திங்கள், 26 செப்டம்பர், 2022

பெயரில்லாத மலை - மட்சுவோ பாஷோ ஜப்பானிய துளிப்பாக்கள் (ஒன்பது) மற்றும் 'ஹைக்கூ - ஒரு சிறு குறிப்பு'

 

ஹைக்கூ - ஒரு சிறு குறிப்பு

ஹைக்கூ (Haiku) என்பது மூன்று சொற்றொடர்களில், முறையே ஐந்து, ஏழு, ஐந்து அசைகள் எனப் பதினேழு நேரசை நிரையசைகளைக் கொண்டு அமைக்கப்படும் ஜப்பானியக் கவிதை வடிவம். ஜப்பானிய இலக்கிய வரலாற்றின் எடோ காலத்தில் (கி.பி 1603 முதல் 1863 வரை) சீன ஜப்பானிய மொழிக்கலவையாகத் தோன்றி, ஹொக்கூ என்று அழைக்கப்பட்டு ஹைக்கை என்று திரிந்து, பிறகு ஹைக்கூ என அழைக்கப் படலாயிற்று. ஜப்பானிய மொழியில் ஹைக்கூ கவிதைகளின் மூன்று சொற்றொடர்களும் ஒரே வரியில் எழுதப்பட்டிருக்க, அதன் ஆங்கில மொழியாக்கம் அனைத்தும் 3 வரிகளில் அமைந்திருப்பது கவனிக்கத் தக்கது. 

17_ஆம் நூற்றாண்டில்  மட்சுவோ பாஷோ (Matsuo Bashō) மற்றும் ஊஜிமா ஒனிட்சுரா (Uejima Onitsura) ஆகிய இருவரும் இக்கவிதை வடிவத்திற்கு மெருகூட்ட ஹைக்கூ அதன் தனித்தன்மைக்காகப் பிரபலம் அடைந்தது. 

தொடர்ந்து ஆங்கில மொழியிலும் பலர் இந்த வடிவத்தைப் பின்பற்றத் தொடங்கினர்.  தற்போது தமிழ், பிற இந்தி ஆயினும் இயற்கையின் நேரடி தரிசனம் அவற்றில் சற்று குறைவென்றே சொல்லப்படுகிறது. தமிழில் ஹைக்கூ கவிதைகள் துளிப்பா, குறும்பா, விடுநிலைப்பா போன்ற பெயர்களால் அறியப்படுகின்றன.    

ஹைக்கூ, எந்த வார்த்தை அலங்காரங்களும் இன்றி மிகக்குறைந்த சொற்களில் நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துக்களை வெளிப்படுத்துபவை. இயற்கையை உள்ளது உள்ளபடி கண்முன் காட்சியாக விரியச் செய்பவை. அகத்திலிருந்து புறத்தையும், புறத்திலிருந்து அகத்தையும் காணச் செய்பவை.

"பழைய குளம்   

உள்ளே குதிக்கிறது தவளை   

நீரின் ஒலி" 

பாஷோவின் உலகப் புகழ் வாய்ந்த  இத்துளிப்பா சொல்ல வருகிற தத்துவமாகப் பார்க்கப்படுவது: 'பழைய குளம் - உலகம்; உள்ளே குதிக்கிறது தவளை - வாழ்க்கை; நீரின் ஒலி - வாழ்க்கையின் சலனங்களும், அவை அலை அலையாகத் தோன்றி அடங்குவதும்..'! இந்த ஒரு துளிப்பா  ஆங்கிலத்தில் பலரால் பலவிதமாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. ஆக, ஒரு துளிப்பாவை எப்படி எல்லாம் புரிந்து கொள்ள இயலும் என்பதற்கான ஒரு உதாரணமாக மட்டுமே இதை நாம் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது. 

மட்சுவோ பாஷோ, மஸாவோகா ஷிகி, யொஸா புஸான், கோபயஷி இஸா ஆகியோர் ஜப்பானில் புகழ் பெற்று விளங்கிய ஹைக்கூ கவிஞர்களில் குறிப்பிடத் தக்க நால்வர் எனலாம்.

**

பெயரில்லாத மலை - மட்சுவோ பாஷோ 

1.
எந்த மரத்தின் மலரிலிருந்து
இந்த நறுமணம் வருகிறது
அறிய இயலாதது.

2.
அவ்வப்போது, நாம் வெளியே செல்வோம்
பனியில் மகிழ்ந்திருக்க.. நான்
வழுக்கி விழும் வரையிலும்.

3.
மற்றுமொரு வருடம் சென்றது
ஒரு பயணியின் நிழல் என் தலையில்
வைக்கோல் செருப்புகள் என் காலில்.

4.
கோடைப் புற்கள்
எஞ்சியிருப்பதெல்லாம்
போர்வீரனின் கனவுகள்.

5.
வசந்த காலம்
பெயர் இல்லாத மலை
முகத்திரை அணிந்திருக்கிறது காலைப் பனியில்.

6.
இலையுதிர்க்காலத் தொடக்கம்
கடல், மரகத நெற்பயிர்
இரண்டும் ஒரே பச்சையில்.

7.
மின்னலின் ஒளிப்பாய்ச்சல்
இருளை ஊடுருவிச் செல்கிறது
நாரையின் அலறல்.

8.
எனது பழைய புற்குடிசை
தற்போது வசிக்கப்படுகிறது மற்றொரு தலைமுறையால்
அலங்கரிக்கப்பட்டிருக்கிறது பொம்மைகளால்.

9. 
என்னை அப்படியேப் பின்பற்றாதீர்கள்
அது முலாம்பழத்தின் இரு பாதிகளைப் போல
சலிப்பைத் தருகிறது.
*

மட்சுவோ பஷோ (1644 -1694) புகழ் பெற்ற ஜப்பானின் எடோ காலத்துக்கவிஞர். இவரது வாழ்க்கைக் காலத்திலேயே "ஹைக்காய் னொ ரெங்கா"  என்னும் கவிதை வடிவத்தில் பெயர் பெற்றவராக விளங்கினார். சுருக்கமானவையும் தெளிவானவையுமாகக் கொண்டாடப்படும் ஹைக்கூ கவிதைகளில் வல்லுனராக இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு ஹைக்கூ கவிதைகளின் தந்தை எனவும் போற்றப்படுகிறார். ஜென் தத்துவத்தில் எழுதப்பட்டமுதல் ஹைக்கூ கவிதை இவருடையதே என்றும் கூறப்படுகிறது. ஆசிரியராகத் தொழில் புரிந்த இவரது கவிதைகள் ஜப்பானில் நினைவுச் சின்னங்களிலும், மரபு சார்ந்த இடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.

இலக்கியத் துறையினரின் சமூக மற்றும் நகர் சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளி, எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெற நாட்டின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்தவர். இவர் பெற்ற நேரடி அனுபவங்களே இவரது கவிதைகளில் ஆதிக்கம் செலுத்துவதைப் பார்க்கலாம். காட்சிகளையும் உணர்வுகளையும் எளிமையான கூறுகளில் அடக்கியவர்.

**

[படங்கள்: இணையத்திலிருந்து.. நன்றியுடன்..]

ஆசிரியர் குறிப்பு மற்றும் துளிப்பாக்கள்.. ஆங்கிலம் வழித் தமிழில்: ராமலக்ஷ்மி

நன்றி சொல்வனம்!


**

மட்சுவோ பாஷோ துளிப்பாக்கள்...
தொடர்புடைய முந்தைய பதிவுகள்:

***

10 கருத்துகள்:

  1. ஹைக்கூ வடிவம் எவ்வளவு பழமையானது!  அப்போதே எழுதி இருக்கிறார்கள்.  எல்லாமே அருமை.  "வசிக்கப்படுகிறது" என்கிற பிரயோகம் புதிது! சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் பகுதியில் ஹைக்கூ கவிதைகள் பற்றி விளக்கங்கள் கொடுத்து மாதிரி கவிதைகள் கொடுத்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம். நீங்கள் சொன்ன பிறகே கவனிக்கிறேன்:). புதிய வார்த்தைப் பிரயோகம் எனினும் பொருத்தமானதென்று கருதுகிறேன். மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இந்த வரிகளுக்கான பொருளை உணர்வது என்பது எனது அறையின் ஜன்னல் வழியாக உலகின் அழகை, உண்மையைப் புரிந்து கொள்ள முயல்வது போலத் தோன்றுகிறது!

    இதன் தொடர்புடைய ஹைக்கூ கவிதைகள், அதை விட அதற்கான பின்னூட்டத்தில் தான் எத்தனை அழகிய, சுவாரஸ்யமான உரையாடல்கள்..,

    பகிர்வுக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒவ்வொரு துளிப்பாவுக்குமான பொருளை நாம் சிந்தித்துப் புரிந்து கொள்வது இனியதொரு சவால்.

      “பழைய குளம்
      உள்ளே குதிக்கிறது தவளை
      நீரின் ஒலி”

      பாஷோவின் உலகப் புகழ் வாய்ந்த இத்துளிப்பா சொல்ல வருகிற தத்துவம், பழைய குளம் - உலகம்; உள்ளே குதிக்கிறது தவளை - வாழ்க்கை; நீரின் ஒலி - வாழ்க்கையின் சலனங்களும், அவை அலை அலையாகத் தோன்றி அடங்குவதும்.. என்று சொல்கிறார்கள். இத்துளிப்பா ஆங்கிலத்தில் பலரால் பலவிதமாக மொழி பெயர்க்கப்பட்டிருப்பதும் ஒரு சுவாரஸ்யம்.

      ஒரு துளிப்பாவை எப்படி எல்லாம் புரிந்து கொள்ள இயலும் என்பதற்கான ஒரு உதாரணமாக மட்டுமே இதை எடுத்து கொள்ள வேண்டியுள்ளது. அதனால்தான் இந்த விளக்கத்தைக் குறிப்பில் சேர்க்கவில்லை.

      தொடர்புடைய பதிவுகளின் இணைப்புகளை ஆர்வமுள்ளவர்களின் வசதிக்காக இணைத்துள்ளேன். பின்னூட்ட உரையாடல்கள்... பதிவுலகின் பொற்காலம் அது :)!

      வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. உண்மை. கவிதைகளின் பொருளை அறிந்து கொள்ள மனம் விழைவதும், சிந்தனை தூண்டப்படுவதும் இனிய சவால் தான். சில வாசிப்புகளில் நேரம் போவதே தெரிவதில்லை.

      கவிதைகளின் பொருளைச் சொந்த அனுபவங்கள் மற்றும் புரிதல்கள் மூலமாக விடை தேடுவதால் அதன் உண்மையான நோக்கத்தை உணர்வதற்கு எனக்குச் சற்று தடையாக உள்ளது.

      அதே நேரத்தில் விளக்கத்தை அளித்து விட்டால் மனதில் விரியும் கற்பனை, எண்ணங்கள் தடைப் பட்டு ஒரு செய்தியை வாசிப்பது போல ஆகி விடுகிறது.

      உண்மையில் பின்னூட்டங்களில் பல எதிர்பாராத கோணங்களில் வெளிப்படும் பார்வைகள் அதிக வியப்பை, மகிழ்ச்சியைத் தருகிறது.

      அவசரகதியில் ஓடிக் கொண்டிருக்கும் போது இது போன்ற வாசிப்பு, தேடலில்.., மனம் சற்று ஆசுவாசம் அடைகிறது. அதற்கு மிக்க நன்றி :)

      உதாரணமாகச் சொல்லப்பட்ட துளிப்பா அருமை. தெளிவான நீர் அமைந்த குளம் மிக அழகு. பார்த்துக் கொண்டே இருக்கலாம். தவளையாக நினைக்கவே அசௌகரியமாக இருக்கிறது:)

      நீக்கு
    3. மிகச் சரி. உரையாடல்கள் புதிய பார்வைகளுக்கு வழிவகுக்கின்றன.

      தங்களுக்கான முந்தைய பதிலைப் பதிவில் சேர்த்தால் நன்றெனத் தோன்றியதால், சேர்த்து விட்டுள்ளேன்.

      நன்றி.

      நீக்கு
  3. ஹைக்கூ கவிதை பற்றிய விளக்கமும், கவிதைகளும் அருமை.

    உங்கள் மொழிபெயர்ப்பு அருமை.
    சொல்வனத்தில் இடம்பெற்றதற்கு வாழ்த்துகள்.
    சில் வண்டுகளின் ஆரவாரம் மிகவும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  4. சில்வண்டுக்கு இறக்க போவது தெரிவது இல்லை பரவாயில்லை தெரியாமல் இருப்பதே நல்லது. இருக்கும் வரை மகிழ்ச்சியாக இருக்கலாம் அது.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin