புதன், 13 ஜூலை, 2011

துளசி கோபாலின் ‘என் செல்ல செல்வங்கள்’ - ஒரு பார்வை - அதீதத்தில்..

ன் செல்லச் செல்வங்கள்’. தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது, ஆனால் இது அதையும் தாண்டி அன்பைப் பற்றி அதிகம் பேசுவதாய் உள்ளது. சுமார் முப்பது ஆண்டு கால வாழ்க்கையை அலசியபடியே நகரும் பயணம் எங்கினும் அன்பு காட்டிய செல்லங்களுடன்.. அன்பைப் பொழிந்த மனிதர்களும் வருகிறார்கள். குறிப்பாக முதல் ஒன்பது அத்தியாயங்களில்.

புத்தகத்தினுள் செல்லும் முன் ஆசிரியரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பத்திரிகை எழுத்தாளர்கள் இன்னுமொரு வட்டத்தை அடைய விரும்பி இணையத்தை தஞ்சம் அடைந்து வருவது ஒரு பக்கம் எனில் இவர் இணையத்தில் எழுத ஆரம்பித்துத் தனக்கென ஒரு பெரிய வாசகர் வட்டத்தைப் பெற்று இணையத்தில் பகிர்ந்தவற்றையே புத்தகங்களாக்கிக் கொண்டு வருகிறார். கூடவே பல பத்திரிகைகளின் மூலமாக வாசகர் வட்டம் விரிந்து கொண்டே செல்கிறது.

இது இவரது முதல் புத்தகம். பேச்சுவழக்கிலான எழுத்து வாசிக்கும் எவருக்கும் ஒரு தோழியின் பகிர்வைப் போன்றதான நெருக்கத்தைத் தருவதாக உள்ளது. இந்தப் புத்தகத்தின் கடைசி சில அத்தியாயங்கள் இணையத்தில் பகிரப்படும் போது அவற்றுடனே நானும் பயணித்திருக்கிறேன். கோகியின் புகைப்படங்களுக்கு முதன்மையான ரசிகையாக இருந்திருக்கிறேன். அறியாத முந்தைய பாகங்களையும் சேர்த்துக் கொண்டு ஒரு முழுமையான வாழ்க்கைக் குறிப்பை.. அனுபவக் கதையை.. வாசித்து முடிக்கையில் ஏற்பட்ட கலவையான உணர்வுகளில், தவிப்பும் நெகிழ்வும் ஆசிரியரின் சோகத்துக்கு ஆறுதல் வேண்டி நின்றன.

அத்தியாயங்கள் 1-9:

சின்னவயதில் ஒருசில மணிநேரமே அன்புகாட்ட வாய்த்த மஞ்சள் நிற மணிவாத்துக்கள்; திருமணத்துக்குப் பின் சிலநாள் மட்டுமே கூட இருந்த நாய்க்குட்டிகள் டைகர், ஜிம்மி; ஆறாவதாகக் குடிபோன வீட்டில் ச்சிண்ட்டு, தத்தி சிட்டுக்குருவிகள் ( “எங்க தலைமேலே உக்காந்து ரெண்டு ரூமுக்கும் சவாரி... கூண்டு எல்லாம் இல்லே”); பேருந்து நிலையத்தில் கணவருக்குக் காத்திருக்கையில் காலை நக்கி அரைவாலை ‘விசுக் விசுக்’ என ஆட்டி அடைக்கலமான ச்சிண்ட்டு.

கேரளா, புனே என வசித்து, ஃபிஜித் தீவுகளுக்கு நாடுவிட்டுச் சென்ற காலக்கட்டம் வரையிலான வாழ்வை அற்புதமாகப் பதிந்திருக்கிறார். அதிலும் ச்சிண்ட்டுவுடன் வசித்த குடியிருப்பில், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்றால் எப்படி இருப்பார்கள் ‘பாரத விலாஸ்’ போல என இவர் காட்டியிருக்கும் வாழ்க்கைச் சித்திரம் இன்றைய காலகட்டத்தில் நாம் இழந்து போன சில சமூக உறவுகளை ஏக்கத்துடன் நினைக்க வைக்கின்றன.

கூடவே நமது பாரத விலாஸ் காலத்து நண்பர்களில் தொடர்பு விட்டுப்போனவர்கள், அவர்தம் பிள்ளைகள் இப்போது எங்கு எப்படி இருப்பார்கள் எனும் எண்ணங்களும், முன்னுரையில் மதுமிதா பகிர்ந்திருப்பது போல அவரவர் வாழ்வில் வந்த வளர்ப்புப் பிராணிகளின் நினைப்பும் வந்து போகின்றன.

எங்கிட்டே இது ஒரு கஷ்டம். எப்பவும் பேசுற விஷயத்தை விட்டுட்டு அப்படியே போயிருவேன்’ என்கிறார் ஓரிடத்தில். முதலில் நமக்கும் அப்படியான ஒரு உணர்வு ஏற்பட்டாலும், இப்படி அங்கும் இங்கும் நினைவுக் குதிரைகளைத் தட்டி விட்டு, தட்டி விட்டு மீட்டெடுத்த விஷயங்கள் யாவும் ஆவணப்படுத்த வேண்டிய அவசியமான விவரங்களாகவே புத்தகத்தை சுவாரஸ்யப்படுத்தியிருப்பது வாசிக்க வாசிக்கத் தானாகப் புரிய வருகிறது.

அத்தியாயங்கள் 10-11:

சிஃபிக் சமுத்திரத்தில் இருக்கும் ஃபிஜித் தீவுகளில் வசித்த ஆறு வருடங்களை இந்த இரண்டு அத்தியாயங்களில் அடக்கி விட்டுள்ளார், விரிவாக அடுத்து வெளியிட்ட புத்தகத்தில் சொல்ல இருந்ததாலோ என்னவோ..!

பக்கத்து வீட்டில் காவல்காரனாக மட்டுமே பார்க்கப்பட்டு, ‘ஃப்ரெண்ட்லியானவன் இல்லை’ என வளர்த்தவர்களாலேயே பழிக்கப்பட்டு, கர்ஜிக்கும் சிங்கமென எப்போதும் கட்டியே போடப்பட்டிருந்த ராக்கி, இவரது அன்பான பார்வையிலே கட்டுண்டு கன்றுக்குட்டியானதைப் பார்க்கையில் அதிசயமாகவும், கடவுள் இவருக்கும் பிராணிகளுக்கும் நடுவே ஒரு அலைவரிசையை வரமாகவே அளித்தாரோ என்றும் நினைக்கத் வைக்கிறது.

அவரேதான் சொல்லுகிறாரே நூலின் ‘என்னுரை’யில் தான் “போன ஜென்மத்தில்... மானா இல்லை யானையா.. சரி.. ஏதோ ஒரு விலங்கினம். இல்லாவிடில் இந்த உயிர்கள் மீது இப்படி ஒரு பிணைப்பு ஏற்படுவானேன்? பூர்வ ஜென்ம பந்தம்” என்று.

மகள் பிறக்க அவளின் மழலையை ரசிக்கச் சுற்றிச் சுற்றி வந்த செல்லங்களுக்குக் கணக்கில்லை என்றாலும் அவளுடனேயே சேர்ந்து வளர்ந்த நூரி எனும் நாய்க்குட்டியை நல்லபடியாக விரும்பிக் கேட்ட நண்பர் வீட்டுக்குத் தத்துக் கொடுத்து விட்டு நியூசிலாந்து வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

அத்தியாயங்கள் 12-23:

க்கத்து வீட்டுக்காரர்கள் காலிசெய்து போகையில் மறந்து விட்டுப்போன பூனை பிளாக்கி, கற்பகம் எனும் நாமகரணத்துடன் ‘கப்பு’வாக இவர் மடியிலும் மனதிலும் ஏறிக் கொண்டாள். ‘கப்பு, தி ராயல்’.

அடுத்தடுத்து வந்து சேர்ந்த பூனைகளாக உயர் நாகரீக மிடுக்கு நிறைந்த மிடில் ஏஜ்ட் ஷிவா; கணவர் கோபாலின் செல்லமாகிப் போனதாலும், அடைக்கலம் ஆன புதிதில் கராஜில் அவரது காரின் மேல் பாலக் கிருஷ்ணன் போலத் தினம் தினம் பாதத் தடம் விட்டதாலும் கோபாலக் கிருஷ்ணன் ஆகி சகபதிவர்களால் ‘கோகி’ என அன்பு பாராட்டப்பட்ட ஜி கே; இவர்களுடன் இன்னும் எத்தனை எத்தனை பேர்.

அணையா அடுப்புடன் வந்தவருக்கெல்லாம் சாப்பாடு எனக் கேள்விப்பட்டிருப்போம். ‘துளசி விலாஸ்’ அணையா அன்புடன் வாசல் வந்து நின்ற அத்தனை பூனைகள், ஹெட்ஜ் ஹாக் கூட்டம், நாய்கள் என எல்லோருக்கும் உணவளித்திருக்கிறது.

பிராணிகள் வளர்ப்புக்கு அந்நாட்டில் இருந்த முக்கியத்துவம், அக்கறையான மருத்துவ வசதிகள், உணவு வகைகள் இவற்றுடன் விடுதி வசதிகள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். கூடவே ஒவ்வொரு செல்லங்களின் தனிப்பட்ட சிறப்புக் குணாதிசயங்களையும்.

கோகியை விடுதியில் விடக் கவலைப்படும் போது, பல வருடம் முன் இவருக்கு ஆபரேஷன் ஆகியிருந்த சமயம் ச்சிண்ட்டுவை அதீத அக்கறையுடன் கவனித்துக் கொண்ட பூனா குடியிருப்பினர் நம்மை அறியாமலே நினைவுக்கு வந்து செல்கின்றனர்.

கப்புவும் கோகியும் இவர்களது வாழ்க்கையை எப்படி நிறைவாக்கினாக்கினார்கள், அதே நேரம் எப்படி நீங்காத பிரிவுத் துயரையும் தந்து மறைந்தார்கள் என்பதை வாசித்தால் மட்டுமே உணர முடியும். கப்புவுடனான தினசரி கொயட் டைம் நெகிழ்வு. இவர் கப்புவுக்கு எப்படியோ அப்படியே அதுவும் இவருக்கு அன்னையாக சகோதரியாக எல்லாமுமாக. செல்லங்கள் குறித்து ‘ஒரு முடிவு’ எடுக்க வேண்டிய சூழல்களில் சந்தித்த மனப் போராட்டங்கள் கசிய வைக்கின்றன.

இருபதாம் அத்தியாயத்தின் இறுதியில் பிரிய கப்புவின் மறைவுக்குப் பின் மனம் கனத்து சொல்லுகிறார் “வளர்ப்பு மிருகங்களை இழந்து தவிக்கிற எல்லோருக்கும் இதை அர்ப்பணிக்கின்றேன்”.

அதே போல ‘என்னுரை’யில் “கப்புவின் மறைவுக்குப் பின் அப்போதைய கடைசிப் பகுதியை (இணையத்தில்) எழுதியதற்கு, நிறைய நண்பர்கள் அவரவர் செல்லங்களின் இழப்பின் வலியைச் சொல்ல நாங்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி அமைதியானோம். இழப்பின் வலி எல்லோருக்கும் ஒன்றல்லவா?

பதினைந்து வருடப் பந்தம் கப்புவுடன் என்றால் கோகியுடன் எட்டு வருடம். கோகியின் இழப்பு வலிக்கு ஒரு துளி ஆறுதலை அந்நேரத்தில் நானும் தந்திருக்கிறேன். மீண்டும் இப்போது இவ் விமர்சனம் மூலமாக..!

ந்த இடத்திலும் எதற்காகவும் எதையும் சமரசம் செய்து கொள்ளாத எழுத்து. தன்னுடைய ஆரம்பப் பொருளாதரமாகட்டும், செல்லங்களால் வீட்டில் ஏற்பட்ட பூசல்களாகட்டும், செல்லங்கள் குறித்து பலமுறை ‘ஒரு முடிவு’ எடுக்க நேர்ந்த சூழல்களாகட்டும். நேர்மையான பதிவுகள்.

கணவரிடம் ஒவ்வொரு முறையும் தான் போராடியதாகப் பல இடங்களில் குறிப்பிடுபவர் ‘எங்க இவரு’-வின் உள்ளார்ந்த ஆதரவின்றி இத்தனை செல்லச் செல்வங்களை அடைந்திருக்க முடியாது என்பதையும் ஒத்துக் கொள்கிறார் ஓரிடத்தில் பெருந்தன்மையாக ஏதோ நமக்குத் தெரியாததைச் சொல்வதைப் போல:)!

மனிதர்களுக்கே உரிய எரிச்சல் சுபாவம் பிரச்சனைகளின் போது தலை தூக்கியிருந்தாலும் கருணை உள்ளத்திலும் இரக்க சுபாவத்திலும் எந்த விதத்திலும் குறைந்தவரல்ல ‘இவங்க அவரு’ [சரி சரி, ஒத்துக் கொள்கிறேன். அதையும் 'இவங்க’ பகிர்வுகள்தான் புரிய வைக்கிறது என்பதை..:) ] !

செல்வச் செல்லங்களிடம் தாம் காட்டிய அன்பைப் பன்மடங்காக அவற்றிடமிருந்து திரும்பப் பெற்றதாக உணரும் இத்தம்பதியர், பெற்ற அன்பை நெஞ்சம் நிறைய சுமந்து பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கி வருவதாலேயே சேருகிறது இவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

எந்த ஊருக்கு, நாட்டுக்குச் சென்றாலும் பதிவர்களை தேடிச் சென்று சந்திப்பது; பயணம் எங்கினும் சந்திக்கும் எளிய மனிதர்கள் அத்தனை பேரின் பெயரையும் விவரங்களையும் அக்கறையுடன் கேட்டறிந்து அவற்றைத் தன் பதிவுகளில் அன்புடன் நினைவு கூர்ந்திடுவது; புதிதாகப் பதிவு எழுத வருபவரை உற்சாகமாக வரவேற்பது; ஐம்பது நூறாவது பதிவினை எட்டிப் பரவசமடைபவரைத் தன் போல ஆயிரம் பதிவு தாண்டிட உளமார ஆசிர்வதிப்பது; பதிவரின் குடும்பத்து நல்லதுகளில் தம்பதி சமேதராக வாழ்த்துவது, வருத்தங்களில் பங்கேற்பது என அன்பால் இவர் எழுப்பியிருக்கும் கோட்டை மிகப் பிரமாண்டமானது. பிரமிப்புக்குரியது.

வாயில்லா ஜீவன்களாகட்டும். மானுடராகட்டும். உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்.

உதாரணமாக இத்தம்பதியினர், அன்பே சிவமென..!
***

விலை ரூ:80. பக்கங்கள்: 152. வெளியீடு: சந்தியா பதிப்பகம்.

சென்னையில் கிடைக்கும் இடங்கள்: -ந்யூ புக் லேன்ட், தி.நகர் [தொலைபேசி: 28158171, 28156006] மற்றும் டிஸ்கவரி புக் பேலஸ்[அலைபேசி: 9940446650], கே.கே நகர்.


13 ஜூலை அதீதம் இதழில்.., நன்றி அதீதம்!

51 கருத்துகள்:

 1. என் மனம் கவர்ந்த துளசிகோபால் அவர்களின் செல்ல செல்வங்கள் பற்றிய பகிர்வு நிறைவாக இருக்கிறது, பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. அன்பைப்பற்றி பேச அருகதை உள்ள அன்பு மனதிற்கு சொந்தக்காரர்தான் துளசிகோபால்.மரத்தடி.காமில் முதலில் இவருடனான பழக்கத்தில் திறமைகளை மறைத்துக்கொண்டு நிறைகுடமாய்ப் பழகிய இவரது பண்பு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இவரது எழுத்துக்கு எந்தவித மேக் அப்பும் கிடையாது. அப்படியே உள்ளது உள்ளபடி எழுதுவது இவரது இயல்பு அதுவே இவரது வெறறியும் ஆகி இருக்கிறது. இந்த நூலை நான் வாசித்து வியந்திருக்கிறேன் !எல்லோரிடமும் அன்பைக்காட்டுவதை தொழிலாக வைத்திருப்பார் துளசி. பாரதி சொன்னமாதிரி உங்களுக்குத்தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்பது போல ! அப்புறம் செல்லங்களைப்பற்றி இவர் எழுதுவதில் அன்பு வழியாமல் என்ன செய்யும்! நிறையப்பயண அனுபவம் கொண்டவர் அதனை எளிதான மொழியில் எழுதும் லாவகம் அறிந்தவர். பதிவுலக ராணியின் நூலைப்பற்றி பதிவுலக இளவரசி ராமலஷ்மி எழுதி இருப்ப்தும் பொருத்தமே! வாழ்த்துகளும் பாராட்டுக்களும் இருவருக்கும்!

  பிகு..இதுவரை இணையவரலாற்றிலேயே இப்படி முதன்முதலில் ஓடிவந்து பின்னூட்டம் இட்டதே இல்லை..துளசி மணம் இழுத்துக்கொண்டுவந்துவிட்டது!

  பதிலளிநீக்கு
 3. \\அப்படியே உள்ளது உள்ளபடி எழுதுவது இவரது இயல்பு அதுவே இவரது வெறறியும் ஆகி இருக்கிறது.\\

  I second this!

  பதிலளிநீக்கு
 4. துளசி எப்போதும் வாசனைதான்.எனக்கும் பிடித்த பதிவாளர் !

  பதிலளிநீக்கு
 5. புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். சீக்கிரம் வாங்கி விடுகிறேன். இவரளவு இல்லா விட்டாலும் நானும் பிராணி நேசன்தான்! குறிப்பாய் போன ஜென்மத்தில் நாயாய் இருந்திருப்பேனோ என்று நினைத்துக் கொள்வதுண்டு...(போன ஜென்மமா...இந்த ஜென்மத்துக்கு என்ன குறைச்சல்....' என்று நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள்..!) அந்த வகையில் இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது.அதுவும் உங்கள் பகிர்வைப் படித்தவுடன். இவரின் ஃபிஜித் தீவுப் பயணக் கட்டுரைப் புத்தகமும் என் வாங்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் தூரம் அதிகம். இருந்தாலும் டீச்சரின் எழுத்திற்காக வாங்கணும். அடுத்த தெருவில்தான் டிஸ்கவரி இருக்கு,

  பதிலளிநீக்கு
 7. செல்லப்பிராணிகள் குறித்த புத்தகம். நிச்சயம் ஆச்சர்யப்பட வைத்தது. புத்தக விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு
 8. ஆயிரமாயிரம் கதைகளை வச்சிருக்காங்க.. அதுல ஒரு துளி இது அதைப் பார்த்தே நாம இவ்வளவு ஆச்சரியப்படறோம்..

  அழகா எழுதி இருக்கீங்க ராமலக்‌ஷ்மி..
  படிக்கும் ஆவலைத்தூண்டவைக்கின்ற விமர்சனம்.

  பதிலளிநீக்கு
 9. துளசி அக்காவின் எழுத்துக்களை அருமையாக விவரித்தமைக்கு நன்றி.

  சென்னை வரும்போது இந்த புத்தகத்தினை படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. மரத்தடியிலும், அவங்க தளத்திலும் துளித்துளியா வாசிச்சிருந்தாலும், இப்போதும் மறுபடிமறுபடி தேடி வாசிக்கும் பகுதிகள் அவை :-)

  பதிலளிநீக்கு
 11. அருமையான விமர்சனம் .புத்தகத்தை வாங்கிப்படிக்கத்தூண்டி விட்டது.

  பதிலளிநீக்கு
 12. அருமையான விமர்சனம்.
  புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 13. துளசி டீச்சருக்கு வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றி அக்கா.

  பதிலளிநீக்கு
 14. புத்தக விமர்சனம் அருமை! பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 15. துள்சியின் வெற்றிக்குப் பின் கோபாலிருக்கிறார்!!!

  பதிலளிநீக்கு
 16. நயமான விமரிசனம்.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 17. அருமையான புத்தக விமர்சனத்தின் மூலம் திருமதி துளசிகோபால் அவர்களின்
  புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 18. //என் செல்லச் செல்வங்கள்’. தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது//

  ஆமாம், எனக்கும் அப்படிதான் தோன்றியது.

  நீண்ட விமர்சனம். நிச்சயம் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வரவழைக்கும் வகையில் அற்புதமாக எழுதியுள்ளீர்கள்.

  துளசி மேடத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 19. ராமலக்ஷ்மி வாழ்த்துகளும் பாராட்டும் பின்னே நன்றியும் :)

  இதை வாசித்துவிட்டு தோன்றியது.... எப்போ எங்க புத்தகங்களுக்கெல்லாம் எழுதப் போறீங்க???????

  @ஷைலு செல்லத் தோழியே.... அசத்திட்டீங்க போங்க.

  பதிலளிநீக்கு
 20. ஆமா இப்படியெல்லாம் எழுதி துள்சியோட அன்பையும் எழுத்தையும் ஒரு பதிவில் அடைத்து வைக்கமுடியுமுன்னு நினைக்க முடியலியே.

  வாழ்த்துகள் துள்சி.

  பதிலளிநீக்கு
 21. இராஜராஜேஸ்வரி said...
  //என் மனம் கவர்ந்த துளசிகோபால் அவர்களின் செல்ல செல்வங்கள் பற்றிய பகிர்வு நிறைவாக இருக்கிறது, பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

  பதிலளிநீக்கு
 22. ஷைலஜா said...
  //அன்பைப்பற்றி பேச அருகதை உள்ள அன்பு மனதிற்கு சொந்தக்காரர்தான் துளசிகோபால்....எல்லோரிடமும் அன்பைக்காட்டுவதை தொழிலாக வைத்திருப்பார் துளசி. பாரதி சொன்னமாதிரி உங்களுக்குத்தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் என்பது போல !..... வாழ்த்துகளும் பாராட்டுக்களும் இருவருக்கும்!.....//

  விரிவான பகிர்வுக்கும் ஆசிரியரைப் பற்றிய மனம் திறந்த பாராட்டுக்கும் மிக்க நன்றி ஷைலஜா.

  பதிலளிநீக்கு
 23. Gopi Ramamoorthy said...
  ***\\அப்படியே உள்ளது உள்ளபடி எழுதுவது இவரது இயல்பு அதுவே இவரது வெறறியும் ஆகி இருக்கிறது.\\

  I second this!/***

  நன்றி கோபி.

  பதிலளிநீக்கு
 24. ஹேமா said...
  //துளசி எப்போதும் வாசனைதான்.எனக்கும் பிடித்த பதிவாளர் !//

  ஆம் ஹேமா. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 25. ஸ்ரீராம். said...
  //புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள். சீக்கிரம் வாங்கி விடுகிறேன். இவரளவு இல்லா விட்டாலும் நானும் பிராணி நேசன்தான்! குறிப்பாய் போன ஜென்மத்தில் நாயாய் இருந்திருப்பேனோ என்று நினைத்துக் கொள்வதுண்டு...(போன ஜென்மமா...இந்த ஜென்மத்துக்கு என்ன குறைச்சல்....' என்று நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள்..!) அந்த வகையில் இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடுகிறது.அதுவும் உங்கள் பகிர்வைப் படித்தவுடன். இவரின் ஃபிஜித் தீவுப் பயணக் கட்டுரைப் புத்தகமும் என் வாங்க வேண்டிய லிஸ்ட்டில் இருக்கிறது.//

  உங்கள் பிராணி நேசத்தை ‘நாய்க்குட்டி மனசு’ சிறுகதையிலிருந்தே என்னால் ஊகிக்க முடிந்தது ஸ்ரீராம். இந்தப் புத்தகம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். நெருக்கமாக உணர்வீர்கள்.

  ஃபிஜித் தீவு பயணக் கட்டுரை என் லிஸ்டிலும்:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 26. எல் கே said...
  //எனக்கும் வளர்ப்பு பிராணிகளுக்கும் தூரம் அதிகம். இருந்தாலும் டீச்சரின் எழுத்திற்காக வாங்கணும். அடுத்த தெருவில்தான் டிஸ்கவரி இருக்கு,//

  வாங்கிடுங்க எல் கே சீக்கிரம்:)! நன்றி.

  பதிலளிநீக்கு
 27. தமிழ் உதயம் said...
  //செல்லப்பிராணிகள் குறித்த புத்தகம். நிச்சயம் ஆச்சர்யப்பட வைத்தது. புத்தக விமர்சனம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது.//

  நன்றி தமிழ் உதயம்.

  பதிலளிநீக்கு
 28. முத்துலெட்சுமி/muthuletchumi said...
  //ஆயிரமாயிரம் கதைகளை வச்சிருக்காங்க.. அதுல ஒரு துளி இது அதைப் பார்த்தே நாம இவ்வளவு ஆச்சரியப்படறோம்..

  அழகா எழுதி இருக்கீங்க ராமலக்‌ஷ்மி..
  படிக்கும் ஆவலைத்தூண்டவைக்கின்ற விமர்சனம்.//

  ஆம் கதைகள் கணக்கிலடங்கா. நன்றி முத்துலெட்சுமி.

  பதிலளிநீக்கு
 29. கவி அழகன் said...
  //அருமையான படைப்பு//

  நன்றி கவி அழகன்.

  பதிலளிநீக்கு
 30. ஜோ said...
  //துளசி அக்காவின் எழுத்துக்களை அருமையாக விவரித்தமைக்கு நன்றி.

  சென்னை வரும்போது இந்த புத்தகத்தினை படிக்க மிக ஆவலாக இருக்கிறேன்.//

  அவசியம் படியுங்கள். மிக்க நன்றிங்க ஜோ.

  பதிலளிநீக்கு
 31. அமைதிச்சாரல் said...
  //மரத்தடியிலும், அவங்க தளத்திலும் துளித்துளியா வாசிச்சிருந்தாலும், இப்போதும் மறுபடிமறுபடி தேடி வாசிக்கும் பகுதிகள் அவை :-)//

  தேடி வாசிக்க நிறைய உள்ளன. நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 32. ஸாதிகா said...
  //அருமையான விமர்சனம் .புத்தகத்தை வாங்கிப்படிக்கத்தூண்டி விட்டது.//

  நல்லது ஸாதிகா. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 33. சே.குமார் said...
  //அருமையான விமர்சனம்.
  புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.//

  மிக்க நன்றி குமார்.

  பதிலளிநீக்கு
 34. சசிகுமார் said...
  //பகிர்விற்கு நன்றி அக்கா//

  நன்றி சசிகுமார்.

  பதிலளிநீக்கு
 35. சுசி said...
  //துளசி டீச்சருக்கு வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றி அக்கா.//

  மிக்க நன்றி சுசி.

  பதிலளிநீக்கு
 36. Geetha6 said...
  //புத்தக விமர்சனம் அருமை! பாராட்டுக்கள்.//

  மிக்க நன்றி கீதா.

  பதிலளிநீக்கு
 37. நானானி said...
  //துளசியின் வெற்றிக்குப் பின் கோபாலிருக்கிறார்!!!//

  ஆம், மிக்க நன்றி நானானிம்மா.

  பதிலளிநீக்கு
 38. வெட்டிப்பேச்சு said...
  //நயமான விமரிசனம்.

  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 39. ஜிஜி said...
  //அருமையான புத்தக விமர்சனத்தின் மூலம் திருமதி துளசிகோபால் அவர்களின்
  புத்தகத்தை படிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள் ராமலக்ஷ்மி.
  பகிர்வுக்கு நன்றி.//

  வாங்க ஜிஜி. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 40. அமைதி அப்பா said...
  ***//என் செல்லச் செல்வங்கள்’. தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது//

  ஆமாம், எனக்கும் அப்படிதான் தோன்றியது. //

  அதற்காகதான் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டுள்ளேன்.

  //நீண்ட விமர்சனம்.//

  அவர் எழுத்துக்கு என்னால் ஆன சின்ன மரியாதை. உங்கள் வாழ்த்துக்களை சேர்ப்பித்து விடுகிறேன். நன்றி அமைதி அப்பா.

  பதிலளிநீக்கு
 41. மதுமிதா said...
  //ராமலக்ஷ்மி வாழ்த்துகளும் பாராட்டும் பின்னே நன்றியும் :)

  இதை வாசித்துவிட்டு தோன்றியது.... எப்போ எங்க புத்தகங்களுக்கெல்லாம் எழுதப் போறீங்க???????//

  நன்றி மதுமிதா. உங்கள் முன்னுரையும் ரசித்து வாசித்தேன். ’இரவு’ வாங்கும் எண்ணம் உள்ளது:)!

  பதிலளிநீக்கு
 42. மதுமிதா said...

  //ஆமா இப்படியெல்லாம் எழுதி துளசியோட அன்பையும் எழுத்தையும் ஒரு பதிவில் அடைத்து வைக்கமுடியுமுன்னு நினைக்க முடியலியே.//

  அவர் அனுபவத்தையும் ஆயிரம் பதிவுகளையும்.. அதெப்படி முடியும்:)? இங்கும் ததும்பிக் கொண்டுதான் இருக்கிறது!!

  புத்தகத்தை வெளிக் கொண்டுவருவதில் தாங்கள் காட்டிய அக்கறை, பங்கைப் பற்றி ஆசிரியர் ‘என்னுரை’ மூலமாக அறிய வந்தேன். வாசகர் சார்பில் உங்களுக்கு நன்றி!!

  பதிலளிநீக்கு
 43. மனம் திறந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் உங்களை வாழ்த்த வச்ச முத்துச்சரத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 44. மிக விரிவாக சிலாகித்து எழுதி உள்ளீர்கள். இத்தனை வித்தியாச அனுபவங்களையும், இவ்வளவு அன்பையும் பெற்ற துளசி டீச்சர் குடுத்து வைத்தவர்.

  பதிலளிநீக்கு
 45. துளசி கோபால் said...

  //மனம் திறந்து வாழ்த்திய அன்புள்ளங்களுக்கும் உங்களை வாழ்த்த வச்ச முத்துச்சரத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.//

  மிக்க மகிழ்ச்சி. நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த உங்களுக்கும் எங்கள் அன்பான நன்றி:)!

  பதிலளிநீக்கு
 46. மோகன் குமார் said...

  //மிக விரிவாக சிலாகித்து எழுதி உள்ளீர்கள். இத்தனை வித்தியாச அனுபவங்களையும், இவ்வளவு அன்பையும் பெற்ற துளசி டீச்சர் குடுத்து வைத்தவர்.//

  நிச்சயமாக. நன்றி மோகன்குமார்:)! உங்கள் வளர்ப்புப் பிராணிகள் குறித்த அனுபவங்களைத் தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள்!

  பதிலளிநீக்கு
 47. // தலைப்பையும் அட்டையில் இருக்கும் படத்தையும் பார்த்து விட்டு இது செல்லப் பிராணிகளின் வளர்ப்பு பற்றியதான புத்தகமாக மட்டுமே எண்ணி சிலர் கடந்து விடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது,//

  சரியாக கூறினீர்கள்.

  துளசி அவர்கள் பிராணிகள் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பது அவர்களது பதிவுகளை தொடர்ந்து படிப்பதன் மூலம் அறிந்து இருக்கிறேன்.

  நீங்களும் ஏனோ தானோவென்று விமர்சிக்காமல் சிறப்பாக அனைத்தையும் தொட்டு வந்துள்ளீர்கள். நாங்கள் செய்யும் திரை விமர்சனத்தை விட உங்கள் புத்தக விமர்சனம் நன்றாக உள்ளது :-)

  அப்புறம் எனக்கும் நாய் பூனை போன்றவற்றின் மீது ரொம்பப் பிரியம் குறிப்பாக எங்கள் குடும்பத்திற்கும் நாய்க்கும் எதோ பூர்வ ஜென்ம தொடர்பு இருக்குமோ என்று நினைக்கிறேன்.. அனைவருக்கும் பிடிக்கும் அதே போல அவைகளும் எங்கே இருந்தாலும் எங்களுடன் ஒட்டிக்கொள்ளும். எளிதாக பழகி விடும்.

  மறக்க முடியாத அனுபவங்கள் பல உண்டு.

  பதிலளிநீக்கு
 48. @ கிரி,

  பாராட்டுக்கு மிக்க நன்றி கிரி:)!

  உங்கள் கிராமத்து வீட்டுப் படங்களில் வளர்ப்பு நாயினைப் பார்த்து நினைவுள்ளது. பகிர்ந்திடுங்களேன் உங்கள் அனுபவங்களை ஒரு பதிவாக.

  பதிலளிநீக்கு
 49. ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க. புத்தக கண்காட்சியின் போது இந்த புத்தகத்தை எடுத்து வரவில்லையென பதிப்பகத்தினர் சொன்னாங்க. அதனால அங்கேயே ஆர்டர் கொடுத்து வர வழைத்தோம். இதுவும், நியூசிலாந்தும்....

  விமர்சனத்தை பார்த்ததும் உடனே படிக்கத் தூண்டுகிறது.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin