சனி, 26 ஏப்ரல், 2014

தூறல் 17- நாட்டின் தலையெழுத்து; ஈஜிபுரா; AID பெங்களூரு; ITHI கண்காட்சி; கல்கி கேலரி

2014 மார்ச் 15,16 ஆகிய தினங்களில் பெங்களூர் தளம் அரங்கில் நடைபெற்ற  AID ஒளிப்படக் கண்காட்சி குறித்த எனது முந்தைய பகிர்வுகள் இங்கும்.. இங்கும். போட்டியில் முதல் பரிசை வென்ற படம் இதுதான்:

#1

சேரி வாழ் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கைச் சூழலைச் சித்தரிக்கும் இந்தப் படத்தை எடுத்தது யாராக இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

அங்கு வாழும் குழந்தைகளேதான். ஆச்சரியமாக இருக்கிறதில்லையா? எப்படி ஒளிப்படம் எடுக்க வேண்டுமெனத் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட பயிற்சியில் தேர்ச்சி பெற்று சுமார் எட்டு முதல் பதினாறு வயதிலான குழந்தைகள் எடுத்த படங்களில் சில போட்டியில் கலந்து கொண்டிருந்தன. (மேலும் இவர்கள் எடுத்த பல படங்களுடன் விரிவான தனிப் பதிவு விரைவில் பகிருகிறேன்.) பரிசுத் தொகையான ரூபாய் பத்தாயிரத்தை, அக்குழந்தைகளில் சிலரே வந்து பெற்றுக் கொண்டனர். அவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நல மையத்திற்கே அந்தப் பணம் பயன்படுத்தப்படும் என்பது மனதுக்கு நிறைவான விஷயம்.

இரண்டாம் பரிசாகிய ரூபாய் ஐந்தாயிரத்தை வென்ற படமும் மனதை உருக்கும் ஒன்றே. பெங்களூர் கோரமங்களா, சாந்திநகரை அடுத்த ஈஜிபுரா பகுதியில் 27 ஆண்டுகளாக வசித்து வந்த ஏழைமக்களின் தகரக் குடியிருப்புகள் சென்ற வருட ஜனவரி மாதம் தரைமட்டமாக்கப் பட்டது [அது குறித்த தினமணி செய்திக் குறிப்பு ஒன்று இங்கே]. படித்துக் கொண்டிருந்த குழந்தைகளின் கல்வி ஆண்டு முடியட்டுமென அவர்கள் கெஞ்சியதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை அரசு.

ஆயிரக்கணக்கான மக்களின் வேதனைக் குரல்களை விழுங்கி ஏப்பம் விட்டுப் படுத்துக் கிடக்கிறது மெளனமாக வெற்று நிலம். அதை வெறித்துப் பார்த்தபடி நிற்கிறான் இந்தச் சிறுவன், வறுமை வாட்டினாலும் ஒதுங்க இருந்த கூரையையும் பழகி வந்த நண்பர்களையும் இழந்த துக்கத்தில்...

#2
Landgrabs - Will Ejipura Slum Turn into another Mall?
படத்தை எடுத்த தீப்திக்குப் பாராட்டுகள்!

கலந்து கொண்ட படங்களில் வந்தவர்களால் அதிகமான வாக்குகளைப் பெற்ற படமும்.. வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்த நாட்டின் மறுபக்கத்தை, மாறாத தலையெழுத்தைக் காட்டுகின்ற ஒன்றே. வீதியோரம் கிடக்கும் குழாயினுள் வாழ்க்கை நடத்தும் குடும்பம். இவர்களும் ஈஜிபுராவிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களே:

# 3
அதற்கான பரிசைப் பெறுகிறார் Na. வசந்த் குமார். அவருக்கு வாழ்த்துகள்!

சமூக அக்கறையுடன் நடத்தப்பட்ட கண்காட்சியில் வென்ற படங்கள் விழிப்புணர்வைத் தருவதாக அமைந்திருந்தன.

காட்சிக்குத் தேர்வாகியிருந்த எனது படங்கள் இங்கே சேமிப்புக்காக:
# 4



# 5
பார்வையிடுகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரஸாத்
#6


ராஜீவ் காந்தி:
#7

சாக்பீஸ், கூழாங்கற்கள், கோலிக் குண்டுகள், காலாவதியான நாணயங்கள் இவற்றைக் கொண்டு கலைநயமிக்க வீடுகள், சிறப்பங்களைச் செய்யும் இந்த இளைஞரின் பெயர் ராஜீவ் காந்தி. முகமூடிகள் மட்டும் விற்பனைக்கு இல்லையாம். அவை அவரது உற்ற நண்பர்களாம்.

#8
வந்து போகிறவர்கள் பேச்சுக் கொடுத்தால் மட்டுமே நிமிர்ந்து பார்க்கிறார். இல்லையெனில் காரியமே கண்ணாகச் சிற்பங்களைச் செதுக்கிக் கொண்டிருந்தார்.
#9

இவருக்கு ஒரு கனவு இருக்கிறது. மேலும் பழைய நாணயங்களைச் சேர்த்து தன் உயரத்துக்கு ஒரு வீட்டினைச் செய்து கின்னஸில் இடம் பெற வேண்டுமென்பதே அது.  கனவு மெய்ப்படட்டும்!

#10
ராஜீவ் காந்தியைப் பாராட்டி உற்சாகப் படுத்துகிறார் இசையமைப்பாளர்.


[படங்கள் 5,6,7,9 மற்றும் 11 ஆகியவற்றுக்கு நன்றி: அசோக் சரவணன். வெற்றிப்படங்களைத் தேர்வு செய்வதற்காக சென்னையிலிருந்து வந்து கண்காட்சியில் கலந்து கொண்டிருந்தார்.]

அசோக் சரவணனுடன்..
#11
படம் நன்றி: வனிலா பாலாஜி
#12

  காட்சிப் படுத்தப்பட்டிருந்த தனது படத்துடன் வனிலா பாலாஜி

படத்தின் தலைப்பு: Helping Each other in Surviving


ITHI மகளிர் அமைப்பின் FEMME VUE ஒளிப்படப் போட்டி குறித்த எனது பகிர்வு இங்கே. பலரின் வேண்டுகோளுக்கு இணங்க போட்டி இறுதித் தேதி 2 மே வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதுவரையிலும் உங்கள் படங்களை அனுப்பலாம். அதற்கடுத்த இருதினங்களில் கண்காட்சியும் பரிசளிப்பும் நடைபெற உள்ளது:


வாய்ப்பும் ஆர்வமும் உள்ள பெங்களூர்வாசிகள் கலந்து கொள்ளுங்கள்.

லக தண்ணீர் தினத்துக்காக நான் பகிர்ந்து கொண்ட ஸ்ரீ ஷாய்ல் பாட்டீலின் ஓவியங்களில் சில..  
20 ஏப்ரல் 2014 கல்கி கேலரியிலும்..

 நன்றி கல்கி!

படத்துளி:

ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு,
மாறுமா நாட்டின் தலையெழுத்தென்று
ஆராய்கிறதோ விரல் மையை?
***






16 கருத்துகள்:

  1. ராஜீவ் காந்தி அவர்கள் விரைவில் சிறக்கட்டும்...

    முடிவில் படத்துளி ஹா... ஹா...

    குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்... விரிவான தனிப்பதிவை காண ஆவலுடன் இருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  2. படங்கள் அருமை. குறிப்பாக ஒன்றும் இரண்டும். நீங்கள் எடுத்த புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் தேவி ஸ்ரீ பிரசாத். என்ன கமெண்ட் சொன்னார்? (ஒரு ஆர்வம்தான்). அவருக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. சேரிக் குழந்தைகளின் படங்களை தனிப்பதிவில் விரைவில் எதிர்பார்க்கிறேன் அக்கா. அவர்கள் இப்போது எங்கு தங்கியிருக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  4. அன்பின் ராமலக்ஷ்மி,

    போட்டியில் கலந்துகொண்ட உங்களுக்கும், ஏனையவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

    முதல் பரிசுகளை வென்ற படங்கள் மனதை வாட்டுகின்றன சகோதரி. நல்ல தெரிவுகள்.

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அனைத்தும் அருமை... உங்களுக்கும் குழந்தைகளுக்கும் பாராட்டுக்கள்.... நன்றி..

    பதிலளிநீக்கு
  6. @ஸ்ரீராம்.,

    அருமை என்றுதான்:). எல்லாப் படங்களையும் நேரம் எடுத்துக் கொண்டு நிதானமாகப் பார்த்தார். படம் எடுத்த அனைவரும் அங்கு இல்லாவிட்டாலும், இருந்தவர்களிடம் பாராட்டுகளைத் தெரிவித்தார். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  7. @ஹுஸைனம்மா,

    பரிசு பெற்ற படங்களை எடுத்த குழந்தைகள் ஈஜிபுராவைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஈஜிபுராவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோர நடைபாதைகளிலேயே தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அரசு வேறு இடம் ஒதுக்கியதா எனத் தெரியவில்லை.

    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் எல்லாம் மிக அழகாய் இருக்கிறது.
    குழந்தைகள் எடுத்த படம் மனதை கஷ்டப்படுத்துகிறது.
    குழந்தைகள் நன்றாக எடுத்து இருக்கிறார்கள்.

    நீர்நேசன் அவர்களை பேட்டி எடுத்தது கல்கியில் வந்ததற்கு வாழ்த்துக்கள்.
    நீருக்காக காத்து இருக்க வேண்டும் என்று அவர் சொல்வதை கேட்கும் போது உண்மை தெரிகிறது. மதுரையில் மக்கள் நீருக்காக காத்து இருப்பதை பார்த்து வந்த எனக்கு அது எவ்வள்வு உண்மை என்று தெரிகிறது.
    அவர் ஓவியத்தின் மூலம் மக்கள் புரிந்து கொண்டால் நாடு நீர்வளம் பெறும்.


    பதிலளிநீக்கு
  9. படங்கள் அனைத்துமே அருமை.. ஒரு சில படங்கள் மனதைத் தொட்டன......

    பதிலளிநீக்கு
  10. படங்கள் ரொம்ப நன்றாக உள்ளது.. குறிப்பாக ஃப்ரேம் பண்ணிய பிறகு கூடுதல் அழகானதாகத் தோன்றுகிறது :-)

    பதிலளிநீக்கு
  11. @கோமதி அரசு,

    தங்கள் கருத்துகளுக்கு நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin