என் வீட்டுத் தோட்டத்தில்.. - பாகம் (97)
பறவை பார்ப்போம் - பாகம்: (63)
பெண் பறவைகள் பழுப்பு நிற மேல் பகுதியும், சற்றே சாம்பல் நிறக் கீழ்ப்பகுதியும் கொண்டிருக்கும். ஆண் பறவைகளைப் போல் தோள் பக்கம் வெள்ளைத் திட்டு இருக்காது. வாலின் அடிப்பகுதி சற்று மங்கலான செந்தவிட்டு நிறத்தில் இருக்கும்.
#7
பாறை நிலங்கள், புல்வெளிகள், புதர்களாலான வனப்பகுதிகள் போன்ற திறந்த மற்றும் வறண்ட வெளிகளில் காணப்படும். அடர்ந்த கானகங்கள், அதிக மழைப் பொழிவுள்ள பகுதிகளில் காண முடியாது.
அந்தந்த இடங்களிலேயே தங்கி வாழும் பறவைகள், வலசை செல்லும் வழக்கம் கிடையாது. மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கு அருகிலும் வசிக்கும். வீடுகளின் கூரைகளிலும் பார்க்க முடியும்.
பறவைகளின் எண்ணிக்கைத் தொகை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுமார் 200-240 வரை இருப்பதை பாண்டிச்சேரி பல்கலைக்கழக வளாகம் உறுதிப்படுத்தியிருக்கிறது.
பெரும்பாலும் பூச்சிகளை உண்டு வாழும் என்றாலும் குஞ்சுகளுக்கு உணவூட்டும் பருவத்தில் தவளைகளையும், பல்லிகளையும் கூட உணவாக்கிக் கொள்ளும். பொழுது சாயும் நேரத்தில் தனிப் பறவைகள் வெளிச்சத்தை நாடி புல்வெளிகளில் வெளிவரும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும். (அந்தி நேரத்தில் இவற்றின் இந்த வழக்கத்தை என் தோட்டத்திலும் பார்க்கிறேன்).
இவற்றின் இனப்பெருக்கக் காலம் டிசம்பரிலிருந்து செப்டம்பர் வரையிலும். ஆனால் வசிக்கும் இடத்தைப் பொறுத்து இக்காலம் மாறுபடும். வட இந்தியாவில் ஜூன் மாதமெனில் தெற்கே அதற்கு முன்பாக இந்தப் பருவத்தில் முதல் மழைக்குப் பிறகு ஆரம்பமாகும். இலங்கையில் இவற்றின் இனப்பெருக்கக் காலம் மார்ச் முதல் ஜூன், மற்றும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரையிலு இருக்கும். பெண் பறவைகளைத் தன் பால் ஈர்க்கக் குரலெடுத்து பாடும் ஆண் பறவைகள், பிற ஆண் பறவைகளைத் தடுக்கவும் பாடும். தன் பிரதேசத்துக்குள் பிற ஆண் பறவைகள் வராமல் கண்காணிப்பதோடு மெதுவாகச் சிறகடித்துக் கிளைக்குக் கிளை தாவியபடி இருக்கும். தன் நிழலையே சந்தேகித்துக் கொத்திக் கொள்வதும் உண்டு.
தம் கூடுகளைப் பாறைகளுக்கிடையே, சுவர்களின் ஓட்டைகள் அல்லது மரங்களின் பொந்துகளில் அமைக்கும். முட்டைகள் 2 செமீ நீளமும் 1.5 செமீ அகலமும் கொண்டிருக்கும். சில முட்டைகளின் விரிந்த முனையில் சிகப்பும் பழுப்புமான கறைகள் காணப்படும். வழக்கமாக 3 முதல் 4 முட்டைகள் வரை இடும். இயல்புக்கு மாறாக 7 முட்டைகள் இடப்பட்ட சமயங்களில் அந்தக் கூட்டின் முட்டைகள் எதுவுமே பொரியப்படாமல் போனது கவனிக்கப்பட்டிருக்கிறது. பெண் பறவைகளே அடை காக்கும். 10-12 நாட்களில் குஞ்சுகள் வெளி வரும்.
ஆண்-பெண் இரு பறவைகளுமே குஞ்சுகளுக்கு உணவூட்டும். சில நேரங்களில் ஆண் பறவை, தாய்ப்பறவைக்குக் கொண்டு கொடுத்து குஞ்சுகளுக்கு ஊட்டச் செய்யும். குஞ்சுகளைப் பாதுகாக்கும்போது ஆண்பறவைகள் எதிரிகளை முரட்டுத்தனமாகத் தாக்கும். நிழல்களைக் கண்டு கூடக் கோபமுறும்.
வால் காக்கை போன்ற பறவைகள் குஞ்சுகளை இரையாக்கிட முயன்றிடுகையில் குஞ்சுகள் இறந்து விட்டது போல நடிக்கும் எனும் தகவல் ஆச்சரியமானது.
அடுத்தடுத்த வருடங்களிலும் கூடு அமைக்க அதே இடத்தை இப் பறவைகள் தேர்ந்தெடுக்கும்.
தவிட்டுச் சிலம்பன் பறவைகளின் கூட்டில் தம் முட்டைகளையிடும் எனக் கருஞ்சிட்டுகளைப் பற்றிப் பதிவு செய்யப்பட்ட பழைய தகவலைத் தற்போதைய ஆய்வாளர்கள் மறுதலித்திருக்கிறார்கள்.
#8
**
இந்த ராபின் பறவையும் இங்கு மகன் வீட்டுக்கு வருகிறது.
பதிலளிநீக்குபடங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.
கருஞ்சிட்டு பார்க்க அழகாய் இருக்கிறது உடல் பள பளவென்று இருக்கிறது.
நன்றி கோமதிம்மா. சமீபத்திய தங்கள் பதிவில் அங்குள்ள ராபின் பறவைகளைப் பார்த்து ரசித்தேன்.
நீக்குதகவல்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குவழமை போல உங்கள் கைவண்ணத்தில் படங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
நீக்குபரவலாக காணக் கூடிய பறவை என்று தெரிகிறது. . விவரங்கள் சுவாரஸ்யம். தன் நிழலையே சந்தேகிக்கும் என்பதும், குஞ்சுகள் செத்து விட்டது போல நடிப்பதும் ஆச்சர்யங்கள்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். ஐந்தறிவு என்கிறோம், பறவைகள் மற்றும் விலங்குகளின் வாழ்வியல் தகவல்கள் பல ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளன.
நீக்கு