புதன், 18 ஜூலை, 2012

ஏக்கம் - ஹிட்டோமரோ ஜப்பானியக் கவிதை - அதீதத்தில்..


உயிரோடு அவள் இருந்த பொழுது
கைகோர்த்து வெளியில் செல்வோம்.
வீட்டின் முன் உயர்ந்து வளர்ந்திருந்த
கரையோர மரங்களைப் பார்த்து நிற்போம்.
அவற்றின் கிளைகள்
பின்னிப் பிணைந்திருக்கும்.
அவற்றின் உச்சிகள்
இளவேனிற்கால இலைகளால் அடர்ந்திருக்கும்
எங்கள் அன்பைப் போல.

அன்பும் நம்பிக்கையும் மட்டுமே
போதுமானதாக இருக்கவில்லை
வாழ்க்கைச் சக்கரத்தைப்
பின்னோக்கிச் செலுத்த.
பாலைவனத்துக் கானல் நீராய்
மங்கி மறைந்து போனாள்.
ஒரு காலைப் பொழுதில்
ஒரு பறவையைப் போலப் பறந்து போனாள்
மரணத்தின் பிடிகளுக்குள்.

அவள் நினைவாக விட்டுச் சென்ற குழந்தை
அவளைக் கேட்டு அழும் வேளையில்
என்னால் முடிந்ததெல்லாம்
அவனைத் தூக்கத் தெரியாமல் தூக்கி
அணைக்கத் தெரியாமல் அணைப்பது மட்டுமே.
அவனுக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை.

எங்கள் அறையில் எங்கள் தலையணைகள்
அருகருகே கிடக்கின்றன எங்களைப் போல.
அமர்ந்திருக்கிறேன் அவற்றருகே
நாட்கணக்காக இருளை வளரவிட்டபடி
இரவு முழுவதும் விழித்தபடி
பொழுது புலரும்வரை பெருமூச்செறிந்தபடி.
எத்தனை வருந்தினாலும்
மீண்டும் அவளைப் பார்க்க முடியாது.

எல்லோரும் சொல்கிறார்கள் அவளது ஆன்மா
பருந்தின் இறக்கைகளைப் பற்றியபடி
இந்த மலையைச் சுற்றிக் கொண்டிருக்குமென.
சிரமத்துடன் பாறைமுனைகளைப் பற்றி
மலையுச்சியை அடைய முனைகிறேன்.
காற்றின் அசைவில் கூட
உணரமுடியாது அவளை என்பதை
நன்கு தெரிந்தே செய்கிறேன்.

என்னுடைய இந்த அன்பு, என்னுடைய இந்த ஏக்கம்
எந்த மாற்றங்களையும் கொண்டுவரப் போவதில்லை.
***

மூலம் : HITOMARO (8th century)
ஆங்கில மொழியாக்கம்: Kenneth Rexroth
[One hundred poems from the Japanese ]

16 ஜூலை அதீதம் இதழுக்காக மொழியாக்கம் செய்த கவிதை.

40 கருத்துகள்:

  1. இழப்பின் அவதியை,அவஸ்தையை
    ஏக்கத்தை படிப்பவர்கள் மனதிலும்
    ஏற்றிப் போகிறது மயிலிறகு போன்ற
    மென்மையான வார்த்தைகளால் பின்னப்பட்ட
    இந்த கனத்தக் கவிதை
    அருமையான மொழிபெயர்ப்பு
    பகிர்வுக்கு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நேரடி தமிழ் கவிதை போலவே உள்ளது. நம் சூழலுக்கும் மிக பொருந்துவதால்

    பதிலளிநீக்கு
  3. என் இந்த அன்பு, இந்த ஏக்கம் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. -நிதர்சனம் மனதுக்குத தெரிந்தாலும் நினைக்காமலும் இழப்பை எண்ணி வருந்தாமலும் இருக்கவும் முடிவதில்லை. ரசனையான வார்த்தைகளால் சொல்லப்பட்ட மனதைக் கனக்கச் செய்யும் கவிதை. உறுத்தலில்லாத வண்ணம் தமிழில் பெயர்த்த உங்களின் திறமைக்கு ஒரு சல்யூட்.

    பதிலளிநீக்கு
  4. அருமை., இது மொழி பெயர்ப்பு கவிதை போல் தெரியவில்லை.!

    பதிலளிநீக்கு
  5. இழப்பின் வேதனையை அழகாகச் சொல்கிறது கவிதை.

    பதிலளிநீக்கு
  6. எந்த தேசத்து கவிதையாக இருந்தாலும் உணர்வுகள் ஒன்றுதான் என்பது இக்கவிதையை வாசிக்கும்போதும் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  7. ரணமான எதார்த்தம்....மிகவும் நேர்த்தியான மொழியாக்கம் ராமலக்ஷ்மி

    பதிலளிநீக்கு
  8. அருமையாக அழகான வரிகளில் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். எந்த நாடானாலும் மனுஷனோட உணர்வுகள்ங்கறது ஒண்ணுதான்னு நிரூபிக்கிறது இக்கவிதை.

    பதிலளிநீக்கு
  9. நல்ல வரிகள்... மொழி பெயர்ப்பு கவிதை ஆனாலும் கவிதை கவிதை தானே...

    பகிர்வுக்கு நன்றி...
    தொடருங்கள்...வாழ்த்துக்கள்...(த.ம. 8)

    என் தளத்தில் : "உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

    பதிலளிநீக்கு
  10. இழப்பின் வேதனையை, அதனூடே தெரியும் ஆழ்ந்த அன்பை மொழியாக்கத்திலும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள் ராமலக்ஷ்மி!!‌

    பதிலளிநீக்கு
  11. பிரிவின் வலி உணர்த்தும் நல்ல கவிதை.

    நல்ல மொழியாக்கம்... வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. அருமையானதொரு கவிதையை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறீர்கள் அக்கா.

    பதிலளிநீக்கு
  13. ஆஹா... ஜப்பானிய மொழியாக இருந்தால் என்ன.. உணர்வுகள் மனிதர்களுக்குப் பொதுவானவையே என்பதை நிரூபிக்கின்றது கவிதை. அருமை. மொழிபெயர்த்து எங்களுக்கு அறியத் தந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. பிரிவின் வலியும் உணர்வும் ஒன்றே மனித இனத்திற்கு அதிலும் இந்தக் கவிதை மிகவும் மனதை வாட்டியது .
    உருக்கம் நிறைந்த இக் கவிதையை தேடிப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  15. கவிதை உணர்வுகள் உலகம் முழுவதும் ஒன்றாகவே இருக்கிறது.அயல் நாடு மொழோஜிக் கவிதையை அறிய வைத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஒரு காலைப் பொழுதில்
    ஒரு பறவையைப் போலப் பறந்து போனாள்
    மரணத்தின் பிடிகளுக்குள்.//

    அன்பு மனைவியின் பிரிவு துயரம் கொடுமைதான். பிரிவை வெளிப் படுத்தும் கவிதை மனதை கனக்க வைத்து விட்டது.

    நல்ல மொழிபெயர்ப்பு.
    வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி.

    பதிலளிநீக்கு
  17. @Ramani, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin