வியாழன், 7 ஆகஸ்ட், 2014

தூறல் 18: 2014 உலகப் புலிகள் தினம், லால்பாக் சுதந்திர தினக் கண்காட்சி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

புலிகள் பாதுகாப்பு தினக் கண்காட்சி:

வேகமாக அழிந்து வரும் விலங்கினங்களில் ஒன்றாகப் புலிகள் இருக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் தம் வாழ்விடத்தில் 93 சதவிதிதத்தை இழந்து ஒரு இலட்சமாக இருந்த எண்ணிக்கையும் குறைந்து இப்போது வெறும் 3000 புலிகள் மட்டுமே இருப்பதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கையும் கூடக் கடந்த ஆண்டை விட 200 குறைந்து, இன்னும் வருடங்கள் போகப் போக எவ்வளவு குறையுமோ எனும் அச்சத்தைக் கொடுப்பதாக உள்ளன.
#
பன்னெடுங்காலமாகத் தோலுக்காக வேட்டையாடப்பட்டு பெருமளவில் அழிந்து போன இனம் இப்போது குறைந்து வர சீதோஷ்ண மாற்றங்கள் ஒரு காரணி என்றால், தன் வாழ்விடத்தை மனிதன் விரித்துக் கொண்டே போவதால் சுருங்கிக் கொண்டே போகின்ற காடுகள் அடுத்த காரணி. மாறிவிட்ட எல்லைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் புலிகள் ஊருக்குள் உணவு தேடிவருவதும், சுட்டுக் கொல்லப்படுவதும் அடிக்கடி நிகழுகின்றன. ‘புலிகள் இருந்தால்தான், காடு பாதுகாப்பாக இருக்கும்; நாடும் நன்றாக இருக்கும்’ என்கிறார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு தலைவர் முகமது சலீம். புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தானே, காடுகளின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் மேய்ச்சல் விலங்குகள் எண்ணிக்கை மட்டுமே அதிகமாகி, காடுகளின் வளம் குறையும். இப்படிக் காடுகளின் காவலனாக இருக்கும் புலிகளை பாதுகாக்க வலியுறுத்தி கடந்த சில வருடங்களாக ஜூலை 29ம் தேதி, உலக புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

உலக புலிகள் பாதுகாப்பு தினமான  ஜூலை 29 தேதி அன்று விழிப்புணர்வைக் கோரும் விதமாக விதம்விதமான புலி ஓவியங்களை பெங்களூர் எம்.ஜி ரோடின் ரங்கோலி மெட்ரோ ஆர்ட் சென்டரில் காட்சிப்படுத்தியிருந்தார் ஓவியர் சந்திரன்.


#

இந்த வருட, பெங்களூர் சித்திரச் சந்தையில் அனைவரையும் நின்று ஒரு கணம் இரசிக்க வைத்த, போவோர் வருவோரை மிரட்டிக் கொண்டிருந்த, பலபேரின் கேமராக்களில் அதிகம் சிறைப்பட்ட ஓவியம் இதுவென்று கீழ் வரும் படத்தைக் கண்காட்சி குறித்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.
#

அன்றைய தினத்தில் இவர் எடுத்த வந்த இருபது ஓவியங்களில் ஒன்றைத் தவிர எல்லாமே விற்றுப் போனதாகப் சொன்னவர், உலகப் புலிகள் தினத்திற்கென்றே  6’x4';8'x4’அளவுகளில் ஓவியங்களைத் தீட்டத் தொடங்கியிருப்பதாகவும், அவற்றைக் கொண்டு பெங்களூர் எம்.ஜி.ரோடில் நடத்தவிருக்கும் கண்காட்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்திருந்தார்.
#


அன்று என்னால் செல்ல முடியாது போனாலும் காட்சிப் படுத்தியிருந்த ஓவியங்களை அவரே எனக்கு மின்னஞ்சலில் அனுப்பிப் பகிர்ந்து கொள்ள அனுமதியும் அளித்தார், விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே தனது முக்கிய நோக்கம் என. அவருக்கு நம் நன்றி.


திரு. சந்திரன் இக்கலையில் 30 வருட அனுபவம் பெற்றவர். பூர்விகம் கேரளா. சிறிய வயதில் சென்னையில் பேனர் தயாரிக்கும் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்து பல சிரமங்களுக்கு நடுவேப் படிப்படியாகக் கலையைக் கற்று மேலே வந்தவர். ஓவியர்கள் எம்எஃப் ஹுஸைன், குருதாஸ் ஷெனாய் ஆகியோர் உட்பட பல பிரபல ஓவியர்களிடம் உதவியாளராகப் பணியாற்றித் தன் திறனை மெருகேற்றிக் கொண்டவர். அப்ஸ்ட்ராக்ட், போர்ட்ரெயிட், லாண்ட்ஸ்கேப் என எல்லாவகை ஓவியங்களையும் தீட்டி வந்தாலும் இப்படி சமூக அக்கறையுடன் ஒரு குறிப்பிட்ட கருவை எடுத்துக் கொண்டு அதற்காக ஓவியங்களை உருவாக்கிக் காட்சிப்படுத்தும் திட்டங்களில் தீவிரமாக இருக்கிறார்.

டிசம்பர் முதல் வாரத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவும், அடுத்து புதுதில்லியில் குழந்தைத் தொளிலார்கள் ஒழிப்புக்காவும் ஓவியங்களை உருவாக்க இருக்கிறார். ஓவியர் சந்திரனுக்கு நம் வாழ்த்துகள்!
**

ஓவியர் கே. சரவணன்:

இதே சித்திரச் சந்தையில் சந்தித்த இன்னொரு ஓவியர் சரவணன் குறித்து கல்கி கேலரியில் அறிமுகம் செய்திருந்தேன். தொடர்ந்து மேலும் அவர் வரைந்த ஓவியங்களுடனானத் தனிப்பதிவு   இங்கே. அந்த சமயத்தில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற  (பிரமோத்சவ) பங்குனித் திருவிழாக் காட்சிகளை, தினமலர் நாளிதழ் கேட்டுக் கொண்டதன் பேரில் படங்கள் வரைந்து கொடுத்திருந்ததையும் குறிப்பிட்டிருந்தேன்.  
 #
 #
 #
#
 #
#

வழக்கமாக நேரில் அமர்ந்தே வரைபவர், அலைமோதிய பெரும் கூட்டத்தின் காரணமாகக் காட்சிகளைக் கண்களால் உள்வாங்கி, கேமராவிலும் பதிந்து வந்து அவற்றைப் பார்த்து வரைந்திருக்கிறார். தினமலரில் வெளிவந்த அந்த ஓவியங்களை என் பார்வைக்காகவும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென்றும் அனுப்பி வைத்திருந்தார். அவருக்கும் நம் நன்றி:).
**

பெங்களூரில்.. மலர்களால் மைசூர் அரண்மனை, தசரா காட்சிகள்:

நாளை முதல் ஆரம்பமாகிறது பெங்களூர் லால்பாகில் சுதந்திர தின மலர்க் கண்காட்சி. இந்த முறை க்ளாஸ் ஹவுஸில் முக்கிய மலர்க் கட்டுமானமாக  3 இலட்சம் ரோஜாக்களால் மைசூர் அரண்மனையும், யானைகளின் தசரா ஊர்வலமும் இடம் பெறுகின்றன. மைசூரின் கே. ஆர் சர்கிளும் நடுவே மண்டபத்தில் மறைந்த மைசூர் ராஜாவின் சிலையோடு இடம் பெற உள்ளன. ஆகஸ்ட் 17 வரை நடைபெறும் கண்காட்சியில் குழந்தைகளுக்கு ரூ.10; பெரியவர்களுக்கு விடுமுறை நாட்களில் ரூ.50; வார நாட்களில் ரூ. 40 எனக் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. வாய்ப்பும் ஆர்வமும் இருக்கிறவர்கள் கலந்து கொள்ளுங்கள்:)!
**

படத்துளி:
மனிதன் வகுத்த பாதையில்..
 ***

10 கருத்துகள்:

  1. புலிகளின் அழிவு கவலைக்குரியது. ஓவியங்கள் தத்ரூபமாய் இருக்கின்றன. புல் மறைவில் புலியின் கண்கள் மிரட்டுகிறது. அருமை. ஓவியர் சந்திரனுக்குப் பாராட்டுகள்.

    ஓவியர் கே. சரவணனின் ஓவியங்கள் நிஜம் கலந்து காட்சி அளிக்கின்றன. எல்லாக் காட்சிகளும் அருமையாக இருக்கின்றன.

    நல்லதொரு பகிர்வைத் தந்த உங்களுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  2. "புலிகளின் எண்ணிக்கை சீராக இருந்தால்தானே, காடுகளின் இயல்பு நிலையை பாதுகாக்க முடியும். இல்லையெனில் மேய்ச்சல் விலங்குகள் எண்ணிக்கை மட்டுமே அதிகமாகி, காடுகளின் வளம் குறையும்"

    நிச்சயமாக ஒவ்வொருவரும் இதை உணர்ந்தால்தான் புலிகளை காப்பாற்ற முடியும்!

    படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு
  3. ஓவியர் சந்திரன், ஓவியர் சரவணன் வரைந்த ஓவியங்கள் மிக் அழகு. இருவரும் ஓவியங்களை
    உங்களுக்கு அனுப்பியது நல்ல விஷயம் நாங்களும் கண்டு களித்தோம்.
    நன்றி ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  4. சேரும் இடம் சேரும்போது விகசிக்கின்றன கலைகள் ராமலக்ஷ்மி யின் கையில் வந்த சித்திரங்கள் அபூர்வ அழகு கொண்டவை . .புலி நேர வந்துவிடும் போல அழகு. படங்கள் அருமையாக வந்திருக்கின்றன,. கவர்ந்தது யானைக் கால்கள்

    பதிலளிநீக்கு
  5. கடைசிப் படம் கண்ணில் ஒற்றிக் கொண்டேன். [மனிதன் வகுத்த பாதையா? ஏன்? வேறே தலைப்பு கிடைக்கலியா?]

    சித்திர சந்தை தொடர்பு விவரங்கள் தெரிந்தால் வெளியிடுங்களேன்?

    புலி என்றதுமே எனக்கு இலங்கை தான் நினைவுக்கு வருகிறது இப்பல்லாம். பட்ட பாடு :-).

    பதிலளிநீக்கு
  6. @அப்பாதுரை,

    நன்றி. ரூட்ஸ் ஆஃப் இண்டியா க்ரூப்பில் பகிர்வதற்காக சமீபத்தில் பழைய படங்களில் தேடி எடுத்தது இந்த 2012 தசரா படம். சென்ற வருட தசரா சமயத்தில் டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் வாசித்த கட்டுரை ஒன்றே இந்தத் தலைப்பை வைக்கத் தூண்டியது. கட்டுரை நினைவில் இருந்ததால் இணையத்தில் இணைப்பையே தேடி எடுத்து விட்டேன். நேரம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்: http://timesofindia.indiatimes.com/city/bangalore/Why-calves-cry-in-August/articleshow/22273189.cms

    சித்திரச் சந்தைக்கு டிசம்பர் முதல் வாரத்தில் சித்ரகலா பரீக்ஷ்த்தில் விண்ணப்பம் கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin