Sunday, January 9, 2011

கோவில் மிருகம்-விநாயகமுருகன் கவிதைத் தொகுப்பு-என் பார்வையில்..


ழகு என்பது உண்மை. உண்மையே அழகு. உணர்த்துகிறது அதையே உலகம். உணர வேண்டியதும் அதுவே,” சொன்னவர் ஆங்கிலக் கவிஞர் ஜான் கீட்ஸ். உணர்த்தியிருக்கிறார் இளங்கவிஞர் விநாயமுருகன். வலித்தாலும் உண்மை ஒன்றே அழகென வாழ்வின் நிதர்சனங்களைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

அன்றாட அவலங்களை, மனிதரின் மறுபக்கங்களை, மடிந்து வரும் நேயங்களை ஒரு நெடும் பயணத்தில், பாரதியின் சீற்றம் கலந்த எள்ளலுடன், சமூக அக்கறையும் ஆதங்கமும் தொனிக்க, துறுதுறுப்பான ஒரு இளைஞன் சொல்லச் சொல்ல சுற்றியிருக்கும் அத்தனை சக பயணிகளும் சாமான்ய மனிதர்களும் கவனம் பிசகாமல் கேட்பது போன்றதான உணர்வைத் தருகிறது கோவில் மிருகம் கவிதைத் தொகுப்பு.

இவரது கவிதை, கட்டுரைகளை இணைய இதழ்களில் அவ்வப்போது வாசித்ததுண்டு. ஆனால் ஒரு தொகுப்பாக வாசிக்கையில் கிடைத்த அனுபவம் அலாதியானது. பொதுவாகவே எனக்கு சமூகக் கவிதைகள் மீதும், எளிய, வார்த்தை ஜோடனைகள் அற்ற, வாசித்ததும் மனதில் ஒட்டிக் கொள்கிற கவிதைகள் மீதும் அலாதி நேசம் உண்டு. இவரது கவிதைகளில் என் தேடலின் அடையாளங்களைக் காண முடிகிறது.

சந்தித்த மனிதர்கள், தன்னைக் கடந்து செல்லும் சம்பவங்கள், ஏன் பயணித்த சாலைகளும் இவரது கவிப் பொருளாய் விரிந்துள்ளன.

நகர வாழ்வின் நாகரீகங்களில் விரவி நிற்கும் பாசாங்குகளை பாசாங்கற்ற மொழியிலே பகிர்ந்து கொண்டிருக்கிறார். 58 கவிதைகளிலும் அவரது கூர்ந்த அவதானிப்பு புலனாகி பிரமிக்க வைக்கிறது.

தொலைந்து வரும் ஜீவகாருண்யமே ‘கோவில் மிருகம்’ தலைப்புக் கவிதை. தொடர்ந்து ‘சிங்கம்’, ’உயிர்ப்பு’ ஆகியன. கொன்று விடு கோழிகளை என இவர் விடுக்கும் ‘வேண்டுகோள்’தனில் கொப்பளிக்கிறது கருணை.‘ஊதியம்’ கவிதையில்,
‘புலி வளையம் தாண்டுகிறது
கிளி சீட்டு எடுக்கிறது
குரங்கு கர்ணம் போடுகிறது
கரடி தாயத்து விற்கிறது
யானை காசு கேட்கிறது
மனிதன் பிடுங்கிக் கொள்கிறான்.’

பல கவிதைகள் குறியீடுகளாய் அமைந்து வாழ்க்கை மீதான கேள்விகளை சந்தேகங்களை உள்ளடக்கியதாயும் உள்ளன.

‘நான்கும் சுவர்களும்
பெல்ஜியம் கண்ணாடி

என ஆரம்பமாகி தொட்டியின் வசதிகளை சிலாகிக்கும் ‘மீன் தொட்டிகள்’ கவிதையில்,
‘மீன்கள் வளர்க்க
உகந்த தொட்டி என்றான்

எல்லாம் சரி
மீன்களுக்கும் இந்தத்தொட்டி
பிடிக்குமென்று சொன்னதுதான்
எனக்குக் குழம்புகிறது’.


நேயம் அற்றிருப்பதையும் நியாயப்படுத்திக் கொள்கிற மனித மனங்களை நகையாடும் ‘சற்றுமுன் வந்த மின்னஞ்சல்’ ‘இன்று முதல்’ ஆகியவை வாசிப்பவர் மனங்களைக் குறுகுறுக்க வைக்கின்றன:
‘வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று
ஒலித்தது
வேணுகோபால் இறந்துவிட்டான்
உடனே கிளம்பி வா

உண்மையில் வேணுகோபால்
என்று எனக்கு யாரும் இல்லை
இன்று முதல்
அந்தக் கவலையும் தீர்ந்தது’


வாழ்க்கையின் பெரும்பகுதியை விழுங்கி வரும் மெகாத் தொடர்களைச் சாடும் ‘தொடரும்’ கவிதையில்,
‘இடையில் மூன்று முறை
வேறு வீடு வேறு அலுவலகம் மாறியிருந்தேன்.
இது தவிர ஒரு முறை
இறந்து மீண்டும்
பிறந்தும் தொலைத்து விட்டேன்’.

வாழ்வே போலியாகிப் போனதை நையாண்டி செய்கின்றன ‘திருமணமொன்றில்’, ‘பணமா பாசமா’.

உலகம் இப்படியானது இல்லையென உங்களால் சொல்ல முடியுமா? ‘ஒரு விசாரிப்பு’:
'நீண்ட நாட்கள் கழித்து
நண்பனொருவன்
தொலைபேசினான்

எப்படி இருக்கிறாய்
எப்படிப் போகிறது கேட்டான்

அப்படியேதான் இருக்கின்றேன்
அப்படியேதான் போகிறதென்றேன்

சுவாரஸ்யமற்றவனாய்
துண்டித்தான் தொடர்பை

அப்படியே இருந்து
அப்படியே போவதிலென்ன
அப்படியொரு ஏமாற்றம்.'


தொலைக்காட்சி தொகுப்பாளினியின் ‘நீங்கள் கேட்டவை’:
‘கணவருக்கும் மனைவிக்கும்
ஒருவரையொருவர் பிடிக்கிறதாவென்று
கேட்கவேயில்லை இறுதிவரைக்கும்.’

இவரது நெற்றியடிக் கவிதை பாணியே ‘புரியாமை’யாக,
'இத்தனை எளிமையாக
இருக்கிறதே கவிதையென்று
விமர்சித்தார்கள்

புரியாமை கொண்ட வாழ்க்கையில்
தோற்றுப்போன வரிகளை எழுத
ஜோடனைகள் ஒரு கேடா?'


‘தொலைந்து போனவைகள்’தனில் பழைய நண்பனும் சேருகின்றான்:
'அவன்
புதிதாய் சேர்ந்த வேலை
புதிதாய் வாங்கிய கார்
புதிய மாடல் மொபைல்
புதியாய் கட்டும் வீடு
சமீபத்தில் சென்று வந்த
நாட்டைப் பற்றிய புதிய தகவல்கள்
இவற்றோடு எனக்கு
புதிய நண்பனொருவனை
பரிசாக தந்துவிட்டு சென்றிருந்தான்.'

மின்சார ரயிலில் பாடிப் பிழைக்கும் பார்வையற்ற சிறுமி ‘பூங்குழலி’யில் பாடல் காதில் ஒலிப்பது போன்றதானதொரு பிரம்மை.

பேசவிட்டால் முழுத் தொகுதியையும் உங்கள் முன் வைத்துவிடும் அபாயம் இருப்பதால் ‘குடைக்காம்பு’,. ‘தொலைந்த பறவை’ ‘சாலைகள்’, 'சந்திப்புகள்’,’குரல்கள்’, ‘அவசர சிகிச்சை’ , ‘விடுமுறை நாள்’ ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.

கவிதையா, அது என் சுவாரஸ்யத்துக்கு உட்பட்டதல்ல[not my cup of tea] எனக் கடக்கக் கூடியவர்களையும் ஈர்க்கும் வகையில், எவரும் நெருக்கமாக உணரும் வகையில், மறக்க முடியாத கவிதைகளைத் தாங்கி 'கோவில் மிருகம்'. எடுத்து ருசித்தால் உணர்வீர்கள் தேநீரின் கசப்பாய் உள் இறங்கும் உண்மையின் ஸ்வரூபத்தை, எஞ்சி நிற்கும் தித்திப்பாய் நம்முள் அது ஏற்படுத்தும் தீராத தாக்கத்தை.

முப்பத்து மூன்று வயதுக் கவிஞரின் முதல் தொகுப்பு. வருங்காலத்தில் நிறைய எதிர்பார்க்கலாம் இவரிடமிருந்து. வாழ்த்துக்கள் விநாயக முருகன்!
***
கோவில் மிருகம்
பக்கங்கள்:64 ; விலை:ரூ.40
பதிப்பகம்: அகநாழிகை (http://www.aganazhigai.com)
கிடைக்குமிடங்கள்: நியூ புக்லேண்ட்/எனி இந்தியன், தி. நகர், சென்னை

இணையத்தில் பெற:
 1. http://www.udumalai.com
 2. http://ezeebookshop.com
 3. http://discoverybookpalace.com
சென்னை, அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே ‘செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி’ வளாகத்தில் 17 ஜனவரி 2011 வரை நடைபெறவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகப் புத்தகங்கள் கிடைக்க ஏற்பாடாகியிருக்கும் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டால் அரங்கு எண்:274-லிலும் தற்சமயம் கிடைத்து வருகின்றன.
*** *** ***

நன்றி திண்ணை!


62 comments:

 1. எளிமை, இனிமை, அருமை.
  நல்ல அறிமுகம். நன்றி.
  புத்தகச் சந்தையில் பார்க்கிறேன்.

  ReplyDelete
 2. @ ஸ்ரீராம்,

  நன்றிகள் ஸ்ரீராம்.

  தொகுப்பு வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டிருக்க, என் கைக்குக் கிடைத்து சில மாதங்கள் ஆகி விட்டிருக்க பத்து தினங்களுக்கு முன்னரே வாசித்தேன், அதுவும் ஒரே மூச்சில். அதன் வீச்சு தணியும் முன் விரைந்து எழுதி ‘திண்ணை’க்கும் அனுப்பி வைத்தேன், புத்தகச் சந்தைக்குள் பதிந்தால் உங்கள் போன்ற பலருக்கும் இப்பரிந்துரை பயனாகுமே என்கிற எண்ணத்திலும்:)!

  ReplyDelete
 3. திண்ணை.காமில் தங்கள் விமர்சனம் படித்தேன். மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

  ReplyDelete
 4. @ என்.விநாயகமுருகன்,

  மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்:)!

  ReplyDelete
 5. விநாயக முருகனுக்கு என் வாழ்த்துக்கள்!
  ------------------

  கொஞ்ச நாளைக்கு முன்னால, விலங்குகளை (கோயில் மிருகம், சர்க்கஸ் மிருகம்லாம் பரவாயில்லைங்க), அறிவியல்துறையில் மனிதன் எந்த அளவுக்கு (மனித நலனுக்காக) சித்ரவதை செய்கிறான் ...

  * guinea pig. என்கிற விலங்கை சிகரெட் குடிக்க வைத்து, கேன்சர் வர வைத்து, அது எத்தனை நாள் உயிரோட இருக்கிறது? என்றும்

  * முயலுக்கு mustard gas என்கிற விஷப்பொருளை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து அது எந்த டோசேஜில் சாகிறதுனு என்றும்

  மனிதநலனுக்காக இவர்கள் செய்யும் "மிருகத்தனத்"திற்கெல்லாம் கடவுள் அதிகாரம் கொடுத்தாரா?

  அடுத்த பின்னூட்டத்தில் தொடருது..

  ReplyDelete
 6. இதுபோல சித்ரவதையை எல்லாம் "சரி" என்று மனிதன் எப்படி முடிவுக்கு வந்தான்?

  என்கிற கேள்வியை எழுப்பியபோது, அந்த்தளத்தில் என்னைப் பைத்தியத்தை பார்ப்பதுபோலே பார்த்தார்கள்.

  ஒருவேளை நான் வெஜிடேரியனோ? அத்னால் இப்படியெல்லாம் யோசுஇக்கிறேனோ? என்கிற சந்தேகத்தில் பலர் அது சம்மந்தமான கேள்விகளை எழுப்பினார்களே ஒழிய அந்த விலங்குகளுக்குகாக வருத்தப்பட்டதுபோல தோனலை!

  ஆமா, மனுஷன் (உங்களையும் என்னையும் சேர்த்துத்தான்) என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கான்? தன் தேவைகளுக்காக ஏன் இப்படி விலங்குகளின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை, விலங்குகளை கொன்றால்கூட பரவாயில்லை ஏன் இப்படி தன் சுயநலத்துக்காக சித்ரவதை செய்கிறான்னு (என் கண் முன்னால் அரிவியல் கூடங்களில் நடக்கும் சித்ரவதைகளைப்பார்த்து) நான் குழம்புவதுண்டு..இன்னும் குழப்பத்தில்தான் நான் இருக்கேன். :)

  ReplyDelete
 7. நன்றி ராமலஷ்மி அவர்களே. நாங்கள் படித்து சிலாகித்த நண்பரின் கவிதைகளை; புத்தக வடிவில் பார்த்ததும் மிக்க மகிழ்ந்தோம்!
  இப்போது இந்த விமர்சன உரை அவரது கவிதைகளை இன்னும் பலபேரிடம் கொண்டு சேர்க்கட்டும்!

  ReplyDelete
 8. விமர்சனத்திற்கும், அறிமுகத்திற்கும் நன்றியும், அன்பும்.

  - பொன்.வாசுதேவன்

  ReplyDelete
 9. தங்களின் ஆர்வமிகு விமர்சனமே, விநாயகமுருகன் அவர்கள் நூலின் தரத்திற்கான சான்று. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 11. அருமையான, புத்தகத்தை படிக்கத்தூண்டும் விமர்சனம்..

  ReplyDelete
 12. புத்தகம் வெளி வந்து இவ்வளவு நாள் கழித்து விமர்சனமா என்று தான் வாசிக்க துவங்கினேன். "புத்தக சந்தை நேரத்தில் விமர்சனம்" என்ற உங்கள் விளக்கம் பார்த்து புரிந்தது.

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு. உடனே வாங்கி படிக்கத் தூண்டுகிறது

  ReplyDelete
 14. எங்கள் அலுவலக பதிவுகளின் பிதாமகன் அவர், புத்தகம் வாங்கியாச்சு :)
  நன்றி ராமலஷ்மி !

  ReplyDelete
 15. arumaiyana vimarsanam ramalakshmi.. Jana Sonna mathiri, inthanmoolama niraiya perukku kovil mirugam pathi theriya varum! nandrigal pala!

  ReplyDelete
 16. நன்றாக பகிர்ந்துள்ளீர்கள், நண்பரின் புத்தகத்தை. நன்றி :)

  ReplyDelete
 17. புத்தகத்தை படிக்கத்தூண்டும் விமர்சனம். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 18. அக்கா, சுவாரசியம் குறையாமல் எழுதி இருக்கீங்க.... நல்லா இருக்குது, அக்கா....

  ReplyDelete
 19. அற்புதமான பார்வை / பகிர்வு!

  நன்றி சகா!

  ReplyDelete
 20. நல்ல விமர்சனம்..

  ReplyDelete
 21. நல்ல அறிமுகம் மிக்க நன்றிங்க

  ReplyDelete
 22. நூலைப் பற்றி எழுதுவதிலும் கைதேர்ந்துவிட்டீர்கள். அருமை.
  நீங்கள் குறிப்பிட்ட பணமா பாசமா கவிதையை, புத்தக வெளியீடு அன்றே பதிப்பாளர் வாசு குறிப்பிட்டார். வாழ்த்துக்கள் விநய். அடுத்து சிறுகதைத் தொகுப்பௌ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
 23. விமர்சன உரை அவரது கவிதைகளை இன்னும் பலபேரிடம் கொண்டு சேர்க்கட்டும்.அற்புதமான பகிர்வு!

  ReplyDelete
 24. புத்தகம் ,உங்கள் விமரிசனத்தால் பொலிவடைகிறதோ...

  ReplyDelete
 25. வாழ்த்துகள் விநாயக முருகனுக்கு.

  அழகான விமர்சனத்துக்கு நன்றி அக்கா.

  ReplyDelete
 26. //புலி வளையம் தாண்டுகிறது
  கிளி சீட்டு எடுக்கிறது
  குரங்கு கர்ணம் போடுகிறது
  கரடி தாயத்து விற்கிறது
  யானை காசு கேட்கிறது
  மனிதன் பிடுங்கிக் கொள்கிறான்.//’

  விநாயக முருகன் சொல்வது போல் மனிதன் தன் வாழ்வை நடத்த விலங்குகளை பயன்படுத்திக் கொள்கிறான்.

  விநாயக முருகனுக்கு வாழ்த்துக்கள்!

  ராமலக்ஷ்மி, உங்கள் விமர்சனம் அருமை.

  ReplyDelete
 27. நல்லதொரு மதிப்புரை. நல்லதொரு நூலிற்கு. வாழ்த்துகள் :)

  ReplyDelete
 28. புத்தகத்தைத் தேடி வாசிக்கத்தூண்டும் விமர்சனம்.நன்றி !

  ReplyDelete
 29. சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து இருப்பது அழகோ அழகு.

  ReplyDelete
 30. நல்ல பகிர்வுக்கு நன்றிங்க

  ReplyDelete
 31. கோயில் மிருகம்... நல்ல அலசல்.

  நூலை நானும் படிக்க தூண்டியது... மிக அருமையான கண்ணோட்டம்....

  திரு விநாயகமுருகனுக்கு பாராட்டுக்கள்

  உங்களுக்கு என் நன்றி.

  ReplyDelete
 32. நல்ல பகிர்வும், விமர்சனமும்... கொடுத்துள்ள தொடுப்புகளனைத்தும் கோவில் மிருகம் வசம் நெருங்கச்செய்கிறது. கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். நன்றி..

  ReplyDelete
 33. வருண் said...
  //மனிதநலனுக்காக இவர்கள் செய்யும் "மிருகத்தனத்"திற்கெல்லாம் கடவுள் அதிகாரம் கொடுத்தாரா?

  இதுபோல சித்ரவதையை எல்லாம் "சரி" என்று மனிதன் எப்படி முடிவுக்கு வந்தான்?//

  கேள்விகள் மிக நியாயமானவை.

  //அந்த்தளத்தில் என்னை//

  ஊரோடு ஒத்துப் போகாவிட்டால் எளிதாக நமக்கு உலகில் கிடைக்கிற ஒரே பட்டம் அதுதான்:(!

  //ஆமா, மனுஷன் (உங்களையும் என்னையும் சேர்த்துத்தான்) என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்கான்? தன் தேவைகளுக்காக ஏன் இப்படி விலங்குகளின் உணர்வுக்கு மதிப்புக் கொடுப்பதில்லை, விலங்குகளை கொன்றால்கூட பரவாயில்லை ஏன் இப்படி தன் சுயநலத்துக்காக சித்ரவதை செய்கிறான்னு (என் கண் முன்னால் அரிவியல் கூடங்களில் நடக்கும் சித்ரவதைகளைப்பார்த்து) நான் குழம்புவதுண்டு..இன்னும் குழப்பத்தில்தான் நான் இருக்கேன். :)//

  ஆம் நம்மையும் சேர்த்துதான். எழுதுவதைத் தாண்டி கேள்வி எழுப்புவதைத் தாண்டி இதைத் தடுக்க எந்த விதத்தில் இயலுகிறது? உங்கள் குழப்பத்தை நானும் பங்கு போட்டுக் கொள்கிறேன்.

  கவிஞரின் பல கவிதைகள் இம்மாதிரியான குழப்பங்களை, மரித்துப் போன மனித நேயங்களை முன் வைத்து நகர்ந்துள்ளன இத்தொகுப்பில்.

  விரிவான பகிர்வுக்கு நன்றிகள் வருண்.

  ReplyDelete
 34. ஜனா கே said...
  //நன்றி ராமலஷ்மி அவர்களே. நாங்கள் படித்து சிலாகித்த நண்பரின் கவிதைகளை; புத்தக வடிவில் பார்த்ததும் மிக்க மகிழ்ந்தோம்!
  இப்போது இந்த விமர்சன உரை அவரது கவிதைகளை இன்னும் பலபேரிடம் கொண்டு சேர்க்கட்டும்!//

  மகிழ்ச்சியும் நன்றியும். அதுவே என் ஆசையும்.

  ReplyDelete
 35. அமைதி அப்பா said...
  //நல்ல விமர்சனம்.//

  நன்றி அமைதி அப்பா.

  ReplyDelete
 36. அகநாழிகை said...
  //விமர்சனத்திற்கும், அறிமுகத்திற்கும் நன்றியும், அன்பும்.

  - பொன்.வாசுதேவன்//

  நல்லதொரு தொகுப்பினை வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துகள்! நன்றிகள்!

  ReplyDelete
 37. தமிழ் உதயம் said...
  //தங்களின் ஆர்வமிகு விமர்சனமே, விநாயகமுருகன் அவர்கள் நூலின் தரத்திற்கான சான்று. வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றி தமிழ் உதயம்.

  ReplyDelete
 38. asiya omar said...
  //பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி ஆசியா.

  ReplyDelete
 39. அமைதிச்சாரல் said...
  //அருமையான, புத்தகத்தை படிக்கத்தூண்டும் விமர்சனம்..//

  நன்றி சாரல்.

  ReplyDelete
 40. ராமலக்ஷ்மி said...
  மோகன் குமார் said...
  //புத்தகம் வெளி வந்து இவ்வளவு நாள் கழித்து விமர்சனமா என்று தான் வாசிக்க துவங்கினேன். "புத்தக சந்தை நேரத்தில் விமர்சனம்" என்ற உங்கள் விளக்கம் பார்த்து புரிந்தது.//

  முந்தைய நூல் விமர்சனமும்(நிலா ரசிகனின் சிறுகதைத் தொகுப்பு) காலம் கடந்த ஒன்றே. நம் கைக்குக் கிடைப்பது, வாசிக்க நேரம் வாய்ப்பது என பல விஷயங்கள் அடங்கியுள்ளனவே?! ஆனால் கிடைத்த வாசிப்பின்பத்தின் புத்துணர்வு குறையும் முன் பதிந்திடல் நலம். அதையே செய்து விட்டுள்ளேன்! புத்தகச் சந்தை கூடுதல் வேகம் தந்தது:)!

  நன்றி மோகன் குமார்.

  ReplyDelete
 41. அமுதா said...
  //நல்ல பகிர்வு. உடனே வாங்கி படிக்கத் தூண்டுகிறது//

  அமுதா இந்தத் தொகுப்பு நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். அவசியம் வாங்கிப் படியுங்கள். நன்றி:)!

  ReplyDelete
 42. Sandhiya said...
  //எங்கள் அலுவலக பதிவுகளின் பிதாமகன் அவர், புத்தகம் வாங்கியாச்சு :)
  நன்றி ராமலஷ்மி !//

  மகிழ்ச்சியும் நன்றியும் சந்தியா!

  ReplyDelete
 43. Suba said...
  //arumaiyana vimarsanam ramalakshmi.. Jana Sonna mathiri, inthanmoolama niraiya perukku kovil mirugam pathi theriya varum! nandrigal pala!//

  உங்கள் வாக்கின்படியே ஆகட்டும் சுபா. மிக்க நன்றி.

  ReplyDelete
 44. D.R.Ashok said...
  //நன்றாக பகிர்ந்துள்ளீர்கள், நண்பரின் புத்தகத்தை. நன்றி :)//

  மகிழ்ச்சியும் நன்றியும்.

  ReplyDelete
 45. செல்வராஜ் ஜெகதீசன் said...
  //புத்தகத்தை படிக்கத்தூண்டும் விமர்சனம். நல்ல பகிர்வு.//

  நன்றிகள் செல்வராஜ் ஜெகதீசன்.

  ReplyDelete
 46. Chitra said...
  //அக்கா, சுவாரசியம் குறையாமல் எழுதி இருக்கீங்க.... நல்லா இருக்குது, அக்கா....//

  மிக்க நன்றி சித்ரா.

  ReplyDelete
 47. பா.ராஜாராம் said...
  //அற்புதமான பார்வை / பகிர்வு!

  நன்றி சகா!//

  மிக்க நன்றி பா ரா!

  ReplyDelete
 48. Samudra said...
  //நல்ல விமர்சனம்..//

  நன்றிகள் சமுத்ரா.

  ReplyDelete
 49. ஆ.ஞானசேகரன் said...
  //நல்ல அறிமுகம் மிக்க நன்றிங்க//

  நன்றி ஞானசேகரன்.

  ReplyDelete
 50. "உழவன்" "Uzhavan" said...
  //நூலைப் பற்றி எழுதுவதிலும் கைதேர்ந்துவிட்டீர்கள். அருமை.
  நீங்கள் குறிப்பிட்ட பணமா பாசமா கவிதையை, புத்தக வெளியீடு அன்றே பதிப்பாளர் வாசு குறிப்பிட்டார்.//

  நன்றி உழவன்:)! நல்லதொரு கவிதை அது. உங்கள் பகிர்வு அக்கவிதைக்கு இன்னொரு மகுடம்.

  //வாழ்த்துக்கள் விநய். அடுத்து சிறுகதைத் தொகுப்பௌ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்//

  நண்பருக்கு ஊக்கம் கொடுப்பதைத் தொடருங்கள்!

  ReplyDelete
 51. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
  //விமர்சன உரை அவரது கவிதைகளை இன்னும் பலபேரிடம் கொண்டு சேர்க்கட்டும்.அற்புதமான பகிர்வு!//

  நன்றிகள் ஜெஸ்வந்தி.

  ReplyDelete
 52. goma said...
  //புத்தகம் ,உங்கள் விமரிசனத்தால் பொலிவடைகிறதோ...//

  பொலிவான புத்தகத்தில் கிடைத்த வாசிப்பின்பத்தை மகிழ்வாகப் பகிர்ந்து கொண்டுள்ளேன் என்பதே சரியாக இருக்கும். நன்றிகள் கோமா:)!

  ReplyDelete
 53. சுசி said...
  //வாழ்த்துகள் விநாயக முருகனுக்கு.

  அழகான விமர்சனத்துக்கு நன்றி அக்கா.//

  நன்றிகள் சுசி.

  ReplyDelete
 54. கோமதி அரசு said...
  //விநாயக முருகன் சொல்வது போல் மனிதன் தன் வாழ்வை நடத்த விலங்குகளை பயன்படுத்திக் கொள்கிறான்.

  விநாயக முருகனுக்கு வாழ்த்துக்கள்!

  ராமலக்ஷ்மி, உங்கள் விமர்சனம் அருமை.//

  மகிழ்ச்சியும் நன்றியும் கோமதிம்மா.

  ReplyDelete
 55. நிலாரசிகன் said...
  //நல்லதொரு மதிப்புரை. நல்லதொரு நூலிற்கு. வாழ்த்துகள் :)/

  நல்லதொரு நூல். சரியாகச் சொன்னீர்கள். நன்றிகள் நிலா ரசிகன்:)!

  ReplyDelete
 56. ஹேமா said...
  //புத்தகத்தைத் தேடி வாசிக்கத்தூண்டும் விமர்சனம்.நன்றி !//

  மிக்க நன்றி ஹேமா.

  ReplyDelete
 57. ஸாதிகா said...
  //சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து இருப்பது அழகோ அழகு.//

  மிக்க நன்றி ஸாதிகா.

  ReplyDelete
 58. அரசன் said...
  //நல்ல பகிர்வுக்கு நன்றிங்க//

  நன்றிங்க அரசன்!

  ReplyDelete
 59. சி. கருணாகரசு said...
  //கோயில் மிருகம்... நல்ல அலசல்.

  நூலை நானும் படிக்க தூண்டியது... மிக அருமையான கண்ணோட்டம்....

  திரு விநாயகமுருகனுக்கு பாராட்டுக்கள்

  உங்களுக்கு என் நன்றி.//

  மகிழ்ச்சியும் நன்றியும் கருணாகரசு.

  ReplyDelete
 60. க.பாலாசி said...
  //நல்ல பகிர்வும், விமர்சனமும்... கொடுத்துள்ள தொடுப்புகளனைத்தும் கோவில் மிருகம் வசம் நெருங்கச்செய்கிறது. கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன். நன்றி..//

  மகிழ்ச்சியும் நன்றியும். அவசியம் வாங்கிப் படியுங்கள் பாலாசி.

  ReplyDelete
 61. தமிழ்மணத்தில் வாக்களித்த 18 பேருக்கும், இண்ட்லியில் வாக்களித்த 32 பேருக்கும், இக்கட்டுரையை நூல் விமர்சனப் பிரிவில் நேற்று வெளியிட்டுள்ள உயிரோசைக்கும் என் நன்றிகள்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin