வியாழன், 4 மார்ச், 2021

சுகந்தொ பட்டாச்சார்யா கவிதைகள் - சொல்வனம் வங்காள இலக்கியச் சிறப்பிதழ் - பாகம் 2

ங்காள இலக்கியச் சிறப்பிதழின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள சொல்வனம் இதழ் 241_ல், நான் தமிழாக்கம் செய்த மற்றுமோர் கவிதையும் கவிஞரைப் பற்றிய குறிப்பும் ..

நன்றி சொல்வனம்!



நற்சாட்சிப் பத்திரம்

இன்று பிறந்த குழந்தையிடமிருந்து
வந்தது செய்தி.
கிடைத்து விட்டது நற்சாட்சிப் பத்திரம் அவளுக்கு. 
அறிவிக்கிறாள் ஆகையால் முன்பின் அறியாத இப்புதிய உலகிற்கு
காதைத் துளைக்கும் அழுகையின் மூலமாகத் தன் உரிமைகளை!
நிராதரவற்ற சிறியவளாக இருப்பினும், தன் கைமுஷ்டியை உயர்த்துகிறாள்,
அதில் புரிந்துகொள்ள முடியாத சபதம் ஒளிர்கிறது.
யாருக்கும் புரியவில்லை.
சிலர் சிரிக்கிறார், சிலர் வசைபாடுகிறார்
ஆனால் எனக்கு அவள் மொழி புரிகிறது.
அவளது மங்கலான தெளிவற்றக் கண்களை நான் வாசிக்கும்போது
அக்குழந்தையின் நம்பிக்கையூட்டும் வரும் காலத்தின் அறிகுறிகளை 
என்னால் பார்க்க முடிகிறது.
புதிய குழந்தை வந்து சேர்ந்திருக்கிறாள். 
நாம் அவளுக்கான இடத்தைத் தயார் செய்ய வேண்டும்;
பின் இந்தப் பழம்பூமியின் 
சிதைந்தழிந்த தரிசு நிலத்துக்குள் நகர்ந்து விட வேண்டும்.

நாம் வெளியேறி விட வேண்டும். அதற்குமுன் 
என் மூச்சுள்ளவரையில், 
என் முழு சக்தியையும் கொண்டு
பூமியின் முகம் மேலுள்ள 
குப்பைகளைத் துப்பரவு செய்தபடியே இருப்பேன்.
இந்தக் குழந்தை வசிக்கத் தகுந்ததாக இந்த உலகை உருவாக்குவேன்;
இது, புதிதாகப் பிறந்த சிசுவுக்கு நான் கொடுக்கும் உறுதிமொழி.

என் பணி முடிந்ததும்
என் சொந்த இரத்தத்தினால்
குழந்தையை ஆசிர்வதிப்பேன்.
அதன் பிறகு, நான் வரலாறு ஆவேன்.
**

ஓ பெருவாழ்வே!

போதும் இனி இந்தக் கவிதை.
கடுமையான இனிமையற்ற 
உரைநடையைக் கொண்டு வாருங்கள், பதிலுக்கு.
மறையட்டும் கவிதையின் சந்தங்கள்
ஓங்கியடிக்கட்டும் உரைநடையின் பலத்த சுத்தியல்.
கவிதை தரும் அமைதி இனி அவசியமில்லை;
கவிதையே, உனக்கு இன்று நான் விடுமுறை தருகிறேன்.
பசி ஆட்சி செய்கையில், இப்பூமி உரைநடைக்கே உரித்தானது.
முழு நிலவு தீய்ந்த ரொட்டியை நினைவூட்டுகிறது, எங்களுக்கு.

**


மூலம் (வங்காள மொழியில்..): Sukanta Bhattacharya
ஆங்கில மொழியாக்கம்: Rini Bhattacharya Mehta

**

சுகந்தொ பட்டாச்சார்யா

கவிஞரும் நாடகாசிரியருமான சுகந்தொ பட்டாச்சார்யா (1926-1947) நவீன வங்காளக் கவிஞர்களான இரவீந்திரநாத் தாகூர், காஜி நசருல் இஸ்லாம் போன்றோர் வரிசையில் முக்கியமாக அறியப்பட்ட மற்றுமோர் எழுத்தாளர். வாழ்ந்த காலத்தில் இவரது கவிதைகள் பரவலாக அறியப்படவில்லை. மிக இளம் பிராயத்தில், தனது இருபதாவது வயதில் இவர் காலமான பிறகே பெரும்பாலான இவரது படைப்புகள் வெளிவந்தன என்பதோடு, இவர் மீதான மரியாதையும் பன்மடங்கு உயர்ந்து இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த வங்காளக் கவிஞர்களில் ஒருவராகப் போற்றப் பட்டார்.  

சுகந்தொவின் கவிதைகள் புரட்சி, பொதுவுடைமைச் சிந்தனை, தேசப்பற்று, மனித நேயம் மற்றும் காதல் ஆகிய வகைகளுக்காக குறிப்பாக அறியப்பட்டன.

பெற்றோர் நிர்பன் சந்திர பட்டாச்சார்யா, சுநிதி தேவி ஆகியோரின் ஆறு மகன்களில் இரண்டாவதாகப் பிறந்தவர். நூல்களை விற்கும், பிரசுரிக்கும் சரஸ்வத் நூலகத்தின் உரிமையாளர் இவரது தந்தை. மேற்கு வங்காளத்தின் முன்னால் முதலமைச்சர் புத்தாதெப் பட்டாச்சார்யா இவரது மருமகன். 

கொல்கத்தாவின் காளிகட்டில், தனது தாய்வழிப் பாட்டனார் வீட்டில் வளர்ந்தார். ‘கமலா வித்யாமந்திர்’ ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போது தொடங்கியிருக்கிறது இவரது இலக்கியப் பயணம். இவரது முதல் சிறுகதை ‘சஞ்சே’ எனும் பள்ளி மாணவர் பத்திரிகையில் வெளியானது. 1944ஆம் ஆண்டு பெலகட்டா தேஷ்பந்து உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது கம்யூனிசக் கட்சியில் இணைந்தார். அடுத்த ஆண்டு நடைபெற்றப் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையவில்லை. கட்சியின் தினசரியில் ‘கிஷோர் சபா’ எனும் இளைஞர் பிரிவுக்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்திருக்கிறார். 1947_ஆம் ஆண்டில் காசநோயால் பாதிக்கப்பட்டு காலமானார்.

இவரது எல்லாப் படைப்புகளும் இவரது கம்யூனிஸக் கொள்கை மற்றும் அனுபவங்களின் ஆழமான வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. குறிப்பாக ‘‘சார்பத்ரா’ எனும் நூலில் இடம்பெற்ற, பசியின் வெளிப்பாடாக நிலவைத் தீய்ந்த ரொட்டியுடன் ஒப்பிடும்  “ஹெ மஹாஜிபான்” (Oh Great Life!) கவிதை பலராலும் பேசப்பட்ட ஒன்றாகும். இக்கவிதையின் பின்னணியை அறிந்து கொள்வது அவசியமாகிறது. 1943_ஆம் ஆண்டு நிலவிய பஞ்சத்தின் போது,  சுகந்தொ பட்டாச்சார்யா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கொல்கத்தாவில் பசியால் துவண்டிருந்த மக்களுக்கு உணவுப் பொருட்கள் சரியாகச் சென்றடையப் பாடுபட்டார். பிரிட்டஷ் பிரதம மந்திரி வின்ஸ்டன் சர்ச்சில் கொண்டு வந்த சட்டங்களே பஞ்சத்திற்குக் காரணமாக மக்களால் பார்க்கப்பட்டது. அது விவாதத்திற்குரியதாக இருந்தாலும் பசியால் மக்கள் தெருக்களில் வீழ்ந்து மாண்டது ஆட்சிக்கு எதிராக  மக்களின் கோபத்தை அதிகரித்தது. அதன் வெளிப்பாடாக சுகந்தொ எழுதியதே “ஹெ மஹாஜிபான்” கவிதை. 

‘சார்பத்ரா’ நூலையும், சில பத்திரிகைகளில் வெளியான கவிதைகளையும் தவிர்த்து வியப்புக்குரிய பெரும்பாலான இவரது படைப்புகள் இவர் காலமான பிறகே வெளிவந்த நிலையில், இவரது விரிவான வாழ்க்கை வரலாற்றை அறிய உதவியாக இருந்தது இவரது இளைய சகோதரரான அமியா பட்டாச்சார்யா எழுதிய “கபி சுகந்தொ பட்டாச்சார்யா ஓ செ சமே” எனும் நூலே ஆகும்.

1967_ ஆம் ஆண்டு கொல்கத்தாவின் சரஸ்வத் நூலகத்தின் மூலமாக ‘சுகந்தொ சமக்ரா’ எனும் சுகந்தொவின் முழுமையான படைப்புகள்  வெளிவந்தன. வாழ்ந்த நாளில் அதிகம் அறியப்படாத எழுத்துக்களோடு, அவரது நாடகங்கள், சிறுகதைகள், கவிதைகள் ஆகியவற்றோடு தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது கடிதங்களும் அதில் இடம் பெற்றன.

**

கவிதை மற்றும் தகவல்கள், ஆங்கிலம் வழித் தமிழில்.. - ராமலக்ஷ்மி

***

-----------------------------------------------------------------------------------

சொல்வனம் இதழ் 240, வங்காள இலக்கியச் சிறப்பிதழின் முதல் பாகத்தில் வெளியான, நான் தமிழாக்கம் செய்த கவிதையை இங்கே வாசிக்கலாம். அந்த இதழ் வெளியானதும் அறிக்கை ஒன்றை ஃபேஸ்புக்கில் சொல்வனம் ஆசிரியர் குழுவில் ஒருவரான பாஸ்டன் பாலா வெளியிட்டிருந்தார். அவரது பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது போன்ற ஊக்கம் தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடும் எண்ணத்தைத் தருகிறது என்றால் அது மிகையாகாது. 

//கட்டுரைகளை மொழிபெயர்ப்பது ஒரளவு சுலபம்.

ஆய்வுக் கட்டுரைகளை மொழிபெயர்ப்பது பெருமளவு கஷ்டம். எனினும், எந்திரம் கூட செய்துவிடும் என்று எளிமையாக்கப்படும் அபாயம் கொண்டது.

கதைகளை மொழிபெயர்ப்பது என்பது உங்களின் சாமர்த்தியத்தையும் புனைவின் தாக்கத்தையும் பொருத்தது.

கவிதைகளை மொழிபெயர்ப்பது என்பது நன்றி கிடைக்காத பணி.

வாசிப்பவர் - அசலை மெச்சுவார். அதாவது வாசிப்பின்பத்தை நல்கிய மொழிபெயர்ப்பாளரை வசதியாக மறந்துவிடுவோம்.

தமிழ் மொழியாக்கியவருக்கு குழப்பம் நீளும். (நல்ல கவிஞர் எனில்)
பிற மொழியில் இயற்றியவருக்கு அசலின் சந்த நயமும் ஓசையும் தாளமும் கவிப்புலனும் மொழியாக்கத்தில் வந்திருக்காது என தெரியும்.

இருப்பினும் இந்த இயக்கம் தொடர்கிறது.
வள்ளுவர், தாகூர், பாரதி, ஹீனி எனத் தொடர்கிறது.

சொல்வனத்தின் வங்காளச் சிறப்பிதழில் நான்கு பேர் இந்த நன்றி கிடைக்காத பணியைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஒரு பெயரும் கிடைக்காது. எல்லாப் புகழும் ஒரிஜினல் கவிஞருக்கே,..

ஆனால்... இந்த மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாவிட்டால், வங்க மொழிக் கவிதைகள் தெரிந்தே இருக்காது. அவற்றைப் புரிந்து கொண்டே இருக்க மாட்டோம். இந்த மாதிரி நன்றி கிடைக்காத பணியைச் செய்த நால்வருக்கு சிரம்தாழ்த்தி வணக்கங்களைத் தெரிவிக்கிறேன்:

1. அனுகிரஹா - ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்
2. வேணு தயாநிதி - நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்
3. வெங்கட் பிரசாத் எனப்படும் வி.பி, - கிருஷ்ணா பாஸு கவிதைகள்
4. ராமலஷ்மி - காஜி நசருல் இஸ்லாம் கவிதை

ஒவ்வொருவரும் தங்களின் தேர்ந்தெடுப்பிலேயே அவர்களின் ரசனையை பிரகடனம் செய்கிறார்கள். அதன்பின் சொல்வனம் ஆசிரியர் குழுவுடன் தங்களின் வார்த்தை தேர்வுகளையும் கரு உருவாக்கங்களையும் உரையாடியதன் மூலம் --- எவ்வாறு கொணர்ந்தார்கள் என்னும் விவரிப்பில் அவர்களின் அயராத உழைப்பும் மேன்மையான புரிதலும் உன்னதமான சொற்தேர்வுகளும் புரிதலுக்குள்ளாகின்றன.

கவிகளுக்கு நன்றி!

//

நன்றி பாஸ்டன் பாலா!


***

8 கருத்துகள்:

  1. பாஸ்டன் பாலா சொல்லி இருப்பது உண்மை.  மொழிபெயர்ப்புக்காக அவரவர் தேர்ந்தெடுக்கும் அகவிதைகளிலேயே அவரவர் ரசனையும் வெளிப்படுகிறது.

    மொழிபெயர்க்கபப்ட்டிருக்கும் அகவிதைகள் அபாரம்.  சட்டென தாக்குகின்றன.

    பதிலளிநீக்கு
  2. பாஸ்டன் பாலா சொல்லி இருப்பது உண்மை.
    நீங்கள் மொழி பெயர்த்து தருவதால் கவிதையை ரசித்து படிக்க முடிகிறது.
    உங்களுக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான கவிதைகள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  4. மிக அருமை ...

    வாழ்த்துக்கள் ..

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin