நட்சத்திரங்களுக்கு நடுவே ஒலிக்கும் இசை
வாழ்வின் ஒவ்வொரு காலக் கட்டமும் சொல்லப்படக் காத்திருக்கும் ஓர் அனுபவக் கதை. அப்படியான தனித்துவமான சொந்த அனுபவங்களின் மூலமாக வாழ்க்கை, மனிதர்கள் மற்றும் சமூகம் குறித்த தனது பார்வைகளை சிந்தனையைத் தூண்டும் வகையில் முன் வைத்துள்ளார் ஆசிரியர். 'தமிழ் மணம்' திரட்டி சிறப்பாக இயங்கி வந்த வலைப் பதிவர்களின் பொற்காலத்தில், மெல்லிய அங்கதம் இழையோடும் தன் அழகிய எழுத்து நடை மூலமாகப் பரவலாக அறியப்பட்டவர் தோழி சாந்தி மாரியப்பன். அவரது மூன்றாவது நூலாகிய இத்தொகுப்பில் 28 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை அவரது ‘அமைதிச்சாரல்’ வலைப்பூவில் வெளியாகி நல்ல வரவேற்பையும் கருத்துப் பரிமாற்றங்களையும் பெற்றவை. ‘நிரம்பும் வெளியின் ருசி’யாக அவை மீண்டும் சுவைக்கக் கிடைத்திருப்பது நற்பேறு.
தினசரி வாழ்வில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், மனச்சிக்கல்கள், வேகமாக மாறி வரும் உலகில் எதிர் கொள்ள நேரும் சவால்கள், தொலைத்த பால்யத்தைத் தேடுதல், தொலைக்கக் கூடாத சுயத்தைப் பாதுகாத்தல் என எதுவொன்றைப் பற்றியதானாலும் நூல் முழுவதும் இவரது குரல் கருணை ததும்ப ஒலிக்கிறது. சில அத்தியாயங்களில் வழங்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை நேசமிகு ஆலோசனைகளாக, சக மனிதர்கள், உயிர்கள் மேல் அவர் வைத்திருக்கும் அக்கறையின் வெளிப்பாடாக உணர முடிகிறது.
இத் தொகுப்பின் முக்கிய பலமாக நான் பார்ப்பது அறிவுசார் ஆர்வத்துடன் அணுகப்பட்ட பலதரமான அனுபவங்களும் அவை வாசகரைத் தம் அனுபவங்களோடு ஒப்பிட்டு நோக்கத் தூண்டுவதாகவும் இருப்பது. பதின்ம வயதில் வானத்து நட்சத்திரங்களை நானும் ரசித்திருக்கிறேன், மேல் தட்டட்டி நடுவே அமைந்த கூரை படிக்கட்டில் சாய்வாகப் படுத்தபடி. அசைந்தாடும் மரங்களைக் கண் கொட்டாமல் பார்ப்பது இயற்கை நம்மை தாலாட்டுவதற்கு ஒப்பானது. அதை இப்போதும் ரசிக்கப் பிடிக்கிறது.
குழந்தைகளை ஓரிரு நொடிகளாவது தொலைத்து விட்டுப் பதறியவர் பலர் இருப்பர். கவனத்தில் கொள்ள வேண்டியவற்றைப் போகிற போக்கில் மிக அழுத்தமாகச் சொல்லி செல்கிறார். அடித்தட்டு மக்களின் அல்லல்களைப் பல அத்தியாயங்களில் ஒரு சிறு பத்தியில் நம் கண் முன் கொண்டு வருகிறார். தேர்ந்த ஒளிப்படக் கலைஞரான ஆசிரியர் சிறுவியாபாரிகள் மற்றும் எளிய மனிதர்களை உணர்வுப் பூர்வமாக எடுத்தளித்த படங்கள் பலவும் இந்நேரத்தில் நினைவுக்கு வந்து போகின்றன.
கவிமணி, மகாகவி, ஒளவைப் பாட்டியின் வரிகளை எடுத்தாண்ட விதம் இவரது பரந்த, ஆழ்ந்த வாசிப்புக்குச் சான்றாக உள்ளது. குறிப்பாகப் பனங்கிழங்கை நாரையின் கூரிய அலகோடு ஒப்பிட்டு சக்திமுற்றப்புலவர் நாரை விடு தூதில் பாடியிருப்பதை இவர் வியக்கும் போது, இவரது வாசிப்பை நாமும் வியந்து பாராட்டுகிறோம். மும்பையில் வசிக்கும் இவர், வேற்று மாநிலத்தின் கலாச்சாரங்களைத் துல்லியமான விவரணைகளுடன் பகிர்ந்திருப்பது சுவாரஸ்யம்.
எங்கெல்லாம் இயற்கையைப் பற்றிப் பேசியிருக்கிறாரோ அங்கெல்லாம் நாம் ஓர் ஓவியத்தின் உள்ளே அல்லது ஓர் பாடலின் உள்ளே நுழைவதைப் போன்றதொரு உணர்வு. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தீட்டலாக, ஒவ்வொரு வாக்கியமும் ஒரு மெல்லிசையாக இயற்கையின் வனப்பை வெளிக் கொண்டு வருகின்றன. சிறகு விரிந்தது, நல்லாச்சி ஆகிய இரு அற்புதமானக் கவிதைத் தொகுப்புகளைச் சொந்தக்காரரான இவர், இயற்கையின் எழிலையோ பறவைகளின் உலகையோ காட்சியாக மட்டும் காணத் தராது உணர்வோடு ஊடுருவி, மனதோடு பேசி, அமைதியை தவழச் செய்கிறார்.
இறுதி அத்தியாயம் இதயத்தை நெகிழ்த்தி கண்களைக் கலங்க வைக்கிறது. போராட்டம் மிகு வாழ்வின் கொடிய பக்கங்களை உறுதியுடன் கடந்து வந்திருக்கிறார்.
ஆழமான உண்மைகளை அநாயசமான நடையில் தெளிவோடும், மனிதத்தோடும் பேசுகிறது இத்தொகுப்பு. மனித வாழ்வையும், மனிதர்களின் அனுபவங்களையும் கூர்ந்து நோக்கும் ஆர்வம் கொண்ட எவருக்கும் ‘நிரம்பும் வெளியின் ருசி’ நிச்சயம் விருந்தாக அமையும்.
வாழ்த்துகள் சாந்தி.
*
நூலில் இடம் பெற்றிருக்கும் எனது அணிந்துரை.
*
வெளியீடு: புஸ்தகா (Pustaka Digital Media Pvt. Ltd.)
தபாலில் வாங்கிட, WhatsApp எண்: 9686509000
ஓ... உங்கள் அணிந்துரையுடன் புத்தகமா? முழுவதும் படித்து, ரசித்து, உள்வாங்கி அழகாக பகிர்ந்துள்ளீர்கள். அமைதிச்சாரல் சகோதரிக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்.
நீக்குஉங்கள் அணிந்துரை உங்களின் ஆழ்ந்த வாசிப்பை வெளிப்படுத்துகிறது. சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குகீதா
நன்றி கீதா.
நீக்கு