செவ்வாய், 16 செப்டம்பர், 2014

ஆறடி நிலம் - 'தினகரன் வசந்தம்' நான்கு வாரத் தொடர் - பாகம் 1

17 ஆகஸ்ட் தொடங்கி நான்கு ஞாயிற்றுக் கிழமைகள் தினகரன் வசந்தம் இதழில் வெளியான குறுந்தொடரை, பத்திரிகையில் வாசிக்கத் தவறியவர்களுக்காக இங்கே ஒவ்வொரு பாகமாக பகிருகிறேன்.


கடைசி மொகல் மன்னர் இரண்டாம் பகதூர் ஷா ஜாஃபர். இரண்டாம் அக்பர் ஷாவுக்கும் இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த லால் பாய்க்கும் பிறந்தவர். சிறந்த கவிஞர். மன்னராகும் எண்ணமோ ஆசையோ இல்லாதிருந்தவர். சந்தர்ப்பச் சூழலால் 62_வது வயதில் மன்னரானவர். 82_வது வயதில், 1857_ல், சிப்பாய்க் கலகத்துக்கு துணை போனதாகக் கைதாகி ரங்கூனுக்கு நாடுகடத்தப்பட்டவர். 87வது வயதில் காலமானார். 

இது வரலாறு. 

ஒரு சாம்ராஜ்ஜியத்தின் சரிவு, ஒரு சகாப்தத்தின் முடிவு 
எப்படி நேர்ந்திருக்கலாம் என்பதை சில உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து சொல்ல முற்படும் தொடரே இது. 

இனி செல்வோம் கதைக்குள்..

 ‘குக்குக்கூ...’ வானம்பாடியின் கூவலில் உறக்கம் கலைந்தது. கூடவே காலைக் கதிரவனின் ஒளியும் கண்களில் பரவியதில் மெல்ல இமைகளை விரித்தார் மாமன்னர் பகதூர் ஷா ஜாஃபர்.  ஒருகாலத்தில் விடியலுக்கு முன்பாக எழுந்து பழக்கப்பட்டவர். எண்பத்து இரண்டு வயதுக்கு உடல் ஒத்துழைக்கவில்லை என சொல்ல முடியாது. மனதை அழுத்திய பாரமே படுக்கையிலிருந்து எழும் ஆசையை அறவே போக்கி விட்டிருந்தது. அன்றைக்கும் அப்படியே. படுத்தபடியே ஜன்னல் வழியே தோட்டத்தைப் பார்த்தார். தன்னைப் போலவே அதுவும் பொலிவிழந்து போயிருப்பதாய்த் தோன்றியது. தோட்டக்காரர்களுக்கும் ஆர்வம் வற்றி விட்டது. புலர்ந்த பொழுது எந்த நம்பிக்கையையும் அவருள் விதைக்கவில்லை.

கடந்த சிலகாலமாக பிரிட்டிஷ்காரர்கள் அவரைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர் மாமன்னர்தான். அதை அங்கீகரித்திருந்தார்கள். அவருக்கு சொந்தமானதாகச் சொல்லப்பட்ட அரண்மனைகள், பொக்கிஷங்கள், ஆட்சிக்கு உட்பட்ட இடங்கள் எல்லாவற்றுக்கும் உரிமை கொண்டாட முடிந்ததுதான். ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் அரண்மனையை விட்டு வெளியேற அனுமதியில்லை. அவரைக் கண்காணிக்க அரண்மனைக்கு உள்ளேயே ஆள் அமர்த்தியிருந்தார் கவர்னர் ஜெனரல். அதுவும் அவருக்குத் தெரிந்தேதான்.

பொதுமக்களைப் பார்த்தே பல மாதங்கள் ஆகியிருந்தது. தர்பாரும் நடக்கவில்லை. அரசுக் கவிஞர்கள், மந்திரிகள் அவரைச் சந்திக்கவே கிடுகிடுவென நடுங்குகிறார்கள். அரண்மனையில் வசிக்கும் சொற்ப ஜனங்களே அவரது உலகம் என்றாகிப் போயிருந்தது. மாமன்னரின் பரிதாபமான நிலையை அறிந்த அவர்களும் அவரை சங்கப்படுத்துவானேன் என முடிந்தவரை அவர் முன்னே வருவதைத் தவிர்த்து வந்தார்கள். எஞ்சியிருந்த ஒரே துணை அகமது மட்டுமே.

தினெட்டு வயதிருக்கலாம் அகமதுக்கு. குதிரைகளைக் கவனிக்கவும் இலாயத்தை துப்பரவு செய்யவும் சமீபத்தில் வேலைக்குச் சேர்ந்தவன். அரண்மனையை விட்டு வெளியேறவே அனுமதி இல்லை. ஆனால் குதிரைகளையும் இரதங்களையும் மட்டும் வைத்துக் கொள்ளலாமாம். பிரிட்டிஷ்காரர்களை நினைத்து சிரிப்பு வந்தது. அதையும் கூட ஒரு நாள் பிடுங்கிக் கொள்வார்கள் எனத் தோன்றியது. அப்படி நேர்ந்தால் அகமதுக்கு வேறு வேலை கொடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வரவர அகமதின் பேச்சுகள் எல்லாம் வேடிக்கையாய் இருப்பதாகத் தோன்றியது. அதிலும் நேற்று அவன் சொன்னதெல்லாம் விநோதமென்றே சொல்லலாம். என்றைக்கும் விட கொஞ்சம் கலக்கமாய்க் காணப்பட்டவன் “மாமன்னா, இந்த வெள்ளைக்காரர்களைச் சிறையில் தள்ளிவிட்டு, ஆட்சியை நீங்கள் கையில் எடுக்க வேண்டும். உங்களைப் பேரரசர் என அழைக்கிறார்கள். ஆனால் அவர்கள்தான் ராஜாக்கள் மாதிரி இராணுவத்தை உருவாக்குகிறார்கள். சட்டங்களைப் போடுறார்கள். வரிகளை விதிக்கிறார்கள். அத்தோடு போகிறார்களா? நம் சனங்களையெல்லாம் பாடாய்ப் படுத்துகிறார்கள்” இப்படிதான் ஆரம்பித்தான்.  ஆனால் அது வழக்கமான அரட்டையாக இல்லாமல் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயம், முன்னோரின் பெருமை, மன்னரின் கடமை, புரட்சி, போராட்டம்  என நீளவும் திகைத்துப் போனார். எதிர் பார்க்கவில்லை.

நீல வானம், திரளும் மேகம், கடல் கடந்து வந்திருக்கும் வண்ணப் பறவை, தோட்டத்து மலர்கள் என்றுதான் இருக்கும் அகமதின் தினசரிப் பேச்சுகள். அவை அவருக்குள் இருக்கும் கவிஞரை வெளிக்கொண்டு வரவும் உதவி வந்தன. புலம்பெயர்ந்து வந்த அபூர்வப் பறவையின் அழகை வர்ணிப்பான். அதைப் போலவே சத்தமிட்டுக் காண்பிப்பான். இவர் இரசித்துத் தலையாட்டுவார். ஆனால் நேற்றோ, பேச்சு முழுக்கவும் அபாயகரமான தொனியில் இருந்தது. அப்பாவி அகமதுக்குள் இப்படியான சிந்தனைகளா? வியப்பாக இருந்தது. நினைக்கவே விரும்பாதவற்றைக் கிளறிக் கிண்டி எடுத்ததோடு  மனம் அதையே அசை போடும்படிச் செய்து விட்டான்.

மன்னராகும் போதே அறுபதைத் தாண்டி விட்டது வயது. அதுவரையில் தான் உண்டு தன் கஜல்கள் உண்டு என எவ்வளவு அழகாய் நகர்ந்தது காலம்? ஒருநாளும் கனவில் கூட வந்ததில்லை அரியணை. இவர் தந்தையும் நினைத்ததில்லை இவரை அதில் அமர்த்தி அழகு பார்க்க. ராணி மும்தாஜ் பேகத்தின் விருப்பப்படி, பேகத்துக்குப் பிறந்த மிர்சா ஜஹாங்கீரே அடுத்த வாரிசு என்பதில் உறுதியாக இருந்தார் அக்பர் ஷா. விதி வலியது. தங்களைத் தாக்கியதற்காக கிழக்கிந்திய கம்பெனி ஜஹாங்கீரைக் கொன்று போட, வயது காலத்தில் நொந்து போன அக்பர் ஷாவின் பார்வை இவர் மேல் விழுந்தது. மென்மையான உள்ளம் கொண்ட ஜாஃபருக்கு பிரிட்டிஷ்காரர்களால் பெரிய பிரச்சனை வந்து விடாது என நம்பினார்.

ஏற்கனவே மக்களிடையே கவிஞராகப் பெயர் வாங்கியிருந்தார் ஜாஃபர். சுஃபி மகானாக மதிக்கப்பட்டு வந்தார் . மாய மந்திரங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் கைபட்டாலே நோய்கள் குணமாகும் எனக் கொண்டாடினார்கள் மக்கள். மொகல், ராஜபுத்திர வம்சங்களில் வந்ததால் அக்பரை தன் முன் உதாரணமாகக் கொண்டு எல்லா மத மக்களிடமும் அன்பு பாராட்டி வந்தார். இப்படிப்பட்டவர் ‘பிரிட்டிஷ்காரர்கள் ஆத்திரப்படும் வகையில் நடந்திட வாய்ப்பே இல்லை. ஏதோ ஒரு புரட்சி வந்து எப்படியோ இந்த பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை விட்டே வெளியேறும் நாள் வந்தே தீரும். அதுவரைக்கும் பெயரளவிலேனும் மொகல் சாம்ராஜ்யம் தாக்குப் பிடித்தால் போதும்’ என்பது அக்பர் ஷாவின் எண்ணமாக இருந்தது.  தந்தையின் கணக்குப்படியே இப்போது பெயரளவில்தான் இருக்கிறது சாம்ராஜ்யம். கெளரவக் கைதியான தன்னால் என்ன செய்து விட முடியுமென நினைக்கிறான் அகமது?

அன்றைக்கு என்ன கோரமான சம்பவத்தைப் பார்த்தானோ, தெரியவில்லை. பிரிட்டிஷ்காரர்கள் வழக்கமாக நிகழ்த்தி வரும் வன்முறைகள் நாடறிந்ததுதான். எதையோ இவன் நேரில் பார்த்திருக்க வேண்டும். அதனால்தான் அப்படியொரு ஆத்திரத்தில் இருந்திருக்கிறான். என்ன நிகழ்ந்தது எனக் கேட்கவில்லை ஜாஃபர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என எந்தக் கொடூரமும் விவரிக்கப்படுவதைக் கேட்கும் தெம்பில்லை. ஆனால் அகமதோ  கண்களில் நீர் மல்க, “ஜனங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் மகராஜா!” என விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தான். ஆச்சரியமாக இருந்தது. அகமதும் சரி, மக்களும் சரி. இவரை இன்னும் மாமன்னர் என்றும், தங்களைக் காக்கும் சக்தி அவருக்கு இருக்கிறது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாதவராய், பேச்சினை முடிவுக்குக் கொண்டு வர அங்கிருந்து சட்டென நகர்ந்து விட்டார். நேற்று அப்படிச் செய்தது தவறென்று இப்போது தோன்றியது. ஒரு சிறுவனுக்கு இருக்கும் உணர்வு கூடத் தனக்கு ஏற்படாதது வெட்கமாகவும் இருந்தது. ஏதேனும் செய்யதான் வேண்டும். யாரையேனும் கலந்தாலோசித்தால் நன்றாயிருக்கும். ஆனால் யார் இருக்கிறார்கள்?

(அடுத்த பாகம் விரைவில்..)

நன்றி தினகரன் வசந்தம்!
***


16 கருத்துகள்:

  1. நான் ஆவலுடன் எதிர்பார்த்த உங்கள் சரித்திரத் தொடரைப் பதிவிட்டு விட்டீர்கள் நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றாக இருக்கிறது.
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வரலாற்றுக் கதை, அதுவும் தொடர்கதையாய் அமைந்தது (நெடுங்கதை) சிறப்பு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. சரித்திர கதையும் முடியுமென முயற்சித்தமைக்கு பாராட்டுக்கள் கதை அருமை

    பதிலளிநீக்கு
  4. நலல ஆரம்பம்.

    தினகரனில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. இண்டரஸ்டிங்கா இருக்கு ராமலெக்ஷ்மி. பகதூர்ஷாவின் உணர்வுகள் அருமை.

    பதிலளிநீக்கு
  6. நான்கு பகுதிகளையும் அங்கேயே படித்துவிட்டேன். :-)

    வரலாற்றில் ‘பகதூர் ஷா’ என்றே அறிந்திருப்பதால், ‘ஜாஃபர்’ என்ற பேர் புதிதாய்த் தெரிகிறது. :-)

    / ராணி மும்தாஜ் பேகத்தின் விருப்பப்படி, பேகத்துக்குப் பிறந்த மிர்சா ஜஹாங்கீரே அடுத்த வாரிசு என்பதில் உறுதியாக இருந்தார் அக்பர் ஷா//

    இவரது தாய் -தந்தை பெயர் அக்பர்-மும்தாஜ் என்பதா? ஔரங்கசீப் வரைதான் வரிசையாகத் தெரியும். அதன்பின், கடைசி மன்னர் பகதூர் ஷாவைத் தெரியும். நடுவில் உள்ளவர்கள் தெரியாது.

    பதிலளிநீக்கு
  7. @ஹுஸைனம்மா,

    இணையத்தில் வாசித்து விடுவதாக முன்னரே சொல்லியிருந்தீர்களே:)! நன்றி ஹூஸைனம்மா.

    கடைசி மன்னர் பகதூர் ஷா ஜாஃபர் என்றே அறியப்பட்டார் என்றாலும் அவருடைய முழுப்பெயர் மிக மிக நீளமான ஒன்றாக இருக்கிறது. இவரது தந்தை அக்பர் ஷா. தாய் இராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த லால்பாய். மும்தாஜ் பேகம் அக்பர் ஷாவின் இன்னொரு ராணி.

    பதிவின் ஆரம்பத்தில் தந்திருக்கும் முன்குறிப்பு பத்திரிகையில் இடம்பெறாத ஒன்று. எளிதான புரிதலுக்காக இங்கே சேர்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin