புதன், 26 மார்ச், 2014

மழையின் குரல் - வால்ட் விட்மன் கவிதை

யார் நீ எனக் கேட்டேன் மெல்லத் தூறிய சாரலிடம்
சொல்வதற்கு விநோதமே, ஆனால் அது பதிலளித்தது, பின் வருமாறு:

பூமியின் கவிதை நான், என்றது மழையின் குரல்,
முடிவற்று உயருகிறேன் புலன்களால் உணரமுடியாதபடி,
அடியற்ற கடலுக்கும் பூமிக்கும் வெளியே, சொர்க்கத்தை நோக்கி,
தெளிவற்று உருவாகுகிறேன், அங்கு, மொத்தமாக மாறிப் போய்,
ஆனாலும் இருக்கிறேன் அப்படியே,
இறங்குகிறேன் பூமியின் துகள்களையும் படிந்த தூசுகளையும் கழுவ,
அவற்றில் இருக்கும் எவையும் நான் இல்லாவிட்டால் பார்க்க முடியாத,
பிறக்காத விதைகள் மட்டுமே;
என்றென்றும், இரவும் பகலும், உயிர்ப்பிக்கிறேன் மீண்டும் என் பிறப்பை நானே,
புனிதமாக்கி, அழகூட்டவும் செய்கிறேன் அதை;
(ஆன்மாவிலிருந்து பிறக்கும் ஒரு பாடல், கேட்கப்பட்ட பிறகு,
அக்கறையுடனோ அக்கறையின்றியோ எப்படிச் சுற்றி அலைந்திருப்பினும்,
உரிய அன்போடு திரும்புகிறது).

***

மூலம்: The Voice of the Rain
By Walt Whitman (May 31, 1819 – March 26, 1892)
வால்ட் விட்மன் அமெரிக்கக் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர். அரசாங்க எழுத்தர், பள்ளி ஆசிரியர் பணிகளையும் ஆற்றியிருக்கும் இவர் அமெரிக்க உள்நாட்டுப் போரில் தன்னார்வலச் செவிலியராகவும் பணி புரிந்திருக்கிறார். அமெரிக்கப் புதுக்கவிதையின் முன்னோடியாகக் கருதப்படுகிறவர்.

அவரது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழாக்கம் செய்த ஆங்கிலக் கவிதை.

[தற்போது நினைவு இல்லமாகத் திகழும் அவரது வீட்டுக்குச் சென்ற அனுபவம் குறித்த, திருமதி கோமதி அரசு அவர்களின் பகிர்வு இங்கே.]

படங்கள் நன்றி: இணையம்

23 கருத்துகள்:

  1. வால்ட் விட்மன் ஆங்கிலத்தில் பெரிய கவிஞர் என்று கேள்விப்பட்டதுண்டு. ஆங்கில அறிவு குறைவென்பதால் படிக்கும் முயற்சியை மேற்கொண்டதில்லை. உங்கள் மொழிபெயர்ப்பில் படிக்கையில் கவிதை... அழகு!

    பதிலளிநீக்கு
  2. அருமையான கவிதை.

    கோமதி அம்மாவின் பதிவில் அவரது நினைவில்லம் பற்றி படித்தேன்.

    பதிலளிநீக்கு
  3. தமிழில் மழைக் கவிதை தூய்மை பெறுகிறது. படித்த மனங்களிலும் அழுக்கிருந்தால் போய்விடும். அருமையான தமிழாக்கம் ராம்லக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. சாரலின் குளுமையும் மென்மையும் கொண்ட
    அற்புதமான கவிதை
    அருமையான தமிழாக்கம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தேர்ந்தெடுத்த வார்த்தைகளுடன் தெவிட்டாத கவிதை, மொழியாக்கம்!

    பதிலளிநீக்கு
  6. ராமலக்ஷ்மி, அருமையான் கவிதை ஆன்மாவில் தொடங்கிய கவிதை ஆன்மாவில் முடிந்த அற்புத கவிதை மொழியாக்கம் அருமை.

    சார் என் பதிவில் போட இரண்டு பாடல்களை தேர்ந்து எடுத்து கொடுத்தபோது ராமல்க்ஷ்மி என்றால் அதன் தமிழ் ஆக்கம் செய்து விடுவார்கள் என்று நினைத்தேன்.

    என் பதிவை குறிப்பிட்டு அதன் சுட்டியை கொடுத்தமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  7. மழையினூடே அனுபவித்த உரையை தரும் அழகிய கற்பனை... பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  8. @கோமதி அரசு,

    நன்றி கோமதிம்மா. தங்கள் பதிவே இக்கவிதையை இன்று தமிழாக்கம் செய்ய தூண்டுதலாக அமைந்தது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin