையான வார்த்தைகூட போதுமானதல்ல என்ற உணர்கிறேன்.

      உங்கள் பள்ளியைப் பற்றி நீங்கள் எழுதியுள்ளவற்றை வாசிக்கையிலேயே கண்களில் கண்ணீர் வந்துவிடுமோ என்ற உணர்வு. எத்தனை நினைவுகள்! எத்தனை உணர்வுகள்! என் அக்கா இருவரும் உங்கள் பள்ளி. நானும் என் தம்பிகளும் ரோஸ் மேரி. நான் எங்கள் பள்ளியில் first batch. எல்லாரும் ஒன்றாக பஸ்ஸில் வந்து பாளை பஸ் ஸ்டான்டில் இறங்குவோம். நானும் என் தம்பியும் உங்கள் பள்ளியின் பின்வாசலில் நுழைந்து பள்ளியினூடாகக் கடந்து முன்வாசல் வழியாக எங்கள் பள்ளிக்குச் செல்வோம். எங்கள் மூத்த அக்கா சுமதி வேகமாக அவளுடைய வகுப்பறைக்குச் சென்று நாங்கள் பள்ளிக்கு முன்னே இருக்கும் சாலையில் செல்கையில் ஜன்னல் வழியே கையசைத்து டாடா காட்டுவாள். திரும்பி வரும்போதும் உங்கள் பள்ளி வழியே வருவோம். அந்த நாட்களில் எங்கள் பள்ளி மிகவும் சிறியது, நாங்களும் மிகவும் சிறுவர்கள் என்பதால் அது யாருக்கும் அப்போது பெரிதாகத் தெரியவில்லை. கன்னியாஸ்திரீகளின் உணவரையிலிருந்து freshly baked delicaciesஇன் நறுமணம் இன்னும் நினைவு இருக்கிறது😉 French sister ரொம்ப கண்டிப்பு. சிறிது நாட்களுக்குப் பிறகு, பையன்கள் இந்தப் பள்ளிக்குள் வரக்கூடாது என்று கூறிவிட்டார்கள் 😊 அன்றிலிருந்து சுற்றுப்பாதை தான்.

      அம்மாவைப் பற்றிய உங்கள் பதிவு மனதை நெகிழச் செய்தது. நெஞ்சில் பரவசம். என் தாய் உங்களுக்குத் தாயுமானவர், உங்கள் ஆசிரியை எங்களுக்கு ஆசிரியையுமானவர். எங்களுக்கும் தமிழில் ஏற்பட்ட பற்றுக்கு அவரே காரணம். இப்பொழுது அம்மாவுக்கு வயது 85ஐத் தாண்டிவிட்டது. அதிக நேரம் ஓய்வுதான். ஓய்வு நேரம் தவிர மற்ற நேரங்களில் இன்னும் புத்தகங்கள் வாசித்துக்கொண்டே இருக்கிறார்கள். உங்கள் பதிவை அக்கா காஞ்சனாவுக்கு அனுப்பி அம்மாவுக்கு வாசித்துக்காட்டச் சொல்கிறேன். அடுத்த முறை ஊருக்குச் செல்லும்போது நேரம் அமைந்தால் வீட்டுக்குச் சென்று அம்மாவைச் சந்தியுங்கள்.

      நிறுத்த மனமில்லாமல்...

      நீக்கு

    8. /நிறுத்த மனமில்லாமல்../

      ஆம். நிறுத்தாமல் எழுத எவ்வளவோ உள்ளன :) !

      என் தம்பி ரோஸ்மேரியில் 3_வது batch. முதல் சில வருடங்கள் கான்வென்ட்டுக்கு நேர் எதிரில் அது இயங்கி வீடு நினைவில் உள்ளது. மதிய உணவுக்கு தம்பியை நான் எங்கள் பள்ளிக்கு அழைத்து வந்து சாப்பிட வைத்து மீண்டும் கொண்டு விடுவேன். /freshly baked delicacies_யின் நறுமணம்../ அதை அனுபவிப்பதற்காகவே லஞ்ச் ப்ரேக்கில் மாணவியர் அந்தப் பக்கம் உலாத்துவதுண்டு :)!

      தகவலுக்காக: காஞ்சனாவின் மகள் திருமணத்திற்கு தம்பி சென்றிருந்தான். உங்கள் அம்மாவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசியிருக்கிறான். அம்மா அக மகிழ்ந்து எங்கள் அனைவரைப் பற்றியும் விசாரித்ததாகச் சொன்னான். திருநெல்வேலி செல்லும் போது சந்திக்க முயன்றிடுகிறேன்.

      பத்து வருடங்களுக்கு முன் என் கதை மற்றும் கவிதைத் தொகுப்புகளைத் தம்பி மூலமாக அம்மாவுக்கு அனுப்பி வைத்திருந்தேன்.

      நன்றி.

      நீக்கு
    9. நன்றி

      /என் தம்பி ரோஸ்மேரியில் 3_வது batch.../

      உங்கள் தம்பியின் பெயர் லக்ஷ்மணனா?

      நீக்கு
  11. அருமை அருமை.. வயதானவர்களின் இயல்புகளை அசை போட வைத்த சிறுகதை. ரசித்தேன். வாழ்த்துகள். அற்புதமான நடை

    பதிலளிநீக்கு
  12. @Vasudevan Tirumurti,

    குழும மடலில் அளித்த கருத்துக்கும்
    நன்றி திவா சார்:)!

    பதிலளிநீக்கு
  13. @s suresh,

    கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  14. @ஹுஸைனம்மா,

    நெளிவு சுழிவுகள் எனக்கும் வியப்பே. ஆவலாகிப் பலரிடம் பேசித் தெரிந்து கொண்டேன்:)!

    /போய் பார்க்காதது/

    கோழிகளை விற்று விட்ட குற்ற உணர்வாய் இருக்கும்.

    நிச்சயம் சொல்லிடலாம் சரசுவிடம்:)! நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  15. @வல்லிசிம்ஹன்,

    விலைக்குக் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த கருத்தம்மா வீட்டுக்குதான் போயிருக்க வேண்டும் கருப்பி.

    கருத்துக்கு மிக்க நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  16. மிக நல்ல கதை.

    என்னுடைய வேலையை ஹுஸைனம்மா எளிதாக்கிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி.

    என்னுடைய பள்ளிப் பருவத்திற்கு அழைத்து சென்றுவிட்டீர்கள். எங்களுடைய தாத்தாவின் நினைவுதான் எனக்கு வருகிறது. 'பூச்சி' என்பதை 'பேன்' என்று சொல்லுவோம். அவ்வளவுதான் வேறுபாடு.

    பதிலளிநீக்கு
  17. மண்ணும் மனமும் மணக்கும் கதை
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  18. இயல்பான எழுத்து நடை ,சரசுவுடன் என்னையும் பயணிக்க வைத்தது. முற்றம் சுத்தமானது எனக்கும் வருத்தம்தான்....

    பதிலளிநீக்கு
  19. @"உழவன்" "Uzhavan",

    நன்றி உழவன். ஆம், ஹோம் வொர்க் நிறைய தேவைப்பட்டது:)!

    பதிலளிநீக்கு
  20. நெகிழ வைத்த கதை.
    நாமே வளர்த்து நாமே சாப்பிட கூடாது என்பதை படித்தவுடன் சரஸுவின் தாய் உள்ளம் தெரிந்தது.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  21. நிறைந்து நிற்கிறது கதை.

    கறுப்பி இல்லாத வீடு எங்கள் மனதையும் வெறிச்சென ஆக்கிவிட்டது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin