ஞாயிறு, 17 ஜூலை, 2011

தாய் மனசு - திண்ணையில்..

ம்மா அவசரமா ஒரு முன்னூறு ரூபா வேண்டியிருக்கு. வர்ற மாச சம்பளத்துல புடிச்சுக்குங்க.”

“எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?”

கோதை மறுக்க மாட்டாள் என்ற நம்பிக்கையில் ‘பளிச்’ என்று கேட்டு விட்ட கமலத்துக்கு சங்கடமாய் போயிற்று.

“என்னம்மா செய்யறது? பொண்ணுக்கு வர்ற வாரம் பொறந்தநாள் வருது. புதுசு வாங்கணும்னு கண்ணக் கசக்கிட்டு நிக்கு. ஸ்கூல்ல, அக்கம்பக்கத்து சிநேகிதிங்ககிட்டல்லாம் வேற சொல்லி வச்சிருக்காம். அதென்னவோ காக்ராவாமே. அது வாங்கணுமாம்.”

“அதுங்க அப்படித்தான் கண்ணக் கசக்கும். அடம் பண்ணும். எல்லாத்துக்கும் வளஞ்சு வளஞ்சு போனீயான ஒம்பாடுதான் திண்டாட்டம். குடும்ப நெலம புரிய வேண்டாமா? மொதல்ல எதுக்கு இப்ப புதுத் துணி. பாப்பாவோட துணியெல்லாம் அவளுக்குதானே தர்றேன். ரெண்டு மூணு தடவையே போட்டதெல்லாம் கூட புதுசு போலக் கொடுத்துருக்கேனே. அதுல ஒண்ண போட்டுக்கச் சொல்லு.”

“வாஸ்தவந்தாம்மா. ஆனா புதுசு கட்டின மாதிரியாகுமா?”

“ஆமா பிசாத்து நீ முன்னூறு ரூவாய்ல வாங்குற புதுச விட மூவாயிர ரூபா ட்ரெஸ்ஸை போட கசக்குதாமா ஒம் பொண்ணுக்கு?”

‘தினம் தினம் மிஞ்சின பிரியாணியும், கறி சோறும் இங்கே கொட்டிக் கொடுத்தாலும், வீட்டில ஒரு வா கஞ்சி வச்சுச் சூடா உறிஞ்சுக் குடிக்கிறதுதாம்மா தேவாமிர்தம்’ நினைத்ததைச் சொல்ல முடியாமல் கமலம் வேலையைக் கவனிக்க ஆரம்பித்தாள்.

“எல்லாம் உன் நல்லதுக்குதான் சொல்றேன். பொட்டைப் பசங்களுக்கு ரொம்ப இடம் கொடுத்து வைக்காதே. இன்னிக்கு கஷ்டந்தெரியாம அதக் கொண்டா இதக் கொண்டான்னு கேட்கிற மாதிரியேதான் கட்டிக்கிட்டுப் போனபிறகும் இருக்கும்ங்க” பின்னாடியே வந்து சமாதானம் பண்ணுகிற மாதிரி சொல்லிச் சென்றாள் கோதை.

ரண்டு நாட்கள் சென்றிருக்கும். துணிகளை ஒவ்வொன்றாக வாஷிங் மிஷினில் போட்டுக் கொண்டிருந்த கமலம், வீட்டு எஜமானரின் சட்டைப் பையில் ஏதோ தட்டுப்பட கைவிட்டுப் பார்த்தாள். மொடமொடப்பாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள். நேராக மதிய தொலைக்காட்சித் தொடரில் மூழ்கியிருந்த கோதையின் முன் வந்து நோட்டுக்களை நீட்டினாள்.

“சாரோட சட்டைப் பையில இருந்துச்சும்மா. சலவைக்குக் கூடையில போடும் போதே பாத்து போடுங்கம்மா.”

அசடு வழிய நோட்டுக்களை வாங்கிக் கொண்ட கோதை “நல்ல வேளையா பார்த்தே. மிஷினில் போட்டிருந்தியானா ஆயிரம் ரூவாயும் அரோகரான்னு போயிருக்கும்” என நெளிந்தாள்.

அடுத்த ஒரு மணியில் பம்பரமாய் சுழன்று அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு கமலம் கிளம்புகையில் கோதை அழைத்தாள்.

“இந்தா பிடி முன்னூறு ரூவா. அன்னிக்குக் கேட்டியே..”

“பொண்ணுக்கு துணி வாங்கவா? வேண்டாம்மா. எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்ல வேலைக்காரம்மா லீவு போட்டிருச்சு. நாலஞ்சு நாள் அங்கே செய்யறதா ஒத்துட்டிருக்கேன். கணிசமா தருவாங்க. அதுல சமாளிச்சுப்பேன்.”

“அன்னிக்கு எடக்கு முடக்கா ஏதோ சொல்லிட்டேன்னு ராணியம்மாக்குக் கோவமோ?”

“ஐயோ அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. ஆனாப் பாருங்க. இந்த வெள்ளி வந்தா பொண்ணுக்கு பன்னெண்டு முடியுது. அறியா வயசு. ஒரு நா அதுக்குப் புரியும் என் சிரமம். நாமளும் இதெல்லாம் தாண்டி வந்தவங்கதானே. அடம் வளரும்னு நீங்க பாக்கறீங்க. அது கண்ணுல தண்ணி வரப் படாதுன்னு இந்த தாய் மனசு பாக்குது. ஏழைப்பட்டவங்களுக்கு நாளு, கெழமை, பண்டிகை எதுவும் வராமப் போனா நல்லாருக்கும். ஆனா வருதே. போகுது விடுங்க. நாலுநாளு கூடுதலா கஷ்டப்பட்டது, எம்புள்ள கண்ணு மலர்ந்து சிரிக்கயில மறஞ்சு போகும். நீங்க சொன்னாப்ல மாசம் பிறந்தா கைக்கு வர கொஞ்சங் காசாவது உங்க பக்கம் நிக்கட்டும். வரேம்மா.”

‘கடனா இல்லே. அன்பளிப்பாதான் கொடுக்க வந்தேன்’ சொல்லும் திராணி அற்று நின்றிருந்தாள் கோதை.

***

படம் நன்றி: இணையம்

10 ஜூலை 2011 திண்ணை இதழில்.., நன்றி திண்ணை!

79 கருத்துகள்:

  1. தாயுள்ளம் சொல்லும் நெகிழ்வான கதை....
    நல்லா இருக்குங்க....

    பதிலளிநீக்கு
  2. கதை மிகவும் நன்றாகவே உள்ளது. ஏழைகளுக்கு பண்டிகைகளோ, பிறந்த நாளோ வந்தால் மிகவும் கஷ்டம் தான்.
    தாய் மனசு தவிக்கத்தான் செய்யும்.

    திண்ணையில் வெளிவந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ராமலஷ்மி..

    பதிலளிநீக்கு
  4. // ஏழைப்பட்டவங்களுக்கு நாளு, கெழமை, பண்டிகை எதுவும் வராமப் போனா நல்லாருக்கும். ஆனா வருதே.//

    :((

    பதிலளிநீக்கு
  5. நன்றாக இருக்கிறது, தாயின் மனசை படம்பிடித்துக் காட்டும் அருமையான நடை.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப நல்லா வந்துருக்குப்பா!!!!! தாய் மனசுக்கு என்னத்தை ஈடாச் சொல்ல முடியும்!!!!

    பதிலளிநீக்கு
  7. //வீட்டு எஜமானரின் சட்டைப் பையில் ஏதோ தட்டுப்பட கைவிட்டுப் பார்த்தாள். மொடமொடப்பாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்.//

    இந்த இடத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

    வீட்டு வேலைக்காரர்கள் நேர்மையானவர்கள் என்பதையும் சித்தரித்துள்ளீர்கள்.

    கதையும் முடிவும் நன்று.

    பதிலளிநீக்கு
  8. சில நேரங்களில் சில மனிதர்கள்!

    சில நேரங்களில் பேசப் பட்ட வார்த்தைகளை திருத்திக் கொள்ளவும் முடியாமல், திருப்பி எடுக்கவும் முடியாமல் படும் அவஸ்தை. எல்லோருக்குமே ஒரொரு சமயம் இந்த அனுபவம் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. கதை நன்றாக உள்ளது. ரெம்ப பிடித்துள்ளது.

    பதிலளிநீக்கு
  10. கதை நன்றாகவே இருக்கிறது. ஆனால் உண்மையும் சுடும்; எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் பெண்ணுக்கு இப்படித் தான் அவளும் செய்து வந்தாள். நான் பணமும் கொடுத்துவிட்டுக் கண்டிக்கவும் செய்தேன். இப்போ பதினைந்து வயசுக்கே அந்தப் பெண் காதல் திருமணம் புரிந்து கொண்டு, அம்மாவிடம் இருந்து ரேஷன், காஸ் அடுப்பு, தொலைக்காட்சிப் பெட்டி, இண்டக்ஷன் ஸ்டவ், கணவனுக்கு வண்டி என எல்லாமும் கேட்டுத் தொந்திரவு. ஐம்பதாயிரம் வட்டிக்கு வாங்கி எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறாள். அவள் படிப்புக்கு என நாங்க செலவு செய்யத் தயாரா இருந்தோம்; ஆனால் அந்தப் பெண் திடீரெனத் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகிவிட்டாள். கணவனுக்கு இருபது வயது. இந்தப் பெண்ணுக்கு இப்போத் தான் பதினேழு. :((((((

    பதிலளிநீக்கு
  11. இம்மாதிரி அநுபவம் நிறைய இருக்கு! சில சமயம் குழந்தைகளிடம் நம் நிலைமையை ஒளிக்காமல் மறைக்காமல் சொல்வதே நல்லது. நாங்க குழந்தைகளையே செலவு செய்யச் சொல்லிடுவோம். அப்போப் புரிஞ்சுப்பாங்க.

    பதிலளிநீக்கு
  12. இப்போதெல்லாம் வீட்டு வேலை செய்பவர்கள் கட்டும் துணிகளைப் போல் மத்தவங்க கட்டறதில்லை என்பதும் உண்மை. ஏனெனில் வெறும் பாத்திரம் தேய்க்கவே ஐநூறு ரூபாய். எல்லா வேலையும் என்றால் ஆயிரத்தில் இருந்து ஆயிரத்து ஐந்நூறு வரை போகும். குறைந்தது பத்து வீடாவது செய்யறாங்க. காலை ஐந்து வீடுகள், மதியம் ஐந்து வீடுகள் என. எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்மணி இரவு எட்டு மணி வரையிலும் செய்து விட்டு வருவாள். உடம்புக்கு வந்துடும்னு சொல்லி எச்சரிக்கையும் கொடுத்தாச்சு. :(

    பதிலளிநீக்கு
  13. எதிர்மறையாகப் பின்னூட்டம் போட்டிருப்பதாய் நினைக்க வேண்டாம். தற்சமயம் நடக்கும் நடப்பு இது தான்!

    பதிலளிநீக்கு
  14. இது கதையல்ல நிஜம். எங்களுக்கும்
    இதுபோன்று நடந்தது - குடிகார, பொறுப்பில்லாத காதலால் கைபிடித்த கணவன், குழந்தை பாசம், கை சுத்தம்
    ஆயிரத்தில் ஒருத்தி எங்கள் வீட்டு வேலைகாரி என்பதைவிட, என் மனிவி னொய்வுற்ற சமயத்தில் ஒரு தாயக, மகளாக இருந்தாள்
    நாங்கள் ஊரை விட்டு கிளம்பும்போது
    எங்களின் கண்களில் நீர் வழிந்தது.
    ராகவன் - அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. //எஜமானரின் சட்டைப் பையில்... இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்.//
    அமைதி அப்பா சொன்ன மாதிரி, மறுநாள் அவர் என் சட்டையில் இருந்த ரூபாயை காணோமே என்றால் மாட்டிக்கொள்வாளோ என்று பயந்தேன்.
    சகாதேவன்

    பதிலளிநீக்கு
  16. எனக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை என்றாலும் இதுதான் யதார்த்தம் என்று நினைக்கிறேன் !

    பதிலளிநீக்கு
  17. அருமையான கதை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. உங்க பதிவோட Feed ரீடர் ல முழுமையாக வர மாட்டேங்குது. அதை கொஞ்சம் சரி செய்ய முடியுமா?

    பதிலளிநீக்கு
  19. கதையல்ல நிஜம்

    ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுதான்

    அதை சரியான விகிதத்தில் சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    அன்புடன்
    தமிழ்த்தேனீ

    பதிலளிநீக்கு
  20. கதை ரொம்ப நல்லாயிருக்குக்கா,ஒரு தாயுள்ளத்தை அழகா சொல்லிருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  21. //ஒரு நா அதுக்குப் புரியும் என் சிரமம். நாமளும் இதெல்லாம் தாண்டி வந்தவங்கதானே.//
    athaane?

    பதிலளிநீக்கு
  22. அனுபவங்கள் பலரைப் பற்றி நமக்கு உயர்ந்த எண்ணங்களை வளர்க்கின்றன... சளைக்காமல் பகிர்கிற பரஸ்பர அன்பும் சேவையும் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நல்ல கதை

    பதிலளிநீக்கு
  23. யதார்த்தமான கதை அழகு நடையில்.

    பதிலளிநீக்கு
  24. ம் அறிவுரை சொல்வது எளிது. அவங்களுக்கும் அவங்க வாழ்க்கையில் இன்ன இன்னது தங்கள் குழந்தைகளுக்கு செய்யனும்ன்னு இருக்குமில்ல.. நல்ல கதை..

    பதிலளிநீக்கு
  25. அம்மா என்றல் அன்பு தானே ...

    பதிலளிநீக்கு
  26. முடிவு வரிகள் மிகச் சிறப்பாய்!

    வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  27. வாஷிங் மிஷின், பாண்ட் பாக்கெட், உள்ளே ரூபாய் நோட்டுகள்...அத்தனையும் நிதர்சனமான உண்மை.

    சில சமயம் அந்த ரூபாய் நோட்டுகள் சலவை செய்யப்பட்டு உள்ளேயே இருக்கும். சில்லறைகள் கீழே பில்டரில் வந்து காத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  28. அன்பு ராமலக்ஷ்மி, அந்த கோதை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம். எருமை மாட்டின் நோவு எறும்புக்கு என்ன தெரியும் என்பார்கள்.

    இந்த மாதிரி வேலை செய்பவர்களைப் பார்ப்பது அரிது.

    கீதா சொல்லி இருப்பது தான் இப்ப நடக்கிறது.

    அத்தனை கடன்களிலும் நம் தலையிலும் சில விழும்)

    கமலம் நல்ல தாய். மகளை நன்றாகவே வளர்பபாள்.

    பதிலளிநீக்கு
  29. geethasmbsvm6 has left a new comment on your post "தாய் மனசு - திண்ணையில்..": //அன்பு ராமலக்ஷ்மி, அந்த கோதை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருக்கலாம். எருமை மாட்டின் நோவு எறும்புக்கு என்ன தெரியும் என்பார்கள்.//

    இல்லை வல்லி, கோதை நிறையவே விட்டுக் கொடுத்திருக்காங்க என்பது அவர்களின் கீழ்க்கண்ட வரிகளில் தெரிகிறது. ரா.ல. கோதையையும் இளகிய மனம் கொண்டவராகவே காட்டி இருக்கார். ஆனால் கமலம் அதைச் சரியானபடி பயன்படுத்திக்கலையோனு தோன்றுகிறது. இதோ பாருங்கள் கதையின் ஆரம்பத்திலேயே கோதை மறுப்பதன் காரணத்தையும் சொல்கிறார். தப்பாய்ச் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்.

    //“எதுக்கு முன்னூறு. பிடிக்கதுக்கு அங்க என்ன மிச்சமிருக்கு. மொத்தமா வாங்குனது, நடுவுல வாங்குனது எல்லாம் போக இந்த முன்னூறும்னா என்னத்த கைக்கு வரும்?”//

    வீட்டு வேலை செய்து சம்பாதிப்பவர்களுக்குக் கொஞ்சம் பணமாவது வீட்டுச் செலவுக்கும் வேணும் இல்லையா? கைக்கு என்ன வரும்னு கேட்டிருக்காங்க, பாருங்க. கமலத்தின் குடும்பத்தின் நிலைமை தெரிந்து அவர்களிடம் கொண்ட அக்கறையால் தான் அந்தக் கேள்வியே கேட்கப் பட்டிருக்கிறது இல்லையா? நாம் கேட்கிறச்சே எல்லாம் எஜமானி கொடுக்கிறாங்க என்று கமலத்தின் ஆழ்மனம் நம்புவதாலேயே மறுபடியும் கேட்டிருக்காங்க. கோதை மறுத்தது நியாயமே. 4,000 ரூபாய் மதிப்புள்ள காக்ராவைத் தன் பெண் ஒரு முறை, இருமுறை போட்டதுமே கொடுக்கறாங்க. எத்தனை பேருக்கு அப்படிக் கொடுக்க மனசு வரும்?? பலர் வீட்டில் பீரோவில் சும்மா தூங்குவதைப் பார்த்திருக்கேன். கொடுக்கக் கூடாதானு கேட்டால் வர பதில் அதிர்ச்சியாய் இருக்கும். விடுங்க அதை.

    பதிலளிநீக்கு
  30. geethasmbsvm6 has left a new comment on your post "தாய் மனசு - திண்ணையில்..": ஆனால் இதற்கொரு சரியான தீர்வு என்னவெனில் பிறந்த நாள் என்னிக்குனு கேட்டு அந்தப் பணத்துக்கோ அல்லது அதைவிட அதிகம் கொஞ்சம் பணம் போட்டோ அந்தக் குழந்தையை அழைத்துப் போய் அதற்குப் பிடித்த மாதிரியில் வாங்கிக் கொடுத்திருக்கலாம். அல்லது அந்த அம்மாவே தன்னால் இயன்ற அளவு செலவில் துணி வாங்கிக் கொடுத்துவிட்டுத் தைக்க வேண்டி இருந்தால் தையல் கூலியும் கொடுத்திருக்கலாம். இதைத் தன் அன்பளிப்பு என்றும் சொல்லிவிட்டு ஒவ்வொரு வருஷமும் அந்தப் பெண் இதே போல் அம்மாவிடம் எதிர்பார்ப்பது சரியல்ல என்றும் சொல்லி இருக்கலாம்.

    இங்கே எங்க வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் குழந்தைக்கு அப்படித் தான் கொடுக்கிறோம். பணம் கொடுங்க நாங்க துணி வாங்கிக்கறோம்னு சொல்வாங்க. அப்போப் பணத்தைக் கொடுத்துட்டுத் துணியை வாங்கி வரச் சொல்லிட்டுப் பின்னர் அதை வைச்சுக் கொடுக்கிறதும் உண்டு.

    ரா.ல. கமெண்ட்ஸ் போட்டால் உங்க பதிவு விரட்டி விட்டுடுச்சு. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் முன்னால் போட்டது போகலை, இப்போ மெயிலறேன். பார்த்துப் போட்டுக் கொடுங்க.

    பதிலளிநீக்கு
  31. திண்ணையில் வெளிவந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  32. அருமையா இருக்குங்க..

    short and sharp..

    God bless YOu.

    பதிலளிநீக்கு
  33. நெகிழவைத்த கதை.

    திண்ணையில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்க்கள்.

    பதிலளிநீக்கு
  34. இதனைத்தான் பெற்ற மனம் பித்து என்று சொல்லுவார்கள்.அருமையான கதை.

    பதிலளிநீக்கு
  35. தாயின் மனசைப்பற்றி மிக அருமையாகச் சொல்லியிருக்கீங்க அக்கா. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  36. கலாநேசன் said...
    //தாயுள்ளம் சொல்லும் நெகிழ்வான கதை....
    நல்லா இருக்குங்க....//

    நன்றி கலாநேசன்.

    பதிலளிநீக்கு
  37. சே.குமார் said...
    //akka... kathai arumai...
    ezhiththaayin ullam azhakkai vorikirathu.//

    மிக்க நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  38. வை.கோபாலகிருஷ்ணன் said...
    //கதை மிகவும் நன்றாகவே உள்ளது. ஏழைகளுக்கு பண்டிகைகளோ, பிறந்த நாளோ வந்தால் மிகவும் கஷ்டம் தான்.
    தாய் மனசு தவிக்கத்தான் செய்யும்.

    திண்ணையில் வெளிவந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க vgK.

    பதிலளிநீக்கு
  39. அமைதிச்சாரல் said...
    //ரொம்ப ரொம்ப நல்லாருக்கு ராமலஷ்மி..//

    மிக்க நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  40. மோகன் குமார் said...
    ***// ஏழைப்பட்டவங்களுக்கு நாளு, கெழமை, பண்டிகை எதுவும் வராமப் போனா நல்லாருக்கும். ஆனா வருதே.//

    :((/***

    நிதர்சனம். நன்றி மோகன்குமார்.

    பதிலளிநீக்கு
  41. ஜோ said...
    //நன்றாக இருக்கிறது, தாயின் மனசை படம்பிடித்துக் காட்டும் அருமையான நடை.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  42. துளசி கோபால் said...
    //ரொம்ப நல்லா வந்துருக்குப்பா!!!!! தாய் மனசுக்கு என்னத்தை ஈடாச் சொல்ல முடியும்!!!!//

    எதுவும் ஈடில்லை. மிக்க நன்றி மேடம்.

    பதிலளிநீக்கு
  43. அமைதி அப்பா said...
    ***//வீட்டு எஜமானரின் சட்டைப் பையில் ஏதோ தட்டுப்பட கைவிட்டுப் பார்த்தாள். மொடமொடப்பாய் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்.//

    இந்த இடத்தில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க வைத்துவிட்டீர்கள்.

    வீட்டு வேலைக்காரர்கள் நேர்மையானவர்கள் என்பதையும் சித்தரித்துள்ளீர்கள்.

    கதையும் முடிவும் நன்று.//***

    மகிழ்ச்சியும் நன்றியும் அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  44. ஸ்ரீராம். said...
    //சில நேரங்களில் சில மனிதர்கள்!

    சில நேரங்களில் பேசப் பட்ட வார்த்தைகளை திருத்திக் கொள்ளவும் முடியாமல், திருப்பி எடுக்கவும் முடியாமல் படும் அவஸ்தை. எல்லோருக்குமே ஒரொரு சமயம் இந்த அனுபவம் இருந்திருக்கும்.//

    உண்மைதான். மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  45. தமிழ் உதயம் said...
    //கதை நன்றாக உள்ளது. ரெம்ப பிடித்துள்ளது.//

    உங்கள் கருத்தில் மகிழ்ச்சி. நன்றி தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  46. @ geethasmbsvm6,

    பகிர்ந்து கொண்ட விரிவான கருத்துக்கள் யாவற்றுக்கும் நன்றி மேடம். பிரச்சனையின் பல பக்கங்களைக் காட்டியுள்ளீர்கள். அப்படியான சம்பவங்களும் நடந்துள்ளனதான். கிளைக் கதைகளும் நிறையவே உள்ளன. ஆயினும் எதார்த்தத்தில் தாயின் மனசு இதுதான் என்பதை சொல்ல விழைந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  47. Pushparagam said...
    //இது கதையல்ல நிஜம். எங்களுக்கும்
    இதுபோன்று நடந்தது - குடிகார, பொறுப்பில்லாத காதலால் கைபிடித்த கணவன், குழந்தை பாசம், கை சுத்தம்
    ஆயிரத்தில் ஒருத்தி எங்கள் வீட்டு வேலைகாரி என்பதைவிட, என் மனிவி னொய்வுற்ற சமயத்தில் ஒரு தாயக, மகளாக இருந்தாள்
    நாங்கள் ஊரை விட்டு கிளம்பும்போது
    எங்களின் கண்களில் நீர் வழிந்தது.
    ராகவன் - அன்புடன்//

    அப்படியானவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கும் தங்கள் முதல் வருகைக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  48. சகாதேவன் said...
    ***//எஜமானரின் சட்டைப் பையில்... இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுக்கள்.//

    அமைதி அப்பா சொன்ன மாதிரி, மறுநாள் அவர் என் சட்டையில் இருந்த ரூபாயை காணோமே என்றால் மாட்டிக்கொள்வாளோ என்று பயந்தேன்.//***

    நன்றி:)! அமைதி அப்பாவே அதற்கு பதிலும் சொல்லி விட்டுள்ளார்.

    பதிலளிநீக்கு
  49. ஹேமா said...
    //எனக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை என்றாலும் இதுதான் யதார்த்தம் என்று நினைக்கிறேன் !//

    ஆம் ஹேமா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  50. Rathnavel said...
    //அருமையான கதை.
    வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  51. நாகை சிவா said...
    //உங்க பதிவோட Feed ரீடர் ல முழுமையாக வர மாட்டேங்குது. அதை கொஞ்சம் சரி செய்ய முடியுமா?//

    சரி செய்து விட்டேன் உங்களுக்காகவே. அதற்காகவே தொடர்ந்து வாசிக்க வேண்டும் நீங்கள்:)!!! நன்றி சிவா.

    பதிலளிநீக்கு
  52. Thamizth Thenee said...
    //கதையல்ல நிஜம்

    ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுதான்

    அதை சரியான விகிதத்தில் சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தமிழ்த்தேனீ சார்.

    பதிலளிநீக்கு
  53. S.Menaga said...
    //கதை ரொம்ப நல்லாயிருக்குக்கா,ஒரு தாயுள்ளத்தை அழகா சொல்லிருக்கீங்க..//

    மிக்க நன்றி மேனகா.

    பதிலளிநீக்கு
  54. ஜெஸ்வந்தி - Jeswanthy said...
    //நல்லாருக்கு ராமலஷ்மி.//

    வாங்க ஜெஸ்வந்தி. சிறந்த சிறுகதை எழுத்தாளர் உங்கள் கருத்தில் எனக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  55. திவா said...
    **//ஒரு நா அதுக்குப் புரியும் என் சிரமம். நாமளும் இதெல்லாம் தாண்டி வந்தவங்கதானே.//

    athaane?/**

    அதேதானே:)? நன்றி திவா சார்:)!

    பதிலளிநீக்கு
  56. July 18, 2011 5:27 AM
    குமரி எஸ். நீலகண்டன் said...
    //அனுபவங்கள் பலரைப் பற்றி நமக்கு உயர்ந்த எண்ணங்களை வளர்க்கின்றன... சளைக்காமல் பகிர்கிற பரஸ்பர அன்பும் சேவையும் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும். நல்ல கதை//

    மகிழ்ச்சியும் நன்றியும் நீலகண்டன்.

    பதிலளிநீக்கு
  57. July 18, 2011 7:27 AM
    ஸாதிகா said...
    //யதார்த்தமான கதை அழகு நடையில்.//

    நன்றி ஸாதிகா.

    பதிலளிநீக்கு
  58. July 18, 2011 7:42 AM
    முத்துலெட்சுமி/muthuletchumi said...
    //அவங்களுக்கும் அவங்க வாழ்க்கையில் இன்ன இன்னது தங்கள் குழந்தைகளுக்கு செய்யனும்ன்னு இருக்குமில்ல.. நல்ல கதை..//

    ஆம் முத்துலெட்சுமி. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  59. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //அம்மா என்றல் அன்பு தானே ...//

    மேலே சொல்ல என்ன இருக்கு:)! நன்றி தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

    பதிலளிநீக்கு
  60. சசிகுமார் said...
    //அக்கா கதை நல்லா இருக்கு//

    மிக்க நன்றி சசிகுமார்.

    பதிலளிநீக்கு
  61. kathir said...
    //முடிவு வரிகள் மிகச் சிறப்பாய்!

    வாழ்த்துகள்!//

    நன்றி கதிர்.

    பதிலளிநீக்கு
  62. நானானி said...

    //வாஷிங் மிஷின், பாண்ட் பாக்கெட், உள்ளே ரூபாய் நோட்டுகள்...அத்தனையும் நிதர்சனமான உண்மை.

    சில சமயம் அந்த ரூபாய் நோட்டுகள் சலவை செய்யப்பட்டு உள்ளேயே இருக்கும். சில்லறைகள் கீழே பில்டரில் வந்து காத்திருக்கும்.//

    இஸ்திரிக்கும் போய் வரும்:)! நன்றி நானானிம்மா.

    பதிலளிநீக்கு
  63. வல்லிசிம்ஹன் said...

    //கீதா சொல்லி இருப்பது தான் இப்ப நடக்கிறது.//

    ஆம் அப்படியானவையும். அது போன்ற குழந்தைகள் என்றைக்கேனும் தாயின் சிரமம் உணரப் பிரார்த்திப்போம். பலருக்கு தாம் பெற்றோராகும் சூழலில் அந்த ஞானோதயம் வரும். ஆனால் சிலர் விஷயத்தில் காலம் கடந்ததாய்:(!

    //கமலம் நல்ல தாய். மகளை நன்றாகவே வளர்பபாள்.//

    நிச்சயமாக. நன்றி வல்லிம்மா.

    பதிலளிநீக்கு
  64. மாலதி said...

    //திண்ணையில் வெளிவந்ததற்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மாலதி.

    பதிலளிநீக்கு
  65. வெட்டிப்பேச்சு said...

    //அருமையா இருக்குங்க..

    short and sharp..

    God bless YOu.//

    மிக்க நன்றி, தங்கள் முதல் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு
  66. இராஜராஜேஸ்வரி said...

    //நெகிழவைத்த கதை.

    திண்ணையில் பிரசுரமானதற்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்க்கள்.//

    மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

    பதிலளிநீக்கு
  67. ஸாதிகா said...

    //இதனைத்தான் பெற்ற மனம் பித்து என்று சொல்லுவார்கள்.அருமையான கதை.//

    சரியாய் சொன்னீர்கள் ஸாதிகா. மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  68. சுந்தரா said...

    //தாயின் மனசைப்பற்றி மிக அருமையாகச் சொல்லியிருக்கீங்க அக்கா. வாழ்த்துக்கள்!//

    வாங்க சுந்தரா. தங்கள் பக்கம் புதுப்பிக்கப் படவேயில்லையே. சீக்கிரம் வாருங்கள்:)!

    கருத்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  69. யு டான்ஸில் வாக்களித்த நட்புகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  70. Kanchana Radhakrishnan said...
    //நெகிழ்வான கதை.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  71. பிறந்த நாளுக்கு எடுத்துக்கொடுக்காம இருக்க முடியாது. அதே சமயம் செலவுகளை குழந்தைகளுக்கு புரிய வைப்பதும் பெற்றோர்களுக்கு நல்லது இல்லை என்றால் கேட்டது கிடைக்கும் என்றால் பின்னால் சிரமப்படபோவது பெற்றோர்களும் வளர்ந்த பிறகும் குழந்தைகளும் தான்.

    பதிலளிநீக்கு
  72. திரு கிரி/திருமதி கிரி?? சொல்லி இருப்பதைத் தான் நான் கொஞ்சம் கடுமையாகச் சொல்லி இருக்கேனோ?? :D

    பதிலளிநீக்கு
  73. ஹையா, ஜாலி, கமெண்ட் போயிடுச்சே :P

    பதிலளிநீக்கு
  74. @ geethasmbsvm6 said...

    இரண்டு கமெண்டுகளும் வந்து விட்டன:)! நன்றி. திரு. கிரிக்கு நான் தரவிருந்த பதிலே உங்களுக்குமானதாக:)! இதோ..

    பதிலளிநீக்கு
  75. கிரி said...
    //பிறந்த நாளுக்கு எடுத்துக்கொடுக்காம இருக்க முடியாது. அதே சமயம் செலவுகளை குழந்தைகளுக்கு புரிய வைப்பதும் பெற்றோர்களுக்கு நல்லது இல்லை என்றால் கேட்டது கிடைக்கும் என்றால் பின்னால் சிரமப்படபோவது பெற்றோர்களும் வளர்ந்த பிறகும் குழந்தைகளும் தான்.//

    மறுப்பதற்கில்லை. நன்றி கிரி. நீங்கள் சொல்லியிருப்பதையேதான் கீதா மேடம் விரிவாக விளக்க முயன்றிருக்கிறார்கள். ஒரு கோணத்தைக் காட்ட விரும்பி நான் படைத்த கதை அனைவரையும் பல கோணங்களில் பார்க்கவும் சிந்திக்கவும் கருத்துக்களைப் பகிரவும் வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin