வலைப்பூ வனத்தில் என் நூறாவது மலர்.
இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் இப்போதுதான் சதம்:)!
ரொம்பவும் நிதானம் என்று தோன்றினாலும் பரவாயில்லை இந்த டெஸ்ட் மாட்சில் நின்று ஆடிக் கொண்டிருக்கிற வரையில் சந்தோஷம்தானே என்றிருக்கிறேன். அடித்த சதம் ஒருபுறமிருக்க, இரண்டு வருடங்கள் தொடர்வேன் என்பதே நான் எதிர்பார்க்காத ஒன்று. எப்போதாவது எழுதுவது என்றிருந்த என்னை ஓரளவு தொடர்ந்து எழுத வைத்து விட்டது வலைப்பூ.
ஆரம்ப ஆர்வம் வேகம் தாகம் எல்லாம் ஒரு கட்டத்தில் வடிந்து விடுவது எல்லோருக்கும் பொதுவாக நடக்கக் கூடியதே. நானும் அதற்கு விதிவிலக்கல்ல.
நானறிந்து அற்புதமான பதிவுகள் தந்து கொண்டிருந்த பலர், பல்வேறு காரணங்களால் ஒதுங்கிக் கொண்டு விட்டுள்ளார்கள்.
அவர்களில் சிலர் அவ்வப்போது மைதானத்தில் தலை காட்டுவதும், சிலபல சிக்ஸர்களை விளாசி மகிழ்வித்து விட்டு ‘மீண்டும் விரைவில் சந்திப்போம்’ என உத்திரவு வாங்கிக் கொள்வதுமாய் இருக்கிறார்கள்.
சிலருக்கு பதிவிடுவது பொழுதுபோக்கு, ரிலாக்ஸேஷன். சிலருக்கு வடிகால். சிலருக்குத் தம் எழுத்துக்களை ஆவணப்படுத்தும் இடம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சிலருக்கோ தவம். இவர்கள் எத்தனையோ வேலைகளுக்கிடையிலும் எழுதுவதையும் பதிவதையும் ஒருவித தொடர் ஈடுபாட்டுடன் நேர்த்தியுடன் செய்து பிரமிக்க வைக்கிறார்கள். என் போன்றவர்களுக்குப் ‘போதுமோ’ எனும் எண்ணம் வருகையில் எல்லாம் தொடர்கின்ற உத்வேகத்தைத் தருகிறார்கள்.
புதிதாய் வருகிறவர்கள் பிரமாதப் படுத்துகிறார்கள். இவர்களின் உற்சாகம் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது. இன்னும் பல புதியவர்கள் இணைய வேண்டும். அதற்கு ஆரோக்கியமானதொரு சூழல் பதிவுலகில் என்றைக்கும் நிலவுமாறு இருப்பவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சரி இப்போது ஒரு சில வரிகளில் என் நூறினைப் புரட்டலாம்.
மொத்தப் பதிவுகளில் 25 சதவிகிதம் புகைப்படப் பதிவுகள், நிபுணராய் இல்லாவிட்டாலும் ஒரு ஆர்வலராய்..
50 சதவிகிதம் கவிதைகள், இலக்கணங்களுக்கு உட்பட்ட இலக்கியங்களாய் இல்லாவிட்டாலும் என் எண்ணங்களின் பிரதிபலிப்புகளாய்..
சிறுகதைகள் கட்டுரைகள் நினைவலைகள் இன்னபிறவுமாக..
பெரிய இடைவெளியின்றி தொடர்ந்து கொடுத்து வந்துள்ளேன் சராசரியாக வாரம் ஒன்றென. இனிவரும் காலத்தில் இந்த விகிதம் மாறலாம். கூடவோ இன்னும் குறையவோ செய்யலாம். இடைவெளிகள் ஏற்படலாம். அவை தற்காலிகமானதாகவே இருக்க மனம் விளைகிறது.
எழுதும் ஆர்வத்தை உயிப்பித்ததால், பலரையும் வாசித்து நம்மை மேம்படுத்திக் கொள்ளத் தூண்டுவதால் பதிவுலகில் தொடர்வது விருப்பமாய் உள்ளது. இது புகைப்பட ஆர்வத்துக்கும் பொருந்தும்.
நூறு இடுகைகளுக்கு என்ற கணக்கில் அரைலட்சம் தொடவிருக்கும் ஹிட்ஸ், ஏழாயிரத்து முன்னூறு ப்ரொஃபைல் வ்யூஸ் ஆகியவை என் வரையில் பரவாயில்லை எனத் தெம்பைத் தருவதாக உள்ளன. [கெத்தை என அவசரத்தில் வாசித்தோ புரிந்தோ கொண்டால் நிச்சயமாய் கொம்பெனி பொறுப்பேற்காது:)]
தமிழ் ப்ளாகர் திரட்டியின் தனிப்பட்டத் தேர்வாகிய நூற்றியொரு தமிழ் வலைப்பூக்கள் வரிசையில் Tamil Amudam's Blog ஆக முத்துச்சரமும் என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி.
தமிழ் மணம் விருதுகளிலோ அளவற்ற மகிழ்ச்சி:)!
எல்லாவற்றிற்கும் மேலாக., கிடைத்திருக்கும் நல்ல நட்புகள். பின்பலமாய் இருந்து தந்த அன்பு, ஊக்கம். அதுவே இங்கு என்னை உற்சாகமாய் வைத்துள்ளது.
அந்நியப் படுத்துவது போல் நன்றி நன்றி என சொல்வது நமக்குள் தேவையா என்கிற மாதிரியான ஒன்றுபட்டதொரு உணர்வு வந்து விட்ட நிலையிலும் சொல்லாமல் இருக்க முடியுமா?
ஃபாலோயராகத் ப்ளாகரில் தொடரும் 210 பேருக்கும், ரீடரில் தொடரும் 282 பேருக்கும், வாசித்துக் கருத்துக்களைப் பகிர்ந்து வந்திருந்தவருக்கும், முத்துச்சரத்தை எட்டிப் பார்த்துச் சென்றவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
தமிழ்மணம், தமிழிஷ், சங்கமம் திரட்டிகளுக்கும் நன்றிகள்.
முடிவாய்..
விரும்பியதைப் பதிய இத்தனை எளிதாய் நமக்கென ஒரு தளம், அதைப் பிறரிடம் கொண்டு சேர்க்க திரட்டிகளெனும் களம் என இணையம் தந்திருக்கும் வரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வோம்.
இடைவெளிகள் தவிர்க்க முடியாது போனாலும் எழுதுவதை முழுவதுமாய் நிறுத்தி விடாது இருப்போம். நேரம் அனுமதிக்கையில் பதிவதைத் தொடர்வோம். மற்றவரை இயன்றவரை வாசிப்போம். கருத்துக்களைப் பகிர்ந்திடுவோம். ஊக்கம் எனும் உரத்தினால் ஆக்கங்களும் பகிர்வுகளும் பதிவுகளாய் மலரட்டும். வலைப்பூ வனம் செழிக்கட்டும்.
* படம்: லால்பாக் மலர் கண்காட்சியில் நான் எடுத்தது.
பி.கு: கடந்த மாதமே நூறாவது பதிவினைத் தந்து விடுவேன் என நினைத்து எழுதி சேமிப்பில் வைத்திருந்ததை அப்படியே ஒரு எழுத்தும் மாறாமல் பதிந்துள்ளேன், இப்பொழுதும் பதிவுலகம் குறித்த என் ஆசை இதுவாகவே இருப்பதால்!
14 ஜூன் 2010, யூத்ஃபுல் விகடன் ‘Good Blogs' பரிந்துரையில் இந்தப் பதிவு. நன்றி விகடன்!