Wednesday, July 25, 2012

தூறல்: 6 - வேலை தேடும் பெங்களூர் சீனியர் சிட்டிசன்ஸ்

ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி?

பாமரர் படித்தவர் பாகுபாடின்றி முதுமையில் உழைக்க வேண்டிய கட்டாயம் பெருகி விட்டது தேசத்தில். பெங்களூரில் அறுபது வயதைக் கடந்தவர்களுக்காகவே நடைபெற்ற வேலைவாய்ப்புச் சந்தையில் 800 பெரியவர்கள் கலந்து கொள்ள நிர்வாகம், மேற்பார்வை, தொழில் நுட்பம், மக்கள் தொடர்பு, கற்பித்தல், கணக்கியல், காப்பீடு, சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளில் 300 பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது சென்ற வாரம். எழுத்தாளர்கள்,புகைப்படக்காரர்கள் போன்றோருக்கும் வாய்ப்புகளை விரித்துக் காத்திருந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் எதிரே பார்க்கவில்லை இந்த தமது முயற்சிக்கு இப்படியொரு வரவேற்பு கிட்டுமென.
ஓய்வு காலத்தில் எது மகிழ்ச்சி என்பது ஒவ்வொருவர் மனநிலை பொறுத்து மாறுபடுகிறது. சிலருக்கு வயதொத்தவருடன் அரட்டை, நடை, வாசிப்பு, தொலைக்காட்சி என ஏதேனும் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதில்; சிலருக்கு வீட்டு நிர்வாகத்தில் உதவியாக இருப்பதில்; சிலருக்கு பேரன் பேத்திகளோடு விளையாடிக் கதை சொல்லி நேரம் செலவழிப்பதில். சிலருக்கோ உடலும் மனதும் தெம்பாக இருக்கும்வரை உலகுக்குத் தம் அனுபவ அறிவு பயன்பட வேண்டுமென்கிற விருப்பம் தீராததாக இருக்கிறது. அதை செயல்படுத்தவும் முடிந்தவிட்டால் தம்மை விட அதிர்ஷ்சாலிகள் எவருமில்லை எனும் உற்சாகத்துடன் மனதளவில் இளைஞராகியும் விடுகின்றனர்.

84வது வயதில் தனது நேரத்தை எப்படி உபயோகமுள்ளதாகச் செலவழிக்க முடியுமென அறியவே அங்கு வந்ததாகப் பத்திரிகைக்குப் பேட்டி அளித்த ஒரு பெரியவர், ஜம் எனப் புகைப்படத்துக்கும் போஸ் கொடுத்திருந்தார். ஒரு காலத்தில் ஓவியராக பெங்களூர் ஐந்து நட்சத்திர விடுதிகளில் பல கண்காட்சிகள் நடத்திய 68 வயது பெண்மணி, தன் கற்பனாசக்திக்கு ஏற்ற வகையில் எந்த வேலையானாலும் சரி, தனது வாழ்வாதாரத்துக்கு அது மிக அத்தியாவசியமெனத் தெரிவித்திருந்தார். மற்ற பலரோ வீட்டுக்குத் தெரியாமல் வந்திருந்திருந்ததால் தங்கள் பெயரைக் கூட வெளிப்படுத்த விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்கள்.

“ஒரு வேலைக்கு இளைஞரா, முதியவரா யாரை வைப்பீர்கள் என்றால் பின்னவரையே சொல்வோம். ஏனெனில் பொறுப்புணர்வும் அனுபவமும் நிறைந்த அவர்களுக்கு பயிற்சியே தேவையில்லை” என்கிறார் முதியோருக்கான மருத்துவ சேவையை நல்கும் ஒரு நிறுவனத் தலைவர். அன்று பத்து முதியவர்களுக்கு வேலை கொடுத்திருக்கிறது இவரது நிறுவனம். ”இந்தியாவின் 87% முதியோருக்கு பென்ஷன் இல்லை. கூடுகிற வயதோடு அதிகரிக்கிற மருத்து செலவுகள் இவர்களை அச்சுறுத்துகின்றன. நிரந்தர வருவாய் இருந்தால் தேவலாமென எண்ணுகிறார்கள். மனரீதியான தெம்புக்கும் இந்த வேலை அவர்களுக்கு உதவுகின்றது” எனத் தெரிவித்திருக்கிறார்.

எப்படி நியாயப்படுத்தப்பட்டாலும் நிர்ப்பந்தங்களினால் வேலை தேடி வந்தோர் நிலை வலி தருகிறது.


பெற்றோருக்கு இணையான இடம்

நன்னெறிப்படுத்துகிறோம் என்ற பெயரில் மாணவரின் தன்னம்பிக்கையை சிதைத்து, தன்மானத்தை அவமதித்து பிஞ்சு மனங்களிலே மாறாத வடுக்களை ஏற்படுத்தும் அநியாயங்கள் பரவலாகத் தொடருகிறது. சிறுநீர் பருக நிர்ப்பந்தித்தது, கேசங்களை வெட்டியது என சமீபத்திலும் பல சம்பவங்கள். இருவருடங்களுக்கு முன் நான் எழுதிய பொட்டலம் சிறுகதை நினைவுக்கு வந்து போகிறது. தண்டனைகள் தீவிரமாகப் போவதில்லை. வெறும் சஸ்பென்ஷன்களால் இக்கொடுமைகள் நிற்கப் போவதுமில்லை. கண்டிப்பு அவசியமென்றாலும் கனிவையும் அடிப்படை நேயத்தையும் மறப்பது செய்யும் பணிக்கே களங்கம். தெய்வத்துக்கும் உயரிய ஸ்தானத்தில், பெற்றோருக்கு இணையான இடத்தில் தாம் இருப்பதை இத்தகு ஆசிரியர்கள் உணர்வார்களா? தங்கள் மன அழுத்தங்களுக்கு வடிகாலாக மாணவரை இம்சிப்பதை நிறுத்துவார்களா?


‘கேட்பினும் பெரிது கேள்’க. அம்சப்ரியா, செ. ரமேஷ்குமார் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு கவிதைகளுக்கென்றே வெளிவருகிற இருமாத சிற்றிதழ் “புன்னகை”, கேட்பினும் பெரிது கேள்!

இதன் 60வது சிறப்பிதழில் இடம் பெற்ற 60 கவிஞர்களின் கவிதைகளில் ஒன்றான எனது கவிதை “ஆயிரமாயிரம் கேள்விகள்” இங்கே. சமீபத்தில்தான் இதழுக்கு சந்தாதாரர் ஆனேன். பலரது சிறந்த கவிதைகள், விமர்சனங்களோடு குறிப்பிட்ட கவிஞரின் சிறப்பிதழாகவும் மலர்ந்து அவர்களைக் கெளரவித்து வருகிறது புன்னகை. இதழ்-70-ல் கவிஞர் கதிர்பாரதி கெளரவிக்கப்பட்டிருக்கிறார். புத்தகம் கிடைத்ததும் அடுத்த தூறலில் பகிருகிறேன்.

மார்ச்-ஏப்ரல் 2012 கவிதை இதழ் 68-ல்.. தோழன் அன்பாதவனின் ‘கைபேசிக் கடவுளின் கோட்டோவியங்களை’ முன்னிறுத்தி... லதா ராமகிருஷ்ணன் எழுதிய “கவிதை வாசிப்பில் கிடைப்பதென்ன?” விமர்சனக் கட்டுரையிலிருந்து:

எந்த வகையான கவிதை சமூகத்திற்குத் தேவை என்ற கேள்வியோடு கூட, கவிதை என்ற இலக்கிய வகைமையே சமூகத்திற்குத் தேவைதானா என்ற கேள்வியும் காலங்காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டிற்குமே அடிப்படை ஒருவகையில், மனித மனங்களை உணர்வுகளை, ரசனைகளை, விருப்பங்களை, அடையாளமழித்து அடிமைப்படுத்தும் மனப்போக்குதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

24 மணிநேரமும் மனிதனை முட்டாளாக்குவதே குறியாய், அபத்த நிகழ்ச்சிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி தேவைதானா என கேள்வி எழுதுவதில்லை. ஆனால் கவிதை தேவைதானா என்ற கேள்வி மட்டும் வெகு சுலபமாக தொடர்ந்த ரீதியில் கேட்கப்பட்டு வருகிறது. (அரசு நூலகத்துறை தற்காலத்தைய தமிழ் கவிதைத் தொகுப்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வதேயில்லையென்று கேள்வி). கவிதை எழுதுவதில், கவிதை வாசிப்பதில் என்ன கிடைக்கிறது என்பது போன்ற ஆழமான சுற்றாய்வுகளோ, கலந்துரையாடல்களோ மேற்கொள்ளப்பட வழிவகுப்படாமலேயே இந்த கேள்வி வலம்வந்து கொண்டேயிருக்கிறது..

**

மே-ஜூன் 2012 கவிதை இதழ் 69-ல்.. நான் இரசித்த கவிதைகளுள் ஒன்று:

ஆளில்லாத வீடு

ஆளில்லாத வீட்டுக்கு
தேடி வந்தது
இம்சையாயிருக்கிறது

உதாசீனமாய் பார்க்கிறது
அக்கம்பக்க
மின்விளக்குத் தூண்கள்

உறுத்தும்
சந்தேகப் பார்வையில்
உள்ளங்கால் முதல் தலைவரை
வாசற்கதவுகள் ஆராய்கின்றன

எதையும் விழுங்கி
ஜீரணிக்கும்
இருளும்
குற்றமாய்ப் பார்த்து உறுமியது

காற்றின் கிச்சு கிச்சு மூட்டலில்
ஜன்னல்,மரம்
இன்னும் எவைஎவையோ
நெளிந்து குலுங்கினாலும்
எனக்குள் நடுக்கமெடுக்கிறது

அவமானத்தைக் கூட
சகித்து ஆற்றிக் கொள்ளலாம்
எதிர்கொள்ள முடியவில்லை
இந்த வெறுமையை.

- வசந்த தீபன்
**

புன்னகை இருமாத இதழின் ஆண்டுச் சந்தா ரூ 75.

அனுப்ப வேண்டிய முகவரி:
புன்னகை
68 பொள்ளாச்சி சாலை,
ஆனை மலை- 642 104.

மின்னஞ்சல்: punnagaikavi@gmail.com


நட்பின் அன்பு

பதிவுலகம் வந்த முதலிரண்டு வருடங்களில் வாரம் ஒரேயொரு பதிவென்றிருந்து, மூன்றாமாண்டு வாரம் இரண்டாக முன்னேறி, எந்தத் திட்டமிடலும் இன்றி முடிகிற போது பதிவு என முடிவெடுத்த நடப்பு வருடத்தில் சராசரியாக வாரம் மூன்றெனப் பதிந்து கொண்டிருப்பது எனக்கு சற்று ஆச்சரியமே. ஏனெனில் முத்துச்சரத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த காலத்தில் முடியாத ஒன்று, இன்று Flickr, PiT, அதீதம் ஆகிய தளங்களிலும் இயங்கியபடியே செய்ய இயலுகிறதென்றால் அதற்கான பலம் எங்கிருந்து வருகிறது? உங்களிடமிருந்தே..
நன்றி கவிநயா!

விருதோடு கவிநயா அளித்த ஊக்கம் இங்கே. அன்பினால் சற்று அதிகப்படியாகி விட்ட பாராட்டு என்றாலும், அவர் சொல்லியிருப்பதை யோசித்துப் பார்த்தால் ‘கவிதை, கட்டுரை, சிறுகதை’ இந்த மூன்றில் மட்டுமே இணையத்தில் இயங்க ஆரம்பித்த என்னை இன்று ஒளிப்படம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, இணைய இதழ் மற்றும் PiT பொறுப்பு எனப் பல பிரிவுகளுக்கு இட்டுச் சென்றது நல்ல நட்புகள் தந்து வருகிற ஊக்கமே.
ஒற்றை இலக்கத்தில் வந்து நிற்கிற தமிழ்மணம் ட்ராஃபிக் ரேங்க் முன்னோ பின்னோ போகலாம். இங்கே பதிகிற வேகம், எண்ணிக்கை குறையலாம். ஆனால் ஏதோ ஒரு தளத்தில் இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருப்பேன், நட்புகளிடமிருந்து பெறும் பெரும் பலத்தில்:)!


அதீதம் ஃபோட்டோ கார்னர்:

தளிர் நடை - மெர்வின் ஆன்டோ
கண்ணான பூமகன் - நித்தி ஆனந்த்
உள்ளம் கொள்ளை போகுதே - சத்தியா
அன்பின் ரேகைகள் - எழில் இராமலிங்கம்

படத்துளி:

அன்பின் நிழல்..
அடர்த்தியானது!
***

37 comments:

 1. பெரியவர்கள் நிலை - வருத்தம் தான் மிஞ்சுகிறது....

  அருமையான பகிர்வுக்கு நன்றி.

  த.ம. 2

  ReplyDelete
 2. அடடா ... உங்களுரில் இருந்திருந்தால் அந்த வேலை வாய்ப்புச் சந்தைக்கு வந்திருக்கலாமே .. :-(

  *

  //ஒரு தளத்தில் இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருப்பேன்,//

  வளர்க...

  ReplyDelete
 3. உடலும் மனதும் தெம்பாக இருக்கும்வரை உலகுக்குத் தம் அனுபவ அறிவு பயன்பட வேண்டுமென்கிற விருப்பம் தீராததாக இருக்கிறது. அதை செயல்படுத்தவும் முடிந்தவிட்டால் தம்மை விட அதிர்ஷ்சாலிகள் எவருமில்லை எனும் உற்சாகத்துடன் மனதளவில் இளைஞராகியும் விடுகின்றனர்.

  இது மிகவும் உண்மைதான்

  ReplyDelete
 4. பதிவினை ஆழமாக உள்வாங்கிக் கொண்டேன்...உங்களின் இந்த பகிர்வை படித்த போது முதியோர்கள் குறித்து எழுத தோணுகிறது.

  நான் உங்கள் புகைப்படங்களுக்கு ரசிகை!

  பல இடங்களில் இயங்கிவரும் உங்களின் ஆற்றல் பிரமிக்க வைக்கிறது...வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 5. பல தளங்களில் இயங்கும் நீங்கள் Versatile ப்ளாகர் தான்; வாழ்த்துகள்

  84 வயதில் வேலை என்றால் மனது வலிக்கிறது

  வசந்த தீபன் கவிதை அருமை

  வானவில் நாளன்றே எதேச்சையாய் தூறலும் போட்டிருக்கு !

  ReplyDelete
 6. தமிழ்மண முன்னேற்றத்துக்கு வாழ்துக்கள் சகோ! தொடர்ந்து முன்னேறுங்கள்!

  ReplyDelete
 7. முதுமையில் வேலை வாழ்வாதாரத்துக்காக எனும்போதுதான் வேதனை. பொழுதை உபயோகமாகக் கழிக்க எனும்போது பாராட்டத் தோன்றுகிறது. சிறுநீரைப் பருகச் செய்யும் தண்டனைகள் அந்த ஆசிரியர்களின் மன வக்கிரத்தையே காட்டுகின்றன.'கேட்பினும் பெரிது கேள்' (பாரதியாரின் படம் ஒன்று எங்கள் வீட்டில் இருக்கும், 'பெரிதினும் பெரிது கேள்' என்று தலைப்பில் எழுதப் பட்டு... அது நினைவுக்கு வந்தது!) தொகுப்பில் உங்கள் கவிதை(களில் அருமையான ஒன்று அது) இடம் பெற்றதற்குப் பாராட்டுகள். ஆளில்லாத வீடு நன்றாக இருக்கிறது. நல்ல பகிர்வு. அன்பின் நிழல் படம் அருமை. பல தளங்களில் இயங்கும் உங்கள் திறமை (இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டுமே) வியக்க வைக்கிறது.

  ReplyDelete
 8. 'இளமையில் வறுமை' எவ்வளவு கொடுமையோ, அது போல் தான் 'முதுமையில் வேலை' ...

  படித்து விட்டு வேதனையாக இருக்கிறது...

  பதிவுலகம் வந்த புதிதில் ஒரு பதிவு எழுதினேன். ஓய்வு நேரத்தில் படித்துப் பார்க்கவும்.

  நன்றி. (த.ம. 7)

  வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது ?

  ReplyDelete
 9. // அறுபது வயதைக் கடந்தவர்களுக்காகவே நடைபெற்ற வேலைவாய்ப்புச் சந்தை//
  வித்தியாசமான ஐடியா!!

  வயதான காலத்தில் கட்டாயத்தின் பேரில் வேலை செய்யவேண்டிவருவது வருத்தமான ஒன்றுதான். இருப்பினும், வெறுமே சும்மா இருப்பது அவர்களை ‘பயனற்றுப் போய்விட்டோமோ’ என்ற உணர்வை ஏற்படுத்தும்; அதனால் உடல்நலமும் பாதிக்கப்படலாம். உரிய உடல்வலு இருப்பின், சிரமமில்லாத வேலை ஒன்றைச் செய்வது மனதுக்கும் நல்லது.

  இன்று இளையவர்களுக்கு ஈடாக, வலைப்பூக்கள் வைத்திருப்பதில் எத்தனை சீனியர் சிட்டிஸன்ஸும் இருக்கிறார்கள். இதுபோன்ற நேரப்போக்கு நிச்சயம் தேவை என்பதால்தானே!!
  ____
  எத்தனை தளங்களில் இயங்குகிறீர்கள்!! சுத்திப் போடுங்க!! :-))))

  ReplyDelete
 10. எதிர்கொள்ள முடியவில்லை
  இந்த வெறுமையை.


  வெறுமை கொடுமை !

  ReplyDelete
 11. முதியோர்களுக்கு வாழ்வளித்தவர்கள் நன்றி உரித்தாகுக....

  ReplyDelete
 12. உலகுக்குத் தம் அனுபவ அறிவு பயன்பட வேண்டுமென்கிற விருப்பம் தீராததாக இருக்கிறது. அதை செயல்படுத்தவும் முடிந்தவிட்டால் தம்மை விட அதிர்ஷ்சாலிகள் எவருமில்லை எனும் உற்சாகத்துடன் மனதளவில் இளைஞராகியும் விடுகின்றனர்.//

  எங்கள் வீட்டு இளைஞர் அதுதான் ஒய்வு பெற்ற பின்னும் வேலைக்கு போகிறார்கள்.

  இன்று இளையவர்களுக்கு ஈடாக, வலைப்பூக்கள் வைத்திருப்பதில் எத்தனை சீனியர் சிட்டிஸன்ஸும் இருக்கிறார்கள். இதுபோன்ற நேரப்போக்கு நிச்சயம் தேவை என்பதால்தானே!!//

  ஹுஸைனம்மா சொல்வதை ஆமோதிக்கிறேன்.

  //ஒரு தளத்தில் இணையத்தில் இயங்கிக் கொண்டுதான் இருப்பேன்,//

  ராமலக்ஷ்மி உங்கள் இயக்கம் எங்களுக்கு மகிழ்ச்சி.
  வாழ்த்துக்கள் உங்களுக்கு.

  ReplyDelete
 13. முதுமையில் வேலை செய்யவேண்டிவருவது வருத்தம் தான் .........

  ReplyDelete
 14. //எப்படி நியாயப்படுத்தப்பட்டாலும் நிர்ப்பந்தங்களினால் வேலை தேடி வந்தோர் நிலை வலி தருகிறது.//
  உண்மையிலேயே மிக வருத்தப்படவைத்த விஷயம். இங்கும் (அமெரிக்காவில்) ஒரு எழுபது வயது முதியவர் டிபார்ட்மென்ட் கடை ஒன்றில் நான் வாங்கிய பொருட்களை கார்ட்டில் இருந்து எடுத்து பைக்கு போடும் வேலை செய்வதை பார்த்து மனம் வருந்தினேன். எதையாவது செய்யவேண்டும் என்று தோன்றுகிறது. என்னவென்றுதான் தெரியவில்லை!

  ReplyDelete
 15. உடலும் மனமும் ஒத்துழைக்கும் பட்சத்தில் கட்டாயத்துக்காக இல்லாம மன விருப்பத்தோட வேலை செய்யறது எந்தப் பருவத்திலிருந்தாலும் வரவேற்கப் படணும். வயசாயிடுச்சுன்னு மூலையில் ஒடுங்கிட்டா அதுவே அவங்களுக்கு எமனாகிரும். அதுவுமில்லாமல் உழைத்துப் பழகிய மக்களால் எந்தக்காலத்துலயும் சும்மா உக்காந்துருக்க முடியாது. நம் பாட்டி மார்களையே எடுத்துக்கோங்க. உடல் ஆரோக்கியம் இருக்கும் வரைக்கும் எவ்வளவு சுறுசுறுப்பா குடும்பத்தில் இயங்குகிறார்கள்.

  ReplyDelete
 16. தங்களுக்குன்னு ஒரு பயனுள்ள பொழுதுபோக்கை உண்டாக்கிக்கலைன்னா முதுமையில் போரடிதான்.

  இங்கே நம்மூரில் நிறைய வாலண்டரி ஒர்க்ஸ் இப்படிப்பட்ட ஓய்வு பெற்ற முதியவர்களாலேயே நடத்தப்படுது.

  ரிட்டயர்மெண்ட் ஏஜ் இங்கு 65.

  சும்மா இருந்தாலல் உடம்பு மட்டுமில்லை மனசுக்கும் வயதுகூடி தளர்ந்து போயிரும்.

  ReplyDelete
 17. பெரியவர்கள் வீடுக்கும் நாட்டுக்கும் பயனேயன்றி பாரமில்லை..இதனை சமுதாயம் புரிந்துகொண்டால் சரி...

  பயனுள்ள பகிர்வு..விருதுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 18. அக்கா...சுகம்தானே.ரொம்ப நாளாச்சு...எப்பவும்போல கலக்கிட்டுத்தான் இருக்கீங்க.வாழ்த்துகள் அக்கா !

  ReplyDelete
 19. @வெங்கட் நாகராஜ்,

  கருத்துக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
 20. @தருமி,

  நகைச்சுவையாக தாங்கள் தெரிவித்திருந்தாலும்,
  இதற்கான வரவேற்பைப் பார்த்து இனி பிற ஊர்களிலும் வரும் வாய்ப்பு இருக்குமென்றே தோன்றுகிறது.

  வாழ்த்துகளுக்கு நன்றி சார்.

  ReplyDelete
 21. @Lakshmi,

  ஆம், நன்றி லஷ்மிம்மா.

  ReplyDelete
 22. @Kousalya,

  முதியோர் குறித்த தங்கள் கட்டுரைக்காகக் காத்திருக்கிறேன். நன்றி கெளசல்யா.

  ReplyDelete
 23. @மோகன் குமார்,

  நன்றி மோகன் குமார்.

  84 வயது பெரியவர் உற்சாகமாகவே கலந்து கொண்டிருந்திருக்கிறார். அதிக வயதின் காரணமாக அவரை யாரும் வேலைக்கு அமர்த்தவில்லை போல் தெரிகிறது.

  வானவில்லும் தூறலும்.. அட, ஆமாம்:)!

  ReplyDelete
 24. அன்பின் நிழல் அடர்த்தி .. :)

  நட்பின் நிழலில்( ஊக்கத்தில்) வளர்ச்சிங்கறீங்க....

  ReplyDelete
 25. @வரலாற்று சுவடுகள், இயலும் போது பதிந்து வருவேன்:)! மிக்க நன்றி.

  ReplyDelete
 26. @ஸ்ரீராம்., ஆம் பொழுதுபோக்குக்கும் மன ஆரோக்கியத்துக்குமே என்றால் பரவாயில்லை. எனது ’புன்னகை’ இதழ் கவிதையை நினைவு கூர்ந்து பாராட்டியிருப்பதற்கு நன்றி. நேரம்.. சிரமமாகவே உணருகின்றேன். ஆனால் முடிந்தவரை செய்வதில் மனதுக்கு நிறைவாக..:)! நன்றி ஸ்ரீராம்.

  ReplyDelete
 27. @திண்டுக்கல் தனபாலன்,தங்கள் சுட்டி குறிப்பிட்ட பதிவுக்கு இட்டுச் செல்லவில்லையே. தேடி வாசிக்கிறேன். கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 28. @ஹுஸைனம்மா,

  இந்த ஐடியா விரைவில் மற்ற நகரங்களில் பின்பற்றப் படலாம். கிடைத்த வரவேற்பில் நிறுவனங்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.

  மனரீதியான நலனுக்கு உதவும் என்பது உண்மையே. வாழ்வாதாரத்துக்காக வேலை தேடி வந்தவர்கள் நிலைமைதான் வருத்தம் தருவதாக..

  /வலைப்பூக்கள் வைத்திருப்பதில் எத்தனை சீனியர் /

  அட, ஆமாம். பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்றாக அதைக் குறிப்பிட மறந்து விட்டேன் பாருங்க:))!

  நன்றி ஹுஸைனம்மா.

  ReplyDelete
 29. @இராஜராஜேஸ்வரி,

  பகிர்ந்த கவிதையை ரசித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 30. @MANO நாஞ்சில் மனோ,

  இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி மனோ.

  ReplyDelete
 31. @கோமதி அரசு,

  மகிழ்ச்சி. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோமதிம்மா.

  ReplyDelete
 32. @bandhu, பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 33. @துளசி கோபால், சும்மா இருத்தல் அவர்களுக்கே மனதில் சுமை. ஆரோக்கியத்துக்குப் பங்கமில்லாத நேரப்போக்கு அவசியமே. நன்றி.

  ReplyDelete
 34. @Nithi Clicks, கருத்துக்கு நன்றி நித்தி.

  ReplyDelete
 35. @ஹேமா, நலமே, நன்றி ஹேமா. நீண்ட நாட்கள் கழித்து உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 36. பெரியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ரொம்ப வித்யாசமா இருக்கு. ஆர்வமாக கலந்து கொண்டவர்கள் இரு வகையில் இருக்கலாம். ஒன்று சும்மா இருக்கப் பிடிக்காமல் ஏதாவது செய்வோம் என்று வருபவர்கள்.. இன்னொன்று வீட்டில் உள்ளவர்களின் அலட்சியம் வயதானதால் மற்றவர்களின் கவனிப்பின்மை.. ஆமா! இவருக்கு வேற வேலையே இல்லை.. சும்மா எதையாவது பண்ணிட்டு நம்ம உயிரை எடுத்துட்டு இருக்காரு! என்பன போன்ற திட்டுகள். இவையே இவர்களை இங்கே அழைத்து வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

  சிங்கப்பூரில் வயதானவர்களுக்கு அவர்களுக்கு தகுந்த பணிகளை அரசாங்கம் தருகிறது. தள்ளாத வயதிலும் வேலை செய்வதை பார்க்கையில், ஆச்சர்யமாக இருக்கிறது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...
Blog Widget by LinkWithin