Wednesday, September 14, 2011

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம் - கோமதி நடராஜனின் கட்டுரைத் தொகுப்பு - ஒரு பார்வை (வல்லமையில்..)

சிந்திக்க ஒன்றும் சிரிக்க ஒன்றுமாக இரண்டு வலைப்பூக்களை நிர்வகித்து, இணையத்தில் ‘கோமா’ என அறியப்பட்டும், அழைக்கப்பட்டும் வரும் திருமதி. கோமதி நடராஜனின் முதல் புத்தகம். கடந்த முப்பது ஆண்டு கால எழுத்துப் பயணத்தில், வாழ்க்கை அனுபவத்தைக் கூர்ந்த அவதானிப்புடன் அந்தந்த காலக்கட்டத்திலேயே பதிந்து வைத்தவற்றின் முழுத் தொகுப்பு. இதில் சில கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியானவை. சில அவரது வலைதளங்களில் பகிர்ந்தவை.

எனது பதினைந்தாவது வயதிலிருந்து இவரது எழுத்துக்களைத் தொடர்கிறேன் என்பது ஒரு விசேஷம். எழுபதுகளில் இவரது முதல் சிறுகதையே ஆயிரம் ரூபாய் பரிசினை வென்று பேசப்பட்ட ஒன்றாக அமைந்திருந்தது. எண்பதுகளில் என் எழுத்துப் பயணமும் ஆரம்பமாக இருவரும் ஒரே சமயத்தில் ‘நண்பர் வட்டம்’ சிற்றிதழிலும், பிறகு 2000-ன் ஆரம்பத்திலிருந்து திண்ணை இணைய இதழிலும் எழுதி வந்துள்ளோம். திரு நெல்லைக் கண்ணன் அவர்களது சிறப்பான அணிந்துரையுடன், திரு லேனா தமிழ்வாணனின் மணிமேகலைப் பிரசுர வெளியீடாக அமைந்த இவரது முதல் தொகுப்பை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி.

தான் பார்த்தவற்றினின்று மட்டுமின்றி தனைப் பாதித்த, வருத்திய விஷயங்களிலிருந்தும் படிப்பினையை எடுத்துக் கொண்டதோடன்றி அதைக் கற்பித்திவர்களையும் போற்றும் பண்பே சொல்கிறது நமக்கு இப்புத்தகத்துக்கும் அன்பே ஆதாரமாக அமைந்திருப்பதை: “சிலர் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுத் தந்தார்கள். ஒரு சிலர் எப்படி இருக்கக் கூடாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லித் தந்தார்கள். இருவருமே நான் போற்றும் ஆசிரியர்கள்தாம்.

சுயமுன்னேற்றப் புத்தகங்களைத் தேடித் தேடி வாசிக்கிறோம். நம் சுயத்தை அறிந்து கொள்ள, புடம் போட்டு வெளிவர உதவும் மந்திரக் கோலாக இப்புத்தகம் வாசிப்பவரால் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் அமைந்திருக்கிறது.

அன்றாட வாழ்வில் அனுசரிக்கப்பட வேண்டிய பலவற்றை, அவசர உலகில் நின்று சிந்திக்க அவசியமற்றதாய் நாம் ஒதுக்கிச் செல்லும் தவறுகளை, உணர்த்தும் விதமாக அமைந்த தனது கருத்துக்களை வலிந்து திணிக்கவும் முற்படவில்லை.

தான் முப்பது ஆண்டு காலமாக சேகரித்த பொக்கிஷம் என்கிறார் இப்புத்தகத்தை ஆசிரியர். நமக்கும் அப்படியே. கொட்டிக் கிடக்கும் பொற்காசுகள் ஒவ்வொன்றும் வாசிப்பவர் வாழ்வை வளமாக்கப் போவது நிச்சயம். இதமான அனுபவ மொழிகளாய்ச் செதுக்கி வைத்ததோடு தன் வேலை முடிந்ததெனக் கருதுகிறார் தான் சொன்ன கருத்துக்கே முன் மாதிரியாக நின்று: “அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதீர்கள். இந்த விஷயத்தில், நாம் எல்லோரும் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகம் போல் காத்திருப்போம்.

இதோ இப்புத்தகமும் காத்திருக்கிறது. வாருங்கள் உள்ளே செல்வோம்.

மொத்தம் பதினான்கு அத்தியாயங்கள். ஒரு சிலவற்றினின்று ஒருசில துளிகளைப் பகிர்கிறேன்.

குடும்பத்தைக் கோவிலாக்குவோம்’ அத்தியாயத்தில், “மழையில் நனைகிறேன், வெயிலில் காய்கிறேன், எல்லாவற்றிற்கும் நான் தானா அகப்பட்டேன் என்று குடையும், குளிர் நிழல் தரும் ஆலமரமும் நினைத்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் குடும்பத்தின் ஒற்றுமையைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கவேண்டியவர்களின் சலிப்பும் முணுமுணுப்பும்.

உரையாடும் கலை’யில், “சிலருக்கு, அடுத்தவரை ஏளனப்படுத்திப் பார்ப்பதில் அலாதியான சந்தோஷம் இருப்பதாக நினைத்து, வார்த்தைகளுக்கு நடுவே குத்தலும் கேலியும் விதைத்து உரையாடுவர்.... அப்படிப்பட்டவர்கள் உண்மையான சந்தோஷத்தின் அர்த்தத்தை உணராதவர்களாகத்தான் இருக்கமுடியும்..” என்கிறவர் ஜடப்பொருட்களுக்குத் தரும் கவனிப்பையும் கரிசனத்தையும் ஏன் கண்ணெதிரே நடமாடும் மனிதர்களுக்கு இவர்கள் தருவதில்லை என ஆற்றாமையுடன் வினவுகிறார். “கனிவாய் உரையாட, மனித நேயத்தின் பெருமையை உணர்ந்திருந்தாலே போதும்” என்கிறார்.

சிற்பிகளைச் செதுக்கும் சிப்பிகளே!’, “குழந்தைகளின் மனதில் ஒரு நல்ல குணம் பதிய வேண்டும் என்று உண்மையாகவே நீங்கள் விரும்பினால், அதைச் சொல்லிக் காட்டுவதை விடச் செயலில் காட்டுவதே சிறந்தவழி....பிஞ்சுக் கால்கள் என்றுமே தனக்கு முன்னே தெரியும் காலடிச் சுவடுகளைப் பின்பற்றித்தான் நடை போடும்....குழந்தைகள் உங்கள் அடிமைகள் என்ற தவறான எண்ணத்துடன் அவர்களை அடக்க முயலாதீர்கள்....குழந்தைகளிடையே அன்பு, கண்டிப்பு இவற்றில் பாரபட்சம் காட்டினால், அவர்களிடையே நிலவ வேண்டிய ஒற்றுமையை முளையிலேயே கிள்ளி எறியும் மோசமான தோட்டக்காரர் நீங்கள்.

உதவும் மனங்களுக்கு உகந்த குணங்கள்.’ பிரதிபலன் எதிர்பாரா சுனை நீராக மனம் இருக்க வேண்டுகிறார். “உதவி பெற்றவரே உங்களுக்கு உதவ வேண்டும் என்று இறைவனும் நினைத்திருந்தால், இந்தப் பரந்த உலகில், உறவு வட்டம் மிகவும் சுருங்கியிருக்கும்.” அடுத்தவருக்கு உதவும் சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு இறைவனுக்கு நன்றி சொல்லப் பழகிக் கொண்டால் ‘நான் உதவினேன்’ எனும் மமதை மறையும் என்கிறார்.

ஆளாக்கினோம் என்பதற்காகக் குழந்தைகளிடம் கூட பிரதிபலனை எதிர்பாராதீர்கள் என்கிறார். பெற்றோருக்கும் உற்றாருக்கும் செய்கிற உதவிகளைச் சொல்லிக் காட்டுபவர்களுக்காக கடமைக்கும் உதவிக்கும் இடையேயான வித்தியாசத்தை அழகான உதாரணத்துடன் விளக்கியிருக்கிறார்.

நாம் நாமாக..’ எந்நேரமும் இருக்க முயன்றிடுவது சரிதானா எனும் கேள்வியை எழுப்புகிறார். “நம் சந்தோஷம், அடுத்தவர் வேதனையில் அமையக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதும்.” என்கிறார்.

பாசம் நிறைந்திருக்க வேண்டிய குடும்ப அமைப்பில் முன்னோர் விட்டுச் செல்லும் பணத்தினால் எப்படியெல்லாம் பூசல்கள் எழுகின்றன என்பதைச் சொல்லுகிறது ‘பத்திரம் பத்திரம்’: “நம் சொந்த முயற்சியில் ஈட்டிய ஒரு கோடி நமக்கு அடிமை என்றால், அடுத்தவர் உரிமையைத் தட்டிப் பறித்து எடுத்த ஒற்றை ரூபாய் ஆயுளுக்கும் நம்மை ஆட்டி வைக்கும் சர்வாதிகாரி.”

மன அஜீரணத்துக்கு மருந்து’ வழங்குகிறார். ‘நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர..’ வழிகாட்டுகிறார்.

இந்த அத்தியாயங்களுக்கு எல்லாம் சிகரமாக அமைந்திருக்கிறது கடைசி அத்தியாயம்: ‘அறுபதுக்கு அன்புக் கட்டளைகள்’. தமக்கென்று வாழாமல் குடும்பத்துக்காகவே உழைத்து, பிள்ளைகள் வாழ்வை சீரான பாதையில் செல்ல வைத்த பின்னும் தம் மேல் அக்கறையின்றி இருப்பவர் ஆயிரம் ஆயிரம் பேர். ஓய்வு காலத்தில் இவர்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவையாக பகிர்ந்திருக்கும் ஆலோசனைகள் பெரியவர்களைப் பரவசப் படுத்துவதாக அமைந்திருக்கிறது. வாசிக்கும் இளைஞர்களும் தம் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளைச் சரிவர செய்கிறோமா என சிந்திக்க வைப்பதாகவும் உள்ளது. பெற்ற பலனை மற்றவரும் அடைந்திட ஒன்றுக்குப் பத்தாக வாங்கி வைத்துக் கொண்டு சந்திக்கும் பெரியவர்களுக்குப் பரிசாக வழங்கினால் உங்களை மனதார வாழ்த்தி ஆசிர்வதிப்பார்கள்.

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்”அன்பு எனும் சொல்லுக்கு அகராதியாய், நமைச் சுற்றி இருப்பவரை மதிக்கவும், நம்மை நாமே நேசிக்கவும் சொல்லித் தந்து, அன்பால் மட்டுமே இப்பூவுலகம் சுழல, அன்புடன் வேண்டி நிற்கிறது. படைத்தவரும் உயர்ந்து நிற்கிறார்.

அடுத்து இரண்டு தொகுப்புகளாகத் தனது ஹாஸ்யக் கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளிக் கொணர ஆசிரியர் எடுத்துவரும் நல்முயற்சி விரைவில் வெற்றிபெற வாழ்த்துவோம்.
***

ன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்
பக்கங்கள்:76 ; விலை:ரூ.40
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம்
தொலைபேசி எண்கள் : 044-24342926, 044-24346062
மின் அஞ்சல் : manimekalai1@dataone.in
இணையத்தில் வாங்கிட விவரங்களுக்கு: http://www.tamilvanan.com/tech/book_rate_july_2011.pdf
*** ***

14 செப்டம்பர் 2011, வல்லமை இணைய இதழில்.., நன்றி வல்லமை!

46 comments:

 1. புத்தகத்தின் தலைப்பே மென்மையான வருடலாக. புத்தக விமர்சனமும் வெகு சிறப்பாக.

  ReplyDelete
 2. நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 3. வெகு அருமையாக மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.நன்றி.

  ReplyDelete
 4. http://www.tamilvanan.com/tech/book_rate_july_2011.pdf

  இந்த ஆண்டு வெளியான புத்தக விலைப்பட்டியல் இங்கே

  ReplyDelete
 5. @வாழ்த்துகள் கோமாக்கா..

  உங்க புத்தகம் எப்போ வெளியிடப்போறீங்க ராமலஷ்மி ;-)

  ReplyDelete
 6. //“அண்டி வந்து கேட்டால் ஒழிய அறிவுரை வழங்காதீர்கள். இந்த விஷயத்தில், நாம் எல்லோரும் அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகம் போல் காத்திருப்போம்.//

  மிகச்சரி. உவமை பிரமாதம்.

  உரையாடல் கலையில் சொல்லப் பட்டுள்ள நபர்களை நானும்...இல்லை நாமும் நிறைய சந்தித்திருக்கிறோம்.

  // “நம் சந்தோஷம், அடுத்தவர் வேதனையில் அமையக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதும்.” என்கிறார்//

  உண்மை. அனுபவ வரிகள். நல்ல பகிர்வு. விரைவில் புத்தகம் வாங்கி விடுவேன்.

  ReplyDelete
 7. தலைப்பே இனிமையாக உள்ளது!

  ReplyDelete
 8. அட! நம்ம கோமா!!!!!!

  அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ்?????

  மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்!

  கட்டுரைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 9. அருமையான விமர்சனமும் வாழ்த்தும் மனதை நெகிழவைத்தது.வாழ்த்துக்கள்.
  அத்தைக்கு சளைத்தவள் அல்லவே நீங்களூம்.

  ReplyDelete
 10. அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. அருமை. குறிப்பாக புத்தகத்திலிருந்து எடுத்து காட்டிய வரிகள் அற்புதமாய் இருந்தது. வாழ்த்துக்கள் திருமதி. கோமா மேடம்

  ReplyDelete
 12. அக்கா, விமர்சனத்திற்கும், அழைப்பிற்கும் நன்றி.

  புத்தகம் எனக்காகவே எழுதப்பட்டதுபோலத் தோன்றுகீறது. :-))))

  “ஹா.. ஹா.. ஹாஸ்யம்” என்ற வலைத்தளத் தலைப்பிற்கும், “அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்” என்ற புத்தகத் தலைப்பிற்கும் இருக்கும் தொடர்பைப் புரிந்துகொண்டேன்.

  ReplyDelete
 13. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 14. அன்பான அறிவுரைகளை அடங்கிய புத்தகம் என்று சொல்லி அருமையா அறிமுகப்படுத்தி இருக்கீங்க..ராமலக்‌ஷ்மி..

  அலமாரியில் காத்திருக்கும் புத்தகம் போன்ற அறிவுரைகள்.. ரொம்ப நல்லா இருக்கு இந்த விசயம்.

  ReplyDelete
 15. புத்தக தலைப்பே அன்பு மயமா இருக்கே வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. //“நம் சந்தோஷம், அடுத்தவர் வேதனையில் அமையக் கூடாது என்பதில் மட்டுமே கவனமாக இருந்தால் போதும்.” என்கிறார்.//
  :))))

  நல்ல விமர்சனம் அக்கா.

  ReplyDelete
 17. படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

  அத்தைக்கும் உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அருமையான புத்தக விமர்சனம், ராமலக்ஷ்மி...

  நானும் வாசிக்க மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 20. தமிழ் உதயம் said...
  //புத்தகத்தின் தலைப்பே மென்மையான வருடலாக. புத்தக விமர்சனமும் வெகு சிறப்பாக.//

  நன்றி ரமேஷ்.

  ReplyDelete
 21. goma said...
  //நெகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

  பகிர்ந்ததில் எனக்கே மகிழ்ச்சி.

  ReplyDelete
 22. kothai said...
  //வெகு அருமையாக மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.நன்றி.//

  மிக்க நன்றி.

  ReplyDelete
 23. goma said...
  //இந்த ஆண்டு வெளியான புத்தக விலைப்பட்டியல் இங்கே//

  பதிவிலும் இணைத்து விட்டுள்ளேன்.

  ReplyDelete
 24. அமைதிச்சாரல் said...
  //@வாழ்த்துகள் கோமாக்கா..//

  வல்லமையில் தெரிவித்திருக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சாந்தி.

  //உங்க புத்தகம் எப்போ வெளியிடப்போறீங்க ராமலஷ்மி ;-)//

  இப்போதைக்கு அப்படியான எண்ணம் இல்லை! என் மனதுக்கு திருப்தி ஏற்படக் காத்திருக்கிறேன்:)!

  ReplyDelete
 25. ஸ்ரீராம். said...
  //அனுபவ வரிகள். நல்ல பகிர்வு. விரைவில் புத்தகம் வாங்கி விடுவேன்.//

  மகிழ்ச்சியும் நன்றியும் ஸ்ரீராம்.

  ReplyDelete
 26. ஸாதிகா said...
  //தலைப்பே இனிமையாக உள்ளது!//

  நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 27. துளசி கோபால் said...
  //மனம் நிறைந்த இனிய பாராட்டுகள்!

  கட்டுரைக்கு நன்றி ராமலக்ஷ்மி.//

  மகிழ்ச்சி. நன்றி மேடம்.

  ReplyDelete
 28. asiya omar said...
  //அருமையான விமர்சனமும் வாழ்த்தும் மனதை நெகிழவைத்தது.வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆசியா!

  ReplyDelete
 29. Lakshmi said...
  //அருமை. வாழ்த்துக்கள்.//

  நன்றிங்க லக்ஷ்மி.

  ReplyDelete
 30. மோகன் குமார் said...
  //அருமை. குறிப்பாக புத்தகத்திலிருந்து எடுத்து காட்டிய வரிகள் அற்புதமாய் இருந்தது. வாழ்த்துக்கள் திருமதி. கோமா மேடம்//

  மகிழ்ச்சியும் நன்றியும் மோகன் குமார்.

  ReplyDelete
 31. ஹுஸைனம்மா said...
  //அக்கா, விமர்சனத்திற்கும், அழைப்பிற்கும் நன்றி.

  புத்தகம் எனக்காகவே எழுதப்பட்டதுபோலத் தோன்றுகீறது. :-))))//

  அவரது பதிவில் முன்னர் நீங்கள் கேட்டபோதே சொல்ல இருந்தேன் காத்திருக்குமாறு:)! நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 32. சசிகுமார் said...
  //பகிர்வுக்கு நன்றி//

  நன்றி சசிகுமார்.

  ReplyDelete
 33. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //அன்பான அறிவுரைகளை அடங்கிய புத்தகம் என்று சொல்லி அருமையா அறிமுகப்படுத்தி இருக்கீங்க..ராமலக்‌ஷ்மி..//

  நன்றி முத்துலெட்சுமி.

  ReplyDelete
 34. MANO நாஞ்சில் மனோ said...
  //புத்தக தலைப்பே அன்பு மயமா இருக்கே வாழ்த்துக்கள்...//

  நன்றி மனோ.

  ReplyDelete
 35. சுசி said...
  //நல்ல விமர்சனம் அக்கா.//

  நன்றி சுசி.

  ReplyDelete
 36. சுந்தரா said...
  //படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் விமர்சனம்.

  அத்தைக்கும் உங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்!//

  மிக்க நன்றி சுந்தரா.

  ReplyDelete
 37. ஆயிஷா said...
  //அருமை. வாழ்த்துக்கள்.//

  நன்றி ஆயிஷா.

  ReplyDelete
 38. Alarmel Mangai said...
  //அருமையான புத்தக விமர்சனம், ராமலக்ஷ்மி...

  நானும் வாசிக்க மிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.//

  நல்லது அலர்மேலு:)! நன்றி.

  ReplyDelete
 39. அருமையான புத்தகத்திற்கு உங்கள் பாணியில் உங்கள் பார்வையும் அருமை, ராமலக்ஷ்மி. கோமா அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 40. @ கவிநயா,

  தங்கள் வாழ்த்துக்களை அவரிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மிக்க நன்றி கவிநயா:)!

  ReplyDelete
 41. மிக மிக நன்றி ராமலக்ஷ்மி. இத்தனையொரு முத்தான அத்தையைப் பெற்ற நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்.
  அவர்கள் தொகுத்திருக்கும் இந்தப் புத்தகமு முத்துக்களாக, ரத்தினங்களாக
  கருத்துகளைத் தந்திருக்கிறது. வெகு அருமை.
  திருமதி கோமா என்ற கோமதி நடராஜனுக்கும் என் நமஸ்காரங்கள்.

  ReplyDelete
 42. புத்தகத்தை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிறது தங்கள் விமர்சனம்.

  'அத்தை'க்கு எங்கள் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

  ReplyDelete
 43. @வாழ்த்துகள் கோமாக்கா..

  உங்க புத்தகம் எப்போ வெளியிடப்போறீங்க ராமலஷ்மி ;-)

  அமைதிச்சாரல்
  மீ த ஃபர்ஸ்ட் என்று சொல்ல ,
  அத்தைக்கு வழிவிட்டு அம்மையார் பொறுமையாய் காத்திருக்கிறார்.இது
  என் ஊகம் உண்மையும் இதுதான் ...இல்லையா ராமலஷ்மி?

  ReplyDelete
 44. வல்லிசிம்ஹன் said...
  // வெகு அருமை. திருமதி கோமா என்ற கோமதி நடராஜனுக்கும் என் நமஸ்காரங்கள்.//

  நன்றி வல்லிம்மா:)!

  ReplyDelete
 45. அமைதி அப்பா said...
  //புத்தகத்தை அவசியம் வாங்கிப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை தூண்டுகிறது தங்கள் விமர்சனம். //

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 46. goma said...
  // அமைதிச்சாரல்
  மீ த ஃபர்ஸ்ட் என்று சொல்ல ,//

  சாரலை வழிமொழிந்திருப்பதற்கு நன்றி:)!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin