Tuesday, March 26, 2013

செம்மண் பூமி, கபினி அணை, கபிலா ஆறு - பாகம் 1


மைசூரிலிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் HD Kote தாலுகாவில் இருக்கிறது கபினி அணை. கபிலா ஆற்றின் மேல் கட்டப்பட்டிருக்கும் இந்த அணையே நாகர்ஹொலே, பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயங்களைப் பிரிக்கிறது. அணையின் உள்ளே செல்ல வாகனங்களுக்கு அனுமதியில்லை. நுழைவாயிலையொட்டிய சாலையில் பயணித்தால் அணை தெரிகிறது. பத்து நிமிடப் பயணத்தில் வருகிற இன்னொரு வாயிலில் வண்டிகளை வெளியே நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டர் போல உள்ளே நடந்து போனால் அணையைப் பார்க்கலாம் என்றார்கள். நேரமின்மையால் செல்லவில்லை. வாகனத்தில் இருந்தபடியே எடுத்த சில படங்கள்:

#2


நீருக்கு வேலி..


#3

 #4

அணையிலிருந்து எட்டுகிலோ மீட்டர் தொலைவில் ஹோஸ்மலா கிராமத்துக்குப் பக்கத்தில், படனேகுப்பேவில் ஆற்றினை ஒட்டியே இருக்கிறது ரெட் எர்த் ரிசார்ட்ஸ். 

#5 உணவகத்திலிருந்து Club House

#6  நதி பார்த்த குடில்கள்

போகும் வழியெங்கும் பச்சை பசேல் வயல்களும் கரும்புத் தோட்டங்களுமாய் உள்ளன. கண்ணில் பட்ட, மனதைத் தொட்ட, சுவாரஸ்யம் தந்த காட்சிகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

#7 பச்சை வயல்


#8 பாகற்காய் தோட்டம்
சோளக்கொல்லைப் பொம்மை
கடைசி ஒரு கிலோமீட்டர் தார்ச்சாலையாக இல்லாமல் குண்டும் குழியுமாக இருந்ததால் மெல்லச் செல்ல வேண்டியிருந்தது. கிராமத்து வீடுகளின் அழகை இரசிக்க உதவியது அந்தத் தூரம். ஆள் அரவமற்ற முற்றத்தில் காய்ந்து கொண்டிருந்த மிளகாய் வற்றல்கள். சில வீடுகளில் கோழிகளும் குஞ்சுகளும் உலாத்திக் கொண்டிருக்கின்றன. மாடி வீடுகளும் இருந்தன. சில சிறுவர்கள் கடந்து செல்லும் வாகனங்களுக்கு உற்சாகமாகக் கையசைக்கின்றனர்.  வழக்கமான விளையாட்டு போலும்.

#9 கட்டி வைத்தத் தானியங்கள்


#10 கிராமத்து வீடு


#11 மாடி வீடு

பொங்கிப் பிரவாகித்து ஓடுகிறது கபிலா ஆறு.  

#12 கபிலா ஆறு

 #13 பசும் புல்


#14 Jogging Track


#15 ஆங்காங்கே..
வியக்க வைக்கும் நேர்த்தி.

 #16 நதிக்கரை

இன்னொரு கோணத்தில் இந்த இடத்தைப் பார்த்த போது
இந்திய வரைபடம் போலிருப்பதாகச் சொன்ன
ஸ்ரீராமுக்காக..
#17 காத்திருக்குது பரிசல்

மாலையில் பரிசலில் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்கள். அரை மணி நேரப் பயணத்தில் இன்னொரு இடத்தில் கரை சேர்ந்து, அங்கிருந்து மாட்டு வண்டியில் மீண்டும் விடுதிக்குக் கூட்டி வருவதாய் சொன்னார்கள். குண்டும் குழியுமான சாலை நினைவுக்கு வர, கிளம்பி இடத்துக்கே மீண்டும் கொண்டு விடக் கேட்டுக் கொண்டோம். விடுதி ஆரம்பித்து சில மாதங்களே ஆவதால் தார்ச்சாலை கொண்டுவர முயன்று கொண்டிருப்பதாகச் சொல்லப்பட்டது.

நதியின் ஓட்டம் பதிவில் பகிர்ந்து கொண்டிருந்த குல்லா போட்ட பரிசல்காரர் படங்கள் கபினிக் கரையில் எடுத்தவையே.

நாங்கள் சென்ற பரிசலை இயக்கியவர்:
#18

ஆற்றிலே ஆழம் அதிகமென்பது பயணிக்கையிலேயே புரிந்தது. அதிகமாய் முதலைகளும் உண்டெனப் பாதித்தூரம் போனதும் பீதியைக் கிளப்பினார்:). கைகளைத் தண்ணீரில் விடாதீர்கள் எனக் கேட்டுக் கொண்டார். எங்கள் அருகே இன்னொரு பரிசலில் பயணித்த குடும்பத்திலிருந்த சின்னக் குழந்தைகளைக் குஷிப் படுத்த அந்தப் படகுக்காரர் ‘சர்..சர்..’ என அவ்வப்போது இரண்டு மூன்று வட்டமடித்தபடி இருந்தார்.

#19  முதலைகள் ஜாக்கிரதை


குழந்தைகள் குதூகலித்தாலும் படகு மேலும் கீழுமாய் ஆடியதைப் பார்க்க அச்சமாகவே இருந்தது. எதற்கு இந்த விபரீத விளையாட்டு எனத் தோன்றியது. குழந்தை வேறு கையைத் தண்ணீரில் நனைத்து விளையாடிருக்கிறது என்பது பிறகு படத்தைப் பார்க்கையில் தெரிந்தது.  “உங்களுக்கும் அப்படி வட்டமடித்துக் காட்டட்டுமா?” என்றார் பரிசல்காரர் சிரித்தபடி,  ஏற்கனவே மெல்லப் போகும்படி பலமுறை கேட்டுக் கொண்ட என்னைப் பார்த்து.

#20 வேலை முடிந்தது..
பரிசலிலிருந்து நீரை வடிக்கும் காட்சி.
 #21 கபினி அணை அருகே..
சுமையைக் குறைத்திட அன்றி
தோளின் வலிமைக்காக வேண்டிடும்
(அ)சாதாரண மனிதர்களில் ஒருவர்.

அசர அடித்தது, கிடைத்திருக்கும் நீர்வளத்தையும், மண்வளத்தையும் சாதகமாக்கி விடுதி அமைத்துப் பராமரித்து வரும் தோட்டம். அடடா! எத்தனை வகைப் பூக்கள்! எத்தனை வண்ணங்கள். ஒவ்வொன்றின் அழகையும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.  வழக்கம் போல் பொட்டியில் அடைத்துக் கொண்டு வந்து விட்டேன்:)! பார்வைக்குத் தருகிறேன் மேலும் இரண்டு பாகங்களாக!
*** 

26 comments:

 1. படங்கள் அருமை...

  பச்சை வயலும், பாகற்காய் தோட்டமும், கிராமத்து வீடும் எனது நண்பர் நல்லமுத்துவை (நீங்க மரமாக போறீங்க... - பகிர்வு) நினைக்க வைத்தது...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. படங்களெல்லாம் அழகழகா இருக்குது..

  ReplyDelete
 3. உங்கள் கைவண்ணத்தில் படங்கள் அழகு மிளிர்கிறது...

  ReplyDelete
 4. இரண்டு பாகமென்ன... இருபது பாகங்களாக நீங்கள் தந்தாலும் சலிக்காமல் பார்த்து ரசிக்கலாம். படங்கள் ஒவ்வொண்ணும் கண்ணில் பதிந்து கருத்தைக் கவர்கின்றனவே...! இந்திய தேச வடிவில் அந்த நதியைப் பார்க்கவே வியப்பு + ரம்யம்! பரிசல் பயணம்... ஒருமுறை செய்து பார்க்க வேணுமென்று ரொம்பநாள் ஆசை எனக்குள். அமையுமா பாக்கலாம். உங்களின் அடுத்த பதிவிற்காய் ஆவலுடன் காத்திருப்பு!

  ReplyDelete
 5. படங்கள் அனைத்தும் நன்று!

  //ஆற்றிலே ஆழம் அதிகமென்பது பயணிக்கையிலேயே புரிந்தது. அதிகமாய் முதலைகளும் உண்டெனப் பாதித்தூரம் போனதும் பீதியைக் கிளப்பினார்:).//

  படிக்கிற/பார்க்கிற எங்களுக்கும் பயம் வருகிறது:)!

  ReplyDelete
 6. படங்கள் எல்லாம் அழகு. கபில ஆறுமிக மிக அழகு.
  குழந்தையின் கைகள் தண்ணீரில் முக்கி விளையாடிய அடையாளத்திற்கு விரலிலிருந்து தண்ணீர் சொட்டும் அந்த படம் மிக துல்லியம்.
  ஸ்ரீராம் சொன்ன இந்திய வரைபடம் அழகு.
  அடுத்தபகுதி பார்க்க காத்து இருக்கிறேன்.

  ReplyDelete
 7. எவ்வளவு தண்ணீர்.

  மன்னிக்கணும் ராமலக்ஷ்மி .நம் ஊரைப் பற்றி நினைக்கும் போது நமக்கு எப்போது இந்தவளம் கிடைக்கும் என்று ஏக்கமாக இருக்கிறது.

  செம்மண் பூமியென்றால் ஊர்வன நடமாட்டம் இருக்கும் இல்லையா.
  அடுத்த பகுதியில் அந்த விடுதி பற்றியும் எழுதுங்கள். பேரன் பேத்திகளை அழைத்துப் போக நல்ல இடமாக இருந்தால் போகலாம்.
  கண்ணிலேயே நிற்கிறது அந்தப் பசுமை.

  ReplyDelete
 8. அருமையான, கண்ணைக் கவரும் படங்கள். ஆற்றில் இவ்வளவு தண்ணீர் பார்த்து எவ்வளவு நாட்களாகின்றன?

  எனக்காகப் பதிவிட்ட இந்திய வரைபட நதி அழகு! நன்றி..நன்றி!

  அந்தப் பரிசலில் பயணம் செய்ய தனி தைரியம் தேவை!

  ReplyDelete
 9. படங்களும் பகிர்வும் வெகு சுவாரசியம். நன்றி

  ReplyDelete
 10. அனைத்துமே அருமை சகோ... மிகவும் ரசிக்க வைத்தது தோணி படங்கள்.

  ReplyDelete

 11. படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 12. @பால கணேஷ்,

  பரிசல் பயணம் பயமாக இருந்தாலும் நன்றாகவே இருந்தது:)! வாய்ப்பு கிடைத்தால் சென்றிடுங்கள்.

  நன்றி கணேஷ்.

  ReplyDelete
 13. @கோமதி அரசு,

  மிக்க நன்றி கோமதிம்மா. அடுத்த பாகங்களை விரைவில் பகிர்ந்து கொள்ளப் பார்க்கிறேன்:)!

  ReplyDelete
 14. @வல்லிசிம்ஹன்,

  அத்தனை நீரைப் பார்க்கையில் ஆதங்கம் ஏற்படாமலில்லை. அதனால்தான் ‘நீருக்கு வேலி’ என்றேன். மனமிருந்தால் மார்க்கமுண்டு.

  ஊர்வனவற்றைக் கண்ணால் பார்க்காவிட்டாலும் நிறைய இடங்களில் புற்றுகளைப் பார்க்க முடிந்தது.

  விடுதியில் நிறைகளோடு சில குறைகளும் இருந்ததால் விரிவாக ஏதும் சொல்லவில்லை. செல்ல நினைப்பவருக்குப் பயனாகும் என்பதால் அடுத்த பாகங்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

  நன்றி வல்லிம்மா:)!

  ReplyDelete
 15. @ஸ்ரீராம்.,

  ஆமாமாம். நான் தைரியமாகப் போய் வந்து விட்டேன்:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 16. அருமையான பயண அனுபவத்தைத் தந்தீர்கள். படங்களும் அருமை.

  ReplyDelete
 17. புகைப்படங்கள் எல்லாமே கண்ணுக்குக் குளிர்ச்சி!
  என்னவொரு நீர்வளம்!
  நானும் ஒரு தடவை இந்த மாதிரி பரிசலில் போயிருக்கிறேன் (பயந்து கொண்டே!) பேசாமல் கரையில் நின்றபடியே ஓடும் நதியை ரசித்திருக்கலாம் என்று தோன்றியது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin