வியாழன், 28 ஆகஸ்ட், 2014

CWC (சென்னை வீக்என்ட் கிளிக்கர்ஸ்) - 5ஆம் ஆண்டு கண்காட்சியும் புத்தக வெளியீடும்

'சிலருக்கு பொழுதுபோக்கு. சிலருக்கு தொழில். எங்களுக்கோ பேரார்வம். நாங்கள்தாம்.. சென்னை வீக்என்ட் கிளிக்கர்ஸ்' எனத் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் CWC தனது ஐந்தாம் ஆண்டு கண்காட்சியைக் கடந்த திங்கள் முதல் சென்னை லலித்கலா அகடமியில் நடத்தி வருகிறது.

31 ஆகஸ்ட் 2014 வரை நடக்கவிருக்கும் கண்காட்சியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள். 26, 29, 30, 31 தேதிகளில் இலவசப் பயிற்சிப்பட்டறைகளும் நடைபெற உள்ளன:


ஆர்வமிக்க இரண்டு மூன்று பேரின் சந்திப்பாகத் தொடங்கிய இந்தக் குழு இன்றைக்கு 1500_க்கும் அதிகமான உறுப்பினர்களோடு 350_க்கும் மேலான வாரயிறுதி ஃபோட்டோ வாக் ஆகியவற்றுடன் இருபதுக்கும் மேலான பயணங்களை முடித்திருப்பது பாராட்டுக்குரியது.


அர்ப்பணிப்புடன் தொடரும் அவர்களது வெற்றிக் கதையை அறிந்து கொள்ள சில கேள்விகளை முன் வைத்தேன்.


CWC குழு எப்படி உருவானது?

வார நாட்களில் எல்லாம் இருப்பை சாத்தியப்படுத்த கசங்கி தொலைந்தவர்கள் தங்கள் உயிர்ப்பை தக்க வைக்கப் போராடிய தவிப்பின் வெளிப்பாடே இந்தக் குழு. ஒவ்வொரு சனிக்கிழமை அதிகாலையிலும் இந்தப் பெரு நகரத்தின் ஏதேதோ மூலையில் இருந்து  ஒரு கலையின் வழியாகத் தங்களை மீட்டெடுக்க ஒன்று கூடுவோம். எங்களுக்குத் தெரிந்த சாலைகளாகவே இருப்பினும் இறங்கி நடக்கும் வரை தெரியாது அவை இத்தனை வீட்டு வாசல்களில் இருந்து துவங்குமென்று. இன்னும் ஓராயிரம் வாசல்கள் கடந்து அந்த அதிகாலை வெளிச்சத்தின் வழி நீண்டு கொண்டே இருக்கின்றன நாங்கள் பயணப்படும் சாலைகள்.

யாரால் தொடங்கப்பட்டது? முதல் நடைபயணத்தில் எத்தனை பேர் கலந்து கொண்டனர்? தற்போதைய நிலவரம் என்ன?

நிக்கி ஜாக்சன், மணிமாறன், பஞ்சாட்சரம். மூன்றே மூன்று பேராகத் துவங்கியது முதல் நடை. பின்னர் ஒவ்வொரு அடிக்கும் பல ஜோடி கால்களை இணைத்துக் கொண்டு இன்று சராசரியாய் எல்லா கூட்டத்திற்கும் 20-25 ஜோடிக் கால்களைக் கட்டி இழுத்து வந்து விடுகிறது. சனிக்கிழமை அலுவலகம் செல்ல வேண்டிய சகாக்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கூடி விடுவோம்.

குழுவாகச் செல்வதால் கிடைக்கிற நன்மை?

தனியொரு ஆளாகச் ஒரு செயலை செய்ய நினைக்கும் போது ஏதோ ஒரு தயக்கம் ஏற்படுகிறது. அப்படியான தயக்கங்களும், ஏதாவது காரணம் காட்டி செய்ய விரும்பும் செயலைத் தள்ளிப் போடும் மனப்பாங்கும் மறைந்தும் குறைந்தும் விடுகின்றன. முன்பின் அறிமுகமில்லாத ஊரில் புதிய மனிதர்களைப் பயமின்றி அணுக முடிகிறது குழுவாகச் செல்லும் போது. புகைப்படங்கள் குறித்த சந்தேகங்களை சக நண்பர்களோடு விவாதித்து தெளிவு பெற முடிகிறது.

கண்காட்சிகள் நடத்துவதால் கிடைக்கிற பயன்கள்?

இந்தப் பயணத்தின் சுவடுகள் இன்னும் பரவலாய் எல்லோரையும் சென்றடைவதற்காகவே இந்தக் கண்காட்சிகள். தங்களை மீட்டெடுக்கும் சுயநலத்துக்காகவே இதைக் கையிலெடுத்த போதும், தாங்கள் பார்த்துச் சிலிர்த்த நொடிகளை அதன் தன்மை சற்றும் குறையாமல், அந்நொடியில் இல்லாது போனவர்களுக்கு அனுபவிக்கக் கொடுக்கப் பெரிதும் உதவுகின்றன இந்தக் கண்காட்சிகள்.

உங்கள் குழுவினர் எடுத்த படங்கள் மட்டுமே கண்காட்சிகளில் இடம் பெறுமா?

ஆரம்பத்தில் அப்படிதான் இருந்தது.  சென்ற வருடம் அதில் மாற்றம் கொண்டு வந்தோம். குழுவில் இல்லாதவர்கள் படங்களையும் “நம்ம சென்னை” எனும் கருவின் கீழ் தேர்வு செய்து காட்சிப் படுத்தியிருந்தோம். இந்த வருடம் எல்லையை இன்னும் விரித்து “இந்தியா” எனும் கருவின் கீழ் மற்றவர்களின் படங்களைத் தேர்வு செய்துள்ளோம். தனியொருவராகக் கண்காட்சி நடத்துவதில் பல சிரமங்கள் உள்ளன. எல்லோருக்கும் வாய்ப்பளிக்கவே இந்த முறையைப் பின்பற்ற ஆரம்பித்திருக்கிறோம்.

வருங்காலத் திட்டம்?

“அனைவருக்கும் புகைப்படக்கலை” என்பதைக் கொள்கையாகக் கொண்டு முன் நகர உத்தேசித்துள்ளோம். கல்லூரிகள், பள்ளிகளுக்குச் சென்று எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கலந்துரையாடல்களின் மூலமாக மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவும், உதவவும் முடிவு செய்திருக்கிறோம்.

சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே உறுப்பினாராக முடியுமா?

அப்படியில்லை. இந்தியாவின் பல நகரங்களில் வசிப்பவர்களும் எங்கள் குழுவில் இருக்கிறார்கள். அவர்கள் சென்னைக்கு வரும் சமயத்தில் எங்களுடன் நடைபயணத்தில் இணைந்து கொள்வார்கள். அல்லது இங்கிருக்கும் உறுப்பினர்கள் அவர்கள் இருக்கும் நகரங்களுக்குச் செல்லும் போது சென்னை உறுப்பினர்களுடன் சேர்ந்து ஃபோட்டோ வாக் செல்கிறார்கள்.

இப்படியொரு குழுவை ஆரம்பிக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது? யாரையாவது முன்மாதிரியாகக் கொண்டிருந்தீர்களா?

பெங்களூரைச் சேர்ந்த ஒரு  குழுவே இந்த எண்ணத்தை எங்களுக்குள் விதைத்தது என்றாலும் தற்சமயம் ஆர்வமுள்ளவர்களின் திறனை வெளிக் கொண்டு வந்து வளர்க்க உதவும் வகையில் மற்றவர்களுக்கு நாங்கள் முன் மாதிரியாக இருக்க விரும்புகிறோம்.

கண்காட்சிக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது?

வருடத்துக்கு வருடம் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களைப் பெறுகிறோம். எங்கள் முயற்சிகளைப் பாராட்டும் விதமாக ஒவ்வொரு கண்காட்சியையும் மகிழ்ச்சியுடன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்த முக்கிய விருந்தினர்கள்:

முதல் வருடம்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. PC ஸ்ரீராம்
இரண்டாம் வருடம்: மறைந்த இயக்குநர் திரு. பாலு மகேந்திரா
மூன்றாம் வருடம் : திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு செழியன்
நான்காம் வருடம்: இயக்குநர் திரு. ராம்
இந்த வருடம்: எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன்

பல படங்களை அவர்கள் சிலாகித்துப் பாராட்டியது எங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

படங்களின் விற்பனை எப்படி உள்ளது?

சென்ற வருடத்தில் இருந்துதான் விற்பனையைத் தொடங்கினோம். அப்போது 10 படங்கள் விற்பனையானது. இந்த வருடம் முன்னை விட அதிகமாக இருக்குமென நம்புகிறோம். வாய் பேச, காது கேட்க இயலாத மாற்றுத் திறனாளி மாணவர்களுக்குப் புகைப்படக் கலையைக் கற்றுத் தரும் தியோ புகைப்படக்கலை கல்வி நிறுவனத்தை கண்காட்சியில் பங்கேற்க வைத்திருக்கிறோம். அந்த மாணவர்களின் புகைப்படங்களையும் விற்பனைக்குக் காட்சிப் படுத்தியிருக்கிறோம். இது நிச்சயம் அவர்களின் ஆர்வம் பெருகிட வழிவகுக்குமென்று நம்புகிறோம்.

மற்றவர்களிடமிருந்து நீங்கள் எப்படி வேறுபடுகிறீர்கள்?

எங்களுக்கென தலைவர்கள் யாரும் கிடையாது. உறுப்பினர்களுக்கிடையே எந்தப் பாகுபாடும் இல்லை. அத்தனை பேருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படுகிறது. அது நடைபயணமாகட்டும் அல்லது கலந்துரையாடல் ஆகட்டும், யார் வேண்டுமானாலும் தங்கள் ஆலோசனைகளை முன் வைக்கலாம். சீனியர் உறுப்பினர்கள் புதிதாக வரும் அத்தனை பேரின் படங்களுக்கும் கருத்துகள் சொல்லி உற்சாகம் தந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி எளிதாக அணுகக் கூடிய வகையில் இருக்கிறார்கள்.

ஏன் பயணங்கள்? எதற்காகப் பயணங்கள்?

நாங்கள் சாகசங்களை விரும்புகிறோம். பயணங்களை மேற்கொள்ளாத   வாழ்க்கை வீண் என்றே நினைக்கிறோம். இந்த உலகைப் புரிந்து கொள்ளப் பயணங்களே உதவுகின்றன. பயணம் செய்ய பல்வேறு கலாச்சாரங்களைப் பின் பற்றும் நம் நாட்டை விடச் சிறந்த இடம் வேறெதுவாக இருக்க முடியும்? எங்கள் கேமரா மூலமாக அந்தக் கலாச்சாரங்களைப் பதிவு செய்து வருகிறோம்.


எல்லாப் பறவைகளும் வானத்துடன் பிணைக்கப்பட்டுக் கிடக்கின்றன. எந்தக் கட்டுப்பாடுமின்றி ஆகாயம் முழுதும் பறந்து திரிந்து தன் சிறகுகளின் துடிப்பைப் பதிவு செய்ய முடியாத கூண்டுப் பறவைகள் போன்றதாகி விட்டது, மனித வாழ்க்கை. அன்றாடப் பணிகளும் பொறுப்புகளும் அவர்களுக்கு உண்டு. ஆனாலும் கூட கூண்டின் சுமைகளைச் சுமந்தபடி தங்களால் முடிந்த மட்டும் ஆகாயத்தைச் சுற்றும் பறவைகளுக்கே தன் பிறப்பின் உன்னதத்தை உணர முடிகிறது.  பயணம் ஒரு மனிதனை அவன் நிலையில் இருந்து மலையைப் புரட்டுவது போலப் புரட்டிப் போடுகிறது. தொட்டாற்சிணுங்கிகளைப் பார்த்து வியக்கக் கற்றுக் கொடுக்கிறது. எல்லா உயிர்களும் அறியாத ஏதோவொன்றை மற்றொரு உயிருக்குக் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருப்பதைச் சாத்தியப்படுத்துவது பயணங்களே.

வெளியாகியிருக்கும் நூல் குறித்து?


தொடர்புக்கு: http://www.chennaiweekendclickers.com/
எங்கள் பயண அனுபவங்களே படங்களுடன் தொகுப்பாக வெளியாகியுள்ளது ‘INDIA - Travel diaries of CWC’. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் அனுபவங்களும் எழுத்துக்களுமே எங்கள் சிறகுகளை விரிக்கவும் பயணப்படவும் காரணமாக இருந்தவை. இந்தக் கண்காட்சியின் தொடக்க நாள் அன்று அவரே நூலை வெளியிட்டதில் எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி.

CWC - 5th year photo exhibition

CWC யின் பயணம் தொடர வாழ்த்துவோம்!

14 கருத்துகள்:

  1. கூண்டின் சுமைகளைச் சுமந்தபடி தங்களால் முடிந்த மட்டும் ஆகாயத்தைச் சுற்றும் பறவைகளுக்கே தன் பிறப்பின் உன்னதத்தை உணர முடிகிறது. பயணம் ஒரு மனிதனை அவன் நிலையில் இருந்து மலையைப் புரட்டுவது போலப் புரட்டிப் போடுகிறது. தொட்டாற்சிணுங்கிகளைப் பார்த்து வியக்கக் கற்றுக் கொடுக்கிறது

    மனதை கவர்ந்த சிந்தனைகளின் பகிர்வுகள்..

    பதிலளிநீக்கு
  2. உங்களூரை வைத்து ஆரம்பித்தார்களாமே... உங்களூரில் என்ன நடக்கிறது?

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாளர் எஸ் ரா எழுத்துகள் படிக்கும்போது அவரது பயண அனுபவங்கள் பற்றி நானும் வியந்ததுண்டு. CWC பயணம் தொடர எங்கள் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  4. பய்னுள்ள இப்பயணங்கள் தொடரட்டும்!

    பதிலளிநீக்கு
  5. எனக்கும் அவர்களோடு பயணிக்க ஆர்வம் வருகிறது. அற்புதமான முயற்சி. இந்தத்தடவையும் இந்த் கண்காட்சி சிறப்பான வெற்றி பெற்று எல்லோர் கவனத்தையும் ஈர்க்கவேண்டும்.இந்தப் பயணங்களால் நிறைய வாழ்வில் மாற்றங்களும் விடுதலைகளும் வரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் நம்ம சென்னை.

    பதிலளிநீக்கு
  6. @தருமி,

    நல்ல கேள்வி:). cwc குழுவைச் சேர்ந்தவர்களில் சிலர் பெங்களூரில் இருந்தபோது அப்படியான ஒரு குழு இயங்கி வந்ததாக அறிகிறேன்.

    பெங்களூர் வரும் flickr நண்பர்கள் சேர்ந்து கர்நாடகத்துக்குள் அவ்வப்போது பயணிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  7. பயணங்கள் வாழ்வில் மிக அவசியம்.
    பயணங்களில் கற்றுக் கொண்டே தான் இருக்கிறோம்.
    நம் நாட்டில் பய்ணம் செய்ய அவ்வளவு இடங்கள் இருக்கிறது.

    திரு.ராமகிருஷ்ணன் அவர்களின் பயண அனுபவ கட்டுரை நன்றாக இருக்கும், அதை படிக்க ஆவல்.
    காணொளி அருமை.
    பயணம் தொடர வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin