வியாழன், 24 செப்டம்பர், 2026

நாளினை நெய்யும் சிறகுகள் — நவீன விருட்சம் இதழ்: 134

  


நாளினை நெய்யும் சிறகுகள்

சூரியன் தன் ஒளியை அறியும் முன்
பறவை விழித்துக் கொள்கிறது
தன் சிறகடிப்புகளால்
அமைதியான வானத்தில் காலையை 
தைத்துக் கொண்டே செல்கிறது

வயல்களில் தானியங்களையும்
காற்றில் சமநிலையையும்
மரங்களில் கண நேர ஓய்வையும் 
அது தேடுகிறது

நண்பகல் வானம் கனல்கிறது
ஆயினும் 
அதன் இறக்கைகள் மடிவதில்லை
பசி வெப்பத்தை விடவும் 
உரத்த குரலில் பேசுகிறது

எச்சரிக்கையின்றி 
மேகங்கள் திரள்கின்றன
காற்று அமைதியிழக்கிறது
பறக்கும் சிறு உடல் தவிக்கிறது
ஆயினும் தொடர்கிறது

சோர்ந்த இலைகளின் மேல் 
அந்திப் பொழுது 
பொன்னைச் சிந்துகையில்
ஒரு சிறு கிளை கிடைக்க
நாளின் பிடி தளர்கிறது

ஆகாயம் தன் மர்மங்களைக் காக்க
பூமி தன் மௌனத்தைக் காக்க 
பறவை பறந்து கொண்டே இருக்கிறது
ஓய்வில் சக்தியை மீட்டு
மீண்டும் மீண்டும் விண்ணைத் தேடி
*
படம்: AI உருவாக்கம்
*

நவீன விருட்சம் சிற்றிதழ் 134_ல், பக்கங்கள் 64,65,66_ல் வெளியாகியுள்ள எனது இரண்டு கவிதைகளில் ஒன்று: 
[இரண்டாவது கவிதையை விரைவில் இங்கு பதிகிறேன்.]

நன்றி நவீன விருட்சம்!

***

2 கருத்துகள்:

  1. ஆனால் வெளிச்சம் வரும் முன் பறவை பறந்து பார்த்ததில்லை.

    பொருள் தேடி
    அலைவதில்லை. 
    உணவு மட்டுமே தேடி
    அந்த அலைச்சல். 
    பழகித்தான் போகிறது
    பறவைகளுக்கும்
    அந்த வாழ்வு.

    பதிலளிநீக்கு
  2. இந்த இதழ் நவீன விருட்சம் அழகிய சிங்கர் எனக்கும் அனுப்பினார்.  இதுதானா என்று பார்க்க வேண்டும்!  வந்து நாளாகிறது.  நான் இன்னும் பார்க்கவில்லை.  நான் எழுதிக் கொண்டிருந்த ப பொ கதைகளை பிரசுரித்து போட்ட புத்தகங்கள் மூன்று தொகுதி வாங்கியபோது இதையும் அனுப்பினார்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin