சனி, 12 மார்ச், 2011

‘நன்றே செய் இன்றே செய்’ - இன்றைய வலைச்சரத்தில்..

  • ‘வறண்ட பிரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கேத் திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியில் 68 வயதான ஸ்ரீதரன், துணை நிற்கும் கற்பகம், ஸ்ரீராம்.’ பாராட்டுகிறார் மண்ணை நேசிக்கும் இம்மாந்தரை.
  • “பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது” கேட்கிறார்.
  • “ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர், அசத்தல்.” நெகிழ்கிறார்.
யார்?

  • இயற்கையின் மீதான அளவற்ற நேசத்தால், உலக நலன் மேல் கொண்ட உள்ளார்ந்த அக்கறையினால், சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் பாராட்டுக்குரிய மனிதர்.
  • வெட்டப்பட இருந்த ஐம்பத்து ஐந்து வயது மரத்தை, அரசிடம் முறையிட்டுக் காப்பாற்றிய சிறுவன் அருண்குமாரையும் நண்பர்களையும் கொண்டாடுகிறார். அவனைப் பாராட்ட நம்மையும் அழைக்கிறார்.
யார்?

  • “ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்...”
  • “கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.”
  • எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம் வாழ்க்கை முழுவதையும் மண்ணுக்கு அர்ப்பணித்து, தம் பிள்ளைகளாய் நேசித்து, மரங்களை வளர்ந்த மாமனிதர்களை.. கோடியில் இருவராய்க் கொண்டாடி விழா எடுத்தவர்.
யார்?
  • வீட்டருகே இருக்கும் பூங்காவில் வேப்பங்கன்றை நட்டு, அனுதினம் மாலை மறக்காமல் நீர் வார்த்து, நாளைய உலகுக்காக மரம் வளர்த்து வரும் இளங்கன்று, நம்பிக்கை நாற்று.
யார்?


பி.கு: வலைச்சரத்தில் பதிந்த ஒவ்வொரு நாள் பதிவையும் வாசிப்பவர் வசதி கருதி, அதேநாட்களில் முத்துச்சரத்தில் இட்ட அறிவிப்புப் பதிவுகளில் இப்போது (14-11-2011) இணைத்துள்ளேன். பதிவுகளுக்கு வந்த கருத்துக்களைக் காண விரும்பினால் வலைச்சரம் செல்லக் கேட்டுக் கொள்கிறேன்:



Surveysan-அழிப்பவன் அல்ல அளப்பவன்!
இவரைப் பற்றிய அறிமுகம்‘பதிவுலகில் நானு-Q & A’ இதிலேயே கிடைத்து விடும், இவரே தந்திருக்கும் சுட்டிகளைப் பிடித்துச் சென்றால்! இப்போதுதான் கவனிக்கிறேன், அதில் தன் எழுத்தை “இதுவரைக்கும், யாரும், ஆகாககாகான்னு பாராட்டியதா ஞாபகம் இல்லை” என சொல்லியிருப்பதை:)!


இரண்டு வருடங்களுக்கு முன்னரே என் பதிவொன்றில், “தன் எழுத்துக்களால் ஒரு உத்வேகத்தைத் தந்தவர் சர்வேசன். எனது சமூகக் கவிதைகள் பலவற்றிற்கான பொறியினை இவரது பதிவுகளிலிருந்து பெற்றேன். சர்வேசன்-ஆக்கியவன்[அப்போது ‘ஆக்கியவன்’தான்] அல்ல அளப்பவன் என்கிற இவரது வலைப்பூ "surveys about anything and everything in Tamil for the Tamil" என்றே சொல்கிறது. சமூகத்தைப் பற்றி சகலதையும் அலசும் இவரது எழுத்துக்களில் காணப்படும் வீச்சும், பேச்சு வழக்கிலே எழுதும் ஸ்டைலும் பிடிக்கிறது எனக்கு. முத்துச்சரத்தின் ப்ரொஃபைல் படம் இவர் எடுத்ததே. என் வலைப்பூவுக்குப் பொருத்தமாய் இருக்குமே என்றதுமே தந்து விட்டார். எதற்கு நன்றி சொன்னாலும் ‘தன்யனானேன்’ என்றிடுவார் தன்னடக்கத்துடன்.”

இப்படிக் குறிப்பிட்டிருந்தது ‘ஆகாககாகா’ வகையிலே அடங்காத வருத்தத்துடன் வலைச்சர வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டுள்ளேன், பல நல்ல விஷயங்களைத் தன் முகம் காட்டாமல் பகிர்ந்தும், செய்தும் வருபவரை முன்னிலைப் படுத்தும் ஆவலில்.

எதைச்சொல்ல எதைவிட எனும் அளவுக்கு இரண்டரை ஆண்டுகால வாசிப்பில் சமூக அக்கறையுடனான பதிவுகள் பல இருப்பினும் ஒருசிலவற்றை மட்டும் இங்கே முன் வைக்கிறேன்.

சென்னை விசிட் - உதவும் கரங்கள்:“மலர்வனம்னு ஒரு வயதானவர்களுக்கான முகாமும், அதே காம்ப்ளெக்ஸில், மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான அரவணைப்பு மையமும், சற்று தள்ளி இன்னொரு கட்டிடத்தில், குழந்தைகள், சிறுவர்கள் மையமும், உதவும் கரங்களே நடத்தும் பள்ளியும் கண்டு வந்தோம்.

தொண்டைக் குழிக்குள்ள ஒரு பெரிய உருண்டை வந்து அடச்சுக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. குறிப்பா, அந்த மனநிலை சரியில்லா ஆட்களையும், அவர்களைப் பராமரிக்கும் வாலண்ட்டியர்ஸும் பாத்தா ஒரு நிமிஷம், வாழ்க்கையே சூன்யம் ஆன மாதிரி ஆயிடுது.

சும்மா சொல்லக்கூடாது,
ஆதரவே இல்லாம இருக்கரவங்கள்ள சில பேருக்கு, வேளா வேளைக்கு சாப்பாடும், உடையும், தங்கும் இடமும் கிடைக்க வழி செஞ்ச வித்யாகர்,அசத்தல்.

ஒரு போட்டியை அறிவிக்கும் போது சர்வேசன், வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகை போக அவர்களது பெயரிலேயே உதவும் கரங்களுக்கு ஒரு தொகையை அனுப்ப முன்வந்தது பாராட்டுக்குரிய மகிழ்வான விஷயமென்றால், வெற்றி பெற்றவர் தமக்கான தொகையையும் சேர்த்து உதவும் கரங்களுக்கு வழங்கிட முன் வந்தது மேலும் நெகிழ்வு. நல்ல உணர்வுகளை எழுத்திலும் செயலிலும் பரப்பும் அவருக்கு வைப்போம் ஒரு சல்யூட்.

லஞ்சப் பெருச்சாளிகள்... தொடரும் எரிச்சல் :பெட்டிஷனை கூட பூர்த்தி செய்ய முடியாத,பள்ளியையே பார்த்திராத சசிகலாவுக்கு இருந்த தைரியமும், ரௌத்திரமும், படித்த நமக்கேன் இல்லாமல் போகிறது?

படிச்ச நாமதான், சுலபவழி தரும் சுகத்தில், திக்கு முக்காடிப் போகி, ஓரடி முன்னேற்றப் பாதையில் எடுத்து வைக்கும் நாட்டை, பத்தடி ரிவர்ஸில் இழுத்து துரு பிடிக்க வைக்கிறோம்.

கற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி?
68 வயதான ஸ்ரீதரன்... 17 ஏக்கர் வறண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.”

“மும்பையைச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், இவருக்கு உறுதுணையாக இருந்து, PointReturnல் காடு வளர்க்க, முழுநேரமும் தங்களை இணைத்துக் கொள்கிறார்களாம். இருவரும் முப்பதுகளில் இருப்பவர்கள்.
ஐஐடி யில் முதுகலைப் பட்டம் பெற்று, கன்னாபின்னா என்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்.

நன்றே செய் இன்றே செய்
:“வெற்றிகரமாய் போயிக்கிட்டு இருக்காங்க; இயற்கை விவசாயம்; எண்ணை உற்பத்தி; ராகி பயிரிட்டு; குளம் வெட்டி அல்லி வளர்த்து, வீடு கட்டி,மனிதக் கழிவையும் புனிதமாக்கி, இவங்க பயணம், சூப்பரா போயிக்கிட்டே இருக்கு;

மேற்கண்ட பயணத்தின் ஒவ்வொருபடியைப் பற்றிய படங்களுடன் விரிவான விவரங்களுக்கான சுட்டிகளைத் தேடி வழங்கியிருக்கிறார் சர்வேசன்.

இந்த மாதிரி இயக்கங்களுக்கு சொற்ப நேரத்தை செலவிடுவது, திருப்திகரமான பொழுது போக்காய் அமைவதோடு மட்டும் அல்லாமல், சொந்த வாழ்க்கையில், நம்மை அறியாமல் ஒரு பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யும்...சென்னை/செங்கல்பட்டு வாசிகள், DV ஸ்ரீதரனை தொடர்புகொண்டு, தன்னார்வலராக விருப்பம் தெரிவித்தால், இருகரம் நீட்டி ஆரத் தழுவி வரவேற்பார்.” எனத் தொடர்பு விவரங்களைத் தந்துள்ளார்.

அத்துடன் நின்றிடாமல், மண்ணை நேசிக்கும் அம்மாந்தரிடம் பதிமூன்று கேள்விகளைக் கேட்டுப் பதில்களைப் பெற்றுப் பதிந்துள்ளார் இங்கே: கற்பகம், ஸ்ரீராம், DV ஸ்ரீதரனின் பதில்கள்.
***

இவரது கலகலப்பான எழுத்துக்கு, [அறிமுகப் பதிவில் இருப்பினும் நீங்கள் தவற விடக் கூடாதென], மகளிர் தின வாரத்தில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பெண்களை நம்பவே நம்பாதே, ‘அநியாயத்துக்கும் அருமையா எழுதி’யிருப்பதாக அங்கேயே பாராட்டியிருப்பதாலும்:)!
‘மண், மரம், மழை, மனிதன்.’திரு வின்சென்ட்
இயற்கையின் மீதான அளவற்ற நேசத்தால், உலக நலன் மேல் கொண்ட உள்ளார்ந்த அக்கறையினால், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடையே பரப்பி, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ந்து பாடுபடும் பாராட்டுக்குரிய மாமனிதர்,நமது நாட்டின் இயற்கை சுழலையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் அந்நிய நாட்டுத் தாவரங்கள்.

சென்னை அண்ணாநகர் ‘நகர்ப்புற தோட்டக்கலை வளர்ச்சி மையம்’ மாடித் தோட்டம், வீட்டுத் தோட்டம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு போன்ற பலவற்றிற்கும் அறிவிக்கும் ஒருநாள் பயிற்சிகளைப் பற்றியதான உடனுக்குடன் அறிவிப்புகள் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

மாணவர்களின் விண்ணப்பமும், வெட்டுக்கு தப்பிய 55 வருட மரமும். “பணம் மட்டுமே குறிகோளாகக் கொண்டு பெரிய வனங்களையே சூறையாடும் கும்பல்களிடையே திரு. அருண்குமாரும் அவரது நண்பர்களும் தக்க சமயத்தில் இறங்கி இந்த இளம் வயதில் விடிவெள்ளி நட்சத்திரங்களாக இயற்கையை பாதுகாக்க இருப்பது மனதிற்கு ஆறுதல் தருகிறது....உங்களது வாழ்த்துக்களை திரு. அருண்குமாருக்கு தெரிவிக்கவிக்க விரும்பினால் அவரது தந்தையின் அலைபேசி எண் தருகிறேன். வாழ்த்தி விடுங்கள். ஊக்கமும் உற்சாகமும் அக்குழந்தைகளை மேலும் பல அரிய செயல்கள் செய்ய உதவும். ப. தண்டபாணி : 94420-15060” என்று கேட்டுக் கொள்வதுடன், அவர்களை நேரில் சென்று பார்த்துப் பாராட்டி மரத்தின் அருகே நின்று புகைப்படங்களும் எடுத்து வெளியிட்டுள்ளார் இங்கே.

பெங்களூரில் மெட்ரோவுக்காக பலநூறு வயதான ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படுவதை வேதனையுடன், கையாலாகாமல் பார்த்துக் கொண்டிருக்கும் பல இலட்சம் மக்களில் நானும்தான் அடக்கம்:(! இந்த வயதில் நின்று சாதித்த அந்தச் சிறுவனுக்கு நம் வாழ்த்துக்கள்!

தண்ணீர் பற்றிய பதிவுகளின் தொகுப்பு, கடந்த வருடம் தண்ணீர் தினத்துக்காக இவர் விடுத்த அழைப்பினை ஏற்று எழுதப்பட்டவை யாவும். அனைத்து சுட்டிகளிலும் சென்று படித்துப் பயன் பெறுங்கள்.

இந்தவருட "உலகநீர்" நாள் சின்னத்தை
அனைவரும் வலைப்பூவில் இணைத்திடக் கேட்டுக் கொண்டுள்ளார். நான் செய்து விட்டேன். அப்போ நீங்க?


‘கசியும் மெளனம்’ ஈரோடு கதிர்
56 வயதான திரு. நாகராஜன், 17வது வயதிலிருந்து கடந்த 39 வருடங்களாக விதைகளை தெரிவு செய்து, முளைக்க வைத்து, செடியாக்கி, இடம் தேடி நட்டு, பெரிதாகும் வரை நான்கைந்து முறை முள்வேலி அமைத்து, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து காப்பாற்றி இன்று வரை மரமாக வளர்த்தெடுத்திருப்பது ஒன்றல்ல இரண்டல்ல..... பத்தாயிரத்திற்கும் அதிகம்.

74 வயதைத் தாண்டிக் கொண்டிருந்த திரு. அய்யாச்சாமி அவர்கள் ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள்... சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள்

கோடியில் இருவராய்
இவர்களை அறிமுகப்படுத்திய கதிர் , “ இவர்களை அங்கீகரிக்க வில்லையென்றால், அந்த விருதுக்குத்தான் கேவலமேயொழிய இந்த மாமனிதர்களுக்கில்லை, ஏனெனில் இவர்கள், எதையும் எதிர்நோக்கி, தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்யவில்லை....அவர்களைப் பற்றிய செய்திகளை இன்னும் எதிர்மறை எண்ணம் அதிகம படியாத மாணவர்களிடம் எப்படியாவது எடுத்துச் சென்று அவர்களின் மனதில் நிரப்பிடவேண்டும்.” எனும் உத்வேகத்துடன் செயல்பட்டு எடுத்தார் மரங்களின் தந்தைகளுக்கு மகத்தான விழா!

கடந்த வாரம் திரு அய்யாச்சாமி, 3000 பிள்ளைகளின் தந்தை, இயற்கையின் அன்னையின் பிரியத்துக்குரிய மைந்தர் காலமானார். “அந்த விரல்கள் வளர்த்தெடுத்த வேப்பமரங்கள் வெளிவிடும் காற்றில் அவருடைய சுவாசம் இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.

ஆம், அந்த சுவாச மூச்சு தெற்கிருந்தே வடக்கே, பின் மேற்கே கிழக்கே என உலகெங்கும் பயணப்பட்டு எங்கெங்கும் இயற்கையைக் காக்கும் சக்தியாய், இயற்கையைப் போற்றும் சந்ததிகளுக்கு உறுதுணையாய் இருப்பது நிச்சயம். அதற்கான சான்றாக....இதோ இந்தச் சிறுவன்.
‘ட்விங்கிள் ட்விங்கிள்’(லிட்டில் ஸ்டார்)சபரி
வீட்டருகே இருக்கும் பூங்காவில் வேப்பங்கன்றை நட்டு, அனுதினம் மாலை பள்ளி விட்டு வந்ததும், தமக்கையின் உதவியுடன் மறக்காமல் நீர் வார்த்து, நாளைய உலகுக்காக மரம் வளர்த்து வரும் இளம் நட்சத்திரம் சபரியை வாழ்த்துவோம், One Boy One Tree!

மண்ணை மரங்களை மனிதர்களை நேசிப்போம்.
இயற்கையைப் போற்றுவோம்.
***

15 கருத்துகள்:

  1. Me the first.

    Thanks for introducing people who write for good cause.

    பதிலளிநீக்கு
  2. /* மோகன் குமார் said...
    Me the first.

    Thanks for introducing people who write for good cause.

    */
    repeat

    பதிலளிநீக்கு
  3. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மிக நல்ல அறிமுகங்கள்..

    பதிலளிநீக்கு
  4. மோகன் குமார் said...
    //Me the first.

    Thanks for introducing people who write for good cause.//

    நன்றி மோகன் குமார்.

    பதிலளிநீக்கு
  5. asiya omar said...
    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மிக நல்ல அறிமுகங்கள்..//

    நன்றி ஆசியா.

    பதிலளிநீக்கு
  6. அமைதிச்சாரல் said...
    //நல்ல அறிமுகங்கள்..//

    நன்றி சாரல்.

    பதிலளிநீக்கு
  7. சமூக பற்றுதலோடும் உலகம் சார்ந்த உன்னத நோக்கத்தோடும் எழுத்தில் இயங்கும் உங்களுக்கு ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியருக்கான நற்தகுதி இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மிக நல்ல அறிமுகங்கள்.

    பதிலளிநீக்கு
  9. MANO நாஞ்சில் மனோ said...
    //வாழ்த்துகள்....//

    மிக்க நன்றி மனோ.


    குமரி எஸ். நீலகண்டன் said...
    //சமூக பற்றுதலோடும் உலகம் சார்ந்த உன்னத நோக்கத்தோடும் எழுத்தில் இயங்கும் உங்களுக்கு ஒரு சிறந்த பத்திரிகை ஆசிரியருக்கான நற்தகுதி இருக்கிறது.//

    அத்தகு தகுதி பற்றி ஆராயவில்லை:)! தங்கள் அன்புக்கு நன்றி. மற்றபடி எழுத்தின் மூலம் நேர்மறை எண்ணங்களைப் பரப்பும் ஆவல் எப்போதுமே உண்டு.

    பதிலளிநீக்கு
  10. சே.குமார் said...
    //அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மிக நல்ல அறிமுகங்கள்.//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  11. நல்ல அறிமுகங்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin