Wednesday, April 10, 2013

பரிசலோட்டி பன்னீர் - படம் மீட்டெடுத்த காவேரிக்கரை நினைவும், ரிஷிகேஷ் நிகழ்வும்

செல்லுமிடங்களில் ஒரு சில நிமிடங்களோ மணிகளோ, சந்திக்கிற மனிதர்களின் பெயர்களைக் கேட்டறிந்து படத்தோடு அவர்கள் பெயரையும் குறிப்பிடுவார் தன் அனைத்துப் பயணக் கட்டுரைகளிலும் பதிவர் துளசி கோபால் அவர்கள். அவரிடத்தில் பிடித்த பல விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்த நல்ல வழக்கத்தைக் கடைப்பிடிக்க நினைத்தாலும் பலநேரங்களில் மறந்து போகிறேன்.

படத்தில் இருப்பவர் பெயர் பன்னீரா என்றால், இல்லை.
ஆனால் கபினி நதியில் எங்களுக்கு ‘பரிசல்’ ஓட்டியவர். அருகில் சென்ற இன்னொரு பரிசல் எப்படி பயணிகளைக் குஷிப்படுத்த சர்ர் சர்ர் என வட்டமடித்தது, முதலைகள் நிறைந்த ஆற்றில் குழந்தை நீரில் கையை விட்டு விளையாடிக் கொண்டிருந்தது
திரு. நடராஜன்
எப்படி எவர் கவனத்துக்கும் வராது போனது என்கிற எனது பகிர்வை  படங்களுடன் வாசித்ததும் திரு நடராஜன் கல்பட்டுஅவர்களுக்கு, பள்ளி வயதில் பரிசலில் சென்றபோது அது காவேரி ஆற்றில் கவிழ்ந்த உண்மைச் சம்பவம் நினைவுக்கு வந்திருக்கிறது. அனுபவத்தைக் கதையாகவே எழுதி என் படத்தை உபயோகித்துக் கொள்ள அனுமதி கேட்டு மடல் அனுப்பியிருந்தார். அந்த உண்மைக் கதையில்தான் இந்த பரிசலோட்டி, பன்னீராகத் தோன்றுகிறார். இனி கதை..

எழுதியவர்: திரு. நடராஜன் கல்பட்டுபரிசலோட்டி பன்னீர்
கோடையில் வழக்கமாக பள்ளியில் விடுமுறை வந்ததும் எங்காவது ஒரு ஊருக்குச் செல்வது என் வழக்கம்.  என் போன்ற ஆசிரியர்களுக்கு அப்போது தானே ஊர் சுற்றிட நேரம் கிடைக்கும்.

இந்த ஆண்டும் அப்படித்தான்.  ஏப்ரல் ஆறாம் தேதியில் இருந்து ஆரம்பித்தது விடுமுறை.  ஏழாம் தேதியே பஸ்ஸில் கிளம்பினேன் என் பிறந்த ஊரான திருச்சிக்கு.

என் மனதுள் ஒரு கிளு கிளுப்பு.  பார்க்கப் போகிறேனே நான் பிறந்த ஊரையும், என் பால்ய நண்பர்களையும், சுற்றித் திரிந்த இடங்களையும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்.

திருச்சியை அடைந்ததும் நேராக சறுக்குப் பாறைத் தெருவுக்கு சென்றேன் என் ஆப்த நண்பன் கிட்டன் இருந்த வீட்டைத் தேடி.  கிட்டன் வீட்டையும் காணோம்.  அங்கு அக்கம் பக்கத்தில் இருந்த ஓட்டுக் கூரை வீடுகள் அத்தனையும் காணோம்.  எல்லாம் மாடி வீடுகளாக மாறி இருந்தன.  ஒவ்வொரு வீடாக விசாரித்தேன் கிட்டன் பற்றி.  யாருக்கும் தெரிய வில்லை.

சரி என்ன செய்ய?  பொடி நடையாய் நடந்தேன் தெப்பக் குளம் அடைந்திட.

சிறிதும் மாற வில்லை யானை கட்டி மண்டபமும் மலைவாசல் பிள்ளையார் சன்னதியும் அதன் அருகே உள்ள பூக்கடைகளும்.  அதே வாசனை.  கடைகளுக்கடியே முன்பு போலவே புனுகுப் பூனைகள்.  மூச்சை இரண்டு மூன்று முறை ஆசை தீர இழுத்து விட்டேன்.  சென்னையில் எங்கு கிடைக்கும் இந்த நறு மணம்?

உள்ளூர ஒரு ஆசை எனக்கு.  தெப்பக்குளத்தின் மேற்குப் பக்கம் இருந்த பர்மா பஜாரையும் பார்க்க வேண்டும் என்று.  அங்கு தானே வாங்கி இருக்கிறேன் டேப் ரிகார்டர், கேசட்டுகள் என்று.  அதுவும் ரகசியமாய் எடுத்துக் கொடுப்பார் கடைக்காரர்.  நேர் வழியில் இறக்குமதி செய்யப் பட்டவை அல்லவே அவை.  எனது துரதிருஷ்டம் ஒரு கடையும் திறக்க வில்லை.  இன்னும் சற்று தூரம் நடந்தேன் ஆண்டார் தெருவை நோக்கி.  அங்கு தானே இருக்கிறது மாயவரம் லாட்ஜ்.  தங்கிட வசதியான இடம்.  அருமையான சாப்பாடு அதுவும் வாழை இலை போட்டு.  மீண்டும் அனுபவித்திட வேண்டாம் இந்த சுகம் எல்லாம்?

கிட்டனையும் பர்மா பஜாரையும் பார்க்க அதிருஷ்டம் இல்லா விட்டாலும் மாயவரம் லாட்ஜில் தங்கிட இடம் கிடைத்தது நாகலாந்து பரிசுக் குலுக்கலில் நாலு லட்சம் கிடத்தது போல் தோன்றியது எனக்கு.

இட்டிலி காப்பி சாப்பிட்டு, குளித்து, தோளில் ஒரு ஜோல்னாப் பையை மாட்டிக் கொண்டு பேருந்து நிலையம் அடந்தேன்.  எனக்காகவே கத்திருந்தது போல நின்றிருந்தது ஒரு குளித்தலை போகும் பேருந்து.  நான் ஏறியவுடன், “போலாம் ரீட்” என்றார் நடத்துனர்.

“எங்கெ சார் போகணும்?”

“முக்கொம்பு.”

“இறுபது ரூபா குடுங்க.”

பணத்தைக் குடுத்தேன்.  அவர் நீட்டிய டிக்கட்டை கையில் வாங்கி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டேன்.

என் மனதுக்குள் இறுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் ‘ரீ ப்ளே” ஆகிக் கொண்டிருந்தது.

அப்போது நான் ஈ.ஆர். உயர் நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில்.  கால் வருடப் பரிட்சை முடிந்து விடுமுறையில் எங்கள் ஆசிரியர் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா, முக்கொம்பிற்கும், குண சீலத்துக்கும்.

காவிரி ஆற்றில் கரை புறண்டு ஓடியது தண்ணீர்.  ஆற்றை பாலத்தின் வழியாகக் கடப்பதா இன்பம் தரும்?  பரிசலில் சென்று அவ்வப்போது தண்ணீரில் கை நனைத்து, துள்ளிடும் மீன்களைக் கண்டு களித்து பயணத்திடும் இன்பம் எங்கு வரும்?

நாங்கள் ஆற்றங் கரையை அடைந்த போது ஒன்றிரெண்டு பரிசல்கள் கிளம்பத் தயாராய் இருந்தன.  ஆற்றில் சில பரிசல்கள் பயணிகளுடன்.  அவற்றை நீண்ட மூங்கில் ஒன்றினைத் தன் கையில் வைத்துக் கொண்டு அதானால் தண்ணீருக்குக் கீழ் உள்ள தரையைக் குத்தி பரிசலை உந்தித் தள்ளியபடி நகர்ந்து கொண்டிருந்தனர் பரிசலோட்டிகள்.

எங்களைக் கண்டதும் ஒரு பரிசலோட்டி, “அய்யா வணக்கம்.  வாங்க.  சவுக்கியமா இருக்கீங்களா?” என்றார் எனது ஆசிரியரை நோக்கி.

எனது ஆசிரியரும் கேட்டார் பதிலுக்கு, “சவுக்கியமா இருக்குறயாப்பா பன்னீரு?” என்று.

“இருக்கேங்க.”  இது பரிசலோட்டி.
 
ஒருக்கால் எனது ஆசிரியர் ஜீயபுரத்தையோ அல்லது திருப்பராய்த்துறையைச் சேர்ந்தவராக இருக்குமோ அல்லது வருடா வருடம் பிள்ளைகளை சுற்றுலா அழைத்து வருவதால் ஏற்பட்ட பழக்கமாக இருக்குமோ?

எதுவாய் இருந்தால் என்ன? இந்தப் பரிவையும், பணிவையும் பட்டணத்தில் பணம் கொடுத்தாலும் காண முடியுமா?

“முக்கொம்பெல்லாம் எறங்கிகோங்க” என்று நடத்துனர் குரல் கொடுக்க இறங்கினேன் நான் பேருந்தை விட்டு.  மெல்ல நடந்தேன் காவிரிக் கரைக்கு.

எங்கே போயிற்று காவிரி ஆறு?  ஆறு ஓடிய இடத்தில் இன்று ஓடையல்லவா ஓடுகின்றது?

மெல்ல மணலில் நடந்தேன் தண்ணீரை நோக்கி.  ஆற்றில் (?) முன்பு போல் பல பரிசல்கள் இல்லை.  இரண்டு கரையிலும், ஒன்றிரண்டு பரிசல்கள்.  நட்டாற்றில் ஒன்று, சில பயணிகளுடன்.  பலர் தன் ஆடைகளை உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்தே தண்ணீரைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

காலியாய் நின்றிருந்த பரிசலை நோக்கி நடந்த எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

“அய்யா வாங்க.  சவுக்கியமா இருக்கீங்களா?”

கேட்ட குரல்.  ஆம் அதே பன்னீர்தான்.  தலை நரைத்திருந்தது.  உடல் மெலிந்திருந்தது.

“நீங்க எப்பிடி இருக்கீங்க?  சவுக்கியமா?” பதிலுக்கு நான் கேட்டேன்.

“ஏதோ இருக்கேங்க.  முன்னெ போல ஆத்துலெ எங்கெ ஓடுது தண்ணீ?  பரிசலுலெ ஆத்தெக் கடக்குறதுக்கு எங்கெ வராங்க சனங்க?  தண்ணீலெ நடந்தே போயிடறாங்க அக்கரைக்கு.  அய்யா நீங்க ஏறிக் குந்துங்க.  அவசரமாப் போகணுமா இல்லெ இன்னும் ரெண்டு மூணு பேரு வரதுக்குக் காத்திருக்கலாமா?”

“எனக்கு ஒண்ணும் அவசரம் இல்லெ.  நிதானமாப் போகலாம்.  இங்கெ பாருங்க என்னெ நீங்க அய்யான்னு கூப்பிடறதெ உடுங்க.  நடராஜன்னு பேரெச் சொல்லியே கூப்பிடுங்க.  நான் ஒங்களெ விட பத்துப் பன்னெண்டு வயசு சின்னவன்.  ஒங்களெப் பன்னீருன்னு கூப்பிடலெ?”

“அது எப்பிடீங்க?”

“அது அப்பிடித்தான்.”

“அம்பது வருசப் பளக்கம் சுளுவா உடுங்களா என்னெ?”

அப்போது அங்கு ஒருவர் வந்தார், ஆற்றைக் கடக்க.  பன்னீர் அவரைப் பார்த்ததும், “அய்யா வாங்க.  அப்பிடியே ஏறி ஒக்காருங்க.  நிக்காதீங்க.  அவசரமாப் போகணுமா?  ரெண்டு மூணு பேரு வறதுக்குக் காத்திருக்கலாம்?” என்றார்.

“காத்துக் கிட்டு இருக்கல்லாம் என்னாலெ முடியாது.  அவசரமாப் போகணும்.”

“சரி போகலாம்.  ஏறி உக்காருங்க.”

“ஒக்கார எல்லாம் என்னாலெ முடியாது.  என்னொட நல்ல வேட்டி சட்டையெல்லாம் அழுக்காயிடும்.”

“சரீங்க அய்யா.  அப்போ ஓரமா நிக்காதீங்க.  பரிசலு நடுவுலெ நில்லுங்க.  இல்லாட்டி பரிசலு கவுந்தூடும்.”

“சரி சரி” என்றபடி பரிசலுள் ஏறி நடுவில் நின்றார்.”

“அய்யா அக்கரைக்குப் போனதும் நான் மொதலுலெ ஆத்துலெ எறங்கி பரிசலெக் கரைக்கு இழுக்கறேன்.  நீங்க அப்புறமா மெதுவா எறங்குங்க.”

“சரி சரீ.  ஏதோ மொத தடவெ பரிசலுலெ போறவனுக்கு சொல்லித் தராப்புளெ புத்தி மதி சொல்ல வந்தூட்டான்.”  முணு முணுத்தார் அந்த பயணி.

மவுனமாகப் பயணித்தோம் மூவரும்.  தண்ணீரில் பன்னீர் மூங்கிலை முங்கி எடுக்கும் போது ஏற்பட்ட சத்தமும், தூரத்தில் சாலையில் வாகனங்கள் ஓடும் சத்தமும் மட்டும் கேட்டது.

அக்கரையை நெருங்கிடும் போது, அவசர ஆசாமி திடீரெனெ எழுந்து ஒரு பக்கம் சென்றிட, பரிசல் ஒரு பக்கமாய் சாய்ந்திட, நானும் சரிந்து அந்தப் பக்கம் சென்ற்டக் கவிழ்ந்தது ஆற்றில் பரிசல்.

எனக்கு ஓரளவு நீச்சல் தெரியுமாதலால் மெல்ல நீந்திக் கரையை அடைந்தேன்.  கவிழ்ந்த பரிசலும், மூங்கிலும் ஆற்று நீரில் சென்று கொண்டிருந்தன.

தண்ணீரில் குதித்த பன்னீர், ஆற்றில் அடித்துச் சென்றிடும் தன் பரிசலையும், கழியையும் காப்பாற்றிட நினைக்கவில்லை.  அவன் கவனமெல்லாம் அவ்வப்போது வெளியே தோன்றிடும் கையின் சொந்தக் காரரைக் காப்பாற்றுவதில் இருந்தது.

இந்த ஆண்டு விடுமுறையில் கண்டிட வில்லை இன்பங்கள் நான்.  கற்றேன்  பாடங்கள் சில.
***

மின்னஞ்சலில் கதையை வாசித்த போதே (உண்மைச் சம்பவத்தையொட்டி எழுதப்பட்ட ஒன்றாகையால்) பரிசலோட்டியும் அந்த மனிதரும் நல்லபடியாகக் கரை சேர்ந்திருக்க வேண்டுமென வேண்டிக் கொண்டிருந்தேன். மறுநாள் குழுமத்தில் கதையினைப் பகிர்ந்து விட்டு செய்தித்தாளை விரித்த திரு நடராஜன் கல்பட்டு அவர்கள் கண்ணில் பட்டிருக்கிறது இந்த செய்தி:

 “ரிஷிகேசத்தில் படகொன்று நட்டாற்றில் கவிழ்ந்திட, அப்படகில் பயணித்த ஆறு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய படகோட்டி கடைசியாய் கரைக்கு வந்து தன் உயிரை விட்டார்.

கனத்த மனதுடன் ‘இன்றும் இருக்கிறார்கள் இவ்வுலகில் தன் நலம் பாராது பிறர் நலம் பேணும் உத்தமர்கள். சாந்தி அடையட்டும் ராம் குமார் பாதக் என்ற அந்த படகோட்டியின் ஆத்மா’ என வேண்டியிருந்தார் அடுத்த குழும மடலில்.

தொழிலில் நேர்மை என்றால் என்னவெனக் கேட்கிற உலகில், தம் உயிரைச் துச்சமாகக் கருதி, தொழில் தர்மம் காக்கும் உயர்ந்த பண்பும், கருணை உள்ளமும் இந்த எளிய மக்களிடமே அதிகம் காணப்படுகிறது.
***
42 comments:

 1. கண்ணீர் வரவழைத்த உண்மைக் கதை :( பகிர்வுக்கு நன்றி திரு.நடராஜன் கல்பட்டு அவர்கள், மற்றும் ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 2. அந்த படகோட்டியின் நேர்மையை நினைத்து மனம் கலங்குகிறது... கதையாகவே இருந்திருக்கக் கூடாதா...?

  எளிய மக்களிடம் தான் இன்னும் அறிந்து, தெரிந்து கொள்ள வேண்டிய பல பண்புகள் குணங்கள் உள்ளன என்பது 100% உண்மை...

  ReplyDelete
 3. நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்... நன்றி...

  ReplyDelete


 4. தம்மை நம்பி வந்தவர்களை அக்கரை சேர்ப்பதே தம் கடமை என அக்கறையோடு தன் வாழ்வையும் துச்சமாய் மதித்து செயல்பட்ட படகோட்டியை நினைக்க மனம் கனக்கிறது.

  ReplyDelete
 5. மனம் பாரமாகிவிட்டது:(

  ReplyDelete
 6. பன்னீர் தண்ணீரில் மூழ்கியவரைக் காப்பாற்றி தானும் பிழைத்திருக்க வேண்டுமென்றே நம்புவோம்..

  ரிஷிகேஷ் :-((

  ReplyDelete
 7. நெகிழ்ச்சியாக இருக்கிறது. பன்னீரை பழைய ஆசிரியருக்கு எப்படித் தெரியும், இந்தப் புது ஆசிரியரை பன்னீர் அடையாளம் கண்டு கொண்டாரா போன்ற கேள்விகளுக்கு பதில் இல்லாமலேயே போய் விட்டது.

  ReplyDelete
 8. நேர்மைக்கும் எளிமைக்கும் தான் தொடர்பு அதிகம். கனத்துப்போனது.

  ReplyDelete
 9. கல்பட்டு நடராஜன் அவர்கள் கதை நன்றாக இருக்கிறது.
  உங்கள் படம் அதற்கு பொருத்தம்.
  ரிஷிகேஸ் படகோட்டியின் தியாகம் மனதை கனக்க வைத்து விட்டது.

  ReplyDelete
 10. எனக்கு முக்கொம்பென்றாலே நடுக்கம் தான்.
  இப்பொழுது படிக்கையில் கூட உடல் உறைகிறது.
  இந்தப் பன்னீர் அந்த அவசர ஆசாமியைக் காப்பாற்றி இருக்கவேண்டும் கடவுளே.


  முக்கொம்பில் டைவ் அடித்த 4 வயது மகனைத் தண்ணிரில் குதித்துக்
  காப்பாற்றியவர் என் சிங்கம்.
  ஒரு செகண்ட் கூடதாமதிக்கவில்லை.
  அப்போதெல்லாம் 18 அடி ஆழம் தண்ணீர் ஓடும்.
  ரிஷிகேஷ்...ரொம்பப் பரிதாபம். வாழ்வில் எல்லோரும் குழந்தைப் பருவத்திலேயே நீச்சல் கற்க வேண்டும். இல்லாவிட்டால் தண்ணீர் பக்கம் போகக் கூடாது.

  ReplyDelete
 11. கல்பட்டு நடராஜன் அய்யா !!
  நீங்களும் இ.ரெ.உயர் நிலைப்பள்ளி யா ?
  எப்போ அய்யா ?
  நானும் அங்கதாங்க.. 1955 வரை படிச்சேங்க...

  அது சரி...
  உண்மைக்கதையா இது...
  கல் பட்டு எழுதியத படிக்கிறவங்க
  கல் மனசு படைச்சிருந்தாலும்
  பன்னீரின் கதை கேட்டு
  கண்ணீர் விட்டு அழுவாங்க.. இது உண்மைலே சொல்றதுங்க.

  அய்யா !! நீங்க இப்ப எங்க இருக்கீக...
  எங்க தமிழாசிரியர் குல சேகரனை உங்களுக்குத் தெரியுமா ?
  அவரு எங்க இருக்காரு?
  எனக்கே எழுபத்தி இரண்டாச்சு...

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 12. படித்ததும் மனம் கனக்கிறது..இது கதையாகவே இருந்திருக்ககூடாதா?? இப்படி நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் பூமியில் மழை பெய்கிறது..பகிர்வுக்கு நன்றிக்கா!!

  ReplyDelete
 13. நியாயமும் நேர்மையும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை

  ReplyDelete
 14. தொழிலைத் தொழிலாகக் கொள்ளாமல் வாழ்க்கை நெறியாகக் கொள்பவரிடத்தே இது போன்ற தியாகங்கள் தினசரிச் செயல்களாகக் காணப்படுகின்றன. கனக்கிறது.
  கல்பட்டி நடராஜன் அருமையாக எழுதியிருக்கிறார் - பாராட்டுக்கள்.

  வல்லிசிம்ஹனின் பின்னூட்டம் அதிர்ச்சியாக இருக்கிறது. (சிங்கத்துக்கு ஜே!)

  ReplyDelete
 15. சுப்புத் தாத்தாவுக்கு தெரியாத ஊர் ஆள் விஷயமே கிடையாதா?

  ReplyDelete
 16. // இல்லாவிட்டால் தண்ணீர் பக்கம் போகக் கூடாது.//

  ஒண்ணு சொன்னாலும் எனக்காவே சொன்ன மாதிரிலே இருக்கு.

  நீங்க சொன்ன நாலு வார்த்தைக்குமே
  எஸ். எஸ். எஸ். எஸ்.

  எங்கப்பா கார்யம் 1968 லே திருச்சி காவிரிக்கரைலே பத்து நாள் நடக்கும்போது கூட நான் சொம்பு எடுத்துண்டு
  போய் மொண்டு மொண்டு குளிச்சேன்.

  என்ன தான் இருந்தாலும் அஷ்டமாதிபதி வாட்டர் ராசி.
  பயமாயிருக்கில்லையா...

  வாட்டர் கூட காய்ச்சித்தான் குடிப்பேன்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
 17. இன்றும் நம்பி வந்தவர்களை கரை சேர்கிற பரிசலோட்டிகள் நிறைந்துள்ள ஊர்/

  ReplyDelete
 18. பரிசலோட்டிகள் இங்கு ஒரு உருவகமே/

  ReplyDelete
 19. //பரிசலோட்டிகள் இங்கு ஒரு உருவகமே/

  ரசித்தேன் விமலன்.

  ReplyDelete
 20. மனதைத் தொட்ட உண்மைக் கதை....

  ReplyDelete
 21. @திண்டுக்கல் தனபாலன்,

  நன்றி தனபாலன், பதிவைப் பகிர்ந்து கொண்டதற்கும்.

  ReplyDelete
 22. @கீதமஞ்சரி,

  கருத்துக்கு நன்றி கீதமஞ்சரி.

  ReplyDelete
 23. @துளசி கோபால்,

  ஆம், அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 24. @அமைதிச்சாரல்,

  அப்படிதான் நம்புகிறேன் சாந்தி.

  கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 25. @ஸ்ரீராம்.,

  /ஒருக்கால் எனது ஆசிரியர் ஜீயபுரத்தையோ அல்லது திருப்பராய்த்துறையைச் சேர்ந்தவராக இருக்குமோ அல்லது வருடா வருடம் பிள்ளைகளை சுற்றுலா அழைத்து வருவதால் ஏற்பட்ட பழக்கமாக இருக்குமோ?/ என நினைக்கிறாரே. புது ஆசிரியர் சிறுவனாய் பார்த்த அதே சாடையில் இருந்திருக்கலாம். நம் ஊகத்துக்கே தந்து விட்டிருக்கிறார் கதாசிரியர். நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 26. @Sasi Kala.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி கலா.

  ReplyDelete
 27. @கோமதி அரசு,

  கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 28. @வல்லிசிம்ஹன்,

  அவசர ஆசாமியும் பன்னீரும் பிழைத்திருப்பார்கள் என்றே நம்புவோம்.

  பதினெட்டடி ஆழத் தண்ணீரிலா? பாசமும் தீரமும் இணைந்த செயல்!

  ஆம், நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீர்பக்கம் போகமலிருப்பதே நல்லது. ஆனாலும் ஆசை யாரை விடுகிறது?

  கருத்துப் பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 29. @வல்லிசிம்ஹன்,

  அவசர ஆசாமியும் பன்னீரும் பிழைத்திருப்பார்கள் என்றே நம்புவோம்.

  பதினெட்டடி ஆழத் தண்ணீரிலா? பாசமும் தீரமும் இணைந்த செயல்!

  ஆம், நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீர்பக்கம் போகமலிருப்பதே நல்லது. ஆனாலும் ஆசை யாரை விடுகிறது?

  கருத்துப் பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா.

  ReplyDelete
 30. @sury Siva,

  நடராஜன் கல்பட்டு சாருக்கு 83 வயதாகிறது. தற்போது சென்னையில் வசிக்கிறார். பெங்களூரில் இருக்கும் மகள் வீட்டுக்கு வந்திருக்கையில் 2 முறை சந்தித்திருக்கிறேன். உங்கள் கேள்விகளை அவர் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன்.

  ---

  எனக்கும் நீச்சல் தெரியாது:)! கணவருக்கும் மகனுக்கும் தெரியுமானாலும் படகில் பயணிக்க ஆசைப்பட்டது நான்தான்:)! குமரகத்தில் இது போன்றதொரு படகுப் பயணம் அமைதியான ஏரி நீரைக் கிழித்துக் கொண்டு, சூரிய உதயத்தை, பறவைகளை, கரையோர வீடுகளை இரசித்தபடி நல்ல அனுபவமாய் இருந்தது. ஏராளமான படங்களும் எடுத்தேன், படகில் இருந்தபடி. ஆனால் இங்கே ஆற்றில் அலைகளும் அதிகம். பரிசலின் ஆட்டமும் அதிகம்.

  ---

  நன்றி சூரி சார்.

  ReplyDelete
 31. @அப்பாதுரை,

  /வாழ்க்கை நெறியாகக் கொள்பவரிடத்தில்../ மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  கருத்துகளுக்கு நன்றி.

  ReplyDelete
 32. @விமலன்,

  உருவகம் என்பது சரியே. அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் விமலன்.

  நன்றி.

  ReplyDelete
 33. மனம் பாரமாகிவிட்டது.

  ReplyDelete
 34. இந்தக் கதையைப்படித்து, ரசித்து, பின்னூட்டம் இட்டவர்களுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

  இந்தக் கதையில் பல உண்மைச் சம்பவங்களும் சில கற்பனைகளும் உள்ளன.

  நான் திருச்சி ஈ.ஆர். உயர் நிலைப் பள்ளியில் படித்தது உண்மை.

  முக்கொம்புக்கு உல்லாசப் பயணம் சென்றது உண்மை. பரிசல் பயணம் உண்மை.

  பல ஆண்டுகளுக்குப் பின் திருச்சி சென்றது உண்மை, கிட்டனைத் தேடி சறுக்குப் பாறைத் தெரு சென்று காணாது மலை வாசல் படி வழியிறங்கி, தெப்பக்குளம் சென்றடைந்து பர்மா பஜார் கடைகள் திறந்திடாதிருக்கக் கண்டது உண்மை. மாயவரம் லாட்ஜில் உணவருந்தியது உண்மை.

  இரண்டாம் முறை முக்கொம்பு சென்றது கற்பனை.

  மணமேல்குடி அருகே எனது சக ஊழியர் ஒருவர் நான் அமர்ந்திருந்த படகில் தவறாக ஏறிடபடகோட்டி அவரிடம் 'அய்யா நின்ற நிலையில் படகின் பக்கச் சுவர் மீது கால் வைத்து ஏறாதீர்கள். அப்படியே காலைத் தூக்கு படகுள் வைத்து ஏறுங்கள் என்று சொல்லிய்தைக் கேட்காது)(, படகு சாய்ந்திட அவர் வேகமாக நின்ற நிலையில் மறு புறாம் தாவிட, படகு கவிழ, நான் படகின் கீழ் எனது பென்டேக்ஸ் கேமாராவுடன் நீர்ல் சிக்கிட அன்று உயிர் பிழைத்ததே ஒரு படகோட்டியால் தான்.

  ஏழைப் படகோட்டியின் மனப் பாங்கினை வெளிக் கொணறத்தான் இந்தக் கதையை எழுதினேன்.

  ReplyDelete
 35. கண்ணீரை வரவைத்த உண்மைக் கதை...
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

  இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 36. பலரையும் காப்பாற்றிய படகோட்டியின் கதை நெஞ்சைத்தொட்டது.

  இனிய புதுவருட வாழ்த்துகள்.

  ReplyDelete
 37. @மாதேவி,

  கருத்துக்கு நன்றி மாதேவி. தங்களுக்கும் என் வாழ்த்துகள்.

  ReplyDelete
 38. @நடராஜன் கல்பட்டு,

  நண்பர்களுக்காக அளித்திருக்கும் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி கல்பட்டு sir.

  ReplyDelete
 39. @சே. குமார்,

  நன்றி குமார். தங்களுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin