புதன், 12 மார்ச், 2014

வீடு - சார்லஸ் புக்கோவ்ஸ்கி கவிதை (3)

அவர்கள் வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள்
அரை பர்லாங்கு தள்ளி
இங்கு  நான் நிழலில் அமர்ந்து
கவனித்துக் கொண்டிருக்கிறேன்
ஆணிகளில் சுத்தியல்
தக்தக் தக்தக் என இறங்கும் ஒலியை,
அடுத்ததாய் தக் தக் தக் எனும்
பறவைகளின் ஒலியை,
பின் படுக்கச் செல்கிறேன்
போர்வையை என் கழுத்துவரை
இழுத்து மூடிக் கொள்கிறேன்;
கடந்த ஒரு மாதமாக இந்த வீட்டைக்
கட்டிக் கொண்டிருக்கிறார்கள்,
சீக்கிரமே அதில் ஆட்கள்
குடிவந்து விடுவார்கள், தூங்கி,
சாப்பிட்டு, நேசித்து, சுற்றி வந்து,
ஆனால் ஏதோ ஒன்று சரியில்லை,
பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுகிறது,
வீட்டின் மேல் நடந்து கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள்
வாயில் ஆணிகளைக் கவ்வியப்படி,
நான் கேஸ்ட்ரோ பற்றியும் க்யூபா பற்றியும்
வாசித்துக் கொண்டிருக்கிறேன்,
இரவில் அந்தப் பக்கமாக செல்லுகையில்
விலா எலும்புகளோடு நிற்கும் வீட்டுக்குள்,
பூனைகள் நடமாடுவதைப் பார்க்கிறேன்
பூனைகள் போலவே நடக்கின்றன அவை
கடந்து செல்கிறான் சிறுவன் ஒருவன் சைக்கிளில்
இன்னும் தயாராகவில்லை வீடு
காலையில் மீண்டும் பணி ஆரம்பித்துவிடும்
சுத்தியலோடு மனிதர்கள் நடமாடத் தொடங்கி விடுவார்கள்,
என்னைக் கேட்டால் மக்கள் இனி வீடுகளே கட்டக் கூடாது,
மக்கள் இனி திருமணமே செய்து கொள்ளக் கூடாது,
மக்கள் வேலை செய்வதை நிறுத்தி விட்டு
இரண்டாவது மாடிகளில்
கூறைகளற்ற சிறிய அறைகளில்
மின்சார விளக்கின் ஒளியில்
பேசாமல் அமர்ந்துகொள்ள வேண்டும்;
மறக்க வேண்டியது நிறைய உள்ளது
செய்யக் கூடாததும் நிறைய உள்ளது
மருந்துக் கடைகளில், சந்தைகளில், மதுபானக் கடைகளில்
மக்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள், அவர்கள்
எதையும் செய்ய விரும்பவில்லை,
நான் இரவில் அங்கு நின்றபடி இந்த
வீட்டின் ஊடாகப் பார்க்கிறேன்,
தான் கட்டப்படுவதை விரும்பாத வீட்டின்
இருபக்கங்களிலும் இருக்கும் குன்றுகளைப் பார்க்கிறேன்,
மாலையின் முதல் வெளிச்சத்தையும்.
அது குளிர்ச்சியாக இருக்கிறது,
என் சட்டையின் பொத்தான்களை மாட்டிக் கொள்கிறேன்
அங்கேயே நின்றபடி வீட்டைக் கவனிக்கிறேன்
நடமாடும் பூனைகள் நின்று என்னைக் கவனிக்கின்றன
நான் உணர்ந்து தர்மசங்கடத்துடன் விலகும் வரை.
விலகி வடதிசையில் நகர்ந்து
வழக்கம் போல் சிகரெட்டும் பியரும் வாங்கிக் கொண்டு
திரும்புகிறேன் என் அறைக்கு.
*

மூலம்: “The House”
by
Charles Bukowski
**

மலைகள் 44_ஆம் இதழில் வெளியான தமிழாக்கம். நன்றி மலைகள்!

படங்கள்: இணையத்திலிருந்து..
***

16 கருத்துகள்:

  1. // மறக்க வேண்டியது நிறைய உள்ளது... //
    செய்யக் கூடாததும் நிறைய உள்ளது... //

    உண்மைகள்...

    பதிலளிநீக்கு
  2. தான் கட்டப்படுவதை விரும்பாத வீடு - கவிஞரின் வரிகளில் என்னமாய்க் கட்டப்பட்டு காட்சியளிக்கிறது. அழகான தமிழாக்கம். பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  3. எல்லோரும் காண்கிறதை கவிதையாய் படிக்கும்போது நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அந்த வீடு ஏன் கட்டப்படக் கூடாது என்ற கேள்வி மனதில் இன்னும் சுற்றி வருகிறது! :))

    பதிலளிநீக்கு
  5. கவிதை நன்றாக இருக்கிறது.
    மறக்க வேண்டும் என்றாலும் மறக்க முடியாத விஷயங்கள் மனதை சங்கடப் ப்டுத்துகிறதே! மறந்தால் நல்லது தான்.
    செய்யகூடாதவற்றை தவிர்த்தல் நலம் தான்.

    பதிலளிநீக்கு
  6. @ஸ்ரீராம்.,

    அதுதான் கவிதையின் வெற்றி:)! நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin