புதன், 10 மார்ச், 2021

இமயத்து விருந்தாளி.. இந்திய மாங்குயில் ( Indian golden oriole )

 என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (95) 

பறவை பார்ப்போம் - பாகம்: (61)

#1

மயத்தில் இருந்து என்னைத் தேடி வந்த விருந்தாளி இந்த ‘இந்திய மாங்குயில்’. ஒரு காலை நேரத்தில் பொன் மஞ்சள் நிறத்தில் இந்தப் பறவையைப் பார்த்ததும் பரவசமாகி விட்டேன். உற்சாகத்தில் படபடப்பாக கேமராவை எடுத்துக் கொண்டு விரைந்தால் வாராது வந்த அதிசயப் பறவை  பதட்டமாகிப் பறந்து விடும் அபாயம் இருந்ததால் என்னை நானே நிதானப்படுத்திக் கொண்டு பதுங்கிப் பதுங்கி சன்னல் திரைச்சீலைக்குப் பின் ஒளிந்து நின்று படமாக்கினேன்:).

#2


குளிர் காலத்தில் இமயமலை மற்றும் ஆசியாவின் நடுப்பகுதிகளிலிருந்து நம் நாட்டிற்கு வலசை வரும் பறவைகளில் மாங்குயிலும் ஒன்று. இவை Partial migrants. அதாவது இந்த இனத்தின் எல்லாப் பறவைகளும் வலசை செல்வதில்லை. ஒரு சில மட்டுமே இடம் பெயர்ந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருக்கும். 

#3

வேறு பெயர்: மாம்பழக்குருவி


#4

ஆங்கிலப் பெயர்: Indian golden oriole


#5

உயிரியல் பெயர்: Oriolus kundoo


ஒரு காலத்தில் ஐரோப்பிய மாங்குயில்களின் (Eurasian golden oriole) துணை வகையாகக் கருதப்பட்டவை பின்னாளில் 1832_ஆம் ஆண்டில் ஆங்கிலேயரும் இயற்கை ஆய்வாளருமான வில்லியம் ஹாரி சைக்ஸ் என்பவரால் தனி வகை என அறிவிக்கப்பட்டது. 

பொன் மஞ்சள் நிற உடலையும் கண்ணைச் சுற்றிக் கறுப்புத் திட்டுகளையும் கொண்ட இப்பறவை மைனாவை விடப் பெரிதாக, சற்றேறக் குறைய மணிப்புறாவின் அளவில் 9 முதல் 10 அங்குல நீளத்தில் இருக்கும். 

பொதுவாகப் பார்க்கும் போது தோற்றத்தில் ஐரோப்பிய மாங்குயில்களை ஒத்திருந்தாலும் இந்திய மாங்குயில்களின் வால் பகுதிகள் அதிக மஞ்சள் நிறத்தையும் கண்களும் அலகுகளும் சிகப்பு நிறத்தையும் கொண்டவை. ஆண் இந்திய மாங்குயில்களின் கண்களைச் சுற்றிய கருப்புத் திட்டு கண்களைச் சற்றுத் தாண்டியும் சென்றிருக்கும்.

#6

தலை முழுதும் கறுப்பு நிறத்தைக் கொண்ட மாங்குயில்கள் வேறு இனம். அவை ‘கருந்தலை மாங்குயில் - black hooded golden oriole' என அறியப்படுகின்றன. 

#7


ப்பறவைகள் பலுசிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான் வரையிலும் மற்றும் இமயமலையிலிருந்து நேபாளம் வரையிலுமாக பரவலாக வசிக்கின்றன. வட இந்தியப் பறவைகள் குளிர்காலத்தில் தென்னிந்தியாவிற்கு மட்டுமின்றி இலங்கைக்கும் செல்வது வழக்கம். அடர்ந்த கானகங்கள், சோலைகள், பூங்காங்கள், பசுமையான தோட்டங்களில் அதிகம் தென்படும்.

தொய்வாகப் பறந்தாலும் மணிக்கு 40 கி.மீ வேகத்தில் பறக்கக் கூடியவை. சில சமயங்களில் சிறு குட்டையாகத் தேங்கிக் கிடக்கும் நீரில் தொடர்ச்சியாக முங்கி முங்கிக் குளித்தபடி இருக்கும்.

பழங்கள், தேன், பூச்சிகளை உண்டு வாழ்கின்றன. பறக்கும் பல்லிகளையும் (draco) இரையாக்கிக் கொள்ளும் வல்லமை வாய்ந்தன. சதைப் பற்றுள்ள பெர்ரி பழவகைகள் போன்றவற்றின் விதைகளைச் தூவிச் சென்று அவற்றின் பெருக்கத்திற்குக் காரணியாக உதவுகின்றன.

இவற்றின் இனப்பெருக்கக் காலம் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலும்.  மரக் கிளைகளின் விளிம்புகளில் சிறு கோப்பை போன்ற கூட்டினை அமைக்கும். பெரும்பாலும் இரட்டைவால் குருவிகளின் (கரிச்சான்) கூடுகளுக்கு அருகே இவற்றின் கூடுகள் அமைந்திருப்பதைப் பார்க்கலாம். இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டைகள் பழுப்பு மற்றும் கறுப்புப் புள்ளிகளுடன் சிகப்பு நிறத்தில் இருக்கும். கூடு கட்டுவது, குஞ்சுகளைப் பராமரிப்பது, காகம் மற்றும் வல்லூறு போன்ற பறவைகளிடமிருந்து குஞ்சுகளைக் காப்பது ஆகிய வேலைகளை ஆண்-பெண் இருபறவைகளுமே பகிர்ந்து செய்திடும்.

#8


**
[இணையத்தில் சேகரித்துத் தமிழாக்கம் செய்த தகவல்கள்..]
***

8 கருத்துகள்:

  1. மாங்குயில் பார்க்க அழகு.
    படங்கள் எல்லாம் மிக அழகாய் எடுத்து இருக்கிறீர்கள்.
    மாங்குயில் பற்றிய செய்திகள் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  2. மிக அழகாக இருக்கிறது பறவை.  விவரங்கள் சுவாரஸ்யம்.   'மனசுக்குள் மத்தாப்பூ' படத்தில் எஸ் பி பி குரலில் ஒரு பாடல் வரும்.  'பொன்மான்குயில்...  நெஞ்சோரமாய்...'   இந்தப் பறவை பற்றிய வரிகள்தான் போல அவை...  

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடல் வரிகள் சரிதான்.., ‘பொன்’மாங்குயில்! நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. ஆம். ஆட்டோ கரெக்‌ஷன் போல..!

      நீக்கு
    3. நான் சொல்ல வந்தது ‘பொன்’ என அதன் மஞ்சள் நிறத்தைப் பற்றிய வர்ணனையை:). மான்குயில் என தட்டச்சாகியிருப்பதை நீங்கள் சொன்ன பிறகு இப்போதுதான் கவனிக்கிறேன்.

      நீக்கு
  3. மாங்குயில் படங்கள் அழகு. தகவல்களும் ஸ்வாரஸ்யம். உங்கள் மூலம் நாங்களும் புதிய புதிய பறவை வகைகளைத் தெரிந்து கொள்கிறோம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களைச் சேகரிப்பதும் அறிந்து கொள்வதும் எனக்கும் சுவாரஸ்யமாக உள்ளது. நன்றி வெங்கட்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin