Thursday, May 29, 2008

கல்விச் சந்தை


கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது?
விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது!
புற்றீசல் போலத் தொழிற் கல்விக் கூடங்கள்!
பெற்றவரின் சேமிப்பைச் சரியாகக் குறி வைத்து...
கல்லூரிக்கும் விளம்பரங்கள்! கூறு போட்டுக் கூவி
கொடுக்கிறார்கள்-என எண்ண வைக்கும் அவலங்கள்!


மாணவ மணிகள் கை நிறைய அள்ளி வரும்
மதிப்பெண்களுக்கு இல்லை ஏதும் மதிப்பு!
பெற்றவர்கள் கை இடுக்கில் கொண்டு வரும்
பெரும் தொகைக்கே நல் வரவேற்பு!
இருப்பவர்களுக்கு இருப்பதில்லை இதிலேதும் பிரச்சனை.
இல்லாதாருக்கு கிடப்பதோ விரும்பியதைக் கல்லாமை!


கட்டிடத்துக்குள் கால் வைக்கத் தலையை அடகு வை,
கேட்ட பாடம் கிடைக்க உன்னையே அடகு வை!
எங்கு செல்லும் ஏழை வர்க்கம் என
எண்ணிப் பார்க்கவும் நேரமில்லை ஒரு பக்கம்!
ஆயினும் கல்விச் சந்தையிலே வியாபாரம்
சூடு பறக்கிற விந்தை மறு பக்கம்!


கொட்டிக் கொடுப்போருக்கும் யாரிதைத்
தட்டிப் பறிக்கின்றோம் என்று அவ்வப்போது
எட்டிப் பார்க்கிறதே ஒரு குற்ற உணர்வு!- சரி
கட்டி விட்டார் அதையும்தான் பெருமை மிகு
'பெய்ட் சீட்' என்ற பெயரில்- ஆகப்
'பெய்' என்றால் பெய்யுது மழை இவர் காட்டில்!


தருவது தருமத்துக்குப் புறம்பில்லையெனப் பலரும்
தேற்றிக் கொண்டார் காலத்தின் தேவையிதுவென-
தருவதற்குத் தயாரெனும் போது தயங்குவானேனென
விற்றவரும் எண்ணி விட்டார் சட்டமிருக்கையில் துணையென-
குற்றம்தான் யார் மீதும் சுமற்றிட வழியின்றிக்
கொற்றவனும் அன்றோ வீற்றிருக்கிறார் உடந்தையென?


ஏங்கி நிற்குது பார் இளைய இந்தியா
எங்கு இருக்கிறது இதற்குத் தீர்வு என!
கனவுகளே கூடாதா திறமை இருந்தும்?
கதவுகளே திறக்காதா வறுமை புரிந்தும்?
ஆசை இருந்தும் ஆசி இல்லை!
கல்வி வாங்கக் காசில்லை!


அடிப்படை அறிவைக் கோருவது
அவரது குன்றாத உரிமை!
அதைத் தடையின்றி வழங்குவது
அரசின் தலையாயக் கடமை!
கவனிக்குமா இப் பிரச்சனையைக்
கருணையுடன் கல்வியின் தலைமை?


கனாக் காணும் மாணவரின் கனவு கலைந்திடாது
காத்திட வழியொன்று சொல்வதற்கே-
நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?
இலவசமாகவோ இனாமாகவோ இல்லாவிடினும்
நியாய நிதியிலே எல்லா தரப்பினரையும்
கல்வி சென்றடையச் செய்வாயா?

***

(July 17, 2003 திண்ணை இணைய இதழில் 'நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?' என்கிற தலைப்புடன் வெளி வந்தது. இன்று வரை இந்த நிலைமையில் மாற்றம் ஏதுமில்லை. ஒவ்வொரு வருடமும் நல்ல மதிப்பெண்கள் இருந்தும், பல்வேறு காரணங்களால் விரும்பிய துறை, கல்லூரி, பாடம் கிடைக்காத காரணங்களால் உயிரையே மாய்த்துக் கொள்ளும், அல்லது அந்த முடிவு வரைத் தள்ளப் படும் மாணவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.)

[படம்: இணையத்திலிருந்து]40 comments:

 1. நேற்றைய, இன்றைய, மற்றும் என்றுமே இருக்கப்போகிற இந்த வலிக்கும் நிதர்சனத்தை மனம் வலிக்க வலிக்க சொல்லியிருக்கிறீர்கள்!!ராமலஷ்மி!

  ReplyDelete
 2. ஆமாம் நானானி. இந்தியாவின் அசுர வளர்ச்சி எப்போதும் ஒரு சாராரை ஒட்டியே நடந்து வருகிறது. எல்லா சாராருக்கும் எல்லாம் கிடைத்தால்தான் இந்தியா வல்லரசாக முடியும்!

  ReplyDelete
 3. பண்டைய தமிழகத்தில், கல்வி, மருத்துவம், இவ்விரெண்டும் தர்மத் தொழில்கள் - அதாவது இலவசம்
  அரசர் மான்யத்தில் அது நடக்கும்

  இப்போது அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டு அத்தனையும் பணம் கொழிக்கும் தொழில்களாக மாறிவிட்டன!

  ReplyDelete
 4. ஆஹா ... கண்ணக் கட்டுதே. அழகாக அனைத்தையும் எழுதிய விதம் அருமை ....

  //நல்ல மதிப்பெண்கள் இருந்தும், பல்வேறு காரணங்களால் விரும்பிய துறை, கல்லூரி, பாடம் கிடைக்காத காரணங்களால் உயிரையே மாய்த்துக் கொள்ளும், அல்லது அந்த முடிவு வரைத் தள்ளப் படும் மாணவர்களைப் பற்றிய செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.//

  இது பற்றிய கண்ணோட்டத்தில் முன்னர் எழுதிய ஒரு கதை. நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.

  http://blog.richmondtamilsangam.org/2007/06/blog-post_21.html

  ReplyDelete
 5. கல்வித்துறையில் இருக்கும் தாங்கள் 'கல்விச் சந்தை' பற்றிக் கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி ஆசிரியர் அய்யா!

  தாங்கள் கூறியிருப்பது போல கல்வி மட்டுமின்றி மருத்துவமும் ஏழைகளுக்கு உரிய நேரத்தில் உரிய படிக் கிடைப்பதில்லைதான். அரசாங்க மருத்துவ மனைகளிலும் பணம் இருந்தால்தான் படியேற முடியும் என்கிற நிலமை. அந்தப் பணத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளும் முன் அவர்தம் வாழ்க்கையே முடிந்து போகும் அவலங்களையும் பார்க்கின்றோம்.

  ReplyDelete
 6. கருத்துக்கு நன்றி சதங்கா!

  //இது பற்றிய கண்ணோட்டத்தில் முன்னர் எழுதிய ஒரு கதை. நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள்.//

  கண்டிப்பாக வாசிக்கிறேன்.

  ReplyDelete
 7. /////ராமலக்ஷ்மி said...
  கல்வித்துறையில் இருக்கும் தாங்கள் 'கல்விச் சந்தை' பற்றிக் கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி ஆசிரியர் அய்யா!
  தாங்கள் கூறியிருப்பது போல கல்வி மட்டுமின்றி மருத்துவமும் ஏழைகளுக்கு உரிய நேரத்தில் உரிய படிக் கிடைப்பதில்லைதான். அரசாங்க மருத்துவ மனைகளிலும் பணம் இருந்தால்தான் படியேற முடியும் என்கிற நிலமை. அந்தப் பணத்துக்கு ஏற்பாடு செய்து கொள்ளும் முன் அவர்தம் வாழ்க்கையே முடிந்து போகும் அவலங்களையும் பார்க்கின்றோம்.////

  நான் இருப்பது கல்வித்துறையல்ல! தமிழ்மணத்தில் மட்டுமே நான் வாத்தியார். வெளியுலகில் எனது தொழில் வேறு
  தமிழ்மணத்தில் நான் எப்படி வாத்தியாரானேன் என்பதை அறிய இங்கே சுட்டியைக் கொடுத்துள்ளேன். படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன் சகோதரி!

  http://devakottai.blogspot.com/2008/04/blog-post_03.html

  ReplyDelete
 8. அப்படியே ஆகட்டும் அய்யா!
  தவறுக்கு வருந்துகிறேன். வலைக்குப் புதுவரவென்பதால் பல விஷயங்கள் புரியக் கால அவகாசம் தேவைப் படுகிறது. நெல்லை சிவா, துளசி மேடம், நானானி மேடம், அபி அப்பா போன்ற நல்லுள்ளங்கள் அவ்வப்போது சந்தேகங்களைத் தீர்த்துக் கை தூக்கி விடுகிறார்கள்.

  ReplyDelete
 9. http://blog.richmondtamilsangam.org/2007/06/blog-post_21.html

  இது 'வைரம்' போன்ற 'வைராக்கியம்' கதைக்கு சதங்கா தந்த உரல்[=URL ,வந்த ஒரு மாதத்தில் கற்றுக் கொண்ட வலை பாஷைகளில் இதுவும் ஒன்று :-) ]!

  ஒரு நல்ல கதையை வாசிக்கும் அனுபவத்துக்கு எனை இட்டுச் சென்றமைக்கு நன்றி சதங்கா! அதில், ஏழை மாணவனின் ஏக்கத்தைப் போக்க பரமசிவமும் நாவன்னாவும் முன் வந்த மாதிரி நாடும் கல்வித்துறையும் ஏங்கி நிற்கும் ஏழை வர்க்கத்துக்கு ஏதேனும் செய்வார்களா என்பதே என் ஏக்கம்.

  ReplyDelete
 10. http://devakottai.blogspot.com/2008/04/blog-post_03.html
  இது எனக்கு வழி காட்ட வாத்தியார் அய்யா தந்த உரல்!
  அய்யா! தாங்கள் வலையுலக வாத்தியாரான கதையை நகைச்சுவையோடு ஆரம்பித்து நல்லறிவு கூறி முடித்திருக்கிறீர்கள். அதில் சீனா அவர்களுக்கு பின் மொழிந்த பொன் மொழியை அனைத்துப் புது ப்ளாக்கர்களும் படிக்க வேண்டுமென என இப்பதிவின் பின்னூட்டத்தில் பதிந்து வைக்கிறேன்.

  ReplyDelete
 11. எதற்கும் இந்தப் பதிவினை புதுக்கவிதையை பத்திரப்படுத்தி வையுங்கள்.

  ஜூலை 17,3003 அன்றும் இதே நிலைமை தான் இருக்கப்போகிறது.
  அன்றைக்கு ஒரு முறை தூசு தட்டி இன்னொரு தரம் பிரசுரிக்கலாம்.
  வேறென்ன முடியும்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  பி.கு. : துளசிதளம் வலைப்பதிவு வழியே வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.
  http://vazhvuneri.blogspot.com
  http://movieraghas.blogspot.com

  ReplyDelete
 12. //கனாக் காணும் மாணவரின் கனவு கலைந்திடாது
  காத்திட வழியொன்று சொல்வதற்கே-
  நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?
  இலவசமாகவோ இனாமாகவோ இல்லாவிடினும்
  நியாய நிதியிலே எல்லா தரப்பினரையும்
  கல்வி சென்றடையச் செய்வாயா?//

  சில விஷயங்கள் கனவாகவே இருந்து விடுமோ என்ற ப/ஐயம் ஏற்படத்தான் செய்கிறது :(

  நன்றாக எழுதுகிறீர்கள் ராமலக்ஷ்மி!

  --கவிநயா

  ReplyDelete
 13. Sury said://ஜூலை 17,3003 அன்றும் இதே நிலைமை தான் இருக்கப்போகிறது.//

  இருக்கலாம், ஆனால் ஆயிரம் ஆண்டுகள் கழித்து..என்றெல்லாம் யோசிக்க அயற்சியாக இருக்கிறதே! நம் காலத்திலேயே நல்லது நடந்து அதைக் கண் கொண்டு பார்க்க மாட்டோமா?

  //பி.கு. : துளசிதளம் வலைப்பதிவு வழியே வந்தேன். நன்றாக எழுதுகிறீர்கள்.
  வாழ்த்துக்கள்.//

  பி.கு.: பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 14. கவிநயா said://சில விஷயங்கள் கனவாகவே இருந்து விடுமோ என்ற ப/ஐயம் ஏற்படத்தான் செய்கிறது :(

  நன்றாக எழுதுகிறீர்கள் ராமலக்ஷ்மி!//

  ஆமாம் அப்படிப்பட்ட ப/ஐயங்களும் கூட அயற்சியைத்தான் கொடுக்கின்றன.

  பாராட்டுக்கும் வருகைக்கும் நன்றி கவிநயா!

  ReplyDelete
 15. பெருமூச்சுதான் வருகிறது.
  எனக்குத் தெரிந்து 1976 ஒரு தடவை,1985 ஒரு தடவை,1992ஆம் ஆண்டு என்று வரிசையாக ஏமாந்த அனுபவங்கள் வாழ்க்கையில் இஞ்சினீயர் ஆவது மட்டுமே முன்னேறும் வழியில்லை என்ற அற்புதப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தன. கிடைத்ததைக் கொண்டு முன்னேறக் கடவுள் கிருபை செய்தார். அப்போது தைரியத்தைக் கைவிடாமல் இருக்கக் கற்றவர்கள் இப்போது அதைப்பற்றி நினைப்பதையே விட்டுவிட்டார்கள்:)
  நன்றி ராமலக்ஷ்மி. வெகு அருமையான பதிவு.

  ReplyDelete
 16. வல்லிசிம்ஹன் said:
  //வாழ்க்கையில் இஞ்சினீயர் ஆவது மட்டுமே முன்னேறும் வழியில்லை.//
  //அப்போது தைரியத்தைக் கைவிடாமல் இருக்கக் கற்றவர்கள் இப்போது அதைப்பற்றி நினைப்பதையே விட்டுவிட்டார்கள்.//

  முற்றிலும் உண்மை வல்லியம்மா! சொல்லப் போனால் அந்தக் காலத்தை விட வாய்ப்புக்கள் இப்போது எட்டுத் திக்கிலும் கொட்டிக் கிடக்கிறது. கிடைத்ததைப் படித்துத் தடைகளை உடைத்துத் தைரியத்துடன் வாழ்க்கையை எதிர் நோக்க வேண்டியதின் அவசியத்தைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்! தொழிற் கல்வியொன்றே தொல்லையிலா எதிர்காலத்துக்கு வழியென்று எல்லோரும் நினைப்பதாலும்தான் கல்விச் சந்தையிலே அதன் 'கிராக்கி' கேள்விக் குறியாகவே தொக்கி நிற்கிறது!

  பாராட்டுக்கும் நன்றி வல்லியம்மா!

  ReplyDelete
 17. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வல்லியம்மா சொல்வதிலும் அர்த்தமிருந்தாலும், என்னதான் வேறு துறையில் நுழைந்து வெற்றியடைந்தாலும், அந்த முதல் ஆசை நிராசையானது அப்பப்போ நெருடத்தான் செய்யுது... :(

  ----RL

  ReplyDelete
 18. RL,

  உண்மைதான். அந்த ஒரு பட்டத்துக்காகவே படித்து, ஒரு இரண்டு சதவிகிதத்தில் தவற விடும்போது வெகு நிராசையாகத் தான் இருக்கும்.
  வருத்தப் படவேண்டாம். வேற என்ன சொல்லட்டும்!!

  ReplyDelete
 19. RL said://என்னதான் வேறு துறையில் நுழைந்து வெற்றியடைந்தாலும், அந்த முதல் ஆசை நிராசையானது அப்பப்போ நெருடத்தான் செய்யுது.... :(//

  RL, முற்றிலும் உண்மை! அப்படி நெருடி நிற்கும் நினைவுகளை, ஆறுதல் வார்த்தையெனும் மயிலிறகால் வருடி விட வந்து விட்டார்கள் வல்லியம்மா. மிக்க நன்றி வல்லியம்மா!

  ReplyDelete
 20. வல்லிசிம்ஹன் said://அந்த ஒரு பட்டத்துக்காகவே படித்து, ஒரு இரண்டு சதவிகிதத்தில் தவற விடும்போது வெகு நிராசையாகத் தான் இருக்கும். //

  வருடக் கணக்கில் ஒரு துறையில் நுழைய வேண்டும் என்ற கனவிலேயே உழைத்துப் படித்து அது நிராசையாகும் போது, எல்லோராலும் அதை அத்தனை எளிதில் ஜீரணிக்க முடிவதில்லை. விபரீத முடிவுகளுக்கும் தள்ளப் படிகிறார்கள். அதைத்தான் பதிவின் பி.கு-வில்
  குறிப்பிட்டிருந்தேன். மேலும் அந்த இளம் வயதில் அத்தனை பக்குவத்தை மாணவர்களிடம் எதிர் பார்க்கவும் முடியாது. சரிதானா வல்லியம்மா?

  ReplyDelete
 21. இதப் படிச்சுட்டு என்னத்த சொல்றது?

  உங்கள் எண்ணங்களுடன் முழுவதும் உடன்படுகிறேன்.

  ReplyDelete
 22. எண்ணங்களுடன் உடன்படும் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கையேடு!

  ReplyDelete
 23. கவிதைக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை சுருக்கி இருக்கலாமோ?

  ம்ம், நான் கூட டாக்டர் ஆவனும்னு ஆசைப்பட்டேன். இப்ப பாருங்க, பொட்டி தட்டிட்டு இருக்கேன்.

  (நல்ல வேளை, பிழைத்தது மருத்துவ உலகம்!னு மனசுகுள்ள ஒன்னும் சொல்ல வேணாம்) :))

  ReplyDelete
 24. ambi said... //கவிதைக்கு இன்னும் கொஞ்சம் வார்த்தைகளை சுருக்கி இருக்கலாமோ?//

  மிகச் சரியாகக் கவனித்திருக்கிறீர்கள் அம்பி! இதே கவிதை 'திண்ணை' தளத்தில் வெளியான போது அதன் format வேறு. வலையில் என் முதல் 3 இடுகைகளைக் கவனித்தால் தெரியும். குறிப்பாக 'ஒன்று பட்டால்' கவிதையின் பின்னூட்டத்தில் RL, VSK போன்றோர் சுட்டிக் காட்டியதின் பேரில் இந்த format compromise. 'நாயகன்' பாணியில் சொல்வதானால், "நாலு பேரிடம் நல்லது போய்ச் சேரணும்னா எதுவுமே தப்பில்லை!" :-)))!

  ReplyDelete
 25. ambi said: //ம்ம், நான் கூட டாக்டர் ஆவனும்னு ஆசைப்பட்டேன். இப்ப பாருங்க, பொட்டி தட்டிட்டு இருக்கேன்.

  (நல்ல வேளை, பிழைத்தது மருத்துவ உலகம்!னு மனசுகுள்ள ஒன்னும் சொல்ல வேணாம்) :))//

  பிழைத்தது மருத்துவ உலகமல்ல அம்பி! நீங்கள்! வல்லியம்மா சொன்ன மாதிரி சிரிப்பும் கும்மாளமுமாக வாழ்நாளெல்லாம் சந்தோஷமாக நீங்கள் இருக்க 'பொட்டி தட்டுவது' உதவும். மருத்துவப் பணி அதில் ஈடுபடுவோரை அப்படியே இழுத்துக் கொள்ளும். அதனால் வருத்தத்தை விடுங்கள்!

  ReplyDelete
 26. //வலையில் என் முதல் 3 இடுகைகளைக் கவனித்தால் தெரியும்.//

  சைடு கேப்பில் முதல் இடுகைக்கு விளம்பரமா? நடக்கட்டும். (சும்மா சொன்னேன், தேடி பாக்கறேன்). :))

  அதுவும் சரி தான், டாக்டரா ஆகி இருந்தா ஆப்ரேஷனுக்கு நடுவில் இப்படி பின்னூட்டம் போட முடியுமா? :p

  ReplyDelete
 27. ambi said..//சைடு கேப்பில் முதல் இடுகைக்கு விளம்பரமா? நடக்கட்டும்.//

  ஹி..ஹி..அதான் சொல்லிட்டேனே அம்பி, // "நாலு பேரிடம் நல்லது போய்ச் சேரணும்னா எதுவுமே தப்பில்லை!" :-)))!//ன்னு..

  ReplyDelete
 28. +2 ரிஸல்ட் வர ஆரம்பித்ததிலிருந்து பத்திரிகை நிருபர்கள் ஸ்டேட் ஃபர்ஸ்ட், ஸ்கூல் ஃபர்ஸ்ட் என்று ராங்க் வாங்கிய மாணவ/மாணவிகளின் வீடு சென்று அப்பா, அம்மா கேக் கொடுப்பதை போட்டோ எடுத்து, நான் டாக்டராகி சேவை செய்ய விரும்புகிறேன் குழந்தைகள் சொல்வதை படத்துடன் செய்தியாக போடுவதையும், பள்ளிகள் தங்கள் ஸ்கூல் ஃபர்ஸ்ட் முதல் பத்து ராங்க் வாங்கியவர்களின் படத்துடன் விளம்பரம் போட்டு பக்கம் நிரம்புகிறது. கல்விச் சந்தை என்றால் போட்டி. விளம்பரம் தேவைதானே.
  சகாதேவன்

  ReplyDelete
 29. 15000குடுத்திருந்திருந்தால் நான் எம்.எஸ்.சி படிச்சிருந்திருக்கலாம்.. இப்ப நினைச்சா அது ரொம்ப சீப்.. :(

  ReplyDelete
 30. சகாதேவன் said://கல்விச் சந்தை என்றால் போட்டி. விளம்பரம் தேவைதானே.//

  உண்மைதான் சகாதேவன். சந்தை என்றாலே போட்டி, விளம்பரம் கட்டாயம் தேவை. ஆனால் 'கல்வி' சந்தையாகி விட்டதே என்பதுதான் கவலை.

  நீங்கள் சொல்வது போல் தங்கள் பள்ளிகள் '100% ரிஸல்ட், அதிலும் 80%-ஆவது முதல் வகுப்பில் பாஸ்' எனக் கருத்துடன் போட்டியிட்டு, விடாமல் விளம்பரமும் செய்து, உத்தியுடன் டிமாண்டை அதிகரித்து, கூடவே கட்டணத்தையும் ஏற்றிக் கொள்கிறார்கள். ஆக, தரமான கல்வி ஒரு சாராருக்கு எட்டாக் கனியாகி விடுகிறது. இந்நிலையில் மாற்றம் வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. Sury சொல்வது போல 1000 ஆண்டுகள் என்பது அதிகப்படியாய் தெரிந்தாலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மகாபாரதத்துக் காலத்திலேயே அரசக்குமாரர்களுக்குக் கிடைத்த குருகுலக் கல்வி ஏகலைவனுக்கு கிட்டவில்லையே! என்ன ஒன்று, ஏங்கி வதங்கிடாமல் எட்டி நின்றே 'வித்தை'யைக் கற்றுக் கொண்டான் அவன். அது போல நினைத்த துறை, பாடசாலை கிடைக்காதவர்கள், கிடைத்ததை வைத்து முழு மூச்சுடன் முன்னேறுவது ஒன்றே, வாழ்க்கையை வெல்வதற்கான 'வித்தை'.

  நான் சொல்வது சரிதானா சகாதேவன்?

  ReplyDelete
 31. கயல்விழி முத்துலெட்சுமி said://15000குடுத்திருந்திருந்தால் நான் எம்.எஸ்.சி படிச்சிருந்திருக்கலாம்..//

  வந்து சேர்ந்த இடம் வருத்தப் பட வைக்காத பட்சத்தில் வருந்துவானேன் கயல்விழி? கடந்து வந்த பாதையிலே இடறிய கற்களை நினைக்காமல் இருந்து விடுதலே உத்தமம்.

  ReplyDelete
 32. //கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது?
  விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது!//

  ஆமாங்க இப்ப LKG க்கே 100000, தலை சுற்றியது, இதை பற்றிய பதிவு ஒன்று விரைவில் போட போகிறேன்.

  //மாணவ மணிகள் கை நிறைய அள்ளி வரும்
  மதிப்பெண்களுக்கு இல்லை ஏதும் மதிப்பு!
  பெற்றவர்கள் கை இடுக்கில் கொண்டு வரும்
  பெரும் தொகைக்கே நல் வரவேற்பு//

  சரியா சொன்னீங்க

  //கனவுகளே கூடாதா திறமை இருந்தும்?
  கதவுகளே திறக்காதா வறுமை புரிந்தும்?//

  அழகாக கூறி இருக்கீங்க.

  //அடிப்படை அறிவைக் கோருவது
  அவரது குன்றாத உரிமை!
  அதைத் தடையின்றி வழங்குவது
  அரசின் தலையாயக் கடமை!//

  மூச்சுடாமா அடிக்கறீங்க போங்க :-)

  //நீதித் தேவதையே நீ சற்று வருவாயா?
  இலவசமாகவோ இனாமாகவோ இல்லாவிடினும்
  நியாய நிதியிலே எல்லா தரப்பினரையும்
  கல்வி சென்றடையச் செய்வாயா?//

  அருமை.

  என்னங்க ராமலக்ஷ்மி இப்படி தாறுமாறா கவிதை எழுதறீங்க. உண்மையிலேயே பொறாமையாக இருக்கிறது. கவிதையில் இருந்த கருத்துக்கள் அருமை. இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்றும் இல்லை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 33. கிரி said://ஆமாங்க இப்ப LKG க்கே 100000, தலை சுற்றியது, இதை பற்றிய பதிவு ஒன்று விரைவில் போட போகிறேன்.//

  அப்படிப் போகிற பள்ளிகளில் பசங்க படுற பாடு... அதையும் விட்டு வைக்கலை நானு.. பாருங்க.. 'காலத்தின் கட்டாயம்'
  http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_9078.html
  [உங்கள் பதிவை இட்டதும் சொல்லுங்கள்.]

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 34. கல்வி வியாபார மாக்கப் பட்டது கொடுமையிலும் கொடுமை. தங்கள் கவிதை அப்போக்கை மிக அருமையாகக் கண்டிக்கதாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். மேலும் இவ்வலையில் கல்வி என்ற தலைப்பில் சில வெண்பாக்கள் எழுதியுள்ளேன். நேரமிருப்பின் கண்டுகளிக்கவும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 35. கல்வி வியாபார மாக்கப் பட்டது கொடுமையிலும் கொடுமை. தங்கள் கவிதை அப்போக்கை மிக அருமையாகக் கண்டிக்கதாக அமைந்துள்ளது. வாழ்த்துக்கள். மேலும்
  http://taminglishpoem.blogspot.com/2008/04/blog-post.html
  இவ்வலையில் கல்வி என்ற தலைப்பில் சில வெண்பாக்கள் எழுதியுள்ளேன். நேரமிருப்பின் கண்டுகளிக்கவும். வாழ்த்துகள்.

  ReplyDelete
 36. உங்கள் கல்வி பற்றிய வெண்பாவை வாசித்து ரசித்தேன். அதே கருத்தில் நான் எழுதிய 'காலத்தின் கட்டாயம்' கவிதையை நீங்களும் நேரம் கிடைக்கையில் காண வேண்டுகிறேன்.
  http://tamilamudam.blogspot.com/2008/05/blog-post_9078.html

  ReplyDelete
 37. தருவது தருமத்துக்குப் புறம்பில்லையெனப் பலரும்
  தேற்றிக் கொண்டார் காலத்தின் தேவையிதுவென-
  தருவதற்குத் தயாரெனும் போது தயங்குவானேனென
  விற்றவரும் எண்ணி விட்டார் சட்டமிருக்கையில் துணையென-
  குற்றம்தான் யார் மீதும் சுமற்றிட வழியின்றிக்
  கொற்றவனும் அன்றோ வீற்றிருக்கிறார் உடந்தையென?//

  உங்களை விட இந்த சிந்தனையை வேறு யாரும் இவ்வளவு அருமையாய் சொல்லியிருக்க முடியாது.
  அத்தனை வரிகளும் அப்பப்பா.

  ReplyDelete
 38. கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு.
  ஆனால் இந்த கல்வி நிலை கண்டு என்னக்கு வெறுப்பு

  ReplyDelete
 39. //கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது?
  விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது!//

  ஆரம்பமே அசத்தலாக இருக்கு தோழி

  ReplyDelete
 40. //அடிப்படை அறிவைக் கோருவது
  அவரது குன்றாத உரிமை!
  அதைத் தடையின்றி வழங்குவது
  அரசின் தலையாயக் கடமை!
  கவனிக்குமா இப் பிரச்சனையைக்
  கருணையுடன் கல்வியின் தலைமை?//

  நல்ல வரிகள் பாராட்டுகள்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin