Friday, April 19, 2013

அதிகாலை நேரமே.. - சூர்யோதயம் - கபினி [பாகம் 2]


உதிக்கும் போதும் மறையும் போதும் பொன்மஞ்சளைப் பூசிக்கொண்டு
பிரகாசிக்கிற சூரியனை எந்நாளும்தான் பார்க்கிறோம் என்றாலும்  ஒருநாளைப் போல் ஒரு நாள் இருப்பதில்லை அது வானிலே தீட்டும் ஒளிச் சித்திரங்கள். அதுவும் ஏரி, கடல், நதிக்கரைகளில் என்றால் கேட்கவே வேண்டாம். வானோடு நீரும் தகதகக்கிற இரம்மியமான காட்சியில் உள்ளம் கொள்ளை போகிறது.

#1 அதிகாலை நேரமே..

புள்ளினங்கள் புறப்படும் வேளையில்
சவாரிக்குக் கிளம்புகின்றன பரிசல்களும்..
#2 தகதகவென..#3 தங்க நதி
நதி பார்த்தக் குடிலின் பின்புறத் தோற்றம்
விடுமுறைக்குக் பேரக் குழந்தைகளுடன் தங்க ஏற்ற இடம்தானா என விடுதியின் (Red Earth Resort) வசதிகள் குறித்துப் பகிரக் கேட்டிருந்தார்கள், பாகம் ஒன்றில் வல்லிம்மா. எல்லா ரிசார்ட்டையும் போல குழந்தைகளுக்கான சைக்கிளிங், பறவைகளுக்குத் தானியம் வழங்குதல், விளையாட்டுக்கென தனி இடம், இரவு உணவுக்குப் பின் விருப்பமானவர் கலந்து கொள்ள கேம்ப் ஃபைர் போன்ற பல நடவடிக்கைகளுடன் நீச்சல் குளம், க்ளப் ஹவுஸ் ஆகிய வழக்கமான வசதிகள் அனைத்துமே உள்ளன. ஆனால் கபினி ரிசார்ட் என்றாலே வனவிலங்கு சஃபாரி மற்றும் விடுதியிலிருந்தே விலங்குகளைப் பார்த்தல் இரண்டுமே முன்னிலையில் இருந்து வருகின்றன. கபினி அணைக்கு மறுதிசையில் காட்டை ஒட்டியவாறு அமைந்த விடுதிகளைப் போல் இல்லாமல் இது எதிர்த்திசையில் கிராமங்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது. ஒன்றரை இரண்டு கிலோமீட்டர் சாலையிடப்படாதப் பாதையில் பயணித்தே இடத்தை அடைய வேண்டியுள்ளது (‘ஆரம்பித்து சிலமாத காலமே ஆகிறது. அரசாங்கத்திடம் மனு செய்துள்ளோம் சாலைக்கு’ என்கிறார்கள்.)
முற்றத்தில்..
நதியில் நீர் பருக விலங்குகள் வரவோ, நாம் பார்த்து இரசிக்கவோ வழியில்லை. அதே போல சஃபாரி செல்லவும் இன்னொரு விடுதியான ஜங்கிள் ரிசார்ட்டுடன் ஒப்பந்தம் வைத்துக் கொண்டுள்ளார்கள். அதிகாலை நான்கு மணிக்குக் கிளம்பி ஜங்கிள் ரிசார்ட்டில் ஆறுமணிக்கு கொண்டு சேர்க்க வாகனம் வசதி செய்து கொடுக்கிறார்கள். அங்கிருந்து காட்டுக்குள் சஃபாரி சென்று விட்டு மதியம் இங்கு திரும்ப வேண்டும். மேலும் கீழுமாக பயணத்தில் சில மணிகள் கூடுதலாகச் செலவாகிறதே என இதை அசெளகரியமாக உணர்கிறார்கள் வருகிறவர்கள். மற்றபடி ரிலாக்ஸ் செய்ய மட்டுமே எனில் உகந்த இடம்.

குளிர்ச்சியாக இருக்கவென பிரத்தியேகமான கூரைகளுடன் அமைந்திருக்கின்றன குடில்கள். நதிபார்த்த வரிசைக்குக் கட்டணம் சற்றே அதிகம். முன், பின் பக்கம் வராந்தாக்கள், பெரிய முற்றத்துடனான வரவேற்பறையில் வான் பார்த்த ஜக்குசி, படுக்கை அறை அளவுக்குப் பெரிதான குளியலறைகள் ஆகியன குழந்தைகளை மகிழ்விக்கும். அதே நேரம் குழந்தைகள் இலகுவாக நடமாடும்படி இன்னும் சற்றே பெரிதாக அமைந்திருக்கலாம் படுக்கையறை என ஒருவர் ஆதங்கப்பட்டிருந்தார் இணையத்தில். அது உண்மைதான் எனத் தோன்றியது, ஃப்ரிஜ், ஏசி, டிவி போன்ற வசதிகளுக்குக் குறைவில்லாவிட்டாலும்.
முன்பக்கம்
சாப்பாடு மூன்று நேரமும் பஃபே. அற்புதமான சுவை. ஒவ்வொரு வேளையும் ஏதேனும் இரண்டு பாராம்பரிய உணவுவகை இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். விடுதியின் உரிமையாளர்களான தம்பதியர் நேரிலே ஒவ்வொரு விருந்தினரையும் சாப்பாட்டுக் கூடத்தில் சந்தித்து அளவளாவி உபசரிப்பதுடன் நிறைகுறைகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வது சிறப்பு. இயற்கையோடு ஒன்றிய இடத்தில் அமைந்து மனதுக்கு இதம் அளிப்பதே இவ்வகை விடுதிகளின் தனித்துவம். அத்தோடு அதி அற்புதமாகப் பராமரிக்கப்பட்டப் பூந்தோட்டம். போதாதா எனக்கு:)?

 #7 ஞாயிறின் பிரவாகம்

#8 பொன் எழில்:

குடிலின் பின்வராந்தாவிலிருந்து இதே இடத்தை மதிய வேளையில் எடுத்தது பாகம் ஒன்றில் முதல் படமாக இங்கே: செம்மண் பூமி, கபினி அணை, கபிலா ஆறு . ‘பூக்களின் அணிவகுப்பு அடுத்த பாகங்களில்’ என அந்தப் பதிவில் பெரிதாக அறிவிப்பெல்லாம் செய்திருந்தாலும் இன்னும் செயல்படுத்த முடியவில்லை. காரணம், அவ்வப்போது தலைகாட்டி மறையும் கழுத்து, (வலது) கை வலி இந்த முறை அதிகமாக உள்ளது. சிகிச்சையில் உள்ளேன். கணினி நேரத்தை ”வெகுவாக” குறைக்க வேண்டியக் கட்டாயம். குறிப்பாக அதிக நேரம் பிடிக்கிற புகைப்படத் தொகுப்புகளுக்குக் கொஞ்ச காலம் விடுமுறை! மற்றபடி, எங்கே முடிகிறது இணையத்தை விட்டு ஒரேடியாக விலக:)? தினம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இணையத்தில் செலவிடுவதில்லை என முடிவெடுத்திருக்கிறேன்.  எந்த அளவு வெற்றி பெறுகிறேன் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்:)!
***

25 comments:

 1. அருமையான போட்டோ...
  அழகா இருக்கு...

  ReplyDelete
 2. இணையத்தையும் விட வேண்டாம். ஒரேயடியாக நேரம் செலவிடவும் வேண்டாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

  சூரியன் மறைகிறதா உதிக்கிறதா என்று கண்டுபிடிக்க முடிவதில்லை இம்மாதிரிப் படங்களில்! படங்கள் அற்புதம்.

  ReplyDelete
 3. அருமையான அட்டகாசமான படங்கள்...

  உடல் நலம் மிகவும் முக்கியம்... மற்றவையெல்லாம் அப்புறம்... கவனித்துக் கொள்ளுங்கள்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அன்பு ராமலக்ஷ்மி முதலில் உடல்நலத்தில் கவனம் கொள்ளுங்கள். படங்கள் அத்தனையும் அற்புதம்.சூரியனை இத்தனை கோணங்களில் பதிந்தவர் நீங்களாகத் தான் இருக்க முடியும்.
  ரிஸார்ட் பற்றிய மேல் விவரங்களுக்கு மிகவும் நன்றி. நதியில் முதலை இருக்கிறது என்றீர்கள் அல்லவா. அவை வெய்யில் பார்க்க வெளிவரும்
  நோக்கம் வைத்திருக்கின்றனவா:)))))

  ReplyDelete
 5. காணக்கிடைக்காத அற்புத ஓவியங்கள்! ஆம் ஓவியங்கள் என்றுதான் சொல்லவேண்டும். இயற்கை வரைந்த அற்புதமல்லவா அவை! படத்திலேயே கண் கூசவைக்கும் சூரியனும் அதிகாலை நேர அழகும் மெய்மறக்கச் செய்கின்றன. ரிசார்ட் பற்றிய தகவல்கள் அங்கு செல்லவிரும்புபவர்களுக்கு கட்டாயம் உபயோகமாக இருக்கும். உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 6. அருமையான படங்கள்......

  உடல் நலம் முதலில்.... இணையத்தில் செலவிடும் நேரத்தினை சற்றே குறைத்துக் கொண்டு உடல் நலம் பேணலாம்... பின்னர் வந்து அசத்தலாம்!

  ReplyDelete
 7. மிகவும் அருமையான அழகான படங்கள். பாராட்டுக்கள்.

  உடல் நலனையும் கவனித்துக்கொள்ளுங்கள்.

  ReplyDelete
 8. ராமல்க்ஷ்மி, முதலில் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
  படங்கள் எல்லாம் அழகு.
  தங்கநிறத்தில் தக தகக்கும் கபினி ஆறும், தங்க தாம்பாளம் போல் ஜொலிக்கும் சூரியனும் வெகு அழகு.

  ReplyDelete
 9. ராம‌ல‌க்ஷ்மி மேட‌ம், இணைய‌த்திலிருந்து வில‌க‌ வேண்டாம். ச‌ற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்க‌ள்.. ப‌ட‌ங்க‌ள் அனைத்தும் அருமை..

  ReplyDelete
 10. அக்கா...
  காலையில் படம் மட்டுமே எனக்குத் தெரிந்தது... அதான் படம் அருமை என கருத்திட்டுச் சென்றேன்...

  இப்போ பார்த்தால் உடல் நலமில்லை என்று இருக்கிறது....

  உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்...
  மற்றவை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்...
  சுவரிருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்...
  கழுத்து வலியை சரி பண்ணுங்கள்...

  ReplyDelete
 11. பார்த்துக் கொண்டிருக்கலாம்போல படங்கள் எல்லாம் அழகு!

  ReplyDelete
 12. @சே. குமார்,

  நன்றி குமார், மீள்வருகைக்கும். கவனமாக இருக்கிறேன்.

  ReplyDelete
 13. கவிதையாக இருக்கின்றன அதிகாலைப் புகைப்படங்கள் எல்லாம்! மனசை நிறைத்தன. நீங்க சொல்லியிருக்கறது மிகச் சரி ராமலக்ஷ்மி மேடம்! அன்றாடக் கவலைகள் + வேலைப் பளுவினால இணையத்திலிருந்து விலகணும்னு நினைச்சாலும் முடியறதில்ல. நானும் இப்ப ஒரு நாளைக்கு ஒண்ணரை மணி நேரம் மட்டும் இதுக்குன்னு ஒதுக்கி செயல்படுறேன். வலைக்கான நேரத்தை திட்டமிட்டுக்கறதுங்கற உங்க முடிவு மிகச் சரி. ஏன்னா... உங்கள் உடல் நலம் மற்ற எதனையும் விட மிக முக்கியமானது!

  ReplyDelete
 14. @ஸ்ரீராம்.,

  மஞ்சள் வானம் இரு நேரங்களிலும் ஒரே போலதான். ஆனால் குறைந்த நேரமே இந்த வண்ணம் இருக்கிறது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே சூரியன் மேலே வந்து விடுகிறது. மாலையில் என்றால் கிடுகிடுவெனக் காணாது போய் விடுகிறது.

  இணைய நேரம் என்பதை விடப் புகைப்படங்கள் சார்ந்த கணினி நேரத்தைக் குறைக்க வேண்டியிருக்கிறது:). நீங்கள் சொல்லியிருப்பது போல் பேலன்ஸ்டாக செல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 15. @வல்லிசிம்ஹன்

  பல்வேறு பதிவுகளில் பகிர்ந்தவற்றைக் கவனித்து ஊக்கம் தந்திருக்கிறீர்கள். ஃப்ளிக்கரில் ஒரு தொகுப்பாக “வானம்“ எனும் தலைப்பில் சேகரித்து வைத்திருக்கிறேன்.

  இருக்கலாம்:). முதலைகளை நினைத்தால் பரிசல் பயணங்களே வேண்டாமென்று தோன்றுகிறது. நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 16. @வெங்கட் நாகராஜ்,

  நல்லது வெங்கட்:). மிக்க நன்றி.

  ReplyDelete
 17. @கோமதி அரசு,

  இரசித்தமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 18. @தியானா,

  விலகவில்லை. நேரத்தைக் குறைத்துக் கொள்ளத் திட்டம். நன்றி தியானா.

  ReplyDelete
 19. @பால கணேஷ்,

  நன்றி கணேஷ். திட்டமிட்டு செயல்படுவது அறிந்து மகிழ்ச்சி. அவ்வாறே தொடருகிறேன்.

  ReplyDelete
 20. செவ்வானில் தங்கப்பந்து ஜொலிக்கின்றது.

  நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin