திங்கள், 9 டிசம்பர், 2013

பொகே அல்லது பொகா (Bokeh) - ஒரு அறிமுகம்; மூடிய கதவுகள் - டிசம்பர் PiT போட்டி

 #1
பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும்.
ந்த மாத PiT போட்டி இரண்டு தலைப்புகளில். DSLR பயன்படுத்துகிறவர்களுக்காக சவாலான தலைப்பு ஒன்றும், பொதுத் தலைப்பாக இன்னொன்றும்.

விரிவான விவரங்களை போட்டி அறிவிப்பு பதிவில் காணலாம்.

கிறுஸ்துமஸைக்  கொண்டாட, புதுவருடத்தை வரவேற்க நகரங்கள் ஒளிக்கோலம் பூணுகிற இந்நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முதல் தலைப்பு.

போட்டி 1: பொகே

பொகே அல்லது பொகா குறித்து அறியாதவர்களுக்காக இன்று PiT-ல் நான் அளித்திருக்கும் விளக்கப் பதிவு http://photography-in-tamil.blogspot.com/2013/12/bokeh.html உங்களுக்கும் பயனாகக் கூடுமென இங்கேயும் பகிர்ந்துள்ளேன். ஒளிப்படக்கலையில் ‘பொகே’ அல்லது ‘பொகா’ என்றால் என்னவெனப் பார்ப்போம்.

Bokeh எனும் சொல் ஜப்பானிய மொழியில் ‘மங்கிய’ (blurred) எனும் அர்த்தம் கொண்டதாகும். ஆங்கிலத்துக்கு வந்த விட்ட இச்சொல் பொகே, பொகா, போக்கி எனப் பலவிதமான உச்சரிப்புகளில் பயன்படுத்தப் படுகிறது. நாம் பொகே எனப் பார்ப்போம்:).

சொல்லப்போனால் அவுட் ஆஃப் போகஸாக, மங்கலாக நாம் காண்பிக்கிற ஒரு இடம் அதிக கவனத்தைப் பெறுகிறது:).   சப்ஜெக்டின் பின்னணி அல்லது முன்னணி(background/foreground)யை சற்றே மங்கலாக்கி சப்ஜெக்டைத் தனித்துக் காட்டும் விதத்தை “depth of field” எனக் குறிப்பிடுவோம் இல்லையா? அப்படி செய்கிற போது அமைகிற அந்த blurred backround.. மங்கலான பின்னணியின் தரம்.... ஒளியை அப்பகுதி பிரதிபலிக்கிற விதம்.... இவையே ‘பொகே’  என ஒளிப்படக் கலைஞர்களால் கொண்டாடப்படுகிறது. கீழ்வரும் படத்தைப் பாருங்கள்.

#2

இதில் காகம் ஷார்ப்பாகவும் ஃபோகஸ் செய்யப்பட்டுள்ளது. அதாவது படத்தின் “depth of field" உள்ளே வருகிறது. பின்னணி அவுட் ஆஃப் ஃபோகஸில் (அதாவது பின்னணி depth of field-க்கு வெளியே) உள்ளது. இப்படத்தின் shallow (ஆழமில்லாத)  DOF-க்கு காரணம் லார்ஜ் அப்பெச்சரில், சப்ஜெக்டுக்கு சற்றே அருகாமையில் இருந்து, அதாவது சுமார்  ஐந்தடி தொலைவில் நின்று எடுத்தது என்பதால். பின்னால் தெரியும் மென்மையான வட்டங்கள் ஒளியின் பிரதிபலிப்புகள். ஏன் வட்டமாக உள்ளன என்றால் அந்தந்த லென்ஸுகளின் diaphragm அமைப்புக்கேற்ப வடிவம் கிடைக்கும். இது 55-200mm பயன்படுத்தி எடுத்ததாகும். இந்தப்படத்தின் அந்த மென்மையான வட்டங்கள் உள்ள பகுதி “நல்ல பொகே” ஆகக் கருதப்படுகிறது. சில கலைஞர்கள் அழுத்தமாகக் கிடைக்கும் வட்ட வடிவ ஒளிப்பிரதிபலிப்புகளே “நல்ல பொகே” என வாதிடுவதுண்டு.

ஆனால் எது நல்ல பொகே, எது சுமார் என்பதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ரசனைதான். ஆக, பொகே என்பது வட்டம் எவ்வளவு எவ்வளவு அழுத்தம் திருத்தம் என்றெல்லாம் பார்க்காமல் மொத்தமாக அவுட் ஆஃப் போகஸ் ஏரியா எப்படிக் கவருகிறது என்பதே ஆகும்:
#3



இன்னும் சொல்லப்போனால் அவுட் டோர் படங்களில் கிடைக்கிற வட்டம் திருத்தமாய் வரைந்த மாதிரி இல்லாமல் அதாவது ஓரங்கள் தெளிவற்று இருந்தால் அழகோ அழகென்றும், க்ரீமி பொகே என்றெல்லாமும் கொண்டாடுகிறார்கள்:
#4


டுத்து உள்ளரங்கில் பொகே படங்கள் எடுப்பது குறித்துப் பார்ப்போம்.

கிறுஸ்துமஸ், புதுவருடக் கொண்டாட்டங்களின் ஒளி விளக்குகள் பொகே படத்துக்கு பொருத்தமானவை.

நினைவிருக்கட்டும். பொகே என்பது கேமராவை விட லென்ஸை சார்ந்தது. ஒவ்வொரு விதமான லென்ஸும் அது வடிவமைக்கப்பட்ட விதத்தில் வெவ்வேறு விதமான பொகேயை வழங்கும்.

உங்கள் லென்ஸின் பெரிய அப்பெச்சர்(சிறிய f நம்பர்) வைத்து எடுக்க வேண்டும்.

அப்பெச்சர் ப்ரையாரிட்டியிலேயே எடுக்கலாம். அல்லது மேனுவல் மோடில் எடுக்கலாம். கீழ்வரும் படங்கள் நான் Nikkor 50mm f/1.8 உபயோகித்த எடுத்தவை.  படம் 5, மேனுவல் மோடிலும், படம் 7 அப்பெச்சர் பிரையாரிட்டியிலும் எடுத்தது:

#5
Exif: 1/20s, f/2.5 , ISO400
Nikkor 50mm f/1.8
எடுத்த செட்டிங்கை மறுபடி அமைத்து உங்கள் பார்வைக்குக் கொடுத்துள்ளேன்.  இது பகல் நேரத்தில் எடுத்தபடம் உங்கள் புரிதலுக்காக:)!இரவில் எடுக்கும் போது அறைவிளக்கையும் அணைத்து விட வேண்டும்.

#6


சீரியல் விளக்குகளை இப்படி இடப்பக்கம் சுவரில் தொங்க விட்டுக் கொண்டேன். (சன்னல் போன்றவற்றில் தவிர்க்கவும். Plain பின்னணி அவசியம். அறைக்கதவுகளையும் உபயோகிக்கலாம்.) சப்ஜெக்டான அகல் விளக்கிற்கும் சீரியல் விளக்கிற்கும் இடையே சுமார் பத்தடிகள் இருக்கிற மாதிரி அமைத்திருந்தேன்.  பின்னணியின் தொலைவு கூடக் கூட பொகே அழகும் கூடும். ஆனால் நினைவிருக்கட்டும், கேமரா பொருளுக்கு மிக அருகாமையில்  (55-200mm போன்றவற்றில் லென்ஸ் அனுமதிக்கும் தூரத்தில், அதிக பட்ச zoom-ல்) இருக்க வேண்டும்.  பொருளும் கேமராவும் ஒரே உயரத்தில் இருக்க வேண்டும்.  பின்னணி சீரியல் விளக்கும் வ்யூ ஃபைண்டரில் அதே லெவலில் தெரிய வேண்டும். வொயிட் பேலன்ஸை பின்னணி ஒளி தரும் விளக்குகளுக்கு ஏற்ப (ஃப்லோரசண்ட், டங்ஸ்டன்) செட் செய்திடுங்கள்.


#7

Exif: 1/20s, f/2.5, ISO220
Nikkor 50mm f/1.8

அகல் விளக்கும் ஒளி தருவது என்பதால் f/1.8 வைக்காமல் f/2.5 வைத்து எடுத்தேன். இதே இடத்தில் ஒரு கோப்பை (அ) குடுவை வைத்து அதிலிருந்து பொகெ வெளிவருகிற மாதிரி எடுப்பீர்களானால் 1.8 நல்ல ரிசல்ட் தரும்.  50-200mm போன்ற லென்சுகளில் அதில் கிடைக்கும் அதிக பட்ச அப்பெச்சரான f3.5 -யில் செட் செய்திடலாம். கோப்பை வைத்து.. இனிதான் நான் முயன்றிட உள்ளேன். இது எனது முதல் முயற்சியே. மேலும் பரீட்சைகளில் விரைவில் இறங்க வேண்டும்.

#8 படம்: ஆனந்த்

கோப்பை வைத்து எடுக்கையில் அதையும் நாம் சாஃப்டாக ஒளியூட்டுதல் அவசியம். அதற்கு பக்கவாட்டிலிருந்து ஒரு டேபிள் லாம்ப் மூலமாக ஒளி கொடுக்கலாம். அல்லது பக்கத்து அறை விளக்கைப் போட்டு அதிலிருந்து கோப்பைக்குப் போதுமான வெளிச்சத்தைப் பெறலாம்.
 
இத்தனை மெனக்கிடாமல் வெளியிடங்களில் கிறுஸ்துமஸ் புத்தாண்டு அலங்கார  விளக்குகளை மட்டுமே பொகே படங்களாக்கலாம். அப்போது ட்ரைபாட் இருக்காது என்பதால் கவனமாகக் கேமராவைக் கையாள வேண்டும். ஷட்டர் ஸ்பீடை சற்று அதிகமாக வைத்துக் கொள்ளலாம்.

மொத்தத்தில் நினைவில் நிறுத்த வேண்டியது இந்த 3 விஷயங்கள்:
1.லார்ஜ் அப்பெச்சர் (சின்ன f நம்பர்);
2.சப்ஜெக்ட் மேல் க்ளோஸ் ஃபோகஸ்,
3.நல்ல தொலைவில் பின்னணி (reasonable good distance between the subject and the background).


விதவிதமான வடிவங்கள்

பொகேயின் வடிவங்கள் கேமரா லென்ஸுகளின் டயப்ரமைப் (diaphragms) பொறுத்ததெனப் பார்த்தோம்.  ஏழு நேர் ப்ளேடுகளைக் கொண்ட பழைய Nikkor 50mm f/1.4 லென்ஸுகளின் diaphragm ஹெப்டகன் வடிவ பொகேயைக் கொடுத்தன. ஹெக்ஸகன் வடிவ பொகே கொடுக்கிற லென்ஸுகளும் உள்ளன. தற்போது வருகிற பெரும்பாலான லென்சுகள் 9 வட்ட வடிவ ப்ளேடுகளைக் கொண்டே வருவதால் அவற்றின் பொகே வட்டங்களாகவே அமைகின்றன.

வித்தியாச வடிவத்துக்கு லென்ஸை மட்டும் சார்த்திருக்கத் தேவையில்லை:)!

#9

#10

இந்த இரண்டு படங்களும் இணையத்திலிருந்து..

இது போல நாமே லென்ஸின் விட்டத்துக்கு ஒரு அட்டையை வெட்டிக் கொண்டு அதன் நடுவே பூ, இதயம், நட்சத்திரம் போன்ற வடிவங்களை ஏற்படுத்திடலாம். அவற்றைக் கீழ்வருமாறு அட்டையில் ஒரு cap தயாரித்து அதின் மேலே பொருத்தி லென்ஸில் மாட்டிக் கொண்டால் ஆயிற்று. வண்ணங்களோடு வடிவங்களும் உங்கள் வசம்:)!
***

 போட்டி 2: மூடிய கதவுகள்

இந்தப் போட்டி DSLR மற்றும் பாயின்ட் அன்ட் ஷூட் பயன்படுத்துகிற இருதரப்பினருக்குமானப் பொதுத் தலைப்பு.  முதல் தலைப்புக்குமே அட்வான்ஸான வசதிகள் கொண்ட பாயின்ட் அன்ட் ஷூட்டில் எடுக்க முடியும். அப்படி எடுக்கப்படும் படங்களும் வரவேற்கப்படுகின்றன. இருப்பினும் ‘பொகே எங்கள் கேமராவில் எடுக்க வராதே’ என்கிற வாசகர்களுக்காகவே இரண்டாவது போட்டி. ஒருவர் ஒரு தலைப்புக்கு மட்டுமே படம் அனுப்ப வேண்டும்.

சன்னல்கதவுகளை அனுப்பக் கூடாது. மூடியிருப்பவை வாயில் கதவுகளாக இருக்க வேண்டும்.

#11

#12

#13

#14


ல்பங்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு படங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன இங்கே:

முதல் போட்டி ஆல்பம்
இரண்டாவது போட்டி ஆல்பம்

மற்ற பொதுவான விதிமுறைகள் இங்கே.

படங்களை அனுப்பக் கடைசித் தேதி: 20 டிசம்பர் 2013.
***

18 கருத்துகள்:

  1. என்னென்னமோ டெக்னிகலாகச் சொல்லியிருக்கிறீர்கள். முதல் படங்களில் சொல்லியிருக்கும் அவுட் ஆஃப் ஃபோகஸில் ஒளி வட்டங்கள் - இதைப் படித்ததும் ஆபாவாணன் இயக்கிய ஊமை விழிகளில் (அல்லது கேப்டன் பிரபாகர்?) இது போன்ற ஒரு காட்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு
  2. சமீபத்தில் தி இந்துவில் ஒரு புகைப்படம் வெளியிட்டிருந்தார்கள். சாலையில் தொங்கும் வொயர்க் கட்டு. அது தெளிவாகவும், சாலியில் பின்னணியில் நடந்து வருபவர்கள் அ.ஆ.ஃபோ லும் தெரிந்தார்கள். அதுவும் நினைவுக்கு வந்தது. அப்போது அந்தப் படத்தைப் பார்த்தபோது இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  3. காட்டியுள்ள படங்கள் எல்லாம் அருமையாக உள்ளன.

    ஸ்ரீராம் சொல்வது போல என்னென்னமோ டெக்னிகலாகச் சொல்லியிருக்கிறீர்கள்.;)

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் அனைத்தும் அற்புதம்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. தத்ரூபமான படங்கள் மனதை கொள்ளை கொண்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் அருமை...
    போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. @ஸ்ரீராம்.,

    படங்களை ஆழ்ந்து பார்த்து ரசிக்கிறீர்கள்:)!

    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  8. அழகான விளக்கங்கள்.....

    முயற்சிக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  9. அழகான, தெள்ளத் தெளிவான விளக்கங்கள். எளிமையாகப் புரியும்படி விளக்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மிக அழகாக விளக்கி இருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி. அந்த விளக்கு படத்திற்கான making shot அருமை. மொத்தத்தில் மிகவும் பயனுள்ள பதிவு.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin