Monday, May 5, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில் யாளி, மயிலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில் திருவாசி

#1 அனுமார் வாகனம்
பிரபல கணினி நிறுவனமொன்றில் கிராஃபிக் டிசைனராகப் பணியாற்றும் சரவணன், ஃபைன் ஆர்ட்ஸ் பட்டதாரி. கடந்த 4 வருடங்களாகச் சென்னையிலிருந்து வந்து பெங்களூர் சித்திரச் சந்தையில் கலந்து கொள்கிறார். ஒரே நாளில் பல ஓவிய ஆர்வலர்களைக் காண்பதும் அவர்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டும் தொடர்ந்து வரையும் உற்சாகத்தைத் தருவதாகச் சொல்கிறார்.

பள்ளி நாட்களில் இயல்பாக வரைந்த ஓவியங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள், ஓவியப் போட்டிகளில் பெற்ற வெற்றிகள், தன் ஆசிரியர் முரளிக்கிருஷ்ணனின் ஓவியத் திறமையின் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு இவையே ஆர்வத்தை வளர்த்து சென்னை ஓவியக் கல்லூரியில் சேர வைத்திருக்கிறது.

கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து பதினேழு வருடங்களாக வரைகிற இவர் அதற்கு முன்பும் ஏழு வருடங்கள் எந்தப் பயிற்சியுமின்றி தன்னார்வத்தில் வரைந்து பழகியபடி இருந்திருக்கிறார். தன் ஆர்வம் சார்ந்த படிப்பையே தேர்வு செய்த இவருக்கு கல்லூரியில் ஓவியத்தின் வெவ்வேறு பரிமாணங்களும் அறிமுகமாகியிருக்கின்றன.

சென்னை மயிலாப்பூர் கேசவப் பெருமாள் கோவில் திருவிழாவின் போது ஆலயத்தில் அமர்ந்தே தீட்டிய அனுமார் வாகன ஓவியத்தை (படம்: 1) இவர் வரைந்த அனுபவத்தைதான் கல்கி கேலரிக்காக நம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார் இங்கே. எப்படி கருப்பு வெள்ளை கோவில் காட்சி ஓவியங்களில் ஆர்வம் ஏற்பட்டது என்பதையும் விளக்கியிருந்தார். சித்திரச் சந்தையில் இவர் காட்சிப்படுத்தியிருந்த மேலும் சில ஓவியங்கள் உங்கள் பார்வைக்காக இங்கே:

#2 மயிலாப்பூர் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலில் வரைந்த திருவாசி
 

#3 காஞ்சி கைலாசநாதர் கோவிலைச் சித்தரிக்கும் மூன்று விமானங்கள்

#4 சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரையப்பட்ட யாளி ஓவியம்.
இந்த சிற்பம் முருகன் சன்னதியில் பாண்டியர் கால வேலைப்பாடுடன் அமைந்துள்ளது. இதற்காகப் பல வாரங்கள் சிதம்பரத்துக்குப் பயணம் செய்திருக்கிறார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸவரர் கோவிலில் நடைபெற்ற  இவ்வருட (பிரமோத்சவ) பங்குனித் திருவிழாக் காட்சிகளை, தினமலர் நாளிதழ் கேட்டுக் கொண்டதன் பேரில், 8 படங்கள் வரைந்து கொடுத்திருக்கிறார்.  வழக்கமாக நேரில் அமர்ந்தே வரைபவர், அலைமோதிய பெரும் கூட்டத்தின் காரணமாகப் புகைப்படங்களாக எடுத்துக் கொண்டு, அதைப் பார்த்தே வரைந்திருக்கிறார்.  அவை தினமலரில் வெளிவந்திருக்கின்றன.

பூக்களையும் விட்டு வைக்கவில்லை இவரது தூரிகை.
# 5
 “வண்ணங்களைப் பழகிட எழுந்த ஆசையின் விளைவே தான் படைத்த பல்வகை மலர் ஓவியங்கள்” என்றார். பல மலர்களின் பெயர்களை அறியாதிருந்த தனக்கு வரையும் போது ஏற்பட்ட ஈர்ப்பினால், தேடலினால் பெயர்களையும், பூக்கும் பருவங்களையும் அறிந்திடும் வாய்ப்பு கிடைத்ததாகச் சொல்கிறார்.

கோவில் சிற்பங்களிலிருந்து எதையும் நேரடியாகவே வரைவதில் ஆர்வம் காட்டும் இவர் மலர்களையும் பெரும்பாலும் அப்படியே வரைகிறார். அப்போது எதிர் கொள்ளும் சவால்களை விவரித்தார்:

"மலர்களை நேரில் கண்டு வரைவதில் நிறைய சவால்கள் இருக்கிறது. மொட்டிலிருந்து முழுமையாக மலர்ந்து, துவண்டு வாடும் காட்சி சில சமயம் வரைந்து முடிப்பதற்குள் நிகழ்ந்து விடும்.

ஒவ்வொரு பூவிற்கும் அமைப்பு வேறு. சரக் கொன்றை கொத்தாகத் தொங்கும். விருட்சிப் பூ கொத்தாக இருந்தாலும் அதன் அமைப்பு வேறு. சாமந்தியின் இதழ்கள், செம்பருத்தியின் இதழ்களிலிருந்து மாறுபட்டது. இவை எல்லாம் புரிந்து வரைய வேண்டும். காற்றில் ஆடும் மலர்களைத் தடுத்து நிறுத்தி வரைய முடியாது. அதன் போக்கில் வரைய வேண்டும்.

#6
ஒவ்வொரு கண்காட்சியின் போதும் குடும்பத்தினர்
உடன் இருந்து உற்சாகம் வழங்கி வருகின்றனர்.

செம்பருத்தி, அரளி, கல் அரளி (Frangipani) ஆகியவற்றை பல நிறங்களில்..
மயில்கொன்றை, சரக் கொன்றை, குல்மொஹர், கல் வாழைப்பூ (Hiliconia), கனகாம்பரம், நாகலிங்கப்பூ, மந்தாரைப் பூ, நீர் அல்லி, தாமரை, துளுக்க சாமந்தி, வாடாமல்லி, நந்தியாவட்டை ஆகிய நாட்டு மலர்களையும்.., Caranation, alstomeria, gingerlily , orchid ஆகிய கண்கவர் மலர்களையும் வரைந்திருப்பதாகச் சொல்லும் இவர் இந்த மலர் வரிசைகள் உட்பட வண்ணஓவியங்களுடன் சென்னையில் தனிக் கண்காட்சிக்குத் தயாராகி வருகிறார்.

மலர்கள் வரைவது குறித்த இவரது பகிர்வு, பூக்களைப் படமாக்குவது குறித்த எனது எண்ணங்களைப் பிரதிபலிப்பதாகவே இருந்தது!

வரைவது கூர்மையாகக் கவனிக்க வைக்கிறது. உலகை உற்று நோக்கிப் பார்க்கச் செய்கிறது. அவசர வாழ்வில் பார்க்காததை வரைய உட்காரும் போது பார்க்க முடிகிறது. பார்ப்பதால் அறிந்து கொள்ளவும், உணர்ந்து கொள்ளவும் முடிகிறது. குறிப்பாக மலர்களை வரையாது போயிருந்தால் அதன் வாழ்க்கை சுழற்சியைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பை இழந்திருப்பேன்.” என ஓவியராக இருப்பதன் அனுபவத்தை சிலாகித்துச் சொல்கிறார் திரு.சரவணன்.

வாழ்த்துகள் ஓவியருக்கு!

***

ஓவியங்கள் மற்றும் கண்காட்சி ஒளிப்படங்கள்: Ramalakshmi Photography

26 comments:

 1. ஓவியருக்கு எங்கள் வாழ்த்துகளும்.

  ReplyDelete
 2. ஓவியம் மற்றும் படம் இரண்டும் அருமை.

  வரைந்த ஓவியருக்கும் படமாக்கிய தங்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

  ReplyDelete
 3. ஓவியங்கள் அசத்தல்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. ஒவியர் சரவணன் அவர்கள் ஒவியம் வரையும் அனுபவத்தை அழகாய் சொன்னார்.
  அவருக்கு வாழ்த்துக்கள் அவருக்கு உறுதுணையாக இருக்கும் அவர் குடும்பத்தினர்களுக்கு வாழ்த்துக்கள்.

  அவரின் ஓவிய பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

  ReplyDelete
 5. மாருதியும் யாளியும் கண்களை நகர்த்த விடவில்லை. ஓவியருக்கு என் மகிழ்வான நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் ஓவியர் சரவணனுக்கு.. அருமையான பகிர்வு..

  ReplyDelete
 7. நுணுக்கமான கலை அழகு.. அற்புதம்.!

  ReplyDelete
 8. ஓவியர் சரவணனை அறிமுகம் செய்த தங்களுக்கு முதலில் நன்றி வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி. வித விதமான பூக்களையும், கோவில்
  சிற்பங்களையும் வரைந்த சரவணனின் அனுபவம் உண்மையிலேயே
  வித்தியாசமான அனுபவம்தான். கோவில் சிற்ப ஓவியங்கள், இருவாட்சி
  ஓவியம் பேரழகு. வாழ்த்துக்கள் சரவணன்.

  ReplyDelete
 9. இச்சித்திரங்கள் சில்பியை நினைவூட்டுகின்றன. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 10. பகிர்வுக்கு நன்றி ராமலக்ஷ்மி.
  ஓவியருக்கு வாழ்த்துகள்.


  ReplyDelete
 11. உங்கள் படைப்புகள் ஒவ்வொன்றும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன அன்பு ராம லக்ஷ்மி.

  ReplyDelete
 12. அத்தனை ஓவியங்களும் அழகு. அதிலும் கோவில் ஓவியங்கள் மிகவும் பிடித்தன.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin