புதன், 1 மார்ச், 2017

"சுதந்திரம்" சிறு குறிப்பு வரைக - குறும்படம் - ஒரு பார்வை



காலம் எவ்வளவோ மாறி விட்டது. வெளியிடங்களிலும் சரி, வீட்டிலும் சரி, பெண்கள் இன்று எல்லா வகையிலும் சுதந்திரமாக வாழ்கிறார்கள், இயங்குகிறார்கள்’ என்பது ஒரு மாயத் தோற்றம்தான். ‘என்றைக்குப் பெண்கள் நடுநிசியில் நம் நாட்டின் வீதிகளில் நடந்து செல்லுகையில் பாதுகாப்பாக உணருகிறார்களோ அப்போதுதான் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடையும்’ என்றார் காந்தி. நடுநிசி என்ன, நந்தினி, ஹாஸினி எனக் குழந்தைகளைக் கூட விட்டுக் வைக்காத கொடுமைகள் நடக்கும் கலியுகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

உண்மைதான், இருபது முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை விடவும் அதிக அளவில் இன்று பெண்கள் கல்வியில், பணியிடங்களில் பிரகாசிக்கிறார்கள். பல்வேறு துறைகளில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறார்கள். ஒரு உயர்ந்த நிலையை அடைய எத்தனையோ இடர்களையும் போராட்டங்களையும் அவர்கள் சந்திக்க நேர்ந்திருப்பினும், பெற்ற வெற்றி அவற்றைப் பின்னுக்குத் தள்ளி விட்டுப் பெருமையைக் கொடுக்கிறது. ஆறுதல் அளிக்கிறது. அதே நேரம் நாட்டின் இன்னொரு பக்கம், போராடுவதற்கான வாய்ப்புகள் கூட அளிக்கப் படாமல், பிறப்புரிமையான கல்வி கூட ஆசைப்பட்டபடிக் கிடைக்காமல், திறமைகளை வெளிக்காட்ட வழியில்லாத சிறகொடிந்த கூண்டுப் பறவைகளாக பல இலட்சம் பெண்கள். குழந்தைத் தொழிலாளர்களாக மாறிக் கொண்டிருக்கும் சிறுமியரோடு, சிறார்களும் இதில் சேர்த்தி. இவர்கள் எல்லோரும் பழமையான எண்ணங்களிலிருந்து விடுபடாத நவ நாகரீக மனிதர்கள் நிறைந்த சமூகத்திடம் அல்லது அந்த சமூகத்திடம் கைதிகளாகிப் போன பெற்றோர்களிடம் தோற்று, தங்கள் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை உரத்துப் பேசுகிறது, M பிக்ஸர்ஸின் மூன்றாவது குறும்படமான "சுதந்திரம்" சிறு குறிப்பு வரைக



தனது பார்வையில் சுதந்திரம் என்றால் என்னவென்பதைக் குதூகலமாய்க் கண்கள் அகல விவரிக்கும் சிறுமி, முடிவில் அதே கண்கள் பீதியில் அகல, புரிந்தும் புரியாமலும் திகைத்து நிற்கிறாள்.. சுதந்திரத்தின் உண்மை நிலை முகத்தில் அடித்தாற்போல நமக்குச் சொல்லப் படுகையில்.

சர்வதேச மகளிர் தினம் 2017_ன் கரு “Be Bold For Change".

சுதந்திராக்களுக்காக நாம் என்ன செய்யப் போகிறோம்?

நம்மை சுற்றியிருக்கும் வட்டத்தில் காண்கிற கூண்டுகளைத் திறந்து விட்டோ, திறக்க வைத்தோ சிறு பறவைகளை வானிலே சிறகு விரிக்க வைப்போமா? 

கவிஞர், எழுத்தாளர் (உழவன்) நவநீதக் கிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் படம். தன் வலிமையை உணராது சங்கிலியில் கட்டுண்டு கிடக்கும் யானையின் காலில் தொடங்கி, குறியீடான காட்சிகள் மூலமாகச் சொல்ல வந்ததை வலுவாக வெளிப்படுத்தியிருக்கும் சிறப்பான திரைக்கதை. ஒளிப்பதிவில் முந்தைய படங்களை விட நல்ல முன்னேற்றம் தெரிகிறது, எனினும் குறிப்பிட்டுச் சொல்லும்படி சில இடங்களில் குறைகளும் உள்ளன. அடுத்த படத்தில் மேலும் கவனமாக இருப்பார்கள் என நம்புவோம். பின்னணி இசை நன்று. சிந்திக்க வைக்கும் குறும்படத்தை தந்திருக்கும் M பிக்ஸர்ஸ் குழுவினருக்கும், இயல்பாக நடித்திருக்கும் சிறுமியருக்கும் பாராட்டுகள்.

***

6 கருத்துகள்:

  1. குழுவினருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
  2. எனது வாழ்த்துக்களையும்இணைத்துக் கொள்ளுங்கள்

    பதிலளிநீக்கு
  3. குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அருமையான குறும்பட பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சுதந்திரம் என்பதை அடிமைத் தனத்துக்கு எதிர்பதம் என்று கொண்டு அதை திரு அப்பாதுரை அவர்கள் எழுதியதை ஆங்காங்கே பகிர்ந்து வருகிறேன் இந்தப் பின்னூட்டத்திலும் அதை பகிர்கிறேன்
    "அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

    "எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

    "ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

    "ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

    "விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

    "தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

    "பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

    "மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

    "அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

    நாம் சரி என்று நினைப்பதை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம்தானே

    பதிலளிநீக்கு
  5. கருத்தையும் வாழ்த்துகளையும் பகிர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin