திங்கள், 22 ஏப்ரல், 2013

நட்சத்திரக் கனவு - 'கல்யாண் நினைவுப் போட்டி' பரிசுக் கவிதை

இரு சிறுவிழிகள்
எத்தனைப் பரந்தவானை
இதயத்துள் நிரப்பி விடுகின்றன!
ஆயிரம் நட்சத்திரக் கண்களால்
வானமும் பூமியை
அளந்து கொண்டுதானே இருக்கும்?

நினைவு தெரிந்த நாளிலிருந்து
நான் பார்க்கும் வானில்
வித்தியாசங்கள் அதிகமில்லை.
பிரபஞ்சம் தோன்றிய நொடியிலிருந்து
வான் பார்க்கும் பூமியில்
எவ்வளவு வித்தியாசங்கள்?

அந்தியிலும் அதிகாலையிலும்
வர்ணத் தீட்டல்களின்
சாயங்கள் கூடிக் குறைந்தாலும்
மழையாய் அழுது
வெயிலாய் சினந்தாலும்
சூரிய சந்திரர்
முகில்கள் சூழப் பவனி வரும்
இரவு பகல்களுடன்
தார்மீகப் பொறுப்புகளினின்று
தடம் புரளாமல்
ஓர் குடையாய் விரிந்து
உலகை இரட்சித்திருக்கிற வானத்துள்..
எப்படிப் பதிவாகியிருக்கும்
மானுடரால்
மாபெரும் மாற்றங்களுக்கு
உள்ளாகித் தகிக்கிற
ஆதிகாலந்தொட்டு
இன்றையநாள் வரையிலான
பூமி?

இயற்கையிடத்து நன்றியின்மை
சகஉயிரிடத்து நேயமின்மை
அறிவியல் புரட்சியில்
அன்பைத் தொலைத்தமை என
முடிவற்று நீண்ட விடைகளின்
திரளோட்டத்தில் மிதியுற்று
உருத் தெரியாமல் போனது..
ஒரு நட்சத்திரமாகி வானிலிருந்து
உலகைப் பார்க்கிற எனது ஆசை.
***

‘கல்யாண் நினைவு’ உலகளாவியக் கவிதைப் போட்டியில் சிறப்பு ஆறுதல் பரிசு பெற்றக் கவிதை.

நன்றி ரியாத் தமிழ் சங்கம்! நடுவர்கள் அபுல் கலாம் ஆசாத், ராஜ சுந்தர ராஜன், பா. ராஜாராம் ஆகியோருக்கும் நன்றி.
*** 

23 கருத்துகள்:

  1. கவிதை அருமை ராமலெக்ஷ்மி..!.. நட்சத்திரமாகிப் பார்க்கின்ற ஆசை.. அற்புதம்..!

    பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.:)

    பதிலளிநீக்கு
  2. நட்சத்திரமாகி பூமியைப் ரசித்துப் படித்த கவிதை
    மனம் கவர்ந்தது,பரிசு பெற்றமைக்கும் பகிர்வுக்கும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பரிசுக்கு வாழ்த்துகள்.

    வித்தியாசமான சிந்தனையில் கவிதை பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனை, நல்ல கவிதை. அருமையாயிருக்கிறது. படித்துக் கொண்டே வரும்போது மழை தன்னுடைய தார்மீகக் கடமையிலிருந்து கொஞ்சநாளாய்த் தவறியிருக்கிறது என்று தோன்றினாலும் அது மழையின் குற்றமில்லை, மனிதனின் குற்றம் என்றும் தோன்றியது!

    பதிலளிநீக்கு
  5. வரிகள் அருமை... பரிசு பெற்றதற்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான கோணத்தில் யோசித்து அருமையான கவிதையைத் தந்திருக்கீங்க! பரிசுபெற்றமைக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. வானம் ப்டமும், கவிதையும் மிக நன்றாக இருக்கிறது.
    மனித மனம் மாறும் போது இயற்கை வழங்கும் என்று வலியுறுத்தும் கவிதை அருமை.
    உலகளாவிய கவிதைப்போட்டியில் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  8. அழகான கவிதைக்கு பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும் அக்கா..

    பதிலளிநீக்கு
  9. முதல் பேரா ஜோர். அடுத்த பேரா அதைவிட.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. விரிந்த வானத்தில் சரிந்த ஆசைகள். நல்ல கவிதை. மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள். நிறைய விருதுகள் கிட்டட்டும்.

    பதிலளிநீக்கு
  11. சிறப்பான கவிதை. பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  12. வானத்துக்கே வர்ணம் பூசும்கவிதை அருமை.வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin