வெள்ளி, 4 மார்ச், 2016

வாழும் தெய்வம்.. நதி அன்னை.. கங்கா தேவி - ஆலய தரிசனம்

தேவி கங்கம்மா என அழைக்கப்படும் கங்கை அம்மன் திருக்கோவில், பெங்களூர் மல்லேஸ்வரம் கோவில் தெருவில் இருக்கும் மற்றுமொரு ஆலயம்.
#1


இந்து புராணத்தில் கூறப்பட்டிருக்கும் தெய்வங்களில் மக்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே தெய்வம், நதி அன்னை, கங்கா தேவிதான் என்கிறார்கள்.
#2


தொன்மை, தூய்மை, பக்தி இவற்றின் அடையாளமாக அருள்பாலித்திருக்கும் தேவி கங்கம்மாவைத் தரிசிக்கவென பெங்களூரின் பலபகுதிகளிலிருந்தும் மக்கள் தேடி வருகிறார்கள்.
#3

கங்காதேவியை வழிபடுவதால் கிடைக்கும் நலன்கள், தேவியின் வெவ்வேறு பெயர்கள், புராணத் தகவல்கள் எனக் கோவில் கையேட்டிலிருந்த விவரங்களைப் பகிருகிறேன் சிறு குறிப்புகளாகப் படங்களுடன்...

பாவ நிவர்த்தினி

#4

*
புண்ணிய கர்மங்களினால் செளக்கியமும், பாவகர்மங்களினால் சோதனைகளும் வருவது கர்ம பலன்களே. எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம்.

யுக யுகங்களாய் மனிதர்கள் அறிந்தோ அறியாமலோ மனிதர்கள் செய்து வரும் பாவ கர்மங்களை நிவர்த்தி செய்து அவர்களைப் புனிதர்களாக மாற்றும் சக்தி கொண்டவள்.

 கங்கையில் மூழ்கினால், கங்கையின் ஒரு துளித் தண்ணீரைத் தீர்த்தமாக அருந்தினால், பக்தியுடன் கங்கையை வணங்கினால் பாவங்கள் நாசமாகி, சுகம், மகிழ்ச்சி, மன நிம்மதி, அமைதி கிடைக்கும். இதனாலேயே கங்கையை ‘பாவ நிவர்த்தினி’ என்கிறார்கள்.

அன்னையைப் பூஜை செய்ய ஜாதி - மதம், ஆண் - பெண். ஏழை - பணக்காரர், பெரியவர் - சிறியவர் என எந்தப் பேதங்களும் பாகுபாடுகளும் இல்லை. நம்பிக்கை - பக்தி - அன்பு இவையே பிரதானம்."

மந்தாகினி
#5

*
மாஹாபலியால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என தேவேந்திரன் விஷ்ணுவை நாட, பகவான் வாமன ரூபத்தில் மஹாபலியை பாதாளத்தில் தள்ளி, அதே நேரம் மஹாபலியின் நற்குணசெயல்களுக்காகப் பிறவாமையை ஆசிர்வதித்தார். இந்திரனின் பதவியைக் காப்பாற்றிய செயலால் பெருமை கொண்ட பிரம்மா, விஷ்ணுவின் பாதங்களக் கழுவி வணங்கியபோது உதித்தவள் கங்கையம்மன் என்றும், மஹா விஷ்ணு  “மந்தாகினி” எனும் பெயரை அருளியதாகவும், பாவம் போக்கும் புண்ணிய தீர்த்தமாக, தேவநதியாக சுவர்க்கத்தில் கங்கையம்மன் ஓடிக் கொண்டிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.

பாகிரதி - ஜான்னவி - திரிபத காமினி
*
தேவலோகத்தில் ஓடிக் கொண்டிருந்த கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தவர் பகீரதன். அதனால் கங்கையை “பாகிரதி” என்றும் அழைக்கிறார்கள்.

#6 பாகிரதி

அதாவது, சூர்ய வம்சத்தின் அரசன் சகர மஹாராஜனின் அறுபதாயிரம் பிள்ளைகள் பாதாளலோகத்திற்கு திக் விஜயம் செய்து கபில முனிவரின் தவத்தைக் கலைத்து விட, கோபமுற்ற முனிவர் அவர்களைப் பஸ்பமாக்கி விடுகிறார். கருடாழ்வார் சகர மன்னரிடம் கங்கையை பூலோகத்துக்கு அழைத்து வந்து சாம்பலின் மேல் தெளித்தால் பாப விமோசனம் கிட்டி குழந்தைகளுக்குப் புனர் ஜென்மம் கிடைக்குமெனக் கூறுகிறார். சரக மன்னர் எவ்வளவு பிரார்த்தித்தும் கங்கை பிரசன்னமாகவில்லை.  அவரது வம்சத்தில் வந்த பகீரத மன்னர் இடைவிடாது தியானித்து கங்கையின் மனதை வெல்கிறார். கங்கையோ பரமேஸ்வரன் அருளினால் மட்டுமே தன்னால் பூலோகத்திற்கு வரமுடியும் என்கிறாள். சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து அவர் அருளைப் பெறும் பகீரத மன்னர் ஈஸ்வரனின் ஜடாமுடியின் வழியாக கங்கையை பூமிக்குக் கொண்டு வரும் வரத்தைப் பெறுகிறான்.

கங்கை பெருவெள்ளமாக  பூமியை நோக்கிப் புரண்டோடி வருகையில் ஜாகுண்ய ரிஷியின் ஆசிரமம் அடித்துச் செல்லப்பட, ரிஷி கங்கையைக் குடித்து விடுகிறார். மன்னர் பகீரதன் வேண்டிக் கேட்டுக் கொள்ள, தனது காதின் வழியே கங்கையை விடுவிக்கிறார் ஜாகுன்ய ரிஷி. இதனால் கங்கைக்கு ‘ஜான்னவி’ எனும் பெயரும் உண்டாயிற்று.

#7 ஜான்னவி

கங்கையும் சரக மன்னனின் பிள்ளைகளது அஸ்தி மேல் ஓடி அவர்களுக்குப் புனர் ஜென்மம் அளிக்கிறாள். இவ்வாறாக, தேவலோகம், பூலோகம், பாதள லோகம் என மூன்று லோகங்களிலும் கங்கை ஓடுவதால் அவளை ‘திரிபத காமினி’ என்றும் அழைக்கிறார்கள்.

#8 திரிபத காமினி
பிரகாரத்தில் பெரிய கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும்
சுமார் எட்டடி உயரச் சிலை.
(இந்தக் கோணத்தில் ஜன்னல் பிரதிபலிப்பைத் தவிர்க்க முடியவில்லை)
விசேஷ காலங்களில் மட்டும் இச்சிலை வெளியே எடுக்கப்படும்.
அப்போது பக்தர்களின் வேண்டுதலைக்கேட்டுக் கொண்டதன் அடையாளமாக 
சில நொடிகளுக்கு ஒரு முறை 
அன்னை தன் கண்களை மூடித் திறப்பது போலவும், 
கையிலிருக்கும் நீர்க் கலசத்தை பக்தர்களை நோக்கி நீட்டுவது போலவும்
செய்யப் பட்டிருப்பதாக கோவில் ஊழியர் தெரிவித்தார்.

தஸஹரே
*
தாயின் பரிவோடு உடல், மனம், வார்த்தைகளையெல்லாம் பரிசுத்தம் செய்து ‘தச’ (பத்து) பாவங்களையும் போக்குகிறவர் எனும் பொருள்பட “தசஹரே” என்றும் கங்கையம்மனைப் போற்றி வணங்குகிறார்கள்.

#9


#10
பாதக் கமலங்களில்..


#11

 வெள்ளிக் கிழமைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.
#12

2004 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது இக்கோவில். ஆனால் 88 ஆண்டுகளாகவே, 1928_லிருந்து ‘மாரியம்மா-கங்கம்மா-அன்னம்மா’ வழிபாடாக பெங்களூரில் ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது பால்குடங்கள் எடுத்து ஊர்வலமாக வந்து அன்னைக்குப் பாலாபிஷேகம் செய்வார்கள். கரகம், செண்டை மேளம், புலியாட்டம் ஆகியவை ஊர்வலத்தின் சிறப்பம்சங்களாக இருக்கும். பெண்வேடமிட்டு ஆண்கள் ஊர்வலத்தில் வலம் வருவர். திருவிழாவின் போது அன்னதானம் பெரிய அளவில் பள்ளி மைதானங்களில் நடத்தப்படும். இப்போதும் வெள்ளிக் கிழமைகளில்  தேவி கங்கம்மா கோவிலில் அன்னதானம் நடைபெறுகிறது.

#13
கோபுர தரிசனம்


கோவில் வாசலில்..
#14

யார் யார் கரங்களாலோ தெய்வத்தைச் சென்றடையும் மலர்ச் சரங்கள். 
யார் யார் வடிவிலோ மக்களுக்கு அருள் புரியும் தெய்வங்கள்!
https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/19446981582/
#15



நுழைவாயிலுக்கு இரு புறமும்..
# 16


#17
அன்னத்தின் மேல் அமர்ந்திருக்கும் கங்கை மாதா..

#18
ஆலய தீபம்


#19
கொடிமரம்

#20
பீடத்தில் அன்னம்


#21
அன்னையைப் பார்த்து சிங்கம்

#22
நதி அன்னை

#23
கோவில் பிரசாதம் 
அன்னையின் ஆசிர்வாதம்

**

தொடர்புடைய முந்தைய பகிர்வுகள்:
பெங்களூர் மல்லேஸ்வரம் கோவில் தெருவில்..
*அதிசய ஆலயம் - நந்தி தீர்த்த க்ஷேத்ரம் 
*காடு மல்லேஸ்வரர் ஆலயமும்.. நாக தேவர்களும்..

***

19 கருத்துகள்:

  1. விவரங்களுடன் வழக்கம் போல அழகிய தெளிவான படங்கள். அருமை.

    16, 17 படங்களில் உங்கள் பெயர் (அதை எப்படிச் சொல்ல வேண்டும்? வாட்டர் மார்க் என்றா? என்னவென்று நினைவில்லையே..!!) எங்கே இருக்கிறது என்று கண்டு பிடிக்க முடியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல அவதானிப்பு:). படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது சில படங்களை வாட்டர் மார்க் இல்லாமல் பதிவேற்றுவதும் உண்டு. இப்போது நீங்கள் குறிப்பிட்டவற்றில் சேர்த்தாயிற்று:).

      நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. பார்த்து விட்டேன்..

      அமைதிச்சாரல் சாந்தி மாரியப்பன் கூட படங்களில் எதிர்பாராத இடங்களில் அவர் பெயரைப் பொறித்திருப்பார்! சுவாரஸ்யம்.

      நான் கவனிப்பது என்னவென்றால் கடவுள் படங்களில் உங்கள் பெயரை காலடியில் போட்டிருக்கிறீர்களா, (கொழுப்புதான் எனக்கு!!) அல்லது எங்கு வருமாறு அமைத்திருக்கிறீர்கள் என்று பார்ப்பேன்!

      :)))))

      நீக்கு
    3. அதுதானா விஷயம்? சில படங்களில் பாதக் கமலங்களிலும் உள்ளது, பார்த்துக் கொள்ளவும்:). இந்த இடத்தில்தான் என்றில்லாமல் ஒவ்வொரு படத்துக்கும் எங்கே அமைத்தால் நல்லதென பார்த்துப் பதிய வேண்டியுள்ளது. சென்ற வருடத்தில் நான் எடுத்த பொங்கல் படம் https://www.flickr.com/photos/ramalakshmi_rajan/16284289995/ இந்த வருடம் என் வாட்டர் மார்க் திறமையாக நீங்கப்பட்டு பலராலும் பகிரப் பட்டிருந்தது. வெகுசிலரே உரிய க்ரெடிட் கொடுக்கிறார்கள். ஆக, வாட்டர் மார்க் எல்லாம் ஒரு மனத் திருப்திக்குதான்.

      நீக்கு
    4. குற்றம் கண்டுபிடிக்கப் பார்க்கவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். :)))) பெயர் எங்கே வருகிறது என்று பார்ப்பேன். அப்போது அப்படித் தோன்றும்! தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

      :)))

      நீக்கு
    5. அட, தவறாக ஏதும் நினைக்கவில்லை:)!

      நீக்கு
  2. கங்கை வாழும் நதி
    உங்கள் புகைப்படங்கள்
    வறளா நிதி.

    அத்தனையும் தொகுத்து
    கங்கா ஷ்டகம் பாடவேண்டும் என்று
    தோன்றுகிறது.

    சர்வ மங்களாணி பவந்து.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com
    www.pureaanmeekam.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. அன்னையின் அருள் முகங்கள் ....அருளை பொழிகின்றன .... அழகு ..

    பதிலளிநீக்கு
  4. அருமை & முழுமை ராமலெக்ஷ்மி :) ஸ்ரீராம் ஹாஹா கமெண்ட்ஸ் படித்து சிரித்தேன். நான் எடுக்கும் படங்களில் பெயர் இல்லை. ஆனாலும் அது நானே எடுத்ததுதான். ( இத வேற சொல்லணுமாக்கும் கோணமாணலா எடுத்துட்டுன்னு திட்றது கேக்குது :) ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தேனம்மை:).

      சமீபத்திய உங்கள் படங்களில், குறிப்பாக கோவில் பகிர்வுகளில் கோணங்கள் அருமையாக அமைந்திருந்தன. தொடருங்கள்.

      நீக்கு
  5. அழகான படங்கள்...... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. படங்களும் பதிவும் மிக மிக அருமை. திரிசூலம் அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  7. கங்கை அம்மன் மிக அழகு. எட்டடி பிரம்மாண்ட கங்கையை வடிவமைத்த சிற்பிக்கு நமஸ்காரங்கள். நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin