புதன், 26 டிசம்பர், 2012

பெங்களூர் சாகித்யோத்சவா - 'ஆகஸ்ட் 15' ஒரு அறிமுகம்


14 முதல் 23 டிசம்பர் வரையிலுமாக நடந்து முடிந்தது பெங்களூர் பேலஸ் கிரவுண்டில் 2012-ன் புத்தகக் கண்காட்சி.

வழக்கத்துக்கு மாறாக இந்த முறை முதல் மூன்று நாட்களும் “சாகித்யோத்சவ்” எனும் இலக்கிய விழாவாகக் கொண்டாடப்பட்டது.

கண்காட்சியின்  ஸ்டால் வரிசைகள் முடிகிற இடத்திலிருந்து நுழைகிற வகையில் பெரிய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. பன்மொழி எழுத்தாளர்கள் கலந்து கொண்ட சிறப்பித்த இந்நிகழ்வில் இலக்கிய உரைகள், உரையாடல்கள், கவியரங்கங்கள் நடைபெற்றன.  சாகித்ய அகாடமியின் தலைவர் டாக்டர் விஸ்வநாத் பிரசாத் திவாரி, மற்றும் ஞானபீட, சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் வரிசையில்  டாக்டர் சந்திர சேகர கம்பாரா, எம். டி. வாசுதேவன் நாயர், எம்.பி. வீரேந்திர குமார், டாக்டர் சீதா காந்த் மகாபத்ரா, டாக்டர் யு.ஆர் அனந்த மூர்த்தி, டாக்டர் சித்தலிங்கய்யா உட்பட சுமார் 60 எழுத்தாளர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து பங்கேற்றிருந்தனர். அழைக்கப்பட்டிருந்த இரு தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் குமரி எஸ். நீலகண்டன்.

வர் குறித்த ஒரு அறிமுகமாக முன்னர் நான் பகிர்ந்த அதீதம் வலையோசையிலிருந்து:

 “2008-லிருந்து ‘நீலகண்டனின் எழுத்துக்கள்’ வலைப்பூவில் தன் படைப்புகளைப் பகிர்ந்து வரும் குமரி.எஸ். நீலகண்டன், சென்னை வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். இவரது கவிதைத் தொகுப்பு (கம்ப்யூட்டரே கவிதை எழுது) 1988-லும், சிறுகதைத் தொகுப்பு “என் ஆசை அப்பாவிற்கு” 1994-லும் வெளியாகியுள்ளன. தினமலர், தினமணி, புதிய பார்வை, ஆனந்த விகடன், குங்குமம், இதயம் பேசுகிறது, தினமணிக் கதிர், வடக்கு வாசல், நவீன விருட்சம், தாய், கணையாழி, கல்கி, கோகுலம் உள்ளிட்ட பல முக்கிய பத்திரிகைகள் மற்றும் இலக்கிய இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. மலையாளம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து பல கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார். விகடன் வெளியீடாகவும் இவரது இரண்டு புத்தகங்கள்: ‘உரைநடையில் கவிநடையில் திருக்குறள்’ மற்றும் ‘சாம் மானேஷா’.

இவர் எழுதி அக்டோபர் 2012-ல் வெளியாகியிருக்கிற புதினம் “ஆகஸ்ட் 15”.
மகாத்மா காந்தி காலமாவதற்கு முந்தைய நான்கு வருடங்களில் அவரது  தனிச் செயலாளராக இருந்தவர் திரு. கல்யாணம். காந்திஜி சுடப்பட்டபோது அவருக்கு வெகு அருகில், சில அங்குல தூரத்தில் நின்றவர். தற்போது வயது 90 ஆகிறது. அவரது வானொலிப் பேட்டியொன்றால் ஈர்க்கப்பட்ட ஆசிரியருக்கு, அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்க அவர் மூலமாகப் பெற்ற உண்மைத் தகவல்களின் அடிப்படையில் தோன்றிய நாவல் இது.

ஆகஸ்ட் 15 - இதே தினத்தில் பிறந்த சத்யா(2000)  மற்றும் கல்யாணம்(1922) ஆகியோரோடு அதே நாளில் பிறந்த சுதந்திர இந்தியா(1947)வின் வரலாற்றுப் பின்னணியில் உருவான புதினம் இது.” எனக் கூறுகின்ற ஆசிரியர் நாவலை சத்யா, கல்யாணம் ஆகியோரது வலைப்பூக்கள் வழியாக நகர்த்திச் சென்றிருக்கிறார். காந்தியைக் குறித்து இதுவரை உலகமறியாத செய்திகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை வெளிவராத காந்திக்கு வந்த பல கடிதங்கள் இந்நூலில் ஆவணப்படுத்தப் பட்டிருப்பதாகவும் தனது உரையான ‘கதையின் கதை’யில் தெரிவிக்கிறார் ஆசிரியர்.

நூலுக்கு எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் அவர்கள் வழங்கியுள்ள முன்னுரையிலிருந்து:

"ஆகஸ்ட் 15 இந்த நாள் ஒரு தலைமுறைக்கு இந்தியருக்கு விசேஷமாக இருந்தது. இலட்சியம், நாணயம், உண்மை ஆகியவற்றுக்கு நினைவூட்டலாக இருந்தது. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு சல்மான் ருஷ்டி அவருடைய ‘’நடுநிசிக் குழந்தைகள்’’ எழுதிய போதே இந்தத் தேதி வரலாற்றுக்குள் புகுந்த இன்னொரு நாளாகப் போய் விட்டது. நண்பர் நீலகண்டன் மேற்சொன்னது உண்மையல்ல என்று நிரூபிப்பது போல ஒரு அபூர்வமான இலக்கியப் படைப்பை உருவாக்கியிருக்கிறார். நிஜம், புனைக் கதை இரண்டும் பின்னிப் பின்னி வந்து இது இறுதியில் ஓர் நம்பிக்கையூட்டும் செய்தியை நமக்குத் தருகிறது. இதில் வரும் ஒரு பாத்திரத்தின் அசலை நான் நன்கு அறிவேன். இந்த நூல் நமது நாடு, நமது ஆரம்ப கால இலட்சியப் போக்கு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் நமது பாரம்பரியம் ஆகிய மூன்றுக்கும் அஞ்சலி செலுத்துவதாக இருக்கிறது."

சாகித்யோத்சவ்”  மூன்றாம் நாள் நிகழ்வில் இப்புதினம் மேடையில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.. அத்துடன் அன்றைய கவியரங்கில் இவர் வாசித்த மேசை துடைப்பவன் (கல்கி), பூனைக்குட்டியும் நிலாவும் (நவீன விருட்சம்) ஆகிய இரு கவிதைகளை டாக்டர் சந்திரசேகர் கம்பாரா, திரு. சித்தலிங்கையா, பஞ்சாபி கவிஞர் வனிதா, தெலுங்கு சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சையத் சலீம் உட்பட்ட எழுத்தாளர்கள் பாராட்டிப் பேசியிருக்கின்றனர்.

 குமரி எஸ் நீலகண்டனுக்கு நினைவுப்பரிசை வழங்குறார்,
1993-ஆம் ஆண்டு ஞானபீட விருதினைப் பெற்ற
ஒரியக் கவிஞர் சித்தகாந்த் மஹாபத்ரா.
[நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அவருக்கு அனுப்பி வைத்த படம்.]
நிகழ்வின் இரண்டாம் நாள் சனிக்கிழமை மாலை கண்காட்சிக்குச் சென்றிருந்த போது அவரை சந்திக்க முடிந்தது.  நான் வாங்கிக் கொண்ட பிரதியில் நட்புடன் கையொப்பமிட்டு அளித்தார்.  கண்காட்சிக்கு வந்திருந்த ‘எண்ணங்கள் இனியவை’ ஐயப்பன் கிருஷ்ணன், . ‘காலக்கண்ணாடி’ பிரசாத் வேணுகோபால் ஆகியோரும் அவரைச் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புதினத்தை வாசித்தபிறகு விரிவாகப் பகிருகிறேன். இந்திய வரலாற்றின் முக்கிய பக்கங்களை உலகின் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கும் இந்நூல் பலரையும் சென்றடைந்து வெற்றிபெற வாழ்த்துவோம்.
***

 ஆகஸ்ட் 15

விலை ரூ:450. பக்கங்கள்: 502. வெளியீடு: சாய் சூர்யா.

மொத்தப் பிரதிகளுக்கு அணுக: +91 94446 28536

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: - ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ் [அலைபேசி: 9940446650], கே.கே நகர்.


21 கருத்துகள்:

  1. புத்தகத் திருவிழாவும் குமரி எஸ்.நீலகண்டன் பற்றிய பகிர்வும் மிக அருமை ராமலெக்ஷ்மி.. :)

    பதிலளிநீக்கு
  2. புத்தக திருவிழாவில் வாங்கலாமுன்னு இருந்தேன்..டிஸ்கவரியிலேயே கிடைக்கிறதா?கவிநடையில் திருக்குறள் எங்க கிடைக்கும்ன்னு சொல்லுங்களேன்..

    பதிலளிநீக்கு
  3. புத்தக திருவிழா நல்லா இருக்கே.பகிர்வுக்கு நன்ரி

    பதிலளிநீக்கு

  4. திரு குமரி எஸ் நீலகண்டனுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றி. அவர் வலைப் பக்கம் சென்று நாட்களாகி விட்டன.

    பதிலளிநீக்கு
  5. த்தகத்திருவிழாவும்,குமரி நீலகணடனைப்பற்றிய பகிர்வு அருமை.நீங்கள் புத்தக திருவிழாவுக்கு போய் உங்கள் வீட்டு நூலகத்தில் மேலும் என்னென்ன புத்தகங்கள் சேர்த்தீர்கள்?உங்கள் இல்ல நூலகத்தை புகைப்படம் வழியே கண்டுவிட்டு தோழி தேனம்மையிடம் மிகவுமே சிலாகித்தேன்.:)

    பதிலளிநீக்கு
  6. அருமையா பகிர்ந்து கொண்டதற்கு நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  7. பகிர்வுக்கு மிக்க நன்றி அக்கா!!

    பதிலளிநீக்கு
  8. திரு குமரி எஸ். நீலகண்டன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

    //புதினத்தை வாசித்தபிறகு விரிவாகப் பகிருகிறேன்//

    காத்திருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  9. @Madhu Mathi,

    டிஸ்கவரியில் கிடைக்கிறது. இரண்டாவது கேள்விக்கு பதில் தெரியவில்லை.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  10. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம். நாவல் எழுதும் வேலையில் இருந்ததால் தன் வலைப்பக்கத்தை அவரும் பலமாதங்களாகப் புதுப்பிக்கவில்லை. இனி மீண்டும் அங்கே தொடருவார் என நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  11. @ஸாதிகா,

    நன்றி ஸாதிகா:). இப்போதெல்லாம் புத்தக விழாவுக்காகக் காத்திருப்பதில்லை. அவ்வப்போது வேண்டியதை டிஸ்கவரி பேலஸ் மற்றும் ந்யூபுக் லேண்ட் மூலமாகக் கொரியரில் பெற்றுக் கொள்கிறேன். இங்கே எஸ்.ராவின் ‘மழைமான்’ சிறுகதைத் தொகுப்பு மட்டும் வாங்கினேன்.

    பதிலளிநீக்கு
  12. புத்தக திருவிழா பகிர்வு அருமை.
    படித்த புத்தக பகிர்வுக்கு அடுத்து காத்து இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin