செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தூறல் : 7 - பயணிகள் கவனத்திற்கு..

பயணிகள் கவனத்திற்கு:

படம் நன்றி: CVR

மக்கள் பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கே செல்லவும் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்தால்தான் இரயில் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. ஓரிரு வாரங்களுக்கு முன் என்றால் வெயிட்டிங் லிஸ்டில் கிடைத்து, பயணத்துக்கு முந்தைய நாள் உறுதியானால் அதிர்ஷ்டம். இல்லையெனில் கேன்ஸல் செய்துவிட்டு தத்கல் டிக்கெட்டுக்கு முயற்சி செய்வது கடைசி வழி, அதிலும் பேரதிர்ஷ்டம் கூட வரவேண்டும். இப்படியாக இயங்கும் இரயில்வே இலாபத்தைதான் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பயணிகளுக்கான வசதிகளைத் தருவதில் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது?

சமீபமாக பலரும் இது பற்றி தத்தமது அனுபவங்களை எழுதியபடியேதான் இருக்கிறார்கள். சிலவாரங்களுக்கு முன் பிரபல வார இதழில் ஒருவர் இரயிலில் வழங்கப்பட்ட உணவின் சுகாதாரக் குறைவையும் பட்டினியாகப் பயணித்ததையும் பகிர்ந்திருந்தார். தாங்கள் நம்பிப் பொறுப்பை ஒப்படைக்கும் காண்ட்ராக்டர்களே இந்த அவப் பெயருக்குக் காரணம் என்றும், வேறு ஆட்களை மாற்றினாலும் அப்போதும் பிரச்சனை தொடருவதாகவும் இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் பதில் விளக்கமும் அளித்திருந்தார்.

இதே பதில்கள்தான் ஏசி கோச்களில் வழங்கப்படும் போர்வை பரமாரிப்புக்கும் சொல்லப்பட்டு வருகிறது. என் அனுபவத்தில் காயாத ஈரமான போர்வைகளைப் பலமுறை பெற நேர்ந்திருக்கிறது. குளிருக்கு இதமாகக் கூடவே பயணித்த கரப்புகளைக் கண்டதுண்டு. ஓடியாடும் எலிகளைக் கண்டு கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டதுண்டு. குறிப்பிட்டு சொல்லும் ஒரு அனுபவமாக..,

ஊரிலிருந்து வருகையில் இரயிலுக்கு கிளம்பும் சற்றுமுன் அப்போதுதான் போடப்படும் சூடான அல்வாவே வாங்கி வரப்படும். இரண்டு வருடம் முன் இப்படிச் சுடச்சுட இருந்த அல்வாவை உள்ளே வைத்து செகண்ட் ஏசி கோச்சின் சீட்டுக்கு அடியில் தள்ளிய டிராவல் பேக் மறுநாள் காலையில் போர்ட்டர் தலையில் ஏறிய போது எலுமிச்சை அளவுக்கு அதில் ஓட்டை. எட்டிப் பார்த்து சிரித்தது பொத்தலில் இருந்து டவல்! அல்வாவின் வாசம் எலியை இரவு முழுக்க வேலை வாங்கியதோடு விருந்தும் படைத்து விட்டிருந்தது. எலிக்குப் பயந்து திருநெல்வேலி அல்வா இல்லாமல் ஊரை விட்டுக் கிளம்ப முடியுமா? கிளம்பினால் பெங்களூர் நண்பர்கள் சும்மாதான் விடுவார்களா:)? ஒருநாள் முன்னதாகவே போட்ட அல்வாவை வாங்கி வருவது வழக்கமாகி விட்டது. நல்லவேளை ஆளைப் பதம் பார்க்காமல் பண்டத்தோடு விட்டது எலி! ஆனால் இப்போது படையாய் கிளம்பித் தாக்க வந்திருக்கின்றன மூட்டைப் பூச்சிகள்.

சென்ற வாரம் தூத்துக்குடி-பெங்களூர் வண்டியில் கோவில்பட்டியிலிருந்து தன் 9 வயது மகளுடன் செகண்ட் ஏசியில் பயணித்த என் தங்கைக்கு நேர்ந்த அனுபவம். இரவு படுத்து ஒருசில மணிகளில் மகள் துள்ளி எழுந்து ஏதோ கடிப்பதாகச் சொல்ல, வீட்டிலிருந்து கொண்டு சென்று அவளுக்குப் போர்த்தியிருந்த க்வில்டிலும், விரிந்திருந்த இரயில்வே போர்வையிலும் சுமார் 50-க்கும் மேலான மூட்டைப் பூச்சிகள்!!! ‘உதறி விரிந்த போது சுத்தமாகதானே இருந்தது’ என மீண்டும் கவனமாக ஆராய்ந்ததில் ஓரத்திலிருக்கும் மடிப்புகளிலிருந்து அவை வெளிவந்து கொண்டிருப்பதைக் காண முடிந்திருக்கிறது. அவளையும் விட்டு வைக்கவில்லை. போர்வைகளை மூட்டையாக ஒதுக்கி விட்டு இரவு முழுவதும் தூங்காமல் உட்கார்ந்தே பயணித்து ஊர்வந்து சேர்ந்திருக்கிறார்கள்.

கோடிகள் புரளும் உணவு மற்றும் பராமரிப்புக்கான ஒப்பந்தங்களை, ஒழுங்கான முறையில் செயல்படுத்தக் கூடியவர்களை அடையாளம் கண்டு ஒப்படைப்பது இரயில்வேயின் முக்கிய பணிகளுள் ஒன்றில்லையா?

அதீதம் கார்னர்: ஒலிப்பேழை

அதீதம் இணைய இதழின் புதிய பகுதியான ஒலிப்பேழையில் முதல் வெளியீடு ‘தூளியில் துஞ்சும் நிலாவோ?’. R. வேணுகோபால் அவர்களின் அழகான வரிகளுக்குத் தன் இனிய குரலால் சிறப்பு சேர்த்திருக்கிறார் தோழி ஷைலஜா நாரயணன். அருமையாக ஒலிப்பதிவு செய்தவர் ஐயப்பன் கிருஷ்ணன். இங்கே பகிரும்போது படங்கள் மட்டும் எனது பங்களிப்பாக:)!

தூளியில் துஞ்சும் நிலாவோ?












தூளியில் துஞ்சும் நிலாவோ?- எங்கள்
தோளிலே சாய்கிற பூவோ?
வாசம் நிரம்ப மகிழ்ந்தே-இங்கு
வந்ததோர் முல்லை அரும்போ?

சித்தம் மகிழ வரம்போல்- வந்தே
ரத்தினம் வீசும் ஒளியோ?
பாலோடு தேனும் கலந்தே- நெஞ்சில்
பல்சுவை தந்த அமிழ்தோ?

கொள்ளிடம் காவிரி நீரோ? – என்றும்
துள்ளி நடையிடும் ஆறோ?
கார்த்திகை தீப ஒளியோ?– எழில்
வார்த்ததோர் பொன்னின் சிலையோ?

ஆழிமழைதன் முகிலோ?- மெல்ல
ஆரத்தழுவும் துகிலோ?
ஊற்றெடுத்தோடும் குளிர்நீர்- தன்னில்
உல்லாச அன்னமும் நீயோ?

முத்துடன் வைரம் பதித்தே-செய்த
பத்தரைப் பொற்சரம் தானோ?
தாமரைப்பூவிதழ் மீதே- நின்று
தாண்டவமாடும் பொன்வண்டோ?

கொஞ்சிடும் பைங்கிளிதானோ?-மண்ணில்
கொட்டிடும் தண்மழைதானோ?
முச்சங்கம் கண்ட தமிழோ?- வெள்ளை
முத்துப்பதித்த சிமிழோ?

வற்றாத கங்கையைப் போலே-இங்கு
வந்ததோர் ஜீவ நதியோ?
தென்றல் உலாவிடும் சோலை-தன்னில்
தேனிசை பாடுங்குயிலோ?

ஞாயிறும் திங்களும் நீயோ?- தெய்வம்
நல்கியதோர் வரம் நீயோ?
வள்ளுவன் வாய்மொழி தானோ?-எங்கள்
தெள்ளுதமிழ் மொழித்தேனோ?

நான்மாடக்கூடலில் ஆளும்-தேவி
மீனாட்சி குங்குமம் நீயோ?
மாடத்து வெள்ளைப்புறாவோ?-பெய்யும்
மார்கழி முன்பனி தானோ?

அன்றலர்ந்த கொடிமுல்லை- போலே
நின்றுசிரிக்கின்ற பூவோ?
தென்பொதிகைதன்னில் வீசும்-குளிர்
இன்பச்சாறல்துளி நீயோ?

ஆழ்வார் திருமொழி போலே- நெஞ்சை
அள்ளிடும் பாசுரம் நீயோ?
நால்வர் திருமுறை போலே-வந்த
நல்ல தேவாரமும் நீயோ?

வாராது வந்த மழைபோல்-எங்கள்
வானில் படர்ந்த முகிலோ?
தெய்வத்திருவுரு கொண்டே-எம்மைத்
தேற்றிட இங்குவந்தாயோ?
***

கேட்டு மகிழுங்கள்.

உங்கள் குரலும் ஒலிப்பேழையில் இடம் பெற விருப்பமெனில், சொந்த அல்லது பிடித்தமான பாடலோ, கதை, கட்டுரையோ பதிவு செய்து mp3 / wav ஆக அனுப்ப வேண்டிய முகவரி: articlesatheetham@gmail.com [வீடியோவாகக் கூட அனுப்பலாம். ஒலி மட்டும் எடுத்துக் கொள்ளப்படும்.]

வீடு திரும்பலின் நூறாவது வானவில்:

பலரும் அறிந்ததே. ஏழுவித விசயங்களை வானவில்லாகக் கோர்த்து வாரம் ஒன்றென வழங்கி வருகிறார் வீடு திரும்பல் வலைப்பூவில் மோகன் குமார். சென்ற வாரம் நூறாவது வானவில்லில் நண்பர்கள் ஏழுபேரின் படைப்புகளை இடம்பெறச் செய்திருந்தார். அதில் ஒன்றாக, நான் எடுத்ததிலேயே எனக்குப் பிடித்தமான படம் எது என்றும் அது குறித்து சிலவரிகளில் சொல்லுமாறும் கேட்டுப் பெற்று வெளியிட்டுருந்தார். நன்றி மோகன் குமார்! அதை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்:

ஒளிப்படம் ஒரு மொழி. இரசிக்கும் அழகினையும் இனிக்கும் நினைவுகளையும் எடுத்து இயம்புவது தாண்டி ஒரு விடயத்தை.. ஒரு நிகழ்வை.. அதன் இடத்தோடும் காலத்தோடும் பதிந்து, வரும் சந்ததியருக்கான சரித்திர ஆவணம் ஆகும் சக்தி வாய்ந்தது. ஒரு சிறந்தபடம் பல கதை சொல்லும். குறிப்பாகப் பொது இடங்களில் இயல்பு நிலையில் படமாக்கப்படுகிற மனிதர்கள் (street photography) அந்தந்த காலக்கட்டத்தின் கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை அவற்றின் நிறைகுறைகளை வெளிப்படுத்துவதோடு, தம்மையும் அறியாமல் சரித்திரத்தில் இடம் பெற்று விடுகிறார்கள். கீழ்வரும் படம் அந்த வகையில் ஒன்றாக, மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத் தூண்டும் படங்களுக்கு மத்தியில் இன்னொரு முறை பார்க்கத் தேவையின்றி மனதில் பதிந்து விடும் இரகமாக எனக்கும் இன்னும் பலருக்கும் (சொன்னார்கள்)”.

***
கருப்புவெள்ளையில் மட்டுமே பகிர்ந்து வந்த இப்படத்தை முதன்முறையாக வண்ணத்திலும் பகிருகிறேன் இங்கு:
காலஓட்டத்தில் காணாது போன அரிக்கேன் விளக்கை காலத்தை இழுத்துப் பிடித்து வாழ்பவர் விடாமல் உபயோகித்து வருவது, லாந்தர் எண்ணெயைத் துடைக்கப்பயனாகும் துணியை அதிலேயே முடிந்து வைத்திருப்பது, அருகிலுக்கும் கம்பத்தில் பறந்து விடாமலிருக்க இறுக முடிச்சிட்டு வைக்கப்பட்டத் துவாலை, வெள்ளை வேட்டி அழுக்காகி விடக் கூடாதென துண்டை விரிப்பாக்கி அமர்ந்திருக்கும் விதம், சோடிச் செருப்புகள், கைத்தடி.. இப்படிக் கவனிக்கவும் கதை சொல்லவும் எவ்வளவோ இருக்கின்றன. இவரைப் படமாக்கிய அனுபவம் முன்னர் வாசித்திராதவர்களுக்காக இங்கே: மேகங்களுக்குப் பின்னால்..

குங்குமம் தோழி

இம்மாதக் குங்குமம் தோழியில் வெளியான எனது பேட்டியை, இதழுக்கான விளம்பரங்களில் முன்னிலைப்படுத்திய விதத்தில் நல்ல தோழியாக நட்பு பாராட்டி உற்சாகம் தந்திருக்கிறாள் குங்குமம் தோழி!

தினகரன் இணையதளத்திலும், நாளிதழிலும்..

தமிழ்முரசில்..

நன்றி தோழி:)!

படத்துளி:
தேடல் உள்ள உயிர்களுக்கே தினம் பசியெடுக்கும்..

***

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!
***





28 கருத்துகள்:

  1. இரயில்வேயின் உண்மையான தகவல்கள்...

    தூளியில் துஞ்சும் நிலாவோ...? - வரிகளும், ஒளிப்படம் பற்றிய விளக்கமும் அருமை...

    பல இதழ்களில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்...(TM 2)

    பதிலளிநீக்கு
  2. ரயில்வேயின் அலட்சியம்தான் அண்மையில் நடந்த தீ விபத்து உட்பட அனைத்திற்கும் காரணம். அமைச்சரை மாற்றிய வேகத்தில் பாதியை 'மம்தா' காட்டினால் கூட மிக சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க முடியும்.

    ***********
    தூளியில் மாஸ்டர் சண்முகம் தானே?

    **********
    அனைவருக்கும் சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. முத்துச்சரம் வழக்கம்போல்மிக மிக அருமை
    இரயில்வே நிர்வாகம் குறித்த கட்டுரை
    தூளித்தாலாட்டு மற்றும் பகிர்ந்த புகைப்படங்கள்
    அனைத்தும் மிகச் சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. ரயில்வே அலட்சியம் வருந்த வைக்கிறது

    வீடுதிரும்பலையும் வானவில்லின் நூறையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ரயில்வே நிர்வாகம் பற்றி சொல்லி இருப்பது எல்லாமே உண்மைதான் இந்த மாசம் மெட்ராஸ் போக ஜூன் மாசமே டிக்கெட் புக் பண்ண் போனா எல்லாம் ஃபுல். ஏ.சி, ஃப்ர்ஸ்ட்க்ளாஸ் எதிலுமே காலி இல்லே ஏ. ஆர். சி. லதான் புக் ஆகி இருக்கு. தத்கால் காரங்க தான் எல்லா டிக்கட்டையும் வளைச்சு போட்டுடராங்க போல இருக்கு கூட பணம் கறக்க இப்படி ஒரு வழி.

    பதிலளிநீக்கு
  6. நாங்கள் திருச்செந்தூரிலிருந்து வந்த ரயிலில் ஏசி பெட்டியில் எலி ஓடிக் கொண்டு இருந்தது. சார் உணவு பொருட்களை மேலே தூக்கி வை என்று சொன்னார்கள்.
    சின்ன கரப்பான் பூச்சிகளும் சுத்தி சுத்தி வரும். உணவு பொருட்கள் சிதறி கிடக்கும் சுத்தம் செயவதே இல்லை.

    படுக்கை விரிப்புகளும் சரியான பராமரிப்பு இல்லை.

    படங்கள், தூளிப்பாட்டு எல்லாம் அருமை.

    பாடல் எழுதிய வேணுகோபல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இனிமையாக, மென்மையாக பாடியஷைலஜா நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.. பகிர்ந்த உங்களுக்கு நன்றி ராமலக்ஷ்மி.

    உங்கள் போர்ட்டர் கார்னர் பகிர்வுக்கு மோகன் குமாருக்கு வாழ்த்துக்கள்.
    பத்திரிக்கைகளில் உங்களின் பதிவுகள் , பேட்டிகள் எல்லாவற்றிக்கும் வாழ்த்துக்கள்.

    கடைசிபடம் படம் உங்களின் தேடலை சொல்கிறது.
    அருமை.





    பதிலளிநீக்கு
  7. ரெயில்வேயின் அலட்சியம் கண்டிக்கத் தக்கதுதான். மூட்டைப் பூச்சியும் அல்வா தின்ற எலியும் திகைக்க வைத்தன. குங்குமம் தோழி விளம்பரங்களில் தரப் பட்டிருக்கும் விளம்பர முக்கியத்துவத்துக்குப் பாராட்டுகள். அதீதத்தில் குரல் பதிவு.... நாலு வரி பாடி அனுப்பினால் போதுமா??!!!

    பதிலளிநீக்கு
  8. எனக்கு தெரிந்து இந்திய ரயில்வே நிர்வாகம் தான் உலகத்திலேயே வொர்ஸ்ட்ன்னு நிகைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  9. முழுதும் வாசிச்சபிறகும் அரிக்கேன் லாம்பும் அந்தத் தாத்தாவும் கண்ணுக்குள் நிற்கிறார்கள் !

    பதிலளிநீக்கு
  10. தூளியில் தூங்கும் குழந்தையும் அழகு. அதற்குண்டான கவிதை வரிகளும் அழகு. குழந்தைக்கு திருஷ்டி சுற்றிப்போட சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  11. ஷைலஜாவின் குரலில் கேட்ட இனிய பாடலை மீண்டும் ஒருமுறை கேட்டும், ஹாசினியைக் கண்டும் ரசிச்சேன்.

    ரயில்வே... ஒண்ணும் சொல்றதுக்கில்லை :-(

    பதிலளிநீக்கு
  12. தூளியில் விழித்திருக்கும் நிலா அழகு.
    பத்திரிகைகளில் வந்திருக்க்கும் உங்கள் புகழுக்கு ஒரு வாழ்த்து.
    உங்கள் கவிதையின் அருமையை மீண்டும் மீண்டும் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  13. அனைத்தும் அருமை!
    எதைச் சொல்ல, எதை விட?

    ரயில்வே நிர்வாகத்துக்கு நம் கண்டனங்கள்:(

    பதிலளிநீக்கு
  14. ரயிலைப் பத்தி, ‘வண்டி’ அளவுக்குப் புலம்பித் தள்ளியாச்சு. மாற்றத்தைத்தான் காணோம். துளிகூடப் பராமரிப்பு இல்லாமலே லாபத்துல ஓடுற ஒரே துறை இதுதான். கொஞ்சம் பாத்துக் கவனிச்சா பட்ஜெட்டுல விழுற துண்டை இத வச்சுப் பொன்னாடை போர்த்திடலாம்.

    தொட்டில்ல இருப்பது உங்க தம்பி மகனார்தானே? (கண்காட்சியில போதும்னு கைகாட்டினாரே?)

    பதிலளிநீக்கு
  15. @அமைதி அப்பா,

    அலட்சியமே அனைத்திற்கும் காரணம்!

    மாஸ்டரை சரியாக அடையாளம் கண்டு கொண்டீர்களே:)!

    நன்றி அமைதி அப்பா.

    பதிலளிநீக்கு
  16. @Lakshmi,

    முன்பதிவு செய்யவதே சிரமமாகதான் உள்ளது.

    பகிர்வுக்கு நன்றி லஷ்மிம்மா.

    பதிலளிநீக்கு
  17. @கோமதி அரசு,

    எந்தப் புகார்களுக்கும் மழுப்பலான பதில்களே கிடைக்கின்றன. பகிர்வுக்கும்

    படங்கள், தாலாட்டுப் பாடலை ரசித்தமைக்கும் நன்றி கோமதிம்மா.

    பதிலளிநீக்கு
  18. @ஸ்ரீராம்.,

    நன்றி ஸ்ரீராம்.

    நாலு வரியா:)? முழுப்பாடலாகதான் அனுப்புங்களேன்!

    பதிலளிநீக்கு
  19. @வரலாற்று சுவடுகள்,

    அக்கறை காட்டினால் சிறப்பாக இயங்க முடியும்.

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. @திருவாரூர் சரவணன்,

    குழந்தை இப்போது வளர்ந்து விட்டான்:)! நிச்சயம் சொல்லுகிறேன். நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  21. @அமைதிச்சாரல்,

    ரயில்வே.. இப்படி ஆளாளுக்கு ஆதங்கங்களை எழுதிக்க வேண்டியதுதான்!

    தூளியில் இருப்பது ஹாசினி அல்ல:)!

    நன்றி சாந்தி.

    பதிலளிநீக்கு
  22. @வல்லிசிம்ஹன்,

    மிக்க நன்றி வல்லிம்மா. கவிதை வரிகள் R. வேணுகோபால் அவர்களுடையது.

    பதிலளிநீக்கு
  23. @ஹுஸைனம்மா,

    எதற்குக் கவனிக்கணும், எப்படி ஓட்டினாலும் ஜனங்க ஏறித்தான் ஆகணும்ங்கிற அலட்சியம்!

    ----

    அவரேதான்:)!

    நன்றி ஹுஸைனம்மா.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin