டாம் பாலின் (தாமஸ் நீல்சன் பாலின் - ஜனவரி 25, 1949) தனது கவிதைத் தொகுப்பான நாமன்லாக் (Namanlagh)_காக 2025_ஆம் ஆண்டின் பென் ஹீனி (PEN Heaney) பரிசின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நூல் ஃபேபர் (Faber) வெளியீடாகும்.
(Belfast) பெல்ஃபாஸ்டில் வளர்ந்து, தற்போது ஆக்ஸ்ஃபோர்டில் வசிக்கும் டாம் பாலின் வட அயர்லாந்து கவிஞரும், விமர்சகருமாவார்.ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஹெர்ட்ஃபோர்ட் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் விரிவுரையாளராக இருந்தார். 1972 முதல் 1994 வரை நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும் பின்னர் கவிதையில் ரீடராகவும் பணியாற்றினார்.
1977ல் அவரது கவிதைத் தொகுப்பான "எ ஸ்டேட் ஆஃப் ஜஸ்டிஸ்"_க்காக ‘சோமர்செட் மாம்” பரிசினை வென்றார். பின்னர் 1992_ல் "மினோடார்: பொயட்ரி அன்ட் தி நேஷன் ஸ்டேட்" போன்ற விமர்சன நூல்களை எழுதினார்.
1990_கள் மற்றும் 2000_களில் பிரிட்டிஷ் தொலைக்காட்சியில், குறிப்பாக "நியூஸ்நைட் ரிவியூ" நிகழ்ச்சியில் கருத்துரையாளராக அடிக்கடி தோன்றினார். பாலின் சியோனிசம் எதிர்ப்பாளர், இனவெறி எதிர்ப்பாளர் மற்றும் ஐரிஷ் குடியரசுக் கொள்கையாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
2001_ல் "தி அப்சர்வர்" பத்திரிகையில் வெளியான அவரது "கில்ட் இன் தி க்ராஸ்ஃபயர் (Killed in the Crossfire)" கவிதை, இஸ்ரேலிய படையை "சியோனிஸ்ட் எஸ்.எஸ்." எனக் குறிப்பிட்டதால் கடும் விமர்சனங்களைச் சந்தித்தார். ஆனால் அவர் டி.எஸ். எலியட் மற்றும் ஃபிலிப் லார்கின் போன்றவர்களின் யூத எதிர்ப்பைக் கண்டித்த வரலாறு கொண்டவர் என்பதையும் பலர் அவருக்கு ஆதரவாக அந்த நேரத்தில் சுட்டிக் காட்டினர்.
தற்போது, 1 டிசம்பர் 2025 அன்று, டப்ளினில் உள்ள தேசிய நூலக நிறுவனத்தில் நடைபெற்ற விழாவில் பென் ஹீனி விருதைப் பெற்றுக் கொண்ட டாம் பாலின், சமூக ஈடுபாட்டிற்கு விருது அமைப்பு அளிக்கும் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டியதுடன் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
மேலும், மிகப் பிரபலமான ‘டி.எஸ். எலியட் பரிசு 2025’_க்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள 10 நூல்களில் இவரது இதே ‘நாமன்லாக்’ கவிதைத் தொகுப்பு இடப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரும், ஒளிபரப்பாளரும் ஆன இயன் மெக்மில்லன் (Ian McMillan) தலைமையில் இப்பரிசின் (Shortlist Readings) நிகழ்வு 18 ஜனவரி 2026 நடைபெற உள்ளது. மறுதினம் பரிசின் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்பது தொடர்புடைய கூடுதல் தகவல்.
*
பின்னர் ஒரு பாடல்
அந்தக் கோடை முழுவதும் வறட்சியான இறுக்கத்தால் நிரம்பியிருந்தது
நீ ஒவ்வொரு நாளும் அந்த சூடான தோட்டத்தில் அமர்ந்திருந்தாய்,
சீருடை அணிந்த அந்த கோமாளிகள்
தமது பெரிய வெள்ளை ஆம்புலன்ஸால் தெருவை அடைத்து நின்று
உன்னை அழைத்துச் சென்று
மீண்டும் என்னிடமே திரும்பக் கொண்டு வந்து விடும் வரையில்.
நமக்கே ஆன கடலிலிருந்து நாம் வெகு தூரமாகப் பிரிந்து
அந்த இறுக்கமான நீல மௌனம் உடையும் என
காத்தும் பிரார்த்தித்தும் இருந்தோம்.
நீ இல்லாத வேளையில்
ஒரு சதுரமான அறைக்கு நான் ஏறிச் சென்றேன்.
அங்கு உலர்ந்த மலர்கள், செய்யுள்களின் கோப்புகள்
மேலும் குறுக்கெழுத்துப் புதிர்கள் இருந்தன.
மேலும் அங்கிருந்தவற்றை
இசைக்கும் நுகர்ப் பெட்டிகள் எனலாம்;
அலங்காரமான பண்டையப் பொருட்கள் எனலாம்.
ஆனால் அவை அனைத்தும் வீண் பெரும் சிக்கல்களே,
இறந்த ஆன்மாவின் பெட்டகங்கள்.
அவற்றின் கசப்பான கட்டுப்பாடுகளும்
நேர்த்தியான வடிவழகும்
விரக்தியில் முழுமையைத் தேடும் ஒரு பாணி.
அவை பேசின,
வலையில் சிக்குண்ட ஒரு குருவியின்
கொடிய அழு குரலில்.
ஆனால் இப்போது அது மாறிவிட்டது,
நதிக்கரையில் எனக்கு ஒரு அடி முன்னால்
நீ நடப்பதை நான் காணும் போது.
எங்கும் ஒரு பெரும் கருணை நிறைந்திருக்கிறது:
இந்த உலகின் அருளில்,
இப்போதும் என்றென்றும்.
மூலம்:‘A Lyric Afterwards’ by Tom Paulin
*
14 டிசம்பர் 2025, சொல்வனம் இதழ் 356_ல் வெளியான தமிழாக்கம். நன்றி சொல்வனம்!
***



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக