திங்கள், 29 ஏப்ரல், 2013

கொல்கத்தாவின் ஒரு நடைபாதையிலிருந்து.. - சமகால ஆங்கிலக் கவிதை - அதீதத்தில்..


திறக்காதே உன் கண்களை
செளகரியமாகவே இருக்கட்டும் அவை
சின்ன மரத்தின் அடியில்
கூடைக்குள், கந்தல் பொதி மேல்.
எதுவும் சென்றுவிடவில்லை
தடதடக்கும் சரக்கு வண்டியைத் தவிர.
உன் அன்னை அதோ இருக்கிறாள்
சுள்ளிகளால் தீ மூட்டிக் கொண்டு.
அவளது முகம் கரிப் புழுதியாலும்
வியர்வையாலும் ஊறிப் போயிருக்கிறது.
கஞ்சியை முற்றுகையிடும் ஈக்களை
சூசூவென விரட்டிக் கொண்டிருக்கிறாள்.

திறக்காதே உன் கண்களை.
தன் ரிக்‌ஷாவின் சுமையை இழுக்க
நெஞ்சைப்பிடித்தபடி முணுமுணுக்கும்
அழுக்கான வயோதிகனைத் தவிர
ஒருவரும் அங்கிருந்து அகலவில்லை.
அழுத்தி மிதித்தக் காலடித் தடங்களாய்
எங்கும் நோக்கினும் தென்படும்
எல்லோரும் அகன்று போகட்டும்.

திறக்காதே உன் கண்களை.
மிக நேர்த்தியாய் பொருந்துகிறாய்
என் புகைப்படச் சட்டத்துக்கு.
கூடையில் சொகுசாய் இருக்கும்
உன்னை மட்டும் படமாக்கிக் கொள்கிறேனே.
வேண்டாம், திறக்காதே உன் கண்களை
வேறெந்தக் காட்சியும் தேவையில்லை
என் புகைப்படத்துக்கும் என் நினைவுகளுக்கும்.
***

மூலம்: "From a pavement in Calcutta"
எழுதியவர்: Sunanda Satish
வெளியீடு: The Telegraph
எழுதியவர் அனுமதியோடு,
15 ஏப்ரல் அதீதம் இதழுக்காகத் தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதை.
படம் நன்றி: இணையம்

இக்கவிதை பின்னர் ஃபெமினாவிலும், அப்போது அதன் ஆசிரியராய் இருந்த கமலா தாஸ் அவர்களால் தேர்வு செய்யப்பட்டு, வெளியானது. கவிதையைப் பாராட்டியதோடு, தொடர்ந்து நிறைய எழுதுமாறு ஊக்கம் கொடுத்திருக்கிறார் கவிஞருக்கு, தன் கைப்பட எழுதியிருந்த கடிதத்தில்.
கவிஞர் சுனந்தா சதீஷ்,
என் தோழியும் ஆவார்.
ஆங்கிலக் கவிஞராக எனது
பெண்மொழி பேசும்படங்கள்
பதிவிலும் அறிமுகம்
செய்திருக்கிறேன்.









25 கருத்துகள்:

  1. கவிஞ்ர் சுனந்தா சதீஷ் அவர்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
    உங்கள் மொழிபெயர்ப்பு அருமை.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. கவிதையின் உண்மை சுடுகிறது. அம்மாவின் அடுப்பு போல. இப்படியொரு படமும் எடுத்து அதற்கான கவிதையும் தயாராக எழுதிவிட்டாரே.
    உங்கள் மொழிபெயர்ப்பு அருமை ராம்லக்ஷ்மி.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. கவிதை சித்திரமாக மனக்கண்ணில் விரிகிறது! பொருத்தமான படத்துடன் படிக்கையில் வெகு இனிமை! உங்கள் தோழியான கவிஞர் சுனந்தாவிற்கு நல்வாழ்த்துகள் + பாராட்டுகளைச் சேர்ப்பித்து விடுங்கள்!

    பதிலளிநீக்கு
  4. அருமையான சித்திரக் கவிதை அழகு...!

    பதிலளிநீக்கு

  5. / உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தையில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்./ எங்கோ படித்தமாதிரி இருக்கிறதா.?

    பதிலளிநீக்கு
  6. படமும் படத்திற்கேற்ற கவிதையும் அழகு. ஆங்கிலக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் உங்கள் பணி தொடரட்டும்......

    பதிலளிநீக்கு
  7. கவிதை (மொழிபெயர்ப்பு) அருமை. சுடும் உண்மைகள்.

    பதிலளிநீக்கு
  8. மனத்தைக் கலங்கடிக்கும் வரிகள். ஒரு நடைபாதைவாசியின் குழந்தை அதன் வாழ்க்கையில் நிம்மதி காணக்கூடிய ஒரே தருணம் இது! எத்தனை அழகாக அதைத் தன் கவிதையால் தாலாட்டித் தூக்கம் தொடரச் செய்கிறார் கவிஞர். காட்சி மனம் பிசைந்தாலும் கவிதை தேற்றுகிறது. மிக அழகான கவிதைக்கும் அதன் கரு சிதையாமல் அற்புதமாய் மொழிபெயர்த்தத் தங்களுக்கும் இனிய பாராட்டுகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  9. உங்கள் தோழியின் கவிதையும்,தங்களின் மொழிப்பெயர்ப்பும் அருமை அக்கா..

    பதிலளிநீக்கு
  10. குழந்தையின் அம்மாவின் முகத்தில் அப்பிக்கிடக்கும் கரிபோல சுடுகின்றது.

    கவி மொழிபெயர்புடன் படமும் அருமை.

    பதிலளிநீக்கு
  11. @கீத மஞ்சரி,

    அழகான கருத்துரைக்கு நன்றி கீதமஞ்சரி.

    பதிலளிநீக்கு
  12. @வல்லிசிம்ஹன்,

    மிக்க நன்றி வல்லிம்மா. இந்தப்படம் இணையத்திலிருந்து எடுத்தது. மனக்கண்ணால் எடுத்த படத்தைக் கவிதையாக வடித்திருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  13. நடைபாதையிலிருந்து கவிதை மிகச் சிறப்பு. மொழிபெயர்ப்புக் நன்றே மகிழ்ச்சி ராமலக௸மி. வளரியில் பயன்படுத்திக் கொள்ளலாமா?
    - அருணாசுந்தரராசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது. பயன்படுத்திக் கொள்ளுங்கள். மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.

      நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin