வியாழன், 24 செப்டம்பர், 2026

நாளினை நெய்யும் சிறகுகள் — நவீன விருட்சம் இதழ்: 134

  


நாளினை நெய்யும் சிறகுகள்

சூரியன் தன் ஒளியை அறியும் முன்
பறவை விழித்துக் கொள்கிறது
தன் சிறகடிப்புகளால்
அமைதியான வானத்தில் காலையை 
தைத்துக் கொண்டே செல்கிறது

வயல்களில் தானியங்களையும்
காற்றில் சமநிலையையும்
மரங்களில் கண நேர ஓய்வையும் 
அது தேடுகிறது

நண்பகல் வானம் கனல்கிறது
ஆயினும் 
அதன் இறக்கைகள் மடிவதில்லை
பசி வெப்பத்தை விடவும் 
உரத்த குரலில் பேசுகிறது

எச்சரிக்கையின்றி 
மேகங்கள் திரள்கின்றன
காற்று அமைதியிழக்கிறது
பறக்கும் சிறு உடல் தவிக்கிறது
ஆயினும் தொடர்கிறது

சோர்ந்த இலைகளின் மேல் 
அந்திப் பொழுது 
பொன்னைச் சிந்துகையில்
ஒரு சிறு கிளை கிடைக்க
நாளின் பிடி தளர்கிறது

ஆகாயம் தன் மர்மங்களைக் காக்க
பூமி தன் மௌனத்தைக் காக்க 
பறவை பறந்து கொண்டே இருக்கிறது
ஓய்வில் சக்தியை மீட்டு
மீண்டும் மீண்டும் விண்ணைத் தேடி
*
படம்: AI உருவாக்கம்
*

நவீன விருட்சம் சிற்றிதழ் 134_ல், பக்கங்கள் 64,65,66_ல் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளில் ஒன்று: 
[இரண்டாவது கவிதையை விரைவில் இங்கு பதிகிறேன்.]

நன்றி நவீன விருட்சம்!

***

11 கருத்துகள்:

  1. ஆனால் வெளிச்சம் வரும் முன் பறவை பறந்து பார்த்ததில்லை.

    பொருள் தேடி
    அலைவதில்லை. 
    உணவு மட்டுமே தேடி
    அந்த அலைச்சல். 
    பழகித்தான் போகிறது
    பறவைகளுக்கும்
    அந்த வாழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளிச்சம் வரும் முன்னரே அவை விழித்துக் கொள்ளும் என்றுதானே சொல்லியுள்ளேன்:).

      சூரியன் வெளியில் வரும் முன்னரே, மெல்லிய வெளிச்சம் பரவும் வேளையில் சத்தம் எழுப்ப ஆரம்பித்து விடும். சில வகைப் பறவைகள் பறக்கவும் ஆரம்பித்து விடுகின்றன.

      ஆம், அவற்றுக்குப் பறத்தலே வாழ்வு. கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. நன்றி.  இரண்டாவது வரி அது கிளம்பி விடுகிறது என்பது போல வந்ததால் சொன்னேன்.  மன்னிக்கவும்!  :))

      நீக்கு
  2. இந்த இதழ் நவீன விருட்சம் அழகிய சிங்கர் எனக்கும் அனுப்பினார்.  இதுதானா என்று பார்க்க வேண்டும்!  வந்து நாளாகிறது.  நான் இன்னும் பார்க்கவில்லை.  நான் எழுதிக் கொண்டிருந்த ப பொ கதைகளை பிரசுரித்து போட்ட புத்தகங்கள் மூன்று தொகுதி வாங்கியபோது இதையும் அனுப்பினார்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையும் படமும் அருமை.

    இங்கு சூரிய உதயத்திற்கு முதலில் வரவேற்பு கவிதை வாசிப்பது குருவிதான் அப்புறம் தான் மற்ற பறவைகள் வரும்.

    நேற்று ஆனந்த விகடனில் பஞ்சு மேகத்தில் கூடு கட்ட விரும்பும் சிட்டுக்குருவியின் ஆசையை பற்றிய கதையை படித்தேன்.

    நீங்களும் படித்து இருப்பீர்கள் படமும் அருமையாக இருந்தது . பஞ்சு மேகத்தில் கூட்டு கட்ட குச்சிகளை வைப்பதும் அவை கீழே விழுவதும் மேகத்திடம் "என்னை ஏன் கூடு கட்ட விட மாட்டேன் என்கிறாய்" என கேட்பதும் நான் ஒரு இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பேன் நான் கலைந்து விடுவேன் என்று சொல்லும் மேகம்

    குருவி பின்னர் உணர்ந்து கொள்கிறது வானம் பார்த்து ரசிக்க மட்டுமே பூமிதான் நமக்கு என்று. மரக்கிளையில் அமர்ந்து கொள்ளும் குருவி.

    உங்கள் கவிதை போல மீண்டும் மீண்டும் விண்ணைத்தேடி பறக்கத்தான் செய்கிறது.
    நீங்கள் என்றால் கவிதை வடித்து விடுவீர்கள் இந்த சூழ்நிலையை.

    இன்று காலை இடி, மின்னல், மழை எங்கு இருக்கிறதோ குருவிகள்.
    மரங்கள் பயங்கரமாக ஆடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கதையை வாசிக்கிறேன். ஆவலைத் தூண்டுகிறது உங்கள் அழகிய வரிகள். கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா. நீங்கள் பகிர்ந்த மழை காணொளியைக் கண்டேன். ஆம், அந்நேரங்களில் பறவைகள் பதுங்க இடம் தேடித் தவிக்கும்.

      நீக்கு
  4. குருவிகள் வெளிச்சம் வரும் முன்னே விழித்து கொள்ளும் ஸ்ரீராம்.
    காலையில் அதன் கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கும். உங்கள் கவிதையும் அருமை.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin