கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது?
விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது!
புற்றீசல் போலத் தொழிற் கல்விக் கூடங்கள்!
பெற்றவரின் சேமிப்பைச் சரியாகக் குறி வைத்து...
கல்லூரிக்கும் விளம்பரங்கள்! கூறு போட்டுக் கூவி
கொடுக்கிறார்கள்-என எண்ண வைக்கும் அவலங்கள்!
மாணவ மணிகள் கை நிறைய அள்ளி வரும்
மதிப்பெண்களுக்கு இல்லை ஏதும் மதிப்பு!
பெற்றவர்கள் கை இடுக்கில் கொண்டு வரும்
பெரும் தொகைக்கே நல் வரவேற்பு!
இருப்பவர்களுக்கு இருப்பதில்லை இதிலேதும் பிரச்சனை.
இல்லாதாருக்கு கிடப்பதோ விரும்பியதைக் கல்லாமை!
கட்டிடத்துக்குள் கால் வைக்கத் தலையை அடகு வை,
கேட்ட பாடம் கிடைக்க உன்னையே அடகு வை!
எங்கு செல்லும் ஏழை வர்க்கம் என
எண்ணிப் பார்க்கவும் நேரமில்லை ஒரு பக்கம்!
ஆயினும் கல்விச் சந்தையிலே வியாபாரம்
சூடு பறக்கிற விந்தை மறு பக்கம்!
கொட்டிக் கொடுப்போருக்கும் யாரிதைத்
தட்டிப் பறிக்கின்றோம் என்று அவ்வப்போது
எட்டிப் பார்க்கிறதே ஒரு குற்ற உணர்வு!- சரி
கட்டி விட்டார் அதையும்தான் பெருமை மிகு
'பெய்ட் சீட்' என்ற பெயரில்- ஆகப்
'பெய்' என்றால் பெய்யுது மழை இவர் காட்டில்!
தருவது தருமத்துக்குப் புறம்பில்லையெனப் பலரும்
தேற்றிக் கொண்டார் காலத்தின் தேவையிதுவென-
தருவதற்குத் தயாரெனும் போது தயங்குவானேனென
விற்றவரும் எண்ணி விட்டார் சட்டமிருக்கையில் துணையென-
குற்றம்தான் யார் மீதும் சுமற்றிட வழியின்றிக்
கொற்றவனும் அன்றோ வீற்றிருக்கிறார் உடந்தையென?
ஏங்கி நிற்குது பார் இளைய இந்தியா
எங்கு இருக்கிறது இதற்குத் தீர்வு என!
கனவுகளே கூடாதா திறமை இருந்தும்?
கதவுகளே திறக்காதா வறுமை புரிந்தும்?
ஆசை இருந்தும் ஆசி இல்லை!
கல்வி வாங்கக் காசில்லை!
அடிப்படை அறிவைக் கோருவது
அவரது குன்றாத உரிமை!
அதைத் தடையின்றி வழங்குவது
அரசின் தலையாயக் கடமை!
கவனிக்குமா இப் பிரச்சனையைக்
கருணையுடன் கல்வியின் தலைமை?
கனாக் காணும் மாணவரின் கனவு கலைந்திடாது
காத்திட வழியொன்று சொல்வதற்கே-
நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?
இலவசமாகவோ இனாமாகவோ இல்லாவிடினும்
நியாய நிதியிலே எல்லா தரப்பினரையும்
கல்வி சென்றடையச் செய்வாயா?
***
(July 17, 2003 திண்ணை இணைய இதழில் 'நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?' என்கிற தலைப்புடன் வெளி வந்தது. இன்று வரை இந்த நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. ஒவ்வொரு வருடமும் நல்ல மதிப்பெண்கள் இருந்தும், பல்வேறு காரணங்களால் விரும்பிய துறை, கல்லூரி, பாடம் கிடைக்காத காரணங்களால் உயிரையே மாய்த்துக் கொள்ளும், அல்லது அந்த முடிவு வரைத் தள்ளப் படும் மாணவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.)
[படம்: இணையத்திலிருந்து]